ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
இருபத்திரண்டாவது ஸர்கம்.
சீதையிடமிருந்து வந்த கூர்மையான வார்த்தைகளைக் கேட்ட இராவணன், அழகே வடிவான சீதையைப் பார்த்து, இன்பம் தராத வார்த்தைகளைக் கூறலானான்.
“உலகத்தின் எந்த
ஆண்மகனும், பெண்களிடம் அன்பாகவும் கனிவாகவும் பழகப் பழக, அவன், அவர்களுக்குப் பிரியமானவனாக
ஆகிவிடுவான். ஆனால், உன்னிடம் நான் கனிவாகப்
பேசப்பேச, நீ என்னை வெறுத்து ஏளனம் செய்கின்றாய்!”
“நன்கு குதிரையை
இயக்கத் தெரிந்தவன், தறிகெட்டு ஓடும் குதிரையை எவ்விதம் நல்வழிப் படுத்துவானோ, அது
போல, உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பு,
என்னுடைய கோபத்தை அடக்குகிறது!”
“மனிதர்களிடம்
இந்த அன்பானது மிகவும் சிக்கலானது. யாரிடம்
அன்பினால் கட்டுண்டு விடுகிறோமோ, அவர் மேல், கருணையும் நட்பும் உண்டாகிவிடுகிறது!”
“அழகிய முகத்தவளே!
அதன் காரணமாகத்தான், பொய்யான துறவறத்துடன் இருக்கும் நீ, அவமானப்படுத்தப் படுவதற்கும்,
கொல்லப் படுவதற்கும் தகுதி வாய்ந்தவளாக இருந்த போதும், உன்னைக் கொல்லாமல் விடுகிறேன்!”
“ஓ மைதிலி! நீ
என்னிடம் சொன்ன ஒவ்வொரு வருத்தும் வார்த்தைகளுக்கும், நீ மரண தண்டனை பெறுவதற்குத் தகுதியானவளே!”
விதேஹ அரசகுமாரியாகிய
சீதையிடம் இவ்விதம் பதில் சொன்ன அரக்கர்களின் அரசனான இராவணன், மேலும் கோபத்துடன் இவ்விதம்
சொல்லலானான்.
“அழகிய நிறத்தவளே!
நான் உனக்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கின்றேன். அதற்குள் நீ என் படுக்கையை
அலங்கரிக்க வேண்டும். இந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும் நீ, என்னை உன் கணவனாக ஏற்றுக்கொள்ளாவிட்டால்,
என்னுடைய காலை உணவிற்காக, கண்டதுண்டமாக வெட்டப்பட்டு என்னுடைய சமையலறையில் நீ சமைக்கப்பட்டு
விடுவாய்!”
இராவணனால் சீதை
அச்சுறுத்தப்பட்டதைப் பார்த்த தேவ, கந்தர்வ
குலப் பெண்கள் கண்ணீர் விட்டழுதனர்.
அந்த அரக்கனால்
அச்சுறுத்தப்பட்ட சீதைக்கு ஆறுதல் தரத்தக்க வகையில், அந்தப் பெண்களில் சிலர் உதடுகளாலும்,
சிலர் கண்களாலும், சிலர் முகங்களாலும் அசைவுகள் செய்து மனதைரியம் அளித்து சமாதானப்படுத்தினர்.
இவ்விதம் தைரியம்
அளிக்கப்பட்ட சீதை, தன்னுடைய நற்பண்புகளின் சீர்மையைக் காட்டும் வகையிலும், தனக்கு
மகிழ்ச்சி தரக்கூடிய வகையிலும், அரக்கரர்களின் அரசனான இராவணனைப் பார்த்துச் சொல்லலானாள்.
“இந்த நகரத்தில்,
உனது நன்மையை விரும்பி, உனக்கு நல்லது செய்யும் வகையில், உனது இந்தக் கொடும் செயலைத்
தடுத்து நிறுத்துபவர் யாருமில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது!”
