ஸ்ரீ ராம்
ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
பகைவர்களை அழித்தொழிக்க
வல்ல ஸ்ரீஅனுமன், இராவணனால் அபகரித்துச்செல்லப்பட்ட சீதாதேவியின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக
வானவர்கள் உறையும் ஆகாயம் வழியே செல்வதற்கு அந்தச் சமயத்தில் முடிவெடுத்தார்.
ஸ்ரீ அனுமனால்
செய்ய உத்தேசிக்கப்பட்ட இந்தச் செயல், வேறு எவராலும் நினைத்துப் பார்க்க முடியாததும்,
அவர்கள் அதில் தங்கள் உதவியைச் செய்ய முடியாததுமாக இருந்தது. அவர் தன் பின் கழுத்தைக்
குறுக்கி, மேலே ஆகாயத்தை நோக்கினார். அவர்
அப்பொழுது மிகவும் சக்தி வாய்ந்த பெரிய ஈட்டி போலத் தோற்றமளித்தார்.
பிறகு, மிகவும்
தைரியமும் வலிமையும் மிக்க வாயுவின் குமாரனனான ஸ்ரீஅனுமன், வைடூரியம் போல ஜொலித்துக்கொண்டு
கடல்நீரைப் போல அங்கிருந்த பசுமையான தரையில் உலவத்தொடங்கினார்.
தனது வலிமையான
மார்பினால் மிகப்பெரிய மரங்களைத் தரையில் வீழ்த்தக்கூடியதும் மற்ற வன விலங்குகளை அடக்கி
ஆளக்கூடியதுமான பெருஞ்சிங்கத்தைப் போல ஒளி வீசிக்கொண்டு, அங்கிருந்த பறவைக்கூட்டங்களை அச்சுறுத்தும்
வண்ணம், அறிவாற்றல் மிக்க ஸ்ரீஅனுமன் அப்போது விளங்கினார்.
மலைகளில்
இயல்பாக இருக்கக்கூடிய நீலம், சிவப்பு மற்றும் தாமரையின் வண்ணத்திலும், வெள்ளை மற்றும்
கருப்பு வண்ணத்திலும் மாசு மருவற்ற எண்ணிலடங்கா தாதுப்பொருட்கள் அந்த மலைப்பிரதேசம்
முழுவதும் நிரம்பி அழகு சேர்த்தன.
அதுமட்டுமல்லாது
அந்த மலைப்பிரதேசம் முழுவதிலும் நினைத்த வடிவம் கொள்வதில் வல்லவர்களான யட்சர்களும்,
கந்தர்வர்களும், கின்னரர்களும், நாகர்களும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
மேலும்
அந்த மலைப்பகுதியில் பெரும் பெரும் யானைக்கூட்டங்கள் நிரம்பி வழிந்தன. ஸ்ரீஅனுமனை அங்கு
பார்க்கும் பொழுது, பெரும் நீர் நிலையில் விளையாடி மகிழும் பெருத்த யானையைப் போலத்
தோற்றமளித்தார்.
தனது செயலைத்
தொடங்குமுன், சூரியன், இந்திரன், வாயு, ப்ரம்மா மற்றும் இதர தேவ கணங்களைத் தொழுது வணங்கினார்.
பின்னர்
கிழக்குத் திசை நோக்கி நின்று தன் தந்தையான வாயு தேவனை மனதில் நினைத்து வணங்கினார்.
தெற்குத் திசை நோக்கிய தனது பயணத்திற்காக தனது வடிவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளத் தொடங்கினார்.
தான் நினைத்த
காரியத்திலே மனம் செலுத்தியவராய் இருந்த ஸ்ரீஅனுமன், பெளர்ணமி அன்று கடலலைகள் மேல்நோக்கிப்
பொங்குவதைப் போல பெரிய வடிவம் கொள்வதைக் கண்ட வனத்திலிருந்த வானரர்கள் வியப்படைந்திருந்தனர்.
இராமனுக்கான காரியம் நிறைவேற ஸ்ரீஅனுமன் தன்
உடலின் வடிவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளத் தொடங்கினார்.
பெரும்
கடலைக் கடப்பதற்காக எல்லை வரையறுக்க முடியாத வடிவம் கொண்ட ஸ்ரீஅனுமன், தன் கரங்களாலும்,
கால்களாலும் அந்த மலையைக் கீழே அழுத்தினார்.
ஸ்ரீஅனுமனின்
அந்த அழுத்தத்தால் அந்த மலை நடுக்கமுற்று, இரு நாழிகைப் பொழுதிற்கு ஆடியது. பெரிய பெரிய
மரங்களின் மேல் பூத்திருந்த மலர்களெல்லாம் கீழே உதிர்ந்துவிட்டன.
அந்த மலைப்பிரதேசம்
முழுவதும் கீழே உதிர்ந்த வாசனை மலர்களால் மறைக்கப்பட்டு, அது மலர்களால் உருவான மலையோ
என நினைக்கும் வண்ணம் தோற்றமளித்தது .
ஸ்ரீஅனுமனால்
அழுத்தப்பட்ட அந்த மலைப்பகுதிகளில் நீர்ச்சுனைகள் பொங்கி வழிந்தன. அவற்றைப் பார்க்கும்
போது, அது பெரிய யானையிலிருந்து வழியும் மதநீரோ என ஐயுறும் வண்ணம் இருந்தது.
