Monday, July 3, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தியொன்றாவது ஸர்கம்

                   ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                          இருபத்தியொன்றாவது ஸர்கம்.




 

     அந்தக் கொடூர அரக்கனின் வார்த்தைகளைக் கேட்ட சீதை, மிகவும் துயருற்று , வருத்தத்துடன் மெதுவாகப் பதில் சொல்லத்தொடங்கினாள்.

     அழகிய உடல் அங்கங்களைக் கொண்டவளான சீதை, துயர மிகுதியினால் வந்த அழுகையால் விசும்பிக்கொண்டே, தன் கணவனான ஸ்ரீராமனை நினைத்தாள்.

     அழகிய புன்னகை கொண்ட முகத்தினளான சீதை, தனக்கும் இராவணனுக்கும் இடையே ஒரு புல்லினைக் கிள்ளிப் போட்டுவிட்டு, “நீ என் மேல் வைத்திருக்கும் கவனத்தை விட்டுவிட்டு, உன்னுடைய மனைவிகளிடம் அன்பைச் செலுத்துவாயாக!” என்றாள்.

     மேலும் அவள் இவ்விதம் சொல்லத் தொடங்கினாள்.

     “பாவம் செய்தவன் எவ்விதம் நற்கதியை விரும்ப முடியாதோ, அது போல நீயும் என்னை விரும்ப முடியாது.  கணவனிடம் மட்டுமே அன்பு செலுத்தக்கூடிய கற்புடைய பெண்கள் செய்யத்தகாத காரியத்தை நான் ஒரு பொழுதும் செய்ய முடியாது!”

     “ஏனென்றால் நான் ஒரு குலப்பெருமை மிக்க குடும்பத்தில் பிறந்து, இன்னொரு சிறப்புமிக்க குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுள்ளேன்!”

     இவ்விதம் சொல்லிய விதேக குமாரியான சீதை, இராவணனுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று கொண்டு, “இராவணா! நான் கற்புடையவள். மற்றும் அடுத்தவர் மனைவி!  நான் உனக்கு மனைவியாக முடியாது!” என்றாள்.

     மேலும் அவள் இவ்விதம் சொல்லத் தொடங்கினாள்.

     “இரவு நேரத்தில் நடமாடும் இராவணா! நீ அறத்தின் வழி நின்று, அற வழி நடப்போரின் நற்செயல்களின் வழி செல்வாயாக!  உனது மனைவிமார்களை நீ காப்பாற்றுவதைப் போலவே, பிறரது மனைவியருக்கும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்!”

     “உன்னை நீ மதிப்பு மிக்கவனாக ஆக்கிக்கொண்டு, உன்னுடைய மனைவியருடன் மட்டுமே வாழ்ந்திடுவாயாக!  யார் தன்னுடைய மனைவியருடன் திருப்தியுறாதவராய், நிலையற்ற மனதுடன், பிறன்மனை நோக்குபவராய் இருக்கின்றாரோ, அவரை மற்றவருடைய மனைவியர் அவமதித்து இழிநிலைக்குத் தள்ளி விடுவார்கள்!”

     “இங்கு அறவழி நிற்பவர் யாருமே இல்லையா? இல்லை, அவர்கள் இருந்தும், அவர்கள் சொல்படி நீ நடப்பதில்லையா? அதனால் தான், உன்னுடைய புத்தி இவ்விதம் ஒரு மோசமான மற்றும் அறமற்ற செயலில்  ஈடுபடுகிறதோ?”

     “அல்லது, மதிநுட்பம் நிறைந்த பெரிய மனிதர்கள், உனது நன்மை எதுவென்று உரைத்த போதும், அவற்றை ஒரு பொருட்டாய் மதியாது, அரக்கர்களின் அழிவிற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளாயா?”

     “அறிவற்ற மனதுடன், அறமற்ற செயல்களில் ஈடுபடும் அரசனின் ஒவ்வாத நடத்தையால், மிகவும் சிறப்பு வாய்ந்த அரசுகளும், நகரங்களும் அழிந்து போவது நிச்சயம்!”