“இந்திரனுக்கு
சசிதேவியைப் போல, ஸ்ரீராமருக்குத் தர்ம பத்னியான என்னை, முன்று லோகங்களிலும், உன்னைத்
தவிர வேறு யாரும், என்னை மனைவியாக அடைய மனதாலும் நினைக்க மாட்டார்கள்!”
“அற்ப அசுரனே!
மட்டற்ற ஆற்றல் கொண்ட ஸ்ரீராமரின் மனைவியிடம் இவ்விதம் தகாத வார்த்தைகள் பேசியதால்,
அவரிடம் நீ அடையப்போகும் தண்டனையிலிருந்து எவ்விதம் தப்பிக்கப் போகிறாய்?”
“நீசனே! ஒரு
காட்டில், ஒரு மதங்கொண்ட யானையின் முன் நிற்கும் ஒரு முயலுக்கு என்ன கதி நேருமோ, அதுவே,
முயல் போன்ற உனக்கு யானைக்கு நிகரான ஸ்ரீராமர் முன் நேரும்!”
“நீ இஷ்வாகு
அரசனான ஸ்ரீராமன் பார்த்திராத நேரத்தில் என்னை அபகரித்து வந்துவிட்டு, இங்கே சிறிதும்
வெட்கமின்றி அவரை அவமதித்துக் கொண்டிருக்கின்றாய்!”
“பண்பற்றவனே!
என்னைத் தவறாகப் பார்க்கும் உன்னுடைய குரூரமான கறுத்துச் சிவந்த கண்கள், இன்னும் ஏன்
நிலத்தில் தெறித்து விழாது இருக்கின்றன?”
“கொடியவனே! அறநெறியில்
நிற்கும் ஸ்ரீராமனின் மனைவியும், தசரதரின் மருமகளுமாகிய என்னைப் பார்த்து இவ்விதம்
கொடும் சொற்களைப் பேசும் உன்னுடைய நாக்கு இன்னும் ஏன் அறுந்து விழாது இருக்கின்றது?”
“பத்துத் தலைகளைக்
கொண்ட இராவணனே! என்னுடைய ஆற்றலினாலேயே உன்னை என்னால் எரித்துச் சாம்பலாக்கிவிட முடியும். ஆனால் அதற்கு ஸ்ரீராமனின் உத்திரவு வேண்டுமென்பதாலும்
எனது கற்புநெறியினால் உண்டான ஆற்றலை நான் பாதுகாப்பாய் வைத்திருப்பதாலும் அவ்விதம்
செய்யவில்லை!”
“அறிவிற் சிறந்த
ஸ்ரீராமருடன் நான் சேர்ந்திருந்த சமயத்தில் உன்னால் என்னை அபகரிக்க இயலாது போனது, உன்னுடைய
மரணம் இதனால் ஏற்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பதால்தான் என்பதில் ஐயம் ஏதுமில்லை!”
“பெரும் வீரனும்,
குபேரனின் சகோதரனுமான உன்னிடம் பெரும் சேனை உள்ளது, இருந்தபோதும், எதற்காக, இராமனை
அப்புறப்படுத்தி விட்டு, அவரது மனைவியாகிய என்னை அபகரித்தாய்?”
சீதையின் இந்த
விதமான பேச்சுக்களைக் கேட்ட இராவணன், குரூரம் பொங்கும் விழிகளுடன் ஜானகியை நோக்கினான்.
கரிய நிற மேகங்களைப்
போல இருந்த அவனின் தோள்களும் கழுத்தும் மிகவும் பெரியதாக இருந்தன. ஒரு சிங்கத்தின் தோற்றத்தில் இருந்த அவன் நெருப்பை
உமிழும் நாக்குடனும், அச்சுறுத்தும் கண்களையும் கொண்டிருந்தான். அவனது தலையின் இருந்த மகுடம் ஆடிய வண்ணம் இருந்தது. மிகவும் உயரம் கொண்டிருந்த அவன், தனது வாசனைத் திரவியங்கள்
பூசிய உடலில் சிவப்பு நிறப் பூக்களால் ஆன மாலைகளையும், ஆடைகளையும் அணிந்திருந்தான்.