பெரும்
வலிமைகொண்ட ஸ்ரீஅனுமனால் அழுத்தப் பெற்ற அந்த மகேந்திர மலையிலிருந்து கண்களைக் கவரும்
வ்ண்ணம் மிக்க எழிலுடன் வெள்ளியின் நிறத்திலும், கரிய நிறத்திலும் நீர்த்தாரைகள் வழிந்தன.
அந்த
மலையிலிருந்து பெரும் சிவப்பு வண்ணப் பாறைகள், எரிய ஆரம்பித்த நெருப்பிலிருந்து விடாது
வரும் புகையைப் போல கீழே விழத் தொடங்கின.
அந்த
மலையில் வாழ்ந்து வந்த உயிரினங்களெல்லாம், ஸ்ரீஅனுமனின் காலழுத்தம் தாங்காமல், அபயக்குரல்கள்
எழுப்பிக் கொண்டு தங்கள் குகைகளில் மறைந்து ஒளிந்துகொண்டன.
அந்த
மலை மிதிபட்டதால், அங்கிருந்த உயிரினங்கள் எழுப்பிய பேரொலியானது, பூமியிலும் பேரண்டத்தின் எல்லாத்திசைகளிலும் நிரம்பியது.
நாகங்கள்,
தங்கள் தலையில் இருந்த ஸ்வஸ்திக சின்னம் விளங்கும் படங்களை விரித்து, அவைகளிலிருந்து
பயங்கரமான நெருப்பை உமிழ்ந்தபடி, அந்த மலையின் பாறைகளைத் தங்கள் பற்களால் கொத்தத் தொடங்கின.
அந்த நாகங்கள்
கோபத்துடன் கடித்ததால், அவற்றின் விஷம் ஏறிய அந்தப் பாறைகள், நெருப்பினால் எரிவது போல்
எரிந்து, பல ஆயிரம் துண்டுகளாகச் சிதறின.
அந்த மலையில்,
கடுமையான விஷத்தை முறிக்க வல்ல பல வகையான மூலிகைகள் இருந்த போதும், பாம்புகளின் விஷத்தை
அவைகளால் முறிக்க இயலவில்லை.
அந்த மலையில்
வசித்து வந்த தவ முனிவர்களும், கல்வி கற்று வந்த அறிஞர்களும், இது ஏதோ பூதங்களில் செயலாக
இருக்குமோ என்று அச்சமுற்று, தங்கள் துணைவியருடன் மறைவிடம் தேடிச்சென்றார்கள்.
கழுத்தில்
சிவந்த மலர்களையும், சந்தனத்தையும் பூசியிருந்த, தாமரை மலர்கள் போன்ற அழகிய கண்களைக்கொண்டிருந்த
அறிஞர் பெருமக்கள், பெரும் அச்சத்தினால், தங்களிடம்
இருந்த தங்கத்தால் செய்யப்பட்ட பானம் அருந்தும் பாத்திரங்களையும், விலைமதிப்பில்லா
கலசங்களையும், பலவிதமான உணவுப்பொருட்களையும், பழச்சாறுகளையும், எருதுகளின் தோலினால்
செய்யப்பட்டிருந்த கேடயங்களையும், தங்கத்தாலான கைப்பிடிகள் கொண்டிருந்த வாட்களையும்
விட்டுவிட்டு வானத்தில் சென்று மறைந்துகொண்டனர்.
கழுத்தில்
மாலைகளையும், கால்களில் சலங்கைகளையும், தோள்களில் கேயூரங்களையும், கைகளில் கங்கணங்களையும்
அணிந்திருந்த அவர்களின் மனைவியர் திகைப்புடன் விக்கித்து நின்றனர்.
வானத்தில்
எந்தவிதமான ஆதாரமும் தேவையற்று, உலவக்கூடிய தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவண்ணம், அந்த
முனிவர்களும், அறிஞர்களும் அந்த மலையையே பார்த்தவாறு நின்றிருந்தனர்.
அவ்வாறு
ஆகாயத்தில் எந்தவிதப்பிடிப்பும் இல்லாமல் நின்றிருந்த அந்த அறிஞர்கள், தங்களுடன் அவ்வாறே
நின்றிருந்த தவமுனிவர்கள் மற்றும் சித்தர்கள் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளைக் கேட்கலாயினர்.
மலையைப்
போன்ற பெருந்தோற்றத்தையுடைய, வாயுவின் மைந்தனாகிய ஸ்ரீஅனுமன், இந்த வருணாலயமான கடலினைப்
பறந்து கடக்க விரும்புகிறார்.” என்று அவர்கள் பேசினார்கள்.
“வேறு எவராலும்
செய்ய முடியாத செயலை, ஸ்ரீராமனுக்காக, வானர இனத்தின் சார்பாக செய்துமுடிக்க வாயுவின்
மைந்தனாகிய ஸ்ரீஅனுமன் நினைத்துள்ளார். அதற்காக, மிகவும் கடினமான செயலான கடலினைக் கடந்து
அதன் மறு கரையை அடைய விரும்புகிறார்” என்றும் அவர்கள் பேசினர்.
தவ முனிவர்களின்
இந்தப் பேச்சுக்களைக் கேட்ட அந்த அறிஞர்கள், அப்போது அந்த மலையின் உச்சியில், வானரர்களில்
மிகச்சிறந்தவரும், வலிமை மிக்கவருமான ஸ்ரீஅனுமனைக் கண்டனர்.