     “அது போலவே, வைர வைடூரியங்கள் நிறைந்து அளவற்ற செல்வங்களால் நிறைந்திருக்கும் இந்த இலங்கை மாநகரமானது, உன் ஒருவனது குற்றத்தால் விரைவில் அழிந்துவிடும்!”

     “ஓ இராவணா! தொலை நோக்கு இல்லாத ஒருவன், எப்பொழுது தனது கெட்ட நடவடிக்கைகளால் கொல்லப் படுகின்றானோ, அப்பொழுது, உலகில் வாழும் அத்துனை உயிரினங்களும் மகிழ்ச்சியடைகின்றன!”

     “அது போலவே, நீ யாருக்கெல்லாம் துன்பம் அளித்தாயோ, அவர்கள் உன்னை, பாவம் செய்தவன் என்று தூற்றுவார்கள்.  மேலும், “இந்தக் கொடியவனுக்கு இவ்விதம் நேர்ந்தது மிகவும் நல்லது” என்று கூறி மகிழ்ச்சியுறுவார்கள்!”

     “சூரியனிடமிருந்து எவ்விதம் ஒளியினைப் பிரிக்க இயலாதோ, அது போல என்னையும் ஸ்ரீராகவனிடமிருந்து பிரிக்க இயலாது.  சுகபோகங்கள், செல்வங்கள் போன்றவற்றின் மீது ஆசை காட்டி, என்னைக் கவர முடியாது!”

     “உலகைக் காக்கும் கடவுளான ஸ்ரீராமனின் தோள்களில் சாய்ந்திருந்த நான், எவ்விதம் மற்றொரு தோளில் தலை சாய்க்க முடியும்?”

     “தன்னை உணர்ந்தறிந்த, கடுமையான விரதங்கள் மேற்கொள்ளும் அந்தணர்க்கு எவ்விதம் வேதம் முதலான படிப்புக்கள் உரித்தானவையோ, அவ்விதமே உலகத்தின் தலைவனான ஸ்ரீராமனுக்கு மட்டுமே நான் உரித்தானவள்!”

     “காட்டில் தனித்து வாடும் பெண் யானையை எவ்விதம் அதனுடைய துணையான ஆண் யானையுடன் சேர்த்து விடுவார்களோ, அது போலவே பிரிவுத் துயரில் இருக்கும் என்னை, ஸ்ரீராமனோடு நீ சேர்த்துவிடுவதே தகுந்த செயலாகும்!”

     “நீ சுகமாக, மரணத்திலிருந்து தப்பி வாழ வேண்டுமென விரும்புவாயானால், ஆண்களுள் தன்னிகரில்லாத ஸ்ரீராமனுடன் நட்பு கொள்வதே சிறந்த செயலாகும்!”

     “அனைத்து விதமான அறங்களை அறிந்தவனும், தன்னிடம் அடைக்கலம் வந்தவர்களைக் கருணையுடன் காப்பவனுமான ஸ்ரீராமனிடம் நீ நட்புடன் இருந்தால் மட்டுமே உயிர் வாழ்வது சாத்தியமாகும்!”

     “அடைக்கலம் வந்தவர்களை அருளுடன் காக்கும் ஸ்ரீராமனின் அடிபணிந்து அவரை மகிழ்விப்பாயாக! தூய்மையான உள்ளத்துடன் என்னை ஸ்ரீராமனிடம் திருப்பி அனுப்பிவிடு!”

     “இரகு வம்சத்தின் மிகச் சிறந்தவரான ஸ்ரீராமனிடம் என்னைத் திரும்பத் தந்து விடுவதே உனக்கு நன்மை பயக்கும்! இல்லாவிடில், இராவணா! உன் மோசமான நடத்தையால் நீ கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!”

     “இந்திரனால் வீசப்பட்ட வஜ்ராயுதம் ஒருக்கால் உன்னைத் தாக்காமல் விட்டு விடலாம்! எமனும் உன்னை நெடு நாட்கள் கொண்டு போகாமல் விட்டு விடலாம்! ஆனால், உலகத்தின் நாயகனான ஸ்ரீராமனின் கோபம் ஒருக்காலும் உன்னைச் சும்மா விடாது!”

