பத்ரி விஷால் யாத்ரா 2022
ஸ்ரீதரன் பலராமன்
சிறுவயது முதலே எங்களது யாத்திரை எல்லாம் திருப்பதியோடு சரி! ஒரு முறை மந்த்ராலயம்
சென்று வந்தது உண்டு! மேலும் திட்டமிடும் யாத்திரைகளுக்கு பெரும்பாலும் ஏதேனும் தடங்கல்கள்
வருவதும் வழக்கம். மணமாகி சுமார் ஆறு அல்லது ஏழு வருடங்கள் கழித்து LFC ல் திருவனந்தபுரம்
மட்டும் சென்று வந்தது உண்டு. மற்ற LFC எல்லாம் திருப்பதி மட்டுமே. 2005ல் டில்லி சென்றது
, பின் அம்மாவுடன் காரில் பாண்டிச்சேரி சென்றது போன்ற விதிவிலக்குகள் உண்டு.
பின்
2015ல் மே மாதத்தில், அரை மணி நேரத்தில் முடிவெடுத்து , இரு தினங்களில் கிளம்பி, உடுப்பி
மற்றும் சுற்றியிருந்த இடங்களைப் பார்த்து வந்ததும், பின் தொடர்ச்சியாக அந்தமான் மற்றும்
காசி பயணங்களும் சட்டென்றே கிடைத்தன. காசி
யாத்திரையில் உடன் வந்த உறவினர் மூலம் இந்த பத்ரி யாத்திரையைப்பற்றி கேள்விப்பட, மனைவியின்
பள்ளித் திறப்பும் ஒத்துப்போக, மே மாதம் முடிவெடுத்து முன்பணம் செலுத்திவிட்டோம். என்
இரண்டாவது தமக்கையின் கணவரும் உடன் வர , பயணம் கரூரிலிருந்து காரில் இனிதே 24ம் தேதி
ஜூன் மாதம் அன்று துவங்கியது. பெங்களூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் 26 ம் தேதி
டெஹ்ராடூன் சென்று, பின் ஹரித்வாரிலிருந்து 27ம் தேதி பேருந்து மூலம் பத்ரி செல்வதாக
திட்டம்.
இன்பத்தில் துன்பம்,
துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்தது.
24/06/2022 வெள்ளிக்கிழமை
திட்டமிட்டபடி, 24ம் தேதி, என்னுடைய காரில் நாங்கள் மூவரும் கரூரிலிருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பினோம். ஃப்ளாஸ்கில் காப்பி மட்டும் எடுத்துக் கொண்டு வழியில் காலை உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டம். நாமக்கள் டோல் தாண்டும் போது, கியர் விழுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. ( இரண்டு தினங்கள் முன்பே செர்வீஸ் சென்டரில் காரைக்கொடுத்து சரி பார்த்திருந்தேன்). இருப்பினும் பிரச்சனை தொடர்ந்து இருந்துவர, வழியில் எதாவது மெக்கானிக் ஷாப் கிடைக்குமா என்று பார்த்தவண்ணம் வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக, க்ளட் லீவர் அழுத்துவதிலும், அது ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் அதிகமாகிக்கொண்டிருந்தது. ராசீபுரம் தாண்டியதும் ஒரு டீசல் ஆட்டோ வொர்க்ஷாப் அருகில் வண்டியை நிறுத்தி விசாரிக்க, அருகில் ஒரு கடை இருப்பதாகவும் அங்கு பார்க்குமாறும் சொன்னார்கள். சரி என்று வண்டியில் அமர்ந்து கிளப்ப முயல, வண்டி ஒரு அடி கூட நகரவில்லை.
அப்படியே நிறுத்திவிட்டு, இறங்கிச்சென்று பார்க்க, கடை உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. மீண்டும் கலக்கத்துடன் அருகில் விசாரிக்க, போர்டில் இருக்கும் எண்ணுக்கு போன் செய்யும்படி சொன்னார்கள், உள்ளிருந்து ஒரு மெக்கானிக் வந்து விஷயத்தைக் கேட்டு, அவரும் வண்டியை எடுக்க முயன்றார். அவருக்கும் பெப்பே காட்டியது கார். சீட்டுக்கடியில் படுத்துப் பார்த்த அவர், க்ளட்ச் போய்விட்டது என்றும் சரி செய்து விடலாம் என்றும் சொல்லி, வண்டியை சாலையிலிருந்து மேட்டிலிருந்த அவரது கடைக்குள் தள்ளிச்சென்று நிறுத்தினோம்.
நான் அரை மணி, ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும் என்று நினைத்திருக்க, மாலைதான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார். வண்டி நிரம்ப சாமன்களுடன் வண்டி பரப்பிரம்மமாய் நின்றிருந்தது. பெங்களுரிலிருந்த பிள்ளைகளுக்குத் தகவல் தெரிவிக்க, சில பல ஆலோசனைகளுக்குப் பிறகு, வண்டியை அங்கேயே விடுவதென்றும், வேரு ட்ராப் டாக்சி பதிவு செய்து, பயணத்தைத் தொடரவும் முடிவு எடுக்கப்பட்டது. கார் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகுமென்றார்கள். பசி வேறு. காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. மெக்கானிக் நாற்காலிகள் தர அங்கேயே அமந்து ஃப்ளாஸ்கில் இருந்த காப்பியைக் குடித்து சமாளித்தோம். பதினொன்றை மணி சுமாருக்கு கார் வர, வண்டியிலிருந்த சாமான்களை புது வண்டியில் மாற்றி , அரை மனதாய் வண்டியை அங்கேயே விட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
கார்
பழுதானது துன்பமென்றாலும் சரியாக, மெக்கானிக் கடை முன்பு நின்றுபோனது ஆண்டவனின் கருணையன்றி
வேறென்னவாக இருக்க முடியும்? ஆக, இன்பத்தில்
துன்பம், துன்பத்தில் இன்பம் , இறைவன் வகுத்தது என்பதில் எந்த வித சந்தேகமும்
இல்லை!
பத்ரிநாத் பயணத்தின் சிக்கலே
என்ன உடை எடுத்துச்செல்வது என்பதுதான். தட்பவெப்ப நிலையை நோக்கினால், இரவு பத்து டிகிரி
அளவிலும், பகல் பொழுது பதினாறு பதினேழு டிகிரி அளவிலும் இருக்குமென்பதால் ஸ்வெட்டர்,
மஃப்ளர், உள்ளே அணிய warm clothes, ஷூ, wollen socks இத்யாதிகள் பெட்டியை நிரப்பிவிட்டன. மற்றபடி தினப்படிக்கான
துணிகள், மடிக்க மடிக்கத் துணிகளாய் இரண்டு பெரிய பெட்டிகள் தயார். கேபின் பெட்டிகள்
இரண்டு. பத்து நாட்களுக்கான மாத்திரை மருந்துகள், ஃபோனுக்குத் தேவையான உபகரணங்கள்,
ஆக ரொம்பவும் கனமாகத் தயாராகியிருந்தோம். நாளை சனி கழிந்து, ஞாயிறு காலை பத்து மணிக்கு
விமானம். வீட்டிலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதால்
காலை ஆறரை மணிக்கே கிளம்ப வேண்டும். சனிக்கிழமை முழுவதும் விருந்தாளிகளுக்கு நடுவே
பேக்கிங் வேலையும் நடந்தது. இளைய மகன் சென்சார் செய்து சில பொருட்களை விலக்க, கனம்
கொஞ்சம் குறைந்தது. ஸ்னாக்ஸ் எதுவும் வேண்டாம்
என இருந்தாலும், இறுதியில் சம்பந்தி கொண்டுவந்திருந்த உப்புட்டுவும் மிக்சரையும் எடுத்துக்கொண்டோம்.
