Monday, July 3, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். இருபத்தாறாவது ஸர்கம்.

 

         ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

                                         இருபத்தாறாவது ஸர்கம்.

                          (உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தல்)

     ஜனகனின் மகளான சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்தது. தலை கவிழ்ந்திருந்தது.  அவளது மனம் பிறழ்ந்து விட்டதோ அல்லது அவளது உடலில் வேறு எவரது ஆவியேனும் புகுந்து விட்டதோ என்பது போல சித்தம் கலங்கிய நிலையில், ஒரு குதிரைக் குட்டியைப் போல, தரையில் புரண்டவாறு இவ்விதம் பேசலானாள்.

     “நினைத்த வடிவம் கொள்ளும் ஆற்றல் பெற்ற மாரீசன் என்னும் அரக்கனால், ஸ்ரீராமனின் கவனம் திரும்பி விட, அவரது பார்வையில் இருந்து மறைந்திருந்த என்னை, நான் அழுது புலம்பிய நிலையிலும், இராவணன் தன் வலிமையினால் என்னைக் கட்டுப்படுத்தி, அபகரித்துக்கொண்டு இங்கு வந்து விட்டான்.”

     “நான் இப்பொழுது இந்த அரக்கியரின் கருணையற்ற பாதுகாப்பில் சிக்குண்டு, அவர்களால் கடுமையாக அச்சுறுத்தப் படுகின்றேன்.  அதனால், பெருங் கவலையும், துயரமும் மோலோங்கியுள்ள என்னால் இனியும் உயிர் வாழ இயலாது.”

     “சிறந்த தேரோட்டியான ஸ்ரீராமனைப் பிரிந்து இந்த அரக்கியரிடம் சிக்குண்டு வாழ்வதில் என்ன நன்மை? எனக்கு இப்பொழுது எந்தச் செல்வமும் தேவையில்லை.  எந்த விதமான அணிகலனும் தேவையில்லை.”

     “எனது இதயம் கல்லாகிவிட்டதோ, இல்லை, மூப்பும் மரணமுமற்ற நிலையை அடைந்து விட்டதோ தெரியவில்லை.  ஏனெனில், இந்த அளவிற்கான எனது துயரங்களைப் பார்த்த பின்னும், இரண்டாகப் பிளக்காமல் உள்ளதே?”

     “ஸ்ரீராமனை விட்டுப் பிரிந்திருக்கும் நான், ஒரு முகூர்த்த நேரம் கூட உயிர் வாழ்ந்திருக்கக் கூடாது. அப்படி இருக்கும் போது, இன்னும் என் உயிரை வைத்துக்கொண்டிருக்கின்றேன் என்றால், நான் எப்படிப்பட்ட கற்பிழந்த இழிபிறவியாக இருக்க வேண்டும்! என் வாழ்க்கை  மிகவும் இகழத்தக்க ஒன்றாகும்.”

     “கடல் வரை விரிந்து கிடக்கும் இந்தப் பூமியின் தலைவனான, இன்சொல் பேசும் என் கணவன் இல்லாமல், உயிர் வாழ்வது என்பதோ, இன்பத்தை அனுபவிப்பது என்பதோ இயலாத செயலாகும்.”

     “கணவனை விட்டுப் பிரிந்து என்னால் நெடுங்காலம் உயிர் வாழ முடியாது. ஆகவே உயிரை விட்டு விடப் போகும் என்னைத் துண்டங்களாக்கினாலும் சரி, உணவாக்கிக் கொண்டாலும் சரி.” (மேலிரண்டு ஸ்லோகங்களும் கீதா பிரஸ் பதிப்பில் இல்லை)

     “இரவு நேரத்தில் உலவித் திரியும் அரக்கனான இராவணனை, எனது இடது காலினால் கூட நான் தொடமாட்டேன்.  அவ்வாறிருக்க, நான் எவ்வாறு அவன் மேல் காதல் கொள்ள முடியும்?”

     “அந்த அரக்கன், தன் மோசமான இயல்பினால் தன்னுடைய பெருமையையும் அறிந்திருக்கவில்லை.  தன்னுடைய குலத்தின் உயர்வைப் பற்றியும் கருத்தில் கொள்ள வில்லை. நான் அவனை வெறுப்பதையும் அவன் பொருட்படுத்தியவனாய் இல்லை.  ஒரு மூடனைப் போல, என்னை அடைய வேண்டியே, திரும்பத் திரும்ப முயற்சி செய்கின்றான்.”