அவர்கள்
பார்த்த பொழுது, ஸ்ரீஅனுமன் நெருப்பினைப் போல ஒளிவீசிக்கொண்டிருந்தார். அவர் உடலை அசைத்தபொழுது,
அவர் உடலின் ரோமங்கள், பெரிய மலைப்புதர்கள் அசைவது போல் அசைந்தன. பெரிய பெரிய மேகக்கூட்டங்களின்
இடியோசை போல் கர்ஜனை செய்தார்.
ஆகாயத்தில்
சீறிப்பறக்கும் முயற்சியில் முனைந்திருந்த ஸ்ரீஅனுமன், திரும்பியபோது, உரோமக்கால்கள்
நிரம்பிய அவரது வாலானது, கருடனது வாயிலிருந்து தூக்கி வீசப்பட்ட பாம்பினைப் போல உயர்ந்து
நின்றது.
அவர் வேகமாகத்
திரும்பிய பொழுது, அவரது வால் , கருடனால் பிடித்துச் செல்லப்படும் பெரிய பாம்பு போலத்
தோற்றமளித்தது.
ஸ்ரீஅனுமன்,
இரும்புப் பூண் போட்ட அகன்ற உலக்கைகள் போல இருந்த தனது கைகளை நிலத்தில் ஊன்றினார்.
தனது உடலின் மேற்பகுதிகளை தன் இடுப்பளவிற்குச் சுருக்கிக்கொண்டு, இரண்டு கரங்களையும்
ஒன்று சேர்த்தார்.
அவர் தன்
கரங்களையும், கழுத்தையும் மேலும் சுருக்கிக்கொள்ள, அவருக்குள்ளே வேகம், வலிமையெல்லாம்
ஒன்று கூடின.
நன்றாக மூச்சை
உள்ளடக்கி, கண்களை உயர்த்தி , தான் செல்ல வேண்டிய நெடிய பாதையை நோக்கினார்.
மேலே தாவிப்
பறப்பதற்காக, கால்களை நிலத்தின் மீது நன்கு
ஊன்றி நின்றார். தன் காதுகளையும் சுருக்கிக்கொண்ட சிறந்த வானர வீரரான ஸ்ரீஅனுமன், தன்
உடனிருந்த வானர நண்பர்களைப் பார்த்து இவ்விதம் சொல்லானார்.
“ஸ்ரீ ராமரின்
வில்லிலிருந்து புறப்படும் அம்பு எவ்விதம் காற்றின் வேகத்தில் செல்லுமோ, அதுபோல நான்
இராவணன் வாழும் இலங்கை நோக்கிச் செல்வேன்.”
“என்னால்
அங்கே ஜனகனின் மகளாகிய சீதையைக் காண இயலாவிட்டால், அதே வேகத்தில் வானுலம் சென்றுவிடுவேன்.”
“அவ்விதம்
கடும் முயற்சியில் வானுலகம் சென்றும் அங்கும் சீதையைக் காண முடியவில்லை என்றால், அசுரர்களின்
அரசனாகிய இராவணனைக் கட்டி இழுத்து வருவேன். “
என் செயல்
வெற்றியடைந்தால், முழுத்திருப்தியுடன் சீதா தேவியுடன் நான் திரும்பி வருவேன். இல்லையெனில்
, இராவணனுடன் சேர்த்து இலங்கையையும் பெயர்த்து எடுத்து வருவேன்” என்றார்.
இவ்விதம் பேசிய ஸ்ரீஅனுமன், தான் எதிர்கொள்ளப்போகும் தடைகளைப்பற்றி சிறிதும் அஞ்சாமல், மிகுந்த வேகத்துடன் வானத்தில் தாவினார். அந்தக் காட்சியானது, கருடன் வானத்தில் தாவிப்பறப்பது போல இருந்தது.
அவ்விதம் ஸ்ரீஅனுமன் வேகத்துடன் தாவியதால், அந்த
மலையிலிருந்த மரம், செடி, கொடிகளெல்லாம், மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு, அவருடன்
சேர்ந்து முற்றிலுமாகப் பறந்தன.
ஸ்ரீஅனுமன்,
தன்னுடைய வேகத்தினால், குயில் முதலான பலவிதமான பறவைகள் வாழ்ந்து வந்த, பூக்கள் சொறியும்
மரங்களையும் தன்னுடனே ஆகாயத்தில் இழுத்துச் சென்றார்.
ஸ்ரீஅனுமன்
அவர்களின் துடை முதலான உடலின் பாகங்களின் வேகமான அசைவுகளால் கவரப்பட்டு, சில மணித்துளிகள்
கூடவே பயணம் செய்த மரங்களைப் பார்க்கையில், வெளியூர் செல்லும் நண்பர்களையும், சுற்றத்தினரையும்
சிறிது தூரம் உடன் சென்று வழியனுப்பும் நிகழ்வை ஒத்திருந்தது.
ஸ்ரீஅனுமனின்
வேகத்தினால் கவரப்பட்டு, தரையிலிருந்து பிடுங்கப்பட்ட, சால் முதலான அரியவகை மரங்கள்
அவருடன் பயணித்ததைப் பார்க்கும்போது, ஒரு அரசன் பின்னே செல்லும் படையின் அணிவகுப்பு
போல இருந்தது.
பூக்கள்
சொறியும் மரக்கிளைகளுடன் கூடிய மரங்களுடன் பறந்த ஸ்ரீஅனுமனைப் பார்க்கையில் மலையே பறப்பது
போல அற்புதக் காட்சியாய் இருந்தது.