கைகளில் தங்கத்தாலான பூண்களை அணிந்திருந்தான்.
அவனது இடையில்
அணிந்திருந்த கருநீல நிறத்தினால் ஆன கயிற்றைப் பார்க்கும்போது, பாற்கடலில் அமுதம் கடையும்
போது, மந்தர மலையைச் சுற்றிக் கட்டப்பட்ட வாசுகி என்னும் பாம்பு போல இருந்தது.
இரண்டு பெரிய
தோள்களுடன் இருந்த அவனைப் பார்க்கும்போது, இரு பெரும் சிகரங்களைக் கொண்ட மந்தர மலையைப்
பார்ப்பது போல இருந்தது.
இளஞ்சூரியனின்
நிறத்தில் காதுகளில் குண்டலங்களை அணிந்திருந்த அவன், சிவந்த தளிருடனும், பூக்களுடனும்
இருக்கும் இரு அசோக மரங்கள் வளர்ந்திருக்கும் ஒரு மலையைப் போல இருந்தான்.
கற்பக மரத்தைப்
போன்றும், வசந்த காலமே வடிவெடுத்து வந்தவன் போன்றும் அவன் இருந்தாலும், அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும்
மயான பூமியில் கட்டப்படும் கட்டிடத்தைப் போல, அச்சுறுத்தும் வண்ணம் இருந்தான்.
கோபத்தில் சிவந்த
கண்களுடன் இருந்த அவன், ஒரு பாம்பின் சீற்றத்துடன், பெரும் மூச்சுக்களை விட்ட வண்ணம்
விதேஹ மன்னரின் மகளான சீதையைப் பார்த்துப் பேசலானான்.
“ஒரு பொருளற்ற
தவறான கொள்கையை நீ பின்பற்றிக்கொண்டிருக்கிறாய்! எவ்விதம் உதிக்கும் சூரியன், அதிகாலை
நேரத்தை விரட்டி அழிப்பானோ, அவ்விதமே உன்னை நான் அழித்து விடுகிறேன்!”
பகைவர்களை அச்சத்தில்
நடுங்க வைக்கும் அரக்கர்குல வேந்தனான இராவணன், மிதிலையின் குமாரியான சீதையிடம் இவ்விதம்
சொல்லி விட்டு, அங்கிருந்த பயங்கரமான தோற்றம் கொண்டிருந்த அரக்கியரைப் பார்த்தான்.
அங்கிருந்தவர்களில்
ஒருத்திக்கு ஒரு கண்ணும், இன்னொருத்திக்கு ஒரு காதும், மற்றொருத்திக்கு காதுகள் மறைக்கப்பட்டும்
இருந்தன. பசுவின் காதுகளையும், யானையின் காதுகளையும், மிக நீண்ட காதுகளையும் கொண்டவர்களும்,
காதே இல்லாதவர்களும் இருந்தனர்.
யானையின் காலைப்
போல ஒரு கால் கொண்டிருந்தவளும், குதிரையின் குளம்பையொத்த கால்களைக் கொண்டிருந்தவளும்
இருந்தனர். பசுவின் காலைக் கொண்டிருந்த ஒருவளும்,
கால்களின் முடி வளர்ந்திருந்த ஒருவளும் இருந்தனர். ஒரு கண்ணும், ஒரு காலும், அகன்ற பாதங்களையும் கொண்டவர்களும்,
காலே இல்லாதவர்களும் அவர்களுள் இருந்தனர்.