     “ஏ அரக்கியரே! வீணாக நெடு நேரம் நீங்கள் இவ்விதம் உளறிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? என் உடலை வெட்டிப் போட்டாலும், கீறிப் போட்டாலும், துண்டங்களாக்கினாலும், இல்லை நெருப்பினால் சுட்டாலும், இராவணனது அருகில் கூட நான் நெருங்க மாட்டேன்.”

     “உலகத்தோரால் போற்றப்படும் ஸ்ரீராமன் சிறந்த அறிவாளி.  நன்றியுடையவர்.  நல்லொழுக்கம் உள்ளவர்.  மிகவும் கருணை கொண்டவர்.  அப்படிப்பட்ட ஸ்ரீராமன், என்னிடம் கருணை காட்டாது இருப்பதற்கு, என்னுடைய கெட்ட நேரமே காரணம் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.”

     “இல்லையென்றால், தண்டகாரண்யத்தில் தனி ஒருவனாக, இருபத்து நான்காயிரம் அரக்கர்களைக் கொன்றழித்தவர், ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை?”

     “இந்த அரக்கன் இராவணன், மிகவும் வலிவற்றவன்.  என்னை அபகரித்து வந்து சிறை வைத்திருக்கும் இவனை, என் கணவரான ஸ்ரீராமன், போர்க்களத்தில் நிச்சயம் அழித்துவிடும் திறமை கொண்டவர்.”

     “ஒரு எருதைப் போல வலிமை கொண்ட விராதன் என்ற அரக்கனை, தண்டகாரண்யத்தில் நடந்த போரில் கொன்ற ஸ்ரீராமன், என்னைக் காப்பாற்ற ஏன் வரவில்லை?”

     “கடலின் நடுவே இருக்கும் இந்த இலங்கையின் மீது படையெடுப்பது என்பது இயலாத செயலாக வேறு எவருக்கேனும் இருக்கலாம்.  ஆனால் ஸ்ரீராமனின் வில்லிலிருந்து கிளம்பும் அம்பினைத் தடுக்க யாரால் இயலும்?”

     “வலிமையும் ஆற்றலும் கொண்ட ஸ்ரீராமன், அரக்கனால் கடத்திச் செல்லப்பட்ட தன் அன்பினுக்கினிய மனைவியை மீட்டுச் செல்ல வராமல் இருக்க என்ன தகுந்த காரணம் இருக்க முடியும்?”

     “இலக்குமணனுக்கு மூத்தவரான ஸ்ரீராமன், நான் இங்கே சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை அறியாதவராக இருப்பார். ஒருவேளை, அறிந்திருந்தால், ஒளிபொருந்திய அவர் இந்த தகாத செயலைச் சகித்திருப்பது எப்படி சாத்தியம்?”

     “கழுகுகளின் அரசனான ஜடாயு மூலமாக நான் அபகரிக்கப்பட்ட செய்தியை ஸ்ரீராமன் அறிந்திருக்க முடியும். ஆனால், ஜடாயு தான் இராவணால் கொல்லப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டாரே!”

      “வயது முதிர்ந்திருப்பினும், ஜடாயு, என் மீது கருணை கொண்டு, என்னை மீட்பதற்காக இராவணனுடன் போரிட்டு தனது வீரத்தை நிரூபித்தார்.”

     “ஒருவேளை ஸ்ரீராமன் நான் இங்கிருப்பது பற்றி அறிந்திருந்தால், இக்கணமே, சினம் கொண்டு தன் அம்புகளால் இவ்வுலகத்தில் அரக்கர்கள் இனமே இல்லாது அழித்திருப்பார்.”

     “மேலும் ஸ்ரீராமன் இந்த இலங்கையை எரித்துச் சாம்பலாக்கி, கடலை வற்றச் செய்திருப்பார்.  நிலை கெட்ட இராவணனின் பெயர், புகழ் யாவற்றையும் அழித்திருப்பார்.”

     “நான் இவ்விடம் எவ்விதம் அழுதுகொண்டுள்ளேனோ, அது போலவே, ஒவ்வொரு அரக்கியரின் வீட்டிலும், அவர்தம் கணவரை இழந்ததால் எழும் அழுகையொலி விடாது கேட்கும் என்பதில் ஐயமில்லை.”

     “ஸ்ரீராமனும், இலக்குமணனும் இலங்கையைக் கண்டு பிடித்து, இங்கே வந்து விட்டால், பின்பு அவர்கள் முன்பு பகைவர்கள் ஒரு நொடி கூட உயிர் தரிக்க முடியாது.”