ஸ்ரீஅனுமனுடன்
பறந்துசென்ற கனமான மரங்கள் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து கடலுக்குள் மூழ்கி மறைந்தன.
முன்னொரு காலத்தில் பறக்கும் சக்தி கொண்டிருந்த
மலைகள், இந்திரனுக்கு அஞ்சி, கடலுக்குள் சென்று தஞ்சம் அடைந்த நிகழ்வினைப் போன்றிருந்தது
அது.
தன்னுடன்
இழுத்து வரப்பட்ட மரங்களில் விதைகள், பலவித வாசனை கொண்ட மலர்கள், மொட்டுக்கள் இவை யாவும்,
பெரும் மேகத்தைப் போன்ற அகன்ற உடல்கொண்ட ஸ்ரீஅனுமனின் மீது கலந்திருந்ததால், அவர் வண்ணமயமான
மின்மினிப்பூச்சிகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும் மலையினைப் போல ஒளிர்ந்தார்.
ஆன்றோர்கள்,
வெளியூர் செல்லும் உறவினருடன் தங்களும் சிறிது தூரம் உடன் சென்று வழியனுப்பிவிட்டு
திரும்பி வருவது போல், ஸ்ரீஅனுமனின் வேகத்திலிருந்து விடுபட்ட மரங்கள் பூக்களைச் சொறிந்து
கொண்டே கடலில் விழுந்து மூழ்கின.
ஸ்ரீஅனுமனின்
வேகத்தால் உண்டான காற்றினால் இழுக்கப்பட்டு உடன் சென்ற மரங்களில் பூத்திருந்த பலவிதமான
வண்ணப்பூக்கள், மரங்கள் கடலில் விழுந்த பின்னரும், தாங்கள் கனமற்று இருந்த காரணத்தால்,
நீரில் மூழ்கிவிடாது, நீர்ப்பரப்பு முழுவதிலும் மிதந்து கொண்டிருந்தன. அக்காட்சி, அந்தக்
கடலை, நட்சத்திரங்கள் மின்னும் ஆகாயம் போல தோற்றம் கொள்ளச்செய்தது.
பலவித
வண்ணமயமான, நறு மலர்களால் சூழப்பட்டு பறந்து
கொண்டிருந்த ஸ்ரீஅனுமனைக் காணும் போது, அவர், வானத்தில் ஒளிரும் மின்னல்களால் சூழப்பட்ட
மேகம் போல காட்சியளித்தார்.
அவரது
வேகத்தினால் அவர் மீதிருந்த மலர்கள் கீழே கடல் நீரில் விழுந்து மிதந்ததால், அந்தக்
கடலே, நட்சத்திரங்கள் மின்னும் ஆகாயம் போல் இருந்தது.
மலையுச்சியிலிருந்து
தோன்றிய இரண்டு ஐந்து தலை நாகங்களைப் போல, ஆகாயத்தில் பரவிக்கிடந்த ஸ்ரீஅனுமனின் கைகளைப்
பார்க்கும் போது தோன்றியது.
ஸ்ரீஅனுமனின்
வேகத்தைப் பார்க்கும்போது, அவர், அலைகள் நிரம்பிய கடலையும், ஆகாயத்தையும் குடித்துவிட
விரும்புபவர் போலத் தோன்றினார்.
மலையின்
மீது இரண்டு இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயின் ஜ்வாலை போல, காற்றைக் கிழித்துக்கொண்டு
பறந்துகொண்டிருந்த ஸ்ரீஅனுமனின் இரண்டு கண்களும் ஒளிர்ந்தன.
வானரர்களில்
சிறந்தவரான அனுமனின் மஞ்சள் வண்ணக் கண்கள், சந்திரனைப் போலவும், சூரியனைப் போலவும்
ஒளிர்ந்தன.
அவரது
மூக்கின் சிவப்பு வண்ணம் காரணமாக, அவரது முகமே, மாலை நேர சூரியனைப்போல சிவந்து ஒளிர்ந்தது.
ஆகாயத்தில்
இந்திரனின் கொடி அசைந்தாடுவது போல, அங்கே நீந்திச் சென்றுகொண்டிருந்த வாயுமைந்தரான
ஸ்ரீஅனுமனின் வாலானது அசைந்தாடிக்கொண்டிருந்தது.
அறிவிற்சிறந்த
அனுமனின் கடைவாய்ப்பற்கள் வெண்ணிறமாக இருந்தன. ஆகவே அவரைச் சுற்றியிருந்த வாலானது,
சூரியனைச் சுற்றியிருக்கும் பரிவட்டம் போல இருந்தது.
அனுமனின்
இடுப்பிற்குக் கீழிருந்த பகுதிகள் சிவந்து இருந்ததால், அவர் செந்நிறப் பாறைகளாலான மலையைப்
போல அழகு பெற்று விளங்கினார்.
சிங்கம்
நிகர்த்த, சிறந்த வானரரான ஸ்ரீஅனுமன் உயர, உயரப் பறக்கும் போது, அவரது தோள்கள் காற்றினைக்கிழித்துச்
செல்லும்போது எழுந்த ஒலியானது, மேகத்தின் இடிமுழக்கம் போல இருந்தது.
தனது நீண்ட
வாலுடன் ஒளிர்ந்துகொண்டு ஆகாயத்தில் பயணம் செய்து கொண்டிருந்த, வானரர்களில் சிறந்தவரான
ஸ்ரீஅனுமன், ஆகாயத்தின் உயரத்தில் ஒளிரும் எரிநட்சத்திரம் போலத் துலங்கினார்.
