ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
பதினெட்டாவது ஸர்கம்.
இவ்வாறாக, பூக்கள்
சொரியும் மரங்கள் நிறைந்த அந்த அசோக வனத்தின் அழகினைப் பருகியவாறும், சீதையினைத் தேடியவாறும்
இருந்ததில் இரவின் பெரும் பகுதி கழிந்து, சிறிதே மிச்சம் இருந்தது.
ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்களில் விற்பன்னர்களும்,
சிறந்த யாகங்களைச் செய்தவர்களுமான ப்ரஹ்ம ராக்ஷஸர்கள், இரவின் அந்தப் பின் பகுதியில்,
வேத கோஷங்கள் முழக்குவதை ஸ்ரீஅனுமன் கேட்டார்.
அதே நேரத்தில்,
தோள் வலியனும், பதின்முகனுமான இராவணன், மங்கள இசைக்கருவிகளின் செவிக்கினிய ஒலியின்
மூலமாகவும், புகழ் வார்த்தைகளாலும் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டான்.
தகுந்த நேரத்தில்
உறக்கம் கலைந்து எழுந்த, பெரும் வீரனான இராவணன், நழுவிக்கிடந்த மாலைகளுடனும், ஆடைகளுடனும்
கூடியவனாய், விதேஹ குமாரியான சீதையைப் பற்றிய
எண்ணம் கொண்டான்.
காம இச்சை அதிகம்
கொண்டிருந்த அந்த அரக்கன், மன்மதனால் தூண்டப்பட்டு, சீதையின் மேல் அதிக மோகம் கொண்டிருந்தான்.
அவனால் அதை அடக்கிக்கொள்ள இயலவில்லை.
இராவணன், பலவிதமான
நகைகளை அணிந்து, தன்னை அலங்கரித்துக்கொண்டு, அந்த அசோக வனத்தினுள் நுழைந்தான். அப்பொழுது அங்கிருந்த மரங்கள், பூக்களோடும், பழங்களோடும்
அழகுற விளங்கின. பல வண்ணப் பூக்கள் அந்த வனத்தின்
அழகை மிகைப்படுத்தின.
தெளிந்த பல நீரோடைகள்,
அந்த வனத்தைச் சுற்றி இருந்தன. எப்பொழுதும்
காதல் மயக்கத்தில் இருக்கும் பறவைகளின் விசித்திரமான சப்தங்கள் நிரம்பியிருந்தன.
விளையாடுவதற்காக
வைக்கப்பட்டிருந்த மான் பொம்மைகள் அல்லாது, பலவிதமான மிருகக் கூட்டங்கள் அங்கு இருந்தன. பழுத்து, கீழே விழுந்திருந்த பழங்கள் பாதையெங்கும்
நிறைந்திருந்தன.
அந்த மலர்த்தோட்டத்தில்,
தங்கத்தாலும், முத்துக்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயில்கள்
இருந்தன. அவற்றினுள்ளே, நீண்ட வரிசையில் மரங்கள்
இருந்தன. இவற்றையெல்லாம் பார்த்தவாறே, இராவணன்,
அந்த அசோக வனத்தினுள் நுழைந்தான்.
எவ்விதம் தேவேந்திரனின்
பின்னே, தேவலோகப் பெண்களும், கந்தர்வப் பெண்களும், செல்வார்களோ,அது போலவே, அந்த அசோக
வனத்தினுள் நுழையும் புலஸ்த்ய குமாரனனான இராவணனின் (புலஸ்த்யன்- பிரம்மாவின் மகன்)
பின்னே, நூற்றுக்கணக்கான பெண்கள் சென்றார்கள்.
அந்தப் பெண்களில்,
சிலரது கைகளில் தங்கத்தாலான விளக்குகள் இருந்தன. சிலரது கைகளில் சாமரமும், சிலரது கைகளில்
பனை விசிறிகளும் இருந்தன.
சில பெண்கள்
தங்கத்தாலான பாத்திரங்களில், நீர் கொண்டு முன்னே சென்றனர். சிலரது கைகளில் வட்ட வடிவமான திண்டுகள் இருந்தன.
இராவணன் அருகில்
ஒரு பெண், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த கலசத்தில், குடிப்பதற்கான பானம்
நிரப்பப்பட்டு, அதைத் தன் வலக்கரத்தில் வைத்துக்கொண்டிருந்தாள்.
இன்னுமொரு பெண்,
தங்கத்தாலான கைப்பிடியைக் கொண்ட, முழு நிலவினையும், ராஜ அன்னத்தையும் ஒத்த வெண்ணிறத்தில்
இருந்த ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு, இராவணன் பின்னே சென்றாள்.
மேகத்தைத் தொடரும்
ஒளி மின்னல்களைப் போல, இராவணனின் அழகிய மனைவிகள், உறக்கம் கலையாத கண்களுடன் தங்கள்
கணவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
அவர்கள் அணிந்திருந்த
மாலைகளும், தோள்களில் அணிந்திருந்த அணிகலன்களும் கலைந்திருந்தன. உடலகளில் பூசியிருந்த சந்தனம் உதிர்ந்துவிட்டிருந்தது. தலைப் பின்னல்கள் அவிழ்ந்திருந்தன. முகங்களில் வியர்வைத்துளிகள் இருந்தன.
அந்த அழகிய பெண்கள்,
முதல்நாள் அருந்திய மதுவின் மயக்கம் தெளியாமல், உறக்கம் முற்றும் கலையாத கண்களுடன்
சென்று கொண்டிருந்தனர். உடலெங்கும் அணிந்திருந்த
பூமாலைகள் வியர்வையில் நனைந்திருக்க, பூக்கள் சூடப்பட்டிருந்த அவர்களின் தலை முடிகள்
அசைந்து கொண்டிருந்தன.