     “இலங்கையின் வீதிகளில் பிணங்கள் எரியும் புகையினால், இந்த நகரமே விரைவில் மறைக்கப்பட்டு விடும்.  கழுகுகள் கூட்டமாக, இந்த நகரத்தின் மீது வட்டமிட்டபடி இருக்கும்.  மொத்தத்தில், இலங்கை ஒரு மயான பூமியாக மாறிவிட்டிருக்கும்.”

     “வெகுவிரைவில், என் எண்ணக் கிடக்கைகள் நிறைவேறும் காலம் வரப் போகின்றது.  உங்கள் அனைவரின் மோசமான நடவடிக்கைகளின் காரணமாக விபரீதமான விளைவுகளை நீங்கள் சந்திக்கப் போகின்றீர்கள் என்று தோன்றுகிறது.”

     “இலங்கையில் தோன்றும் கெட்ட நிமித்தங்களைப் பார்க்கும் போது, வெகு விரைவில், அது தன் பெயரையும், புகழையும் இழந்து நிற்கும் என்று தோன்றுகிறது.”

     “பாவச் செயல்கள் புரியும் இராவணன் கொல்லப்பட்ட பிறகு, இந்த நகரம் ஒரு விதவைப் பெண்ணைப் போன்ற மோசமான நிலையை அடையும்.”

     “பல புனிதமான நிகழ்வுகள் நிகழ்ந்த இடமான இந்த இலங்கை, தன் அரக்கர்களுடன் அதன் தலைவனையும் இழந்து, ஒரு கைம்பெண்ணைப் போல காட்சியளிக்கப் போகின்றது.”

     “வெகு விரைவில், இந்த இலங்கையின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளம் அரக்கியரின் அழுகுரலை நான் கேட்பேன்.”

     “ஸ்ரீராமனின் வில்லிலிருந்து கிளம்பும் அம்புகளால் இந்த இலங்கை எரிந்து, தன் ஒளியை இழந்து விடும்.  கடும் இருள் இந்த நகரத்தைச் சூழ்ந்து விடும்.  இலங்கையின் முக்கியமான அரக்கர்கள் அனைவரும் கொல்லப்படுவர்.”

     “சினத்தினால் சிவந்த கண்களைக் கொண்ட மாவீரனான ஸ்ரீராமனுக்கு, நான் இங்கே இலங்கையில் இந்த அரக்கனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும்  செய்தி தெரிந்தால் அல்லவா மேற்சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நடக்கும்?”

     “இந்தத் தரமிழந்த, கொடூரமான இராவணன் எனக்கு நேரம் குறித்திருக்கின்றான்.  ஆனால், அதற்குள், மிகக் குறைந்த நேரத்தில் அவனுடைய காலமே முடிந்துவிடப் போகின்றது.”

     “என்னுடைய மரணத்திற்குக் கொடியவனான இராவணன் நாள் குறித்துள்ளான்.  தீய செயல்களை விரும்பிச் செய்யும் அரக்கர்களுக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்ற அறிவே கிடையாது.”

     “இந்த அறமற்ற செயலால், வெகு விரைவில் பேரழிவு நிகழப் போகின்றது.  ஆனால், மாமிசத்தைப் புசிக்கும் இந்த அரக்கர்களுக்கு நல்லறம் பற்றி என்ன தெரியும்?”

      “இந்த அரக்கன், அவனது காலை உணவிற்காக நிச்சயம் எனது உடலைத் துண்டு துண்டாக வெட்டப் போகின்றான்.  என் அன்புக் கணவன் ஸ்ரீராமன் என்னுடன் இல்லாத அந்த  நேரத்தில், உதவியற்ற நான் என்ன செய்ய முடியும்?”

     “செவ்வரி ஓடிய கண்களைக் கொண்ட ஸ்ரீராமனைக் காண இயலாத துயரத்தில் இருக்கும் நான், உதவியற்றவளாய், கணவனின் பாதம் தொழாமலேயே எமதேவனை விரைவில் காண இருக்கின்றேன்.”

     “பரதனின் மூத்த சகோதரனான ஸ்ரீராமன், நான் உயிரோடு இருப்பதை அறிந்திருக்கவில்லை.  அறிந்திருந்தால், அவர் இந்தப் பூமியில் என்னைத் தேடாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.”