நீண்ட கழுத்தையும்,
மிகப் பெரிய தலையையும் கொண்டவர்களும், பெருத்த மார்பகங்களையும், பெருத்த வயிற்றைக்
கொண்டிருந்தவர்களும் அங்கிருந்தனர். பெரிய
முகத்தில் பெரிய பெரிய கண்களும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாக்கையும் கொண்டும்
சிலர் இருந்தனர். சிலர் மூக்கே இல்லாமல் இருந்தனர். சிங்க முகமும், பசுவின் முகமும், பன்றியின் முகமும்
கொண்டு சிலர் இருந்தனர்.
இவர்களையெல்லாம்
பார்த்து இராவணன், “அரக்கியரே! நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வாறேனும் முயற்சி செய்து,
ஜனக குமாரியான சீதை, என்னிடம் காதல் கொண்டு வருமாறு செய்யவேண்டும்! சீதைக்கு விருப்பமான
முறையிலோ அல்லது அவளை வருத்தியோ, அல்லது சாம, பேத, தண்டங்களின் வழியிலோ அவளை என் வசம்
வரச் செய்யுங்கள்!” என்றான்.
இவ்விதம் காமத்தின்
வேகத்திலும், கோபத்தின் வேகத்திலும் வசப்பட்டிருந்த அரக்கர் குல வேந்தனான இராவணன்,
அந்த அரக்கிகளிடம் மேற்கண்டவாறு ஆணைகளை மீண்டும் மீண்டும் இட்டுவிட்டு சீதையைப் பார்த்து
கர்ஜித்தான்.
அப்பொழுது விரைந்து
வந்த தான்யமாலினி என்றழைக்கப்படும் அரக்கி, இராவணனை நெருங்கி, அவனை அணைத்தவாறு இவ்விதம்
பேசினாள்.
“அரக்கர் கோமானே!
நீங்கள் என்னுடன் களித்திருங்கள்! நிறம் வெளுத்து, பரிதாபமாய்க் காட்சியளிக்கும் இந்த
மானுடப் பெண்ணால் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைத்து விடும்?”
“பேரரசே! உங்களது
வலிமை மிக்க தோள்கள் மூலம் நீங்கள் பெற்றுள்ள இந்த சுக போகங்களை அனுபவிக்கும் வாய்ப்பை,
தேவர்களில் சிறந்தவரான பிரம்மா இந்தப் பெண்ணுக்கு அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது!”
“அரசே! காதல்
வயப்படாத பெண்ணிடம் ஆசை கொள்பவனுக்கு அந்தத் தாகம் தணிவதில்லை. ஆனால், தன்னிடம் அன்பு கொள்ளும் பெண்ணிடம் ஆசை கொள்பவனுக்கு
மிகச் சிறந்த இன்பம் கிட்டும்!”
இவ்விதம் சொல்லி
இராவணனை வேறு புறம் திருப்பினாள் அந்த அரக்கி.
இதைக் கேட்ட, மேகம் போன்ற நிறத்திலிருந்த பலசாலியான இராவணன்,
பலமாகச் சிரித்துக் கொண்டே தன் மாளிகையை நோக்கிச் சென்றான்.
அசோக வனத்திலிருந்து
வெளியேறிய பத்துத் தலையுடைய இராவணன், நிலமதிர நடந்து, மதிய நேரத்துச் சூரியனின் ஒளி
போல பிரகாசிக்கும் தனது மாளிகையில் நுழைந்தான்.
அதே சமயம், தேவ,
கந்தர்வ, நாக கன்னிகைகள் இராவணனைச் சூழ்ந்த வண்ணம் அந்த மாளிகைக்குள் நுழைந்தனர்.
அறத்தின் வழி
நிற்பவளும், நிலைத்த மனத்தையும் உடையவளுமான மிதிலை குமாரியான சீதையை இவ்விதமாக அச்சுறுத்திய
இராவணன், காதல் மோகத்துடனேயே தன் மாளிகையில் நுழைந்தான்.
இருபத்திரண்டாவது
ஸர்கம் நிறைவு.

No comments:
Post a Comment