ஞாயிறு காலை, 26/06/2022, இரு மகன்களுடனும் விமான நிலையம் கிளம்பினோம். அக்காவின் கணவர் தன் மகன் வீட்டிலிருந்து நேரடியாக
விமான நிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில்
பர்கர் உண்டு காலை சிற்றுண்டி முடிக்க, பிள்ளைகளிடம் விடை பெற்று நிலையம் உள்ளே சென்றோம்.
செக் இன், செக்யூரிடி எல்லாம் முடிந்து போர்டிங் ஏரியா சென்றடையும் போது போர்டிங் ஆரம்பம்
ஆகிவிட்டிருந்தது. பயண மேலாளர் சொல்லியிருந்தது போல் எங்கள் பயணக் குழுவைச் சார்ந்த
இருபதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே இருந்தனர். சரியான் நேரத்தில் விமானம் புறப்பட்டது.
இது மூன்றாவது முறையானதால், (முதலில் அக்கா மகனின் திருமணத்திற்காக கல்கத்தா, பின்
அந்தமான்) பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. பயண நேரம் சுமார் மூன்று மணி நேரம்.
டெஹ்ராடூனில் இறங்கி, பெட்டிகளை எடுத்துகொண்டு, அங்கிருக்கும் இருக்கைகளிலேயே
அமர்ந்திருக்கும்படி ஏற்கனவே அறிவுருத்தப்பட்டிருந்ததால், சென்னையிலிருந்து பயண மேலாளரும்
மற்றும் பயண உறுப்பினர்களும் வரும் வரை விமான நிலையத்தின் அப்பகுதியிலேயே இருந்தோம்.
எல்லோரும் அவரவர் உணவுப்பொட்டலத்தைப் பிரித்து பிசியாக, எதுவும் கொண்டுவந்திராத எங்களுக்கு
சம்பந்தி கொண்டுவந்திருந்த உப்புட்டுவும் மிக்சரும் கொஞ்சம் பசியாற்றின. ஒருவருக்கொருவர்
அறிமுகம் ஆகி சென்னை நண்பர்களுக்காகக் காத்திருந்தோம்.
சுமார் மூன்று
மணிக்கு சென்னை விமானம் வந்து சேர, அனைவரும் விமான நிலையம் விட்டு வெளியேறி, ஹரித்வார்
செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தோம், சரியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. இங்கும்
அங்கும் அலைகழிக்கப்பட்டு, பெட்டிகளை இழுத்துக்கொண்டு சாலையேறி , பேருந்துக்குள் பெட்டிகளை
ஏற்றிவிட்டு, இருக்கைக்குச் சென்றால் , எப்பொழுதும் எங்கள் ராசியான கடைசி வரிசையே காத்திருந்தது.
வெக்கையில் வியர்த்து வடிய, வண்டி ஓடும் பொழுது மட்டுமே காற்று வந்தது. சுமார் ஒரு
மணி நேரத்தில் ஹரித்வார் தங்குமிடம் வந்தடைந்தோம். நீ முந்தி, நான் முந்தி என பெரும்பாலானோர்
அறைகளைப் பெற்றுச்செல்ல, எங்களுக்கு கிடைத்த அறையில் வெஸ்டர்ன் டாய்லட் இல்லாததால்,
மீண்டும் மேலாளருடன் போராடி, பக்கத்துக் கட்டிடத்தில் க்ரவுண்ட் ஃப்ளொராக வெஸ்டர்ன்
டாய்லட்டுடன் அறை கிடைத்தது. அரை மணி நேரத்தில்
சிரம பரிகாரம் செய்துகொண்டு, கங்கா ஆரத்தி பார்க்க தயாராகும் படி அறிவுருத்தப்பட்டோம்.
ஆட்டோவிற்கு ஆறு பேர், ஆட்டோவிற்கு 600 ரூபாய் என பேசி விடப்பட்டது. திரும்ப அதே ஆட்டோவில்
வர வேண்டும். ஆட்டோ டிரைவரின் ஃபோன் நம்பர் மற்றும் வண்டி எண்ணைக் குறித்துக்கொண்டு,
ஹரி கா போடி என்னும் அந்த இடத்தில் ஆரத்தி பார்ப்பதற்காக கங்கைக் கரையோரமாக நடக்கத்
தொடங்கினோம். நீரோட்டம் இல்லாத கங்கை நதி. பலரும் குளித்துக் கொண்டிருந்தார்கள், கரையெங்கும்
கடைகள். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நடந்து ஆரத்தி நடக்கும் இடத்திற்குச் செல்ல
வேண்டும். திரும்ப அதே தூரம் நடந்து வந்து ஆட்டோ பிடிக்கவேண்டும். மனைவியின் மூட்டு
வலியும், புது ஷூவும் கொடுத்த தொந்திரவுடன் மெதுவாக ஆரத்தி நடக்கும் இடம் வரை நடந்து
அந்தப்பாலத்தில் ஏறினோம்.
அங்கிருந்து
பார்க்கும்போதுதான் கங்கையின் ப்ரவாகம் தெரிந்தது. சுழித்து பெரும் வேகத்துடன் சென்று
கொண்டிருந்த கங்கையாற்றின் நீர் பிரித்துவிடப்பட்டு, Back water canal போல் நாங்கள் நடந்து வந்த இடம் இருந்தது.
இரவு
ஏழேகால் மணிக்கும் கூட வெளிச்சம் இருந்தது. உக்கிரம் அதிகமாக இருந்தது. தண்ணீர் பாட்டில்
பாட்டிலாக உள்ளே சென்று கொண்டிருந்தது. ஆட்டோ
கிளம்புமுன் Slice வாங்கி தைரியமாகக் குடித்தோம். எல்லாம் பத்ரி நாராயணன் விட்ட வழி!
இருமல் வந்தால் பாதுகாக்க Coffsils பட்டை பட்டையாகக் கை வசம் இருந்தது. ஒருவழியாக அறைக்குத்
திரும்பினோம். மீண்டும் காலை ஆறு மணிக்குப்
புறப்பட வேண்டும்.