அகன்ற
உடலுடன், சூரியனைப்போல ஒளிர்ந்துகொண்டு, தன்னைச்சுற்றிச் துலங்கும் வாலுடன் அவரைப்
பார்க்கையில், இடுப்பில், மிகவும் சிறப்புடன் அலங்கரிக்கப்பட்ட கயிற்றைச் சுற்றிக்கொண்டிருக்கும்
பெரிய யானையைப் போலத் தோற்றமளித்தார்.
ஸ்ரீ
அனுமன் ஆகாயத்தில் காற்றுடன் இணைந்து பறக்கும் போது அவரது நிழலானது, கீழே இருந்த கடல்
நீரில் மூழ்கி, மூழ்கிப் பயணித்தது. அந்தக்
காட்சியானது, கடலில் செல்லும் கப்பல்களின் பாய்மரங்கள் காற்றில் அசைந்தாடுவது போலவும்,
கப்பல்களின் அடிப்பகுதி கடல் நீரினுள் மூழ்கிச் செல்வது போலவும் இருந்தது.
ஸ்ரீஅனுமன்
கடல் நீரின் மேல் பயணம் செய்தபோது, அவரது வேகத்தினால் அந்தக் கடல்நீரில் பேரலைகள் எழுந்தன.
அதைப்பார்க்கும் போது கடலின் அந்தப் பகுதி தன் நிலை மறந்து ஆடுவது போல இருந்தது.
மலைகளைப்
போல உயர்ந்த கடல் அலைகளை, பெரும் வேகத்தில் பறந்து சென்ற வானரர்தலைவனான ஸ்ரீஅனுமன்,
தன் மார்பினால் பிளந்துகொண்டு சென்றார்.
ஸ்ரீஅனுமனின்
உடலிலிருந்தும், அவரைச் சுற்றியிருந்த மேகக்கூட்டங்களிலிருந்தும் பெருகிய காற்றினால்,
கடலில் பேரோசைகளுடன் பெருத்த அலைகள் தோன்றி புயல் உருவானதுபோலத் தோன்றியது.
ஸ்ரீ
அனுமன் தன் வேகப்பெருக்கினால் கடலில் பெரும் அலைகளை உருவாக்கிச் சென்றதால், பூமியிலும்
ஆகாயத்திலும் பேரதிர்வுகள் உண்டாகி, அவை நிலை குலைந்தன.
மேரு
மற்றும் மந்திர மலைகளுக்கு நிகராக, கடலில் உயரமாக எழுந்த கடல் அலைகளை எண்ணியவாறே, வானர
வீரர் ஸ்ரீஅனுமன் பெரும் வேகத்தில் முன்னே சென்றுகொண்டிருந்தார்.
அவரது
வேகத்தினால் ஈர்க்கப்பட்ட கடல்நீர் ஆகாயத்திலுள்ள மேகக்கூட்டங்களுடன் கலந்ததால், அவை
மழைக்காலத்து மேகக்கூட்டங்கள் போலத் துலங்கின.
அவ்விதம் கடல்நீர் மேலெழும்பி விட்டதால்,
கடலடியில் இருந்த திமிங்கலம், முதலை, மீன் மற்றும் ஆமை போன்ற உயிரினங்களைப் பார்க்க
முடிந்தது. ஆடை பறிக்கப்பட்ட உடல் போல், அந்தக் கடல் காட்சியளித்தது.
கடலினடியில்
வாழ்ந்துகொண்டிருந்த பாம்புகள், ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த ஸ்ரீஅனுமனைப் பார்த்து,
கருடனோ என அச்சம் அடைந்தன.
ஸ்ரீஅனுமனின்
நிழலானது பத்து யோஜனை (எண்பது மைல் அளவு) அகலமும், முப்பது யோஜனை நீளமும் கொண்டதாய்
வேகமாகச் சென்றது, மிகவும் கண்கொள்ளாக் காட்சியாய்
இருந்தது.
உவர்ப்பான
கடல் நீரில், ஸ்ரீஅனுமனைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்த அவரது நிழல், வெண்ணிற மேகக்
கூட்டங்களை ஒத்திருந்தது.
எதையும்
ஆதாரமாகப் பற்றிக்கொண்டிராமல், பெரும் வேகத்தில், மிகப் பெரிய வடிவத்துடன் ஆகாயத்தில்
பறந்து கொண்டிருந்த ஸ்ரீஅனுமனைப் பார்க்கும்போது, இறக்கையுடன் கூடிய பெரிய மலை ஒன்று
பறந்து செல்வதைப் போல இருந்தது.
சிறந்த
வானர வீரரான ஸ்ரீஅனுமன் பறப்பதினால் ஏற்பட்ட காற்றின் அழுத்தத்தால், கடல் நீர் விலகி,
அந்த இடமே பெரிய பாத்திரம் போலத்தோற்றமளித்தது.
பறவைகள்
பயணம் செய்யும் ஆகாயவழியில் , அப்பறவைகளின் தலைவனான கருடன் போலப் பறந்து சென்ற ஸ்ரீஅனுமன்,
எவ்விதம், வீசும் காற்று தன்னுடன் மேகக்கூட்டங்களை இழுத்துசெல்லுமோ, அவ்விதமே தன்னுடன்
அங்கிருந்த மேகக்கூட்டங்களை இழுத்துச்சென்றார்.