இராவணனின், மயக்கும்
விழிகளைக் கொண்டிருந்த அந்த மனைவிமார்கள், தங்கள் கணவரின் மேலிருந்த அபிமானத்தாலும்,
அன்பினாலும் அவன் பின்னே சென்று கொண்டிருந்தனர்.
அவர்களின் கணவனான
வலிமை மிக்க இராவணன், காம இச்சைக்கு ஆட்பட்டிருந்ததால், மந்த புத்தியுடன் இருந்தான். சீதையை நினைத்துக்கொண்டு, மெதுவாக, உற்சாகத்துடன்,
சீதையின் இருப்பிடம் நோக்கி நடந்து சென்றான்.
அப்பொழுது அந்தப்
பெண்களின் இடுப்பில் அணிந்திருந்த ஒட்டியாணங்களின் ஓசையும், கால்களில் அணிந்திருந்த
சலங்கைகளின் ஓசையும் வாயுபுத்ரனான, ஸ்ரீஅனுமனுக்குக் கேட்டது.
செயலாற்றுவதில்
ஈடு இணையற்றவனும் , நினைத்துப் பார்க்க முடியாத வீரமும், ஆண்மையும் கொண்டவனுமான இராவணன்,
அசோக வனத்தின் நுழைவுப் பகுதிக்கு வந்து விட்டதை, ஸ்ரீ அனுமன் பார்த்தார்.
இராவணனின் முன்புறம்
வாசனை நிரம்பிய எண்ணெய்களால் எரியும் விளக்குகள் கொண்டு செல்லப்பட்டதால், எங்கிருந்து
பார்த்தாலும் இராவணன், தெளிவாகத் தெரிந்தான்.
இராவணன் அதிக
காமத்துடனும், கர்வத்துடனும், மயக்கத்துடனும் இருந்தான். அவனது பெரிய கண்கள் சிவந்து,
தாழ இருந்தன. அவனைப் பார்க்கையில், கையில்
வில் இல்லாத மன்மதனைப் பார்ப்பது போல இருந்தது.
இராவணனது உடையானது,
கடையப்பட்ட அமுதத்தின் நுரைபோல, குறைகளற்று வெண்மையாக, மிகச் சிறப்பாக இருந்தது. முத்துக்களும், பூக்களும் அந்த உடையில் இருந்தன.
அவனது ஆடை, அவன் கையிலணிந்திருந்த ஆபரணத்தில் சிக்கிவிட, அதை அவன் சரி செய்து கொண்டிருந்தான்.
அசோக மரத்தின்
இலைகள் மற்றும் கிளைகளில் மறைந்திருந்த ஸ்ரீஅனுமன், நூற்றுக்கணக்கான இலைகளினாலும் பூக்களினாலும்
மறைக்கப்பட்டிருந்தார். அவ்வாறிருக்கும் சமயத்தில்,
அருகே வந்திருக்கும் இராவணனின் அடையாளங்களைக் கண்டறிய முனைந்தார்.
அவ்வாறு பார்க்கும்போது,
அழகிலும் இளமையிலும் மிளிர்ந்த இராவணனது அழகிய மனைவிகளையும் ஸ்ரீஅனுமன் தன் கண்களால்
பார்வையிட்டார்.
இவ்விதம் அழகிய
பெண்கள் பின்தொடர வந்த அந்தப் பெரும் புகழ் வாய்ந்த அரசனான இராவணன், பலவிதமான பறவைகளும்,
விலங்குகளும் ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் அந்த அசோக வனத்தினுள் நுழைந்தான்.
விஸ்ரவஸரின் குமாரனான இராவணன், மிகுந்த மது மயக்கத்தில்
இருந்ததையும், விதவித மான அணிகலன்கள் அணிந்திருந்ததையும், அவனது காதுகள் நீண்டு இருந்ததையும்
ஸ்ரீஅனுமன் கண்டார்.
அழகிய பெண்கள்
சூழ நடந்து வரும் ஒளிபொருந்திய அந்த வீரனைப் பார்க்கும் போது, அவன் நட்சத்திரங்களுடன்
துலங்கும் நிலவினைப் போல இருந்ததை ஸ்ரீஅனுமன் கண்டார்.
இந்த மிகப் பெரிய
வீரன் இராவணனே என்று ஸ்ரீஅனுமன் உறுதி கொண்டார். “இவன் தான் நகரத்தின் உள்ளே மாளிகையில்
உறங்கிக்கொண்டிருந்தவன்” என்று முடிவு செய்து கொண்ட ஸ்ரீஅனுமன், தான் அமர்ந்திருந்த
கிளையிலிருந்து கீழே இறங்கினார்.
சிறந்த அறிவாளியான
ஸ்ரீஅனுமன், மிகவும் ஒளி பொருந்தியவராய் இருந்தாலும், இராவணனது ஒளியினால் கூச்சம் அடைந்து,
அடர்ந்திருந்த இலை, தலைகளுக்குள் நுழைந்து மறைந்து கொண்டார்.
அங்கே இராவணன்,
கரிய கூந்தலையும், மைவிழிகளையும், சிற்றிடையையும், அழகிய மார்பகங்களையும் கொண்டிருந்த
சீதையைப் பார்ப்பதற்காக, சீதையின் அருகில் சென்றான்.
பதினெட்டாவது
ஸர்கம் நிறைவு.

No comments:
Post a Comment