காலை சீக்கிரம் எழுந்தது, விமானப் பயணம், டெஹ்ரடூனிலிருந்து பஸ் பயணம், மாற்றி
மாற்றி அறைகளுக்கு பெட்டிகளை இழுத்துச்சென்றது, புது செருப்பின் கடி இதெல்லாமும் முதல்
நாளே படுத்திவிட்டது. ஆரத்தி பார்க்க செல்லாமல் இருந்திருந்தால் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக
இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
இரவு
உணவிற்குப் பிறகு மீண்டும் பத்ரி செல்வதற்காக தனியாக சிறு பெட்டிகள் ரெடி செய்யும்
வேலை! ஸ்வெட்டர்கள், ஸாக்ஸ்கள், மஃப்ளர்கள், மூன்று நாட்களுக்கான உடுப்புகள், ஸ்ரார்த்தம்
செய்வதற்கான சாமான்கள், மாத்திரைகள், அப்பப்பா….பெரிய பெட்டியிலிருந்து சிறிய பெட்டிகளுக்கு
மாற்றி, இது வேண்டும் , வேண்டாம் என முடிவெடுத்து ஒரு வழியாவதற்குள் இரவு மணி பதினொன்றரை
ஆகி விட்டது. பெரிய பெட்டிகளை காலை ஒரு பொது அறைக்குள் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.
நான்கு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்துவிட்டோம்.
27/06/2022 திங்கள் கிழமை
அலாரம் அடிக்குமுன்பே எழுந்துவிட்டேன். சுடுதண்ணீரின் தேவை இல்லாததால் , குழாய்த்தண்ணீரிலேயே
குளித்து தயாராகி , 5.20 க்கு காபிக்கு வந்தால் தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டார்கள்.
அங்கு ஒரு சண்டை நடந்து மீண்டும் காபி கிடைக்க அரை மணி நேரம் ஆகி விட்டது. எங்களுக்கு
இரண்டாம் எண் வண்டி. லிஸ்டில் எங்களுக்கு மீண்டும் கடைசி வரிசையே! மொத்தம் ஐந்து டெம்போ
ட்ராவலர்கள். கால் வைக்க இடமில்லாமல் சாமான்கள் கிடக்க இதில் பத்து மணி நேரம் பயணிக்க
வேண்டும். பத்ரி நாராயணனைப் ப்ரார்த்தித்துக் கொண்டு பயணம் தொடங்கியது. கிளம்பும் போது
மணி காலை ஏழு இருக்கும்.
எங்கள் வண்டியில் எங்கள் மூவரைத்தவிர
மற்ற பத்து பேரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். வண்டி புறப்பட்டதும் ஆரம்பித்த பஜனை
நெடு நேரம் தொடர்ந்தது, காலை உணவிற்காக ஓரிடத்தில் நிற்கும் வரை. ஐந்து வண்டிகளும்
வரும் வரை அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க நேர்ந்தது. பொறுமை இழந்து அங்கிருந்த
கடையில் டீ ஆர்டர் செய்து சாப்பிடத் துவங்கும் பொழுது எல்லா வண்டிகளும் வந்துவிட்டன.
அங்கிருந்த பாலத்தின் நுனியில் வைத்து எல்லோருக்கும் உப்புமா வழங்கப்பட்டது. கையில்
தட்டுடன் அனைவரும் வரிசை கட்டி நின்றோம். கூடவே காரத்திற்கு இட்லி மிளகாய்ப்பொடி. காம்பினேஷன் விளங்காவிட்டாலும் பொடியின் துணையுடன்
உப்புமா உள்ளே சென்றது. அருகில் கடைக்குச் சென்று கொண்டிருந்த பைப்பில் இருந்து வழிந்த
நீரில் அனைவரும் தட்டுக்களைக் கழுவிக்கொண்டோம்.
பயணம் தொடர்ந்தது. பஜனையும் தான். ஒருபுறம் நெடு நெடுவெனப் பாறைகள். சாலையின் மறுபுறம் கிடுகிடு பள்ளத்தில் அலக்நந்தா ஆறு! வெள்ளை நிறத்தில் வழித்தோடிய நீர். ஜன்னலை விட்டு கண்களை அகற்ற முடியாத அளவு காட்சிகள். மொபைல் காமிரா சிக்கிய காட்சிகளையெல்லாம் பிடித்துக்கொண்டே வந்தது.
ஐந்து வண்டிகளும் தனித்தனியாக சென்று கொண்டிருந்தன. மணி ஒன்றை நெருங்க, சிறிது
ஓய்விற்காகவும், இயற்கை உபாதைகளுக்காகவும் டிரைவரை நெருக்கி வழியில் ஒரு டீக்கடையில்
நிறுத்தச் சொன்னோம். அந்தக் கடையில் அனைவருக்கும் ஒரு சக பயணி மசாலா டீ வாங்கிக் கொடுத்தார்.
களைப்பிற்கு அமுதமாய் இருந்தது. பகல் உணவு எங்கு என்று இன்னும் தெரியவில்லை.
நேரம் இரண்டு மணியைத்தாண்ட,
டிரைவர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்த, மற்ற வண்டிகளும் அங்கே நின்றிருந்தன., மதிய உணவிற்காக
அதே போல் சாலையோரத்தில், ஒரு இடத்தில் அனைவரும் ஒன்று கூடினோம். காலியாய் இருந்த ஒரு
கடையில் பாத்திரங்களை வைத்துக் கொண்டு ( சமையல் காரர்கள் கூடவே பயணித்தார்கள்.
காலியிலேயே ஹரித்வாரில் சமைத்து எடுத்து வந்திருந்தார்கள்.) வாங்கிபாத்தும் தயிர் மாதிரியான
சாதமும். தயிர் சாதம் சுத்தமாக இறங்கவில்லை. பாறையிலிருந்து ஒரு பைப் வழியாக ஜில்லென்று
நீர் வழிந்து வர அனைவரும் அதில் கை கழுவி, பாட்டிலில் பிடித்துக் குடித்தோம். எங்கள்
வண்டி டிரைவர் ஆனந்தமாக குளியல் போட ஆரம்பித்து விட்டார்.