அவ்வாறாக
ஸ்ரீஅனுமனால் இழுத்துச் செல்லப்பட்ட மேகங்கள், வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் செம்மஞ்சள் நிறங்களில் மின்னின.
மேகங்களுக்கிடையே
நுழைவது, மறைவது, பின் வெளிவருவதுமாகப் பறந்துகொண்டிருந்த ஸ்ரீஅனுமனைப் பார்க்கையில்,
மேகங்களிடையே, மறைவதும், வெளிவருவதுமாக இருக்கும் ஒளிமிகுந்த நிலவினைப் போல இருந்தார்.
இவ்வாறு
வேகமாகப் பறந்து கொண்டிருந்த ஸ்ரீஅனுமன் மீது, வானவர்கள், கந்தர்வர்கள் முதலானோர் பூமழை
பொழிந்தனர்.
ஸ்ரீராமனுக்கு
உதவும் செயலாகப் பறந்து கொண்டிருந்த ஸ்ரீஅனுமனை சூரியனின் வெப்பம் சுட்டெரிக்கவில்லை.
வீசிய காற்றும் தென்றல் போல வீசி அனுமனுக்கு உதவியது.
வானத்தில்
பறந்து கொண்டிருந்த ஸ்ரீஅனுமனை முனிவர்கள் போற்றினர். வானவர்களும் கந்தர்வர்களும் அவர்
புகழைப் போற்றிப் பாடினர்.
எவ்வித
இன்னலுமின்றி, எளிமையாக, எவ்விதக் களைப்புமின்றி, வானரர்களில் மிகச்சிறந்தவரான ஸ்ரீஅனுமன்
பறப்பதைக்கண்டதுமே, நாகர்களும், யட்சர்களும்,
அசுரர்களும் மற்றும் அனைவரும் அவரைப் போற்றினர்.
“வானரர்களில்
மிகச்சிறந்தவரான ஸ்ரீஅனுமன், தன் மீது பறப்பதைக் கண்ட கடலானது, இஷ்வாகு குலத்திற்கு
தக்க மரியாதை செய்ய வேண்டும்” என்று எண்ணியது.
“மிகச்சிறந்த
வானர வீரரான ஸ்ரீஅனுமனுக்கு நான் உதவவில்லை என்றால், என்னுடைய அந்தச் செயலை ஏற்காதவர்கள்,
என்னைப் பலவிதமாகப் பழிப்பார்கள்” என்று அந்தக் கடல் எண்ணியது.
“இஷ்வாகு
வம்சத்தவரான சகரால் தான் நான் உருவாக்கப்பட்டேன். ஸ்ரீஅனுமனும் அதே இஷ்வாகு வழிவந்தவருக்குதான்
உதவிபுரிகின்றார். ஆகவே அவரை சோர்வடையச் செய்யலாகாது” என்று கடல் நினைத்தது.
“ஸ்ரீஅனுமன்
எவ்விதம் விரும்புவாரோ, அவ்விதம் அவர் ஓய்வுகொள்ள நான் ஏற்பாடு செய்தால், என்மீது கடக்க
இருக்கும் மீதித் தொலைவை அவர் இன்னலில்லாமல் கடக்க முடியும்” என்றும் எண்ணியது.
இவ்விதமான
சிறப்பான எண்ணம் மனதில் தோன்றியதும், தன் நடுப்பகுதியில் பொன்வண்ணத்தில் இருப்பதுவும்,
மலைகளிலேயே மிகவும் சிறப்புற்றதுவும், நீரினுள் மூழ்கியிருந்தததுவுமான மைநாக மலையைப்
பார்த்து கடல் சொல்லலாயிற்று!
“மலைகளிற் சிறந்த மைநாக மலையே! பாதாள உலகில் வாழும் அசுரர்களுக்குத் தடையாக இருக்க வேண்டி, தேவேந்திரனால் நீ இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளாய்!”
“பிறப்பிலேயே வீரர்களான அசுரர்கள் மேலும் வலிமை பெற்று
வெளிவந்துவிடாமல் தடுப்பதற்காக, பாதாள உலகத்தின் அளவிடமுடியாத பெரிய வாயிலை, நீ முழுவதுமாக
மறைத்துகொண்டு காத்துக்கொண்டிருக்கிறாய்.”
“ஓ மலையே!
உன்னால், நீள, அகல வாட்டிலும், மேலும் கீழுமாகவும் வளர முடியும். ஆகவே, மலைகளிற் சிறந்த
மலையே! நீ கடலிலிருந்து உயர எழும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்.”
“சிறந்த
வானர வீரரான ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமனுக்கு உகந்த, அரிய செயலாற்றுவதற்காக, மிகவும் தைரியத்துடன்
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போது உன் மீது பறந்து கொண்டிருக்கிறார்.”
“இஷ்வாகு
குல வழித்தோன்றல்கள் என்னால் வணங்கப்பட வேண்டியவர்கள். உன்னாலும் அதைவிட அதிகமாக வழிபட வேண்டியவர்கள்.
இஷ்வாகு குலத்தவரை அடியொற்றும் ஸ்ரீஅனுமனுக்கு நான் உதவ வேண்டும்.”
“செய்யத்தகுந்த
செயலை செய்யாமல் விடுவது, நன்மக்களின் சினத்தை அதிகரிக்கச் செய்யும். ஆகவே, நாம் செய்ய
நினைக்கும் காரியம், தகுந்த காலத்தில் செய்ததாக இருக்க , நீ உதவி செய்ய வேண்டும்.”
