ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
இருபத்து மூன்றாவது ஸர்கம்.
பகைவர்களை அச்சுறுத்தும் அரசனான
இராவணன், இவ்விதம் மைதிலியிடம் பேசிய பிறகு அந்த அரக்கியர்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்து
விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அரக்கர் குல
அரசன் தன் அந்தப்புரம் நோக்கித் திரும்பிச் சென்றதும், அச்சமூட்டும் வடிவங்கள் கொண்ட
அரக்கியர் விரைந்து வந்து சீதையைச் சூழ்ந்து கொண்டனர்.
அங்கு அவர்கள் கடும் கோபத்தில் தங்கள் நிலை மறந்து,
கடுமையான வார்த்தைகளால் சீதையிடம் இவ்விதம் பேசலானார்கள்.
“ஓ! சீதையே!
புலஸ்த்ய குலத்தின் தனிச் சிறப்பு வாய்ந்தவனும், மிகச் சிறந்தவனும், பத்துத் தலைகளைக்
கொண்டவனுமான இராவணனின் மனைவியாவது பெரும் பேறு என்பதை நீ உணரவில்லையே?”
அதன் பிறகு ஏகஜடை
என்னும் அரக்கி, சினத்தில் சிவந்த கண்களுடன், உள்ளங்கை அளவே இருக்கும் வயிற்றுப் பகுதியைக்
கொண்ட சீதையை நெருங்கி, பின்வருமாறு பேசினாள்.
“பிரம்மாவின்
மனதிலுதித்தவரும், புலஸ்த்யர் என்று புகழுடன் அறியப் படுபவருமானவர், ஆறு பிரஜாபதிகளுள்
நான்காமவர். (மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்த்யர்,புலஹர், க்ரது ஆகியோர் ஆறு பிரஜாபதிகள்
ஆவர்).”
“புலஸ்த்யரின்
மனதில் உதித்தவரும், பிரஜாபதிக்கு நிகரான ஆற்றல் மிக்கவருமான விச்ரவஸ் என்பவர் பெரும்
தவ முனிவராவார். அகன்ற விழிகளைக் கொண்டவளே!
பகைவர்களைப் பந்தாடும் இராவணன் அவரது மகன்.
அரக்கர்குல வேந்தனான இராவணனின் மனைவியாவதற்கான எல்லாத் தகுதிகளையும் உடையவள்
நீ! பூரண உடலழகு மிக்கவளே! நான் சொல்லும் வார்த்தைகளை நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்?”
இதற்குப் பிறகு
பூனையின் கண்களைப் போன்ற கண்களைக் கொண்டிருந்த ஹரிஜடா என்னும் அரக்கி, கோபம் கொண்டவளாய்,
கண்களை உருட்டிய வண்ணம் இவ்விதம் பேசினாள்.
“முப்பத்து முக்கோடி
தேவர்களையும் அவர்களின் அரசனான தேவேந்திரனையும் வென்றவனான அரக்கர்குல வேந்தனான இராவணனின்
மனைவியாவதற்கு நீ நிச்சயம் விருப்பம் கொள்ள வேண்டும்!”
அப்பொழுது, பிரகசா
என்னும் அரக்கி கோபத்தில் மதி மயங்கி, மிகவும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லலானாள்.
(இந்த ஸ்லோகம் கீதா பிரஸ் பதிப்பில் இல்லை).
“தன்னுடைய வீரத்தால்
செருக்குடையவனும், மிகவும் ஆற்றல் மிக்கவனும், போரிலே தோற்றுப் புறமுதுகிடாதவனுமாகிய
வீரனுக்கு மனைவியாக ஏன் நீ விருப்பம் கொள்ளாதிருக்கின்றாய்?”
“பெரும் வலிமை
கொண்ட அரசனான இராவணன், தனது மனைவியருள்ளேயே, மிகவும் மதிப்பு மிக்க மனைவியைக் கூடத்
துறந்து விட்டு, உன்னை அடைவதற்கு விருப்பமாய் உள்ளார்!”
“பெரும் வீரரும்,
பேரரசருமான இராவணன், ஆயிரக்கணக்கான பெண்கள் நிறைந்ததும், வைர வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான
தனது அந்தப்புரத்தையே உன் பொருட்டு துறந்துவிட்டு உன்னிடம் வருவார்!”
அப்பொழுது விகடா
என்னும் அரக்கி,” பலமுறை போர்க்களங்களில், தேவர்கள், நாகர்கள், கந்தவர்கள் ஆகியோரை
அழித்தொழித்தவரே, அவராக விரும்பி உன்னிடம் வருகிறார்.!” என்று சொன்னாள்.
“ஏ! மதி கெட்ட
பெண்ணே! அனைத்து விதமான செல்வங்களையும் பெற்றுள்ள, சிறந்த ஆளுமை மிக்க அரக்கர்குல அரசனான
இராவணனின் மனைவியாவதில் விருப்பம் கொள்ளப் போகிறாயா இல்லையா?” என்று சொன்னாள்.
பிறகு துர்முகி
என்பவள், “ஓ! அகன்ற நீள் விழிகளைக் கொண்டவளே! யாரைப் பார்த்து சூரியன் வெப்பம் உண்டாக்க
அச்சம் கொள்வானோ, யாரைப் பார்த்து வாயுதேவன் காற்று வீச அச்சம் கொள்வானோ, அவருடன் நீ
இருக்கப் போகிறாயா இல்லையா?” என்று கேட்டாள்.
“அழகிய புருவங்களைக்
கொண்டவளே! யாரிடம் அச்சம் கொண்டு, அவர் நினைத்த மாத்திரத்தில் மரங்கள் பூக்களைச் சொரியுமோ,
யாரிடம் அச்சம் கொண்டு, அவரது விருப்பத்தின் பேரிலேயே மலைகளும் மேகங்களும் தண்ணீரைச்
சொரிகின்றனவோ, அப்படிப்பட்ட அரசர்க்கெல்லாம் அரசனாகிய இராவணனுக்கு நீ மனைவியாவதில்
மனதைச் செலுத்தப் போகிறாயா, இல்லையா?”
“சிறந்த புன்னகை
கொண்ட அழகிய பெண்ணே! உன்னுடைய நலனுக்காகவே கூறப்பட்ட இந்த வார்த்தைகளை நல்லதென்று ஏற்றுக்கொள்! இல்லையென்றால் நீ உயிருடன் இருக்க மாட்டாய்!” என்று கூறினாள்.
இருபத்து மூன்றாவது
ஸர்கம் நிறைவு.
No comments:
Post a Comment