நேரம் பகல் மூன்று மணியைத் தாண்டியிருந்தது. இரவுக்குள் பத்ரி செல்லவேண்டும் என்பது திட்டம் ஒருவழியாய் டிரைவர் குளித்து முடித்து வண்டியை எடுத்தார். மீண்டும் மலைகளும் எதிரே பாய்ந்து வந்து கொண்டிருந்த அலக்நந்தாவும் வண்டிக்குப் பின்னே ஓடிக்கொண்டிருந்தன. கர்ணப் ப்ரயாகை, ருத்ரப்ரயாகை, தேவப் ப்ரயாகை எங்கும் நிற்கவில்லை. இருட்டுவதற்குள் பத்ரி சென்றடைய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மாலை ஆறு மணி அளவில் ஜோஷீமட்டைக் கடந்துவிட்டோம். அங்கும் நிற்கவில்லை. அங்கிருந்து இன்னும் கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர் செல்லவேண்டும். ஜோஷீமட்டிலும் வெப்பநிலை அதிகமாகத்தான் இருந்தது. வேறு வண்டிகளையும் உடன் காணவில்லை. அதற்குள் வண்டியின் ட்ரைவர், பாதையில் நின்றிருந்த இன்னொரு வண்டிக்கு உதவுவதற்காக கிட்டத்தட்ட அரை மணி நேரம் வழியில் நிறுத்திவிட்டார். பின் கிளம்பி பத்ரி வரும்போது இருட்டிவிட்டது. மணி எட்டைத் தாண்டிவிட்டது. கீதா மந்திருக்கு வரவும் என்று மொட்டையாக டூர் மேனேஜர் போனில் சொல்லிவிட்டார். இருட்டில் சாமான்களை வைத்துக்கொண்டு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்ததால், மேனேஜரை போனில் அழைத்துத் திட்டிவிட்டேன். யாரையாவது அனுப்பி அழைத்துச்செல்ல வேண்டும் என சத்தம் போட்டுக்கொண்டிருக்கும்போதே உடன் வந்தவர்கள் எல்லாம் ஏதோ பாதையில் செல்லத் தொடங்க, பெட்டிகளை இழுத்துக்கொண்டு நாங்களும் நடந்தோம். எங்களுக்கு முன்பே பலரும் வந்திருந்து அறைகளைப் பெற்று செட்டில் ஆகி விட்டிருந்தனர். எங்களுக்கு கிடைத்த அறை மீண்டும் முதல் மாடியில் இருந்தது. படிக்கட்டுகளும் உயரமாக இருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் இதில் ஏறி இறங்க வாய்ப்பே இல்லாததால், மீண்டும் மேனேஜருடன் போராடி, பக்கத்தில் க்ரவுண்ட் ஃப்ளோரில் அறை கிடைத்தது. வசதியான அறையாகவும், ஹீட்டர் வசதியுடனும் இருந்தது. தரையில் வெறும் கால் வைக்க முடியாத அளவு ஜில்லென்றிருந்தது.
காபிக்காக
கடைவீதியில் அலைந்தோம், ஒரு கடையில் இல்லையென்று சொல்லிவிட்ட பிறகு ஒரு பையன் மனது
வைத்து மூன்று காபி போட்டுக் கொடுத்தான். (மெஷின் தான்). இரவு உணவு தயாராக பத்தரைக்கு
மேல் ஆகுமென்றதால், பக்கதிலிருந்த ஹோட்டலில் காத்திருந்து இரண்டு ரொட்டியும் க்ரேவியுடன்
சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துவிட்டோம். ஸ்வெட்டர், மஃப்ளர் என்ற ஃபுல் ஜோருடன் தான்
படுக்க முடிந்தது. காலை ஸ்ரார்த்தம் எட்டு மணிக்கு என்றும் அங்கிருந்த சுடுதண்ணீர்
தொட்டியில் குளித்து விட்டுத் தொடங்கலாம் என்றும் சொல்லியிருந்தார்கள். காலை சந்திப்போம்.
28/06/2022 செவ்வாய்க்கிழமை:
காலை ஆறு மணிக்கு சூடாகக்
காபி கிடைத்து. மாமாவிற்கும் சற்று உடல் நலக் குறைவு இருந்ததாலும், குளிர் அதிகமாக
இருந்ததாலும், அறையிலேயே குளித்து, ஸ்ரார்த்தத்திற்கு ரெடியாகி விட்டோம். ஏழரை மணி
சுமாருக்கு நண்பர் வழி காட்ட, ஸ்ரார்த்தம் செய்யும் இடத்திற்கு நடக்கத் தொடங்கினோம்.
சாலை இறக்கமாகச் சென்றது. சிறிது தூரத்திலேயே பத்ரிநாராயணனின் கோபுர தரிசனம் கிடைத்தது.சாலையின்
முடிவில் அலக்னந்தா பாலத்தில் நடக்கத் தொடங்கும்போதே கோயிலைப் பார்த்துக்கொண்டே நடந்தோம்.
கீழே அலக்நந்தா சுழித்துக்கொண்டு வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள். நண்பரை பின் பற்றியவாறே
சுடுதண்ணீர் குளங்களைத்தாண்டிச் சென்று நதிக்கரையில் அமர்ந்தோம். பலர் ஏற்கனவே அங்கு
அமர்ந்திருந்தனர். இடம் பார்த்து நானும் மாமாவும் அமர்ந்துகொண்டோம். ஒரு பண்டா அனைத்து
ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மனைவி படிக்கட்டில் அமர்ந்துகொண்டார். எதிரில் அர்ஜுன
பர்வதம் தெரிந்தது. அதன் பின்னே சற்றே பனி படர்ந்த சிகரங்கள் தெரிந்தன. ஸ்ரார்த்தம் ஆரம்பிக்கும் முன்னரே நல்ல வெயில் வந்து
விட்டது, சுள்ளென்ற வெய்யில் முதுகையும் தலையையும் பதம் பார்த்தது. சுமார் மூன்று மணி
நேரம் வெயிலிலேயே இருக்க வேண்டியிருந்தது. இரவு இருந்த குளிருக்கும் இப்போது அடிக்கும்
வெயிலுக்கும் சம்பந்தமே இல்லாதிருந்தது. திரும்ப வரும் வழியில் மாமாவிற்கு சற்று தலை சுற்றல் வந்து
விட்டது. மெதுவாகப் பாலத்தைக் கடந்து வந்து அங்கிருந்த பென்ஞ்சில் அமர வைத்தோம். பிறகு
ஒரு டோலியை அமர்த்தி தங்குமிடம் அழைத்து வந்தோம். பசியினாலும், வெயிலில் அமர்ந்திருந்ததாலும்
மயக்கம் வந்துவிட்டிருந்தது. மதியம் வெறும் மோர் சாதம் மட்டுமே உண்டார். எங்களுக்கு
கீதா மந்திரில் சாப்பாடு.
மதிய
உணவிற்கு சமயத்தில் பயண நிகழ்வுகளில் சிறிது மாற்றம் செய்து அறிவித்தார்கள். அன்று
மதியமே மானா ( இந்தியாவின் இறுதி கிராமம்) விற்குச் செல்ல இருப்பதாகவும் விருப்பமிருப்பவர்கள்
அவரவர் வந்த வண்டியிலேயே ஏறிக்கொள்ளும்படியும் சொன்னார்கள். பத்ரியிலிருந்து சுமார்
இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம். அங்கு தான் சரஸ்வதி ஆறு கிளம்பும் இடமும்,
சரஸ்வதி கோயிலும், பீம் கா புல்( பாலம்), கடைசி டீக்கடையும், கணேஷ் குஃபா வும் இருந்தன.
மாமா வரவில்லை என்று சொல்லிவிட்டதால் நானும் மனைவியும் மற்றவர்களுடன் சென்றோம். அன்று
மாலை பத்ரி நாராயணின் தரிசனம் இருந்தது. சகஸ்ரநாம படனுக்கு ஆன் லைனில் டிக்கட் புக்
செய்திருந்தோம் ஆகவே மாலை நான்கு மணிக்குள் திரும்ப வேண்டும். மேலும் மறு நாள் காலையே
பத்ரியிலிருந்து கிளம்ப வேண்டும். மானாவில் இரண்டு கிலோமீட்டர் மலைப்பாதியில் நடக்க
வேண்டும் என்று சொன்னதால், சிறிது தயக்கம் இருந்தாலும் அதுவரையாவது போய்ப்பார்ப்போம்
என்ற் முடிவுடன் பஸ்ஸில் ஏறிவிட்டோம்.