     “இந்திரனால் ஏவப்படும் வஜ்ராயுதத்தால் எழும் கடும் ஓசை போல, ஸ்ரீராமனது வில்லினுடைய நாணின் ஓசையை நீ கேட்க நேரிடும்!”

     “ஸ்ரீராமன் மற்றும் இலக்குமணனின் பெயர் பொறிக்கப்பட்ட அம்புகள், ஒன்றிணைந்து, நெருப்பைக் கக்கும் பாம்புகள் போல இங்கு வந்து விழப்போகின்றன!”

     “அரக்கர்களை அழிப்பதற்காக இந்த நகரத்தின் மீது வந்து விழும் கழுகின் இறகு பூண்ட அம்புகள், அவை விழாத இடங்களே இல்லை என்று சொல்லும் வண்ணம், எல்லா இடங்களையும் நிறைத்து விடப் போவதில் சிறிதும் ஐயமில்லை!”

     “கருடன் எவ்விதம் பாம்புகளைக் கொன்றழிப்பானோ, அது போல, ஸ்ரீராமன், பாம்புகள் போன்ற அரக்கர்களை கருடனாக மாறி அழித்தொழிப்பார்!”

     “மஹா விஷ்ணு, எவ்விதம் தன் மூன்றடிகளால், அரக்கர்களின் செல்வம் முழுவதையும் மீட்டுக் கொண்டாரோ, அது போலவே, பகைவர்களை அழிப்பதில் வல்லவரான என் கணவர், என்னை இங்கிருந்து மீட்டுச் செல்வார்.”

     “ஓ அரக்கனே! ஜனஸ்தானத்தில் எல்லா அரக்கர்களும் அழிக்கப்பட்டு, உனக்குப் போரில் ஈடுபட  வேறெந்த வழியும் இல்லாததால், இவ்விதமான தீய செயலை நீ செய்திருக்கின்றாய்!”

     “இழிந்தவனே! ஆண் சிங்கங்கள் போன்ற சகோதரர்கள் இருவரும் இல்லாத சமயத்தில், குடிலில் தனியாக இருந்த என்னை, நீ அபகரித்து வந்தாய்!”

    “இரண்டு புலிகளின் முன்னே நிற்பதற்குக் கூட எவ்விதம் ஒரு நாயினால் முடியாதோ, அது போல இராம இலக்குமனர்களின் பார்வையை உன்னால் எதிர்கொள்ள இயலாது!”

     “இரண்டு கைகளையுடைய இந்திரனால், விருத்தாசுரனின் மீதமிருந்த ஒரு கைக்கு எவ்விதம் அழிவு ஏற்பட்டதோ, அது போல, போர்க்களத்தில், இராம, இலக்குமனராகிய இருவர் முன்னே உன்னால் வெற்றி பெற இயலாது!”

     “எவ்விதம் சூரியனின் கிரணங்கள், தண்ணீரை ஆவியாக்கிவிடுமோ, அது போலவே, இராம இலக்குமணரின் அம்புகள் உன் உயிரை உறிஞ்சி விடப்போகின்றன!”

      “தன் ஆயுட்காலம் முடிந்த பெரிய மரமானது, பெரிய இடியிலிருந்த தப்ப முடியாமல் எரிந்து அழிந்துவிடும்.  அதுபோலவே, நீ ஸ்ரீராமனுக்குப் பயந்து, குபேரனுடைய இருப்பிடமான கைலாய மலைக்குச் சென்று ஒளிந்து கொண்டாலும், அல்லது வருணனுடைய அரசவையில் சென்று தஞ்சம் புகுந்தாலும், தசரத குமாரனாகிய ஸ்ரீராமனின் அம்புகளால் உன் உயிர் போகப்போவதில் சிறிதும் ஐயமில்லை!”

 

                                        இருபத்தியொன்றாவது ஸர்கம் நிறைவு

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...