“பறப்பவர்களில்
மிகச் சிறந்தவரான ஸ்ரீஅனுமன், நமது வணங்கத்தக்க விருந்தினர். நீ நீரிலிருந்து மேலெழும்பி
நின்றால், அவர் உன் மீது தங்கி ஓய்வெடுக்க இயலும்.”
“தேவர்களாலும்,
கந்தர்வர்களாலும் வணங்கப்பெற்ற, மையத்தில் பொன்னிறம் கொண்டு ஒளிரும் மலையே! ஸ்ரீஅனுமன்
உன் மீது தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு, பிறகு தன் பயணத்தைத் தொடரட்டும்.”
“ஸ்ரீ
ராமனின் தயாள குணமும், மிதிலையின் குமாரியான சீதாதேவி அபகரிப்பட்டதும், ஸ்ரீஅனுமனின் இந்த முயற்சியுமே,
நீ நீரிலிருந்து மேலேழும்ப, தக்க தகுதியைக் கொண்டவனாகிறாய்.”
“உவர்ப்பான
கடலானது இவ்வாறு பேசியதைக் கேட்ட, தன் நடுப்பகுதியில் தங்க வண்ணத்தில் ஒளிரும் மைநாக
மலையானது, தன் மீது வளர்ந்து நிரம்பியுள்ள மரம், செடி, கொடிகளுடன், நீரினுள்ளிருந்து
விரைவாக மேலே எழுந்தது.
“மேகங்களைப்
பிளந்துகொண்டு வெளிவரும் சூரியனைப் போல, அந்த மைநாக மலையானது, கடல்நீரைப் பிளந்துகொண்டு
மேலே உயரக் கிளம்பியது.”
கடலின் உத்தரவுப்படி, அதனுள் மறைந்திருந்த அந்தப் பெரிய மலையானது, சில நொடிகளிலேயே, ஸ்ரீஅனுமன் காணும் வண்ணம் தன் சிகரங்களை வெளிப்படுத்தியது.
நாகர்களும்,
கின்னரர்களும் வசித்துவரும் அந்தப் பொன்னிறமான சிகரங்கள், உதய
கால சூரியனைப் போல, தன் ஒளிகிரணங்களை வீசின.
நீரிலிருந்து
வெளிவந்த அந்த மலையின் உருக்கிய தங்கம் போல மின்னும் சிகரங்களின் காரணமாக, இரும்பினைப்
போல நீல நிறத்தில் இருந்த ஆகாயமானது, தங்க நிறக் கதிர்களால் ஜொலித்தது.
மலைகளிலே
சிறந்த மைநாக மலையானது, தனது, தானே ஒளிரக்கூடிய தங்கநிறச் சிகரங்களிலிருந்து நூறு சூரியன்களுக்கு
இணையாக ஒளி வீசியது.
அந்த உவர்ப்புக்
கடலிலிருந்து திடீரென்று முளைத்து நின்ற அந்த மலையை நோக்கிய ஸ்ரீஅனுமன், அது தன் பயணத்திற்கு
இடையூறு விளைவிக்கவே என்று உறுதிகொண்டார்.
காற்றானது
நொடிப்பொழுதில் மேகக்கூட்டங்களைக் கலைத்தழிப்பதுபோல, சிறந்த வானரரான ஸ்ரீஅனுமன், தன்
மார்பினைக் கொண்டு, பெரும் வேகத்தோடு அந்த மலைச்சிகரங்களைத் தூளாக்கினார்.
இவ்விதமாக
மோதப்பட்ட, மலைகளிற்சிறந்த அந்த மைநாக மலையானது, ஸ்ரீஅனுமனின் வேகத்தை மதித்துப் போற்றி
ஆரவாரம் செய்தது.
அந்த மைநாக
மலையானது, மனித வடிவமெடுத்துகொண்டு, தன் மலையுச்சியின் மீது நின்றது. பிறகு, அன்பும்
மகிழ்ச்சியும் பொங்க, ஆகாயத்தில் தன் மீது இருக்கும் ஸ்ரீஅனுமனிடம் பின்வருமாறு கூறியது.
“ஓ! சிறந்த
வானர வீரரே! கடலின் மீது பறக்கும் செயற்கரிய செயலைச் செய்துகொண்டிருக்கும் நீர், என்
சிகரங்களின் மீது இறங்கி நின்று, சற்று ஓய்வெடுத்துக்கொள்வீர்!”
“ஸ்ரீராமனின்
முன்னோர்களால்தான் கடலின் உற்பத்தியும் வளர்ச்சியும் ஏற்பட்டது. ஆகவே, ஸ்ரீராமனின்
நலனுக்காக செயலாற்றும் உம்மை, கடலரசர் மரியாதை செய்து வணங்க விரும்புகிறார்.”
“ஒருவர்
பெற்றுக்கொண்ட உதவிக்கு மறுஉதவி செய்யப்படவேண்டும் என்பது ஸநாதன தர்மத்தின் வழிமுறையாகும்.
ஆகவே, ஸ்ரீராமனின் குலத்திற்கு செய்யவேண்டிய மறுஉதவியைச் செய்ய கடலரசர் விரும்புகிறார்.
இந்த விருப்பம் உம்மால் ஏற்றுக்கொள்ளபடவேண்டிய ஒன்றாகும்.”