மானா இந்தியாவின் கடைசி கிராமம்:
பத்ரிநாத்திலிருந்து சுமார்
2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.
மிகவும் குறுகலான பாதையில் இருபுறமும் கடைகளும் வீடுகளும் அமைந்திருக்க கிட்டத்தட்ட
90 சதவிகிதம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிய பாதை. இந்தப் பாதையில் (ஏற்ற இறக்கங்களுடன்
) நடந்து சென்றுதான் கணேஷ் குஃபா, வ்யாஸ் குஃபா, பீம் கா புல் (பாலம்), சரஸவதி கோயில்,
சரஸ்வதி ஆறு , கடைசி தேநீர்க் கடை எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். நடக்க இயலாதவர்களை
முதுகில் கூடையில் சுமந்து செல்ல வாலிபர்கள் பலர் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனர்.
நாங்கள் வண்டியில் இருந்து
இறங்கும்போதே இவர்கள் சுற்றி வளைத்து விடுகிறார்கள். ஹரித்வாரின் ஆரத்தி பார்க்க நடக்க சிரமப்பட்ட கதை
ஞாபகம் வர, நாங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. ஒருவருக்கு இரண்டாயிரம் என ஆரம்பித்து,
பல பேரங்களுக்குப் பிறகு இருவர் தலா ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு ஒத்து வர கூடையில்
அமர்ந்து கொண்டோம். நாங்கள் இருவருமே நல்ல எடை இருந்ததால், மேலும் இருவர் உதவியுடன்
அவர்கள் எங்களைத் தூக்கிக் கொண்டார்கள்.
ஒரு தொங்கும் மூங்கில் நாற்காலியை முதுகில் கட்டிக்கொண்டுள்ளார்கள். அதில் உட்கார
சிறு மெத்தை. உட்கார்ந்த பிறகு விழுந்துவிடாமல் இருக்க முன்னே ஒரு கயிறு இரு முனைகளிலும்
இழுத்துக் கட்டி விடுகிறார்கள்.
மனதில் குற்ற உணர்வுடன் தான் நாங்கள் ஏறி அமர்ந்தோம். இவ்வளவு கனத்தைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அந்த
மலைப்பாதையில் கூட்டத்தினிடையே நடந்து சென்ற போது, பெரும் தவறிழைத்துவிட்டதாகவே பெரிதும்
வருந்தினோம். ஆனால் அவர்களில் வாழ்வாதாரமே இதுதான் என்னும் போது சிறிது ஆறுதலாக இருந்தது. முதலில் கொண்டு எங்களை இறக்கியது
கணேஷ் குஃபா என்னும் இடத்தில். அங்கும் அவர்கள் ஆட்கள் உதவி செய்ய கீழே இறக்கிவிடப்பட்டோம்.
கணேஷ் குஃபாவில் ஏறி விநாயகரைத் தரிசித்தோம். இங்குதான் விநாயகர் வியாஸர் சொல்லச் சொல்ல
மகாபாரதம் எழுதியதாகச் சொல்கிறார்கள்.
இவர்கள்
இருவர் தான் எங்களைச் சுமந்து வந்தவர்கள். முகமெல்லாம் இரத்தம் போல் சிவந்து பார்க்கவே
மனம் கனத்தது.
சரி
என்று சொல்லிவிட்டு, நடந்து செல்லத் தொடங்கினோம்.
அங்கிருந்தே முதலில் கண்ணில் பட்டது இந்தியாவின் கடைசி தேநீர்க்கடை. படிகளில்
இறங்கிச்செல்ல, கண்ணில் பட்டது பெருங்காட்சி. எங்கிருந்து வருகிறதென்றே தெரியாமல்,
சரஸ்வதி ஆறு மலைகுள் இருந்து ப்ரவாகமாய், பெரும் ஓசையுடன் வழிந்தோடிக்கொண்டிருந்தது.
கடைசி படம்தான் பீமன் பாலம் எனப்படுகிறது. பெரிய பாறையை ஆற்றின் குறுக்கே போட்டு பாண்டவர்கள் கடந்து செல்ல உதவியதாகக் கூறப்படுகிறது. மிகப் பெரிய பாறை அசால்டாக நதியின் இரு கரைகளுக்கிடையே கிடந்தது. அதன் மேல் கட்டியுள்ள பாலத்தின் இப்போது நடந்து வருகின்றோம். கடைசி தேநீர்க்கடையையும் தாண்டி சிறிய சாலை சென்று கொண்டிருந்தது. அதில் சிலர் சென்று வந்துகொண்டிருந்தாலும், எங்களைப் போக வேண்டம் என்று சொல்லியிருந்ததால் நாங்கள் திரும்பிவிட்டோம். மேலும் சில படங்கள்.
கடையைத் தாண்டிச் சென்ற சாலை.
மீண்டும் சிந்துபாத் கிழவன் கதையாக நாங்கள் முதுகில் ஏறிக்கொள்ள, எங்களைச்சுமந்து
கொண்டு அந்த இளைஞர்கள் கூட்டத்தில் புகுந்து நெளிந்து எங்களை எங்கள் வண்டி நின்றிருந்த
இடத்திற்கு கொண்டுவந்து சேர்த்தார்கள். முகமெல்லாம் ரத்தச் சிவப்பாகி அவர்களைப் பார்க்கவே
மிகவும் கஷ்டமாக இருந்தது. பேசிய வாடகைக்கு மேலே கொடுத்ததில் அவர்களுக்கு சந்தோஷம்.
இந்த சவாரியை நம்பியே அங்கே பலர் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தனர். நடந்து சென்றவர்களும்
எங்களைப் போல் டோலியில் சென்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர, மீண்டும் பத்ரிநாத்
வந்து சேர்ந்தோம். மாலை இறைவனைக் காணச் செல்ல வேண்டும்.
28 06 2022 செவ்வாய்க்கிழமை மாலை:
பஸ்ஸிலிருந்து
திரும்பி அறைக்கு நடந்து வரும் வழியில், பூமாவிற்குப் பிடித்தமான ஜிலேபி ஒரு கடையில்
சூடாகக் கிடைத்தது. அறையில் மாமா தூங்கி எழுந்திருந்தார். உடல்நிலை சற்று சீரானதாகச்
சொன்னார். ஐந்தரை மணிக்கு கோவில் வளாகத்தில் எங்களைக் காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள்.