     “இலக்குமணனின் மூத்த சகோதரனான ஸ்ரீராமன், என்னைக் காண இயலாத துயரத்தில், இந்தப் பூமியில் தன் உடலை விட்டு விட்டு மேலுலகம் சென்று விட்டார் என்பதில் ஐயமில்லை.”

     “தாமரையின் இதழொத்த கண்களை உடைய ஸ்ரீராமனை மேலுலகத்தில் கண்டு களித்திருக்கும் தேவர்கள், கந்தர்வர்கள், சித்த புருஷர்கள், பெருந்துறவிகள் யாவரும் நற்பேறு பெற்றவர்கள்.”

     “இல்லையென்றால், அறத்தின் வழி ஒழுகும், பேராற்றல் வடிவான, துறவிகளுக்கெல்லாம் அரசன் போன்ற ஸ்ரீராமனுக்கு, தன் மனைவியினால் ஏதும் பயன் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டதா?”

     “தம்முடைய உற்றார் தமது கண்கள் முன்னே இருக்கும் வரை தான் அன்பு நிலைத்திருக்கும்.  கண்ணிலிருந்து மறைந்து தொலைவாகச் சென்று விட்டால், சென்று விட்டவர் மீது அன்பு இருப்பதில்லை.  நன்றியில்லாதவர்கள், உறவினர் கண்களிலிருந்து மறைந்ததும், அவர்களை நிராகரித்து விடுகின்றார்கள்.  ஆனால், ஸ்ரீராமன் அவ்விதம் செய்ய மாட்டார்.”

     “இல்லையென்றால், எனக்குள்ளே ஏதோ சில தீய குணங்கள் இருக்க வேண்டும்.  அல்லது எனது நற்பேறு நிறைவடைந்திருக்க வேண்டும்.  அதனால் தான், சிறந்த பண்புகள் கொண்ட நான், வணக்கத்திற்குரிய கணவனிடமிருந்து பிரிந்திருக்கின்றேன்.”

     “களங்கமற்ற நற்குணங்கள் உடையவரும், பெரும் வீரரும், பகைவர்களை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றவரும், சிறந்த மனிதருமான ஸ்ரீராமனைப் பிரிந்து வாழ்வதை விட, இறந்து விடுவதே மிகவும் சிறந்தது.”

     “இல்லையெனில், சகோதரர்களான ஸ்ரீராமனும், இலக்குமணனும், காடுகளில் காய், கனிகளை உண்டு, வன வாசிகளாய் மாறி, ஆயுதங்களை விட்டொழித்து விட்டார்களா?”

     “இல்லையென்றால், தீயவுள்ளம் கொண்ட அரக்கர் குல அரசனான இராவணன், தகாத வழியில் சூழ்ச்சி செய்து, வீரம் மிக்க சகோதரர்களான ஸ்ரீராமனையும் இலக்குமணனையும் கொன்று விட்டானா?”

     “ஆகவே, இந்தச் சூழ்நிலையில், நான் எவ்விதமாவது, என் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புகின்றேன்.  ஆனால், இவ்வளவு துயரம் அனுபவிக்கும் எனக்கு மரணம் நேர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையே?”

     “உண்மையான பேராற்றலைத் தங்களுக்கு உள்ளே உணர்ந்தவர்களும், தங்கள் புலன்களை அடக்கிக் கொள்ளும் பயிற்சி பெற்றவர்களுமான பெரிய பெரிய துறவிகள், பெரும் பேறு பெற்றவர்கள்.  ஏனென்றால், அவர்களுக்குத்தான் விருப்பமானவை, விருப்பமற்றவை என்ற வேறுபாடு இல்லை.”

     “விருப்பு வெறுப்பு ஆகிய இரண்டையும் துறந்து விட்ட மிகச் சிறந்த மனிதர்களுக்கு என் வணக்கங்கள்.  ஏனெனில் விருப்பம் நிறைவேறாததால் ஏற்படும் துன்பமும், வெறுப்பு மிகுதியினால் ஏற்படும் அச்சமும் அவர்களுக்கு இல்லை !”

     “ஆகவே, என் அன்பிற்கினியவரும், தன்னை உணர்ந்தவருமான ஸ்ரீராமனிடமிருந்து பிரிந்து, இங்கே கொடுஞ்செயல் புரியும் இராவணனிடம் சிறையிருக்கும் நான், என் உயிரை விட்டு விடுகின்றேன்.”

 

                                இருபத்தியாறாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...