ஆன்லைன் டிக்கட்டை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கிச் சென்றோம். குபேரனிடம் வைத்து வாங்குவதற்கான காசுகளை எடுத்துக் கொண்டோம். ஸ்வாமிக்கு நிவேதனம்
செய்ய கடையில் ப்ரசாத டப்பாக்கள் வாங்கிக்கொண்டோம். கோவிலுக்கு வலதுபுறம் ஒரு சிறிய
பாதையில் சென்று, டிக்கட்டைக் காட்டி, கோவிலுக்கு உள்ளே சென்றோம். எங்கள் தரிசன நேரம்
மாலை 6.45க்கு. எங்களது முந்தைய தரிசனத்திற்கான வரிசை நின்றிருந்தது. நாங்கள் அங்கேயே
அமர்ந்து கொண்டோம். எல்லாக் கோவில்களையும் போல், இங்கும் வெளி வரும் வாசல் வழியாக,
முறையின்றி ஆட்கள் உள்ளே சென்று வந்து கொண்டிருந்தார்கள். காமிரா உபயோகப் படுத்தக்கூடாது
என்று அறிவுப்பு செய்து கொண்டிருந்தாலும் எல்லோரும் எடுத்ததால், நானும் சில ஃபோட்டோக்கள்
எடுத்தேன். சிலர் பஜனை செய்ய ஆரம்பித்தார்கள். நான் சகஸ்நாமம் டவுன்லோடு செய்து சொல்ல
ஆரம்பித்தேன். எங்களுக்கான தரிசன வரிசையின் அறிவுப்பு வந்ததும் வரிசையில் நின்று கொண்டோம்.
நான் வரிசையில் நின்றபடியே சகஸ்ரநாமம் படித்துக்கொண்டிருந்தேன். மெதுவாக நகர்ந்த வரிசையில்,
எங்களுடன் முடிந்த பேட்சில், நாங்கள் கடைசியாக நுழைந்ததால், ஏற்கனவே பலர் அமர்ந்துவிட்டார்கள்.
நாங்கள் ஓரமாக நின்று கொள்ளத்தான் இடம் இருந்தது. முழுவதுமாகப் பார்க்க இயலவில்லை.
டிக்கட் வாங்கியவர்கள் பெயரை எல்லாம் படித்த பிறகு சகஸ்ரநாமம் மைக்கில் சொல்ல
ஆரம்பித்தார்கள். ஆகவே மீண்டும் ஒருமுறை சகஸ்ரநாமம் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
பாராயணம் முடிந்ததும், எல்லோருக்கும் அருகே சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
கொண்டு சென்றிருந்த பணத்தையும், ப்ரசாதத்தையும் இறைவன் முன் வைத்துக் கொடுத்தார்கள்.
மனம் நிறைந்த தரிசனம் கிடைத்தது. பின் கடைவீதியில் ஸ்வாமி படங்களும், சில பொருட்களும்
வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம். காலையில் மீண்டும் கிளம்ப வேண்டியிருந்ததால்,
ஓரளவு பேக்கிங் செய்துகொண்டோம். காலை எட்டு மணிக்கு கிளம்புவதாக இருந்ததால், மீண்டும்
ஒருமுறை காலையில் தரிசனத்திற்கு முயலலாம் என்று நினைத்துக்கொண்டு படுத்துவிட்டோம்.
மாலை தரிசன போட்டோக்கள்:
29/06/2022 புதன் கிழமை:
காலை ஐந்து மணிக்கெல்லாம்
எல்லோரும் எழுந்து விட்டோம். குளித்து தயாராகும் பொழுது ஆறு மணி ஆகிவிட்டது. எட்டு
மணிக்குக் கிளம்புவதற்குள் ஒரு நடை கோயில் வாசல் வரை சென்று வந்து விடலாம் என மூவரும்
கிளம்பிவிட்டோம். பாவாவும் ஃப்ரெஷ்ஷாக இருந்தார். அந்தக் குளிரில் ஸ்வெட்டர் மஃப்ளர்
சகிதம், கடைவீதி வழியாக அலக் நந்தா பாலத்தைக் கடந்து கோயிலின் முன் சென்றோம். நல்ல
பனி விழுந்து கொண்டிருந்தது. ஆற்றில் நீரின் வேகம் நேற்றைவிட அதிகமாக இருந்தது. சுற்றிலும்
இயற்கை வெகு ரம்யமாக இருந்தது. கோயிலின் முன்னே நின்று சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
சுமார் அரை மணி நேரம் அங்கே இருந்துவிட்டு அறைக்குத் திரும்பினோம். காலை சிற்றுண்டியாக
பொங்கல் செய்திருந்தார்கள். பாவா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். உணவு முடித்து மீண்டும்
சுமைகளைத் தூக்கிக்கொண்டு அறையைக் காலி செய்துவிட்டு கீதா மந்திரின் வாசலில் வந்தமர்ந்து
கொண்டோம். நான் மட்டும் மருந்துக்கடை தேடிச் சென்று இருமல் டானிக் வாங்கி வந்தேன்.
நானும் பூமாவும் Cofsils சாப்பிட்டுக்கொண்டே இருமலை சமாளித்த வண்ணம் இருந்தோம். ஆகவே
இருமல் டானிக் வாங்கி வந்துவிட்டேன்.
நேரம் ஆக ஆக, மூடு பனி அதிகமாக ஆரம்பித்தது.
சில்லென்று சிறு தூறல்களும் விழுந்தவண்ணம் இருந்தன. டோலி தூக்கும் ஆட்கள் மூலம் பெட்டிகளை
வேன் ஏறும் இடம் வரை கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டோம். (100 ரூபாய்). வேனிற்காக காத்திருக்கும்
நேரத்தில் தூறல்கள் அதிகமாக விழுந்தன. மூடுபனியும் அதிகமாக இருந்தது. அங்கு ஸ்வெட்டர்
, ஷால் விற்கும் ஆட்கள் அதிகமாக இருந்தனர். நன்றாக இருந்ததால் நாங்களும் மூன்று ஷால்கள்
வாங்கினோம். ( அதில் ஒரு வாலிபனிடம் நான் அரசியல் பேசிக்கொண்டிருந்தேன். ஆகவே அதற்காக
அவனிடம் ஒன்றும் வேறொருவனிடம் இரண்டும் வாங்கிக்கொண்டோம்) . பெட்டிகளில் வைக்க இடம்
இல்லாததால், ஒரு ப்ளாஸ்டிக் கவரின் போட்டு வாங்கிக் கொண்டோம். வேன் வரவும் முன்பு போலவே
கடைசி சீட்களில் அமர்ந்துகொண்டோம் நல்ல மூடு பனி. 50 அடிக்கும் மேல் எதுவும் தெரியவில்லை.
வண்டி மெதுவாக நகர்ந்தது.
காலையில் எடுத்த சில படங்கள்:
வேனில் இருந்த பெங்களுர்க்காரர்கள்
பஜனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். பயணம் பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டியவண்ணம் பாடல்கள்,
சுலோகங்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். மூடி பனியும் நன்றாகக் குறைந்துவிட்டிருந்தது.
வண்டி சற்று நேரத்திலேயே அனுமன் சட்டி எனும் இடத்தில் நின்றது. அங்கே அனுமனின் கோயில்
ஒன்று இருந்தது. அனுமன் சாலீஸா சொல்லியவண்ணம் அங்கே தரிசனம் சிறப்பாக செய்தோம். சில
படங்கள்;
இங்கிருந்து கிளம்பி ஜோஷீமட் நோக்கிப் பயணம்.
இடையில் இன்னுமொரு இடத்தில் நின்றோம். இது விஷ்ணுப்ரயாகை. இங்கு அலக்நந்தா நதியும்
தவுளிகங்கா நதியும் கலக்கும் இடமாகும். இங்கு எடுத்த சில படங்கள்:
பத்ரியிலிருந்து குளிர் இங்கு
அறவே இல்லை. ஸ்வெட்டர் போல் போட்டிருந்த பனியன் எரிச்சல் தர ஆரம்பித்துவிட்டது. இன்று
பொழுதையும் இதில் தான் கழிக்க வேண்டும். சகித்துக்கொண்டே ஜோஷீமட் நோக்கி மீண்டும் பயணத்தைத்
தொடர்ந்தோம்.
அதிகரித்துக் கொண்டே வந்த வெப்பத்தினூடேயும்,
கடைசி வரியின் தொல்லைகளுடனும் ஜோஷீமட்டை வேன் அடைந்தது. வேனிலிருந்து இறங்கி அங்கு
புகழ்பெற்ற நரசிம்மர் கோயிலை அடைந்தோம். சிறிது தூரம் நடந்தும், பின் சிறிய படிக்கட்டுக்கள்
மூலமும் சற்றே கீழிருந்து கோயிலுக்குள் சென்றோம். நல்ல வெயில். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
வகைக் கோயில் போல இருந்தது. நமது கற்சிலைகளை பார்க்கும் கம்பீரம் இந்த பளிங்கு சிலைகளைப்
பார்க்கும்போது சிறிது குறையத்தான் செய்கிறது. தரிசனம் முடிந்து வேனுக்குத் திரும்பும்
வழியில் அங்கு பாத்ரூம் இருப்பதாகத் தெரிந்து ஒரு கூட்டம் செல்ல மனைவியும் அவர்கள்
உடன் சென்றார். நானும் என் பாவாவும் அங்கு காத்திருந்தோம். ஒரு மூலையில் நான்கைந்து
பேர் தாடி மீசையுடன் அமர்ந்து கஞ்சா அடித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு குடும்பம்
அங்கு வந்து அவர்களுக்கெல்லாம் , பாபா என்று அழைத்துக்கொண்டு பூரியும் சாகுவும் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
சாப்பாட்டு தக்ஷணை வேறு! இந்த விநோத காட்சியை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருகையில்,
மனைவி திரும்பி வர, அங்கு விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் கெப்ரிகாட் பழம் வாங்கிக்கொண்டு
வேனில் ஏறினோம். பயணம் தொடர்ந்தது. சில படங்கள்:
தொடர்ந்த பயணம் மாலை நெருங்கும் வேளையில் ருத்ரப்ரயாகைக்கு முன் ஒரு சிறிய ஊரில் நின்றது. எல்லா வேன்களும் வந்திருக்க, இரவு தங்குவதற்காக இடம் தேடிக்கொண்டிருந்தனர். நாங்கள் மூவரும் அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினோம். அங்கு இருந்த ஒரு பெரிய சிவன் சிலையில் முன் படங்கள் எடுத்துக்கொண்டோம்.
பக்கத்திலேயே ஒரு லாட்ஜ் புக் செய்திருப்பதாக அறிந்து அங்கு சென்றோம். முதலில்
கிடைத்த ருமில் வெஸ்டர்ன் டாய்லட் இல்லாததால், வேறு அறைக்குப் போராடிக்கொண்டிருனந்தோம்.
அதற்குள் கூட வந்த ஒரு பயணி மயக்கமடைந்து கீழே விழுந்துவிட, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
குழுவில் ஒரு டாக்டர் இருந்ததால் அவர் சிகிச்சை அளித்தார். மேலே ஆகும் கூடுதல் கட்டணத்தைச்
செலுத்தி ஒரு AC அறை புக் செய்துகொண்டோம். அதற்குள் மழைத் துளி விழ ஆரம்பித்து விட்டது.
முதல் மாடியாததால், அங்கிருந்தவரிடம் கேட்டு, பெட்டிகளை அறைக்கு எடுத்துச்சென்றோம். இரவு உணவு அங்கேயே தயார் செய்து வழங்கினார்கள்.
காலையில் மீண்டும் கிளம்பி ஹரித்வார் செல்ல வேண்டும். நல்ல மழை பெய்யத்தொடங்குமுன்
கீழே இறங்கிவிடவேண்டும் என்பதே திட்டம்.
திருப்பிக் கிடைத்த மஃப்ளர்கள்: அறைக்கதவை
யாரோ தட்டினார்கள். திறந்து பார்க்க, நண்பர் ஒருவர், இரண்டு மூன்று மஃப்ளர்களும் ஒரு
குல்லாவும் இருக்கும் பை உங்களதா? கீழே ரிஷப்ஷனில் உள்ளது என்றார். அப்பொழுதான் பத்ரியில்
வாங்கிய மஃப்ளர்கள் ஞாபகத்திற்கு வந்தன. அவற்றைத் தனியாக ஒரு கவரில் வைத்திருந்தோம்.
அறை தேடிக்கொண்டிருந்த பிரச்சனையில், மழையும் வரவே, கீழேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
எப்படியோ திரும்பிக் கிடைத்துவிட்டது. எப்படியோ பெட்டிகளில் இடம் தேடி உள்ளே அடக்கி
விட்டேன். பாவாவின் தலலைக்குல்லாவும் கிடைத்துவிட்டது.
30/06/2022 வியாழக்கிழமை:
காலையில் இருந்தே நல்ல
மழை பெய்துகொண்டிருந்தது. காலை உணவு தயாரானதும், மழையும் சற்று நின்றிருக்க, ஹோட்டலின்
முன்பிருந்த பொது இடத்தில் சாப்பிட்டோம். அங்கிருந்த கடையில் சில பிஸ்கட் பாக்கட்டுகள்
வாங்கிக்கொண்டோம். மாலை வரை பயணம் ஆனதாலும்,
மதிய உணவு நேரமானால் என்ன செய்வது என்ற கவலையாலும் பிஸ்கட் பாக்கட்களும் தண்ணீர் பாட்டில்களும்
வாங்கிக் கொண்டோம். அறையை காலி செய்து கொண்டு வந்து கீழே காத்திருக்க, வேன்கள் தயாரானதும்
புறப்பட்டோம். ரிஷிகேஷ் பார்த்துவிட்டு ஹரித்வார் செல்லலாம் என்று சொல்லியிருந்தார்கள்.
வண்டியிலிருந்த கர்னாடகா குழு தங்கள் பஜனையை ஆரம்பித்திருந்தார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் சென்ற
வண்டி திடீரென்று நின்றுவிட்டது. ட்ராஃபிக் ஜாம். விசாரித்ததில் வழியில் நிலச்சரிவு
என்றும் நேரமாகும் என்றும் சொன்னார்கள்.எங்களுக்கு முன்னே பெரிய லைனில் வண்டிகள் நின்றிருந்தன.
சற்று நேரத்தில் பார்த்தால் எங்கள் பின்னாலும் பெரிய லைன் கட்டி வண்டிகள் நின்றிருப்பதைப்
பார்த்தோம். வண்டியிலிருந்து இறங்கி சாலையில் அலைந்துகொண்டிருந்தோம். வாங்கியிருந்த
பிஸ்கட் பாக்கட்கள் பேருதவியாய் இருந்தன.
பூமாவின் ஃபோனிலிருந்து சில பயணக் காட்சிகள்.( காலை
புறப்பட்டது முதல்)
மதியம் ஒரு மணி சுமாருக்கே வேன் கிளம்பியது. குறுக்குப்பாதைகளிலெல்லாம் பயணித்து ஸ்ரீநகர் என்னும் ஊரை அடைந்தோம். அங்கு ஒரு ஹோட்டலில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. பின் அருகில் ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் புறப்பட்டோம். வழியில் தாமதம் ஆகி விட்டதால் ரிஷிகேஷ் செல்லாமல் நேராக ஹரித்வார் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் அழகிய மலைப்பாதைகளில் பயணம்.
ஸ்ரீநகரில் சில காட்சிகள்:
இன்று அதிக களைப்படைந்துவிட்டிருந்தோம். ஹரித்வார் எப்போது சென்றடைவோம் என்றாகிவிட்டது. எங்களது வேன் டிரைவர் ஏற்கனவே சொல்லியிருந்தபடி ரிஷிகேஷில் நிற்காமல் நேராக ஹரித்வார் நோக்கி சென்றுவிட்டிருந்தார். முன் கிளம்பியிருந்த சில வண்டிகள் ரிஷிகேஷில் நின்று விட்டிருந்தாதாக டூர் மேனேஜரிடம் ஃபோன் பேசிய போது அறிந்து கொண்ட, எங்கள் வேனிலிருந்த ஒரு பெண் வண்டியைத்திருப்பி ரிஷிகேஷ் சென்றாக வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். ஆனால் வண்டியில் பெரும்பாலானவர்கள் அதற்கு ஒப்பாததால், நாங்கள் ஹரித்வார் தங்குமிடம் சென்றோம். வழியில் வேன் ட்ரைவர் எங்களை ஒரு கோயிலுக்கு அழைத்துச்சென்றார்.
பின்பு தங்குமிடம் சேர்ந்ததும்,
வைத்துச் சென்ற பெரிய பெட்டிகளை சேகரித்துக்கொண்டோம். டூர் மேனேஜர் ஏற்பாடு செய்திருந்த
ஹோட்டலில் ஏ சி அறை கிடைக்க, அதிகப்படியான தொகையைச் செலுத்தி அங்கு தங்கிவிட்டோம்.
நாளை ஹரித்வாரிலும் திதி கொடுக்க இருப்பதால், காலையில் கங்கையில் குளிக்கலாம் என்று
சொல்லிவிட்டார்கள். இரவு உணவு தாமதாகும் என்றதால் அருகிலிருந்த சிறு ஹோட்டலில் ( ஆச்சாரின்
மைத்துனர் நடத்துவது) தோசை சாப்பிட்டு விட்டு படுக்கச் சென்றோம்.
01/07/2022 வெள்ளிக்கிழமை:
காலையில் எழுந்ததும் அனைவருக்கும்
சேர்ந்தமாதிரி கங்கா ஸ்நானத்திற்கு சங்கல்பம் செய்து வைத்தார்கள். நாங்கள் தாமதமாகச்
சென்றதால் தனியாகச் செய்து வைத்தார்கள். பின் ஆட்டோரிக்ஷா வைத்துக்கொண்டு கங்கைக்கு
சென்றோம். கங்கையில் சில காட்சிகள்:
மீண்டும் ஆட்டோவில் தங்குமிடம் திரும்ப, அங்கு திதி செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
திதி முடித்து சாப்பிட்டுவிட்டு அறைக்குத்திரும்பினோம்.
இன்று மாலை முழுவதும் ஓய்வுதான். நாளை சாப்பிட்டுவிட்டு டெஹ்ராடூன் சென்று விமானம்
ஏறவேண்டியதுதான். மாலை நானும் பூமாவும் கடைக்குச்சென்று கங்கைச்சொம்பு கிடைக்குமா என்று
தேடினோம். எங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப கிடைக்கவில்லை. நதிக்கரைக்குச் சென்றால் அங்கே
தண்ணீர் பிடித்து சீல் வைத்துத்தருவார்கள் என்று சொன்னார்கள். எனவே அறைக்குத்திரும்பி
விட்டோம். வரும் வழியில் ஒரு கோயிலுக்குச் (மத்வாச்சாரியார் கோயில்) சென்று வந்தோம்.
யாருமில்லாமல் அமைதியாய் இருந்தது அந்தக் கோயில்.
அறைக்கு வந்ததும்
மீண்டும் பெட்டிகளில் துணிகள் அடுக்கும் வேலை ஆரம்பித்தது. சரியான வேலை. ஆட்டைத் தூக்கி
மாட்டில் போடும் கதையாக இங்கு, அங்கு என மாற்றி மாற்றி ஒரு வழியாக நாளைப் பயணத்திற்குத்
தயாராகிப் படுக்கச்சென்றோம். காலை உணவு முடிந்ததும் வரும் பேருந்தில் ஏறி டெஹ்ராடூன்
ஏர்போர்ட் சென்று விமானத்தில் ஏற வேண்டியதுதான். முக்காலுக்கும் அதிகமாக முடிந்து பயணம்
சிறு சிறு சலசலப்புகளுடன் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது, பத்ரி நாராயணின் கருணையோடு.
டெஹ்ராடூன் விமான நிலையத்தில் நல்ல இருக்கைகள் இருந்தன. காப்பி அருந்தினோம். செக் இன் செய்துவிட்டு, விமானத்தில் அமர்ந்துகொண்டோம். இப்பொழுது விமானத்தில் உண்ண எதுவும் கொடுக்கவில்லை. காப்பி கொடுத்தார்கள். பணம் ஏனோ வாங்கவில்லை. இருக்கைகள் நெருக்கமாகத்தான் இருந்தன. பெங்களூர் விமான நிலையத்திற்கு தாசரதியும் சிவராமும் வந்திருந்தனர். பாவா சிவராமுடன் சென்றுவிட்டார். நாங்கள் தாசரதி வீட்டை வந்தடைந்தோம். ஹரியும் தீப்தியும் அங்கு வந்து எங்களை சந்தித்தனர். அடுத்த நாள் காலை எங்கள் காரில் புறப்பட்டு கரூர் வந்தடைந்தோம்.
உடல் உபாதைகள் அதிகம் எதுவும் இன்றி எங்களைக் காத்து, தரிசனம் தந்து, மீண்டும் வீட்டிற்கு கொண்டு சேர்த்த இறைவனுக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.
ஜெய் பத்ரி விஷால்! ஹரே க்ருஷ்ணா!
1 comment:
உடன் பயணித்த அனேபவம்...
ஜெய் பத்ரிநாத்...🙏
Post a Comment