““நூறு யோஜனை
தூரம் பறந்த வானர வீரரான ஸ்ரீஅனுமன், உன் சிகரத்தின் மீது சற்று ஓய்வெடுத்துகொண்டுவிட்டு,
பிறகு தன் பயணத்தைத் தொடரட்டும்” என்று உம்மை கெளரவிக்க வேண்டி, கடலரசர் என்னைப் பணித்துள்ளார்.
ஆகவே, சிறந்த வானர வீரரே, என் மீது தங்கி, சிறிது இளைப்பாறிவிட்டு, மீண்டும் தங்கள்
பயணத்தைத் தொடங்குங்கள்.”
“தனிச்சிறப்பு
வாய்ந்தவர்களை எதிர்கொண்டு அவர்களை உபசரிக்க வேண்டும் என்பது மூவுலகங்களிலும் உள்ள
வழக்கமாகும். அதுமட்டுமல்லாது, எனக்கும் உம்முடன் ஒரு தொடர்பு உள்ளது.”
“ஓ! காற்றின்
மைந்தரே! வானர வீரரே! மிகவும் திறமையும், வேகத்துடன் தாவக்கூடிய ஆற்றலும் கொண்ட வாரர்களில்
உம்மையே நான் முதன்மையானவராகக் கருதுகிறேன்.”
“ஒரு விருந்தினர்
முக்கியமற்றவராக இருந்தபோதிலும், அறவழியறிந்தவர்கள், அவருக்குத் தக்க மரியாதை செய்யப்படவேண்டும்
என்பதை அறிந்திருப்பார்கள். அவ்வாறிருக்க,
விருந்தினர் தங்களைப் போன்ற மிகவும் சிறப்பு வாய்ந்த வீரராக இருக்கும்போது, நாங்கள்
மரியாதை செய்யும் விதத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?”
“ஓ! வானரர்களில்
மிகச்சிறந்தவரே! தேவர்களிலேயே அதிக வேகத்துடன் செல்லும் ஆற்றல் கொண்ட வாயுவின் குமாரரான
நீங்கள், வாயுவின் வேகத்திற்கு நிகராக செல்லும் ஆற்றல் கொண்டுள்ளீர்கள்.”
“அறத்தை
அறிந்தவரே! உங்களை வணங்குவது வாயுதேவனை வணங்குவதற்கு ஒப்பானதாகும். ஆகவே, நான் உங்களை
வணங்குகிறேன். மேலும், இதற்கான இன்னொரு காரணத்தையும் சொல்கிறேன், கேளுங்கள்.”
“அன்பினுக்குரியவரே!
முன்னொரு காலத்தில், கிருத யுகத்தில், மலைகள் எல்லாம் சிறகுகள் கொண்டனவையாய் இருந்தன.
அவையாவும், காற்றின் வேகத்துடனும், கருடனின் வேகத்துடனும் எல்லாத் திசைகளிலும் பறந்து
திரிந்தன.”
“அவ்விதம்
அந்த மலைகள் பறப்பதைப் பார்த்த முனிவர்கள், தேவர்கள், மற்றும் எல்லா அசையும் அசையா
உயிரனங்கள் எல்லாரிடமும், எங்கே அவை தம்மீது விழுந்துவிடுமோ என அச்சம் உண்டாயிற்று.”
“இதனால்
நூறு யாகங்கள் செய்த தேவேந்திரன், கோபம் கொண்டு, தன் வஜ்ராயுதத்தால், அந்த மலைகளின்
சிறகுகளை ஆயிரம் துண்டுகளாக வெட்டியெறிந்தார்.”
“என்னை
நோக்கி வஜ்ராயுதத்துடன் தேவேந்திரன் கோபத்துடன் தாக்க வரும்போது, வாயுதேவனால் நான்
தூக்கி வீசப்பட்டேன்.”
“ஆகவே,
தங்கள் தந்தையால் எனது சிறகுகள் பாதுகாக்கப்பட்டன. நான் இந்த உப்பு நீர் மிகுந்த கடலுக்குள்
வீசப்பட்டு பாதுகாக்கப்பட்டேன்.”
“வானரருள்
மிகச்சிறந்தவரே! ஆகவே, வாயுதேவன் என்னால் வணங்கப்பட வேண்டியவர் ஆகிறார். அதனால் தான்,
நான் தங்களையும் வணங்க விரும்புகிறேன். நம்மிருவருக்கும்
இடையேயான இந்தத் தொடர்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.”
“சிறந்த
வானர வீரரே! ஆகையினால், நீங்கள் என்னுடைய மற்றும் இந்தக் கடலரசரின் உபசரிப்பை மகிழ்வுடன்
ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறீர்.”
“ஆகவே, சிறந்த வானர வீரரே, நீங்கள் இங்கே இளைப்பாறி,உங்கள் களைப்பைப் போக்கிக்கொள்ளுங்கள். எனது வணக்கங்களையும் ஏற்றுக்கொண்டு என்னை மகிழ்வுறச் செய்யுங்கள்”.
ஸ்ரீஅனுமன், அந்த மிகச்சிறந்த மைநாக மலை இவ்வாறு சொன்னதும்,
அதனிடம், “நான் மிகவும் மகிழ்வுற்றேன். உங்களது உபசரிப்பு என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகவே நீங்கள் உங்கள் மன வருத்தத்தைக் கைவிடுங்கள்”
என்று சொன்னார்.
மேலும்
அவர், “நான் எடுத்துக்கொண்டுள்ள செயலானது மிகவும் விரைவாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று.
இந்தப் பகல் பொழுதும் விரைவில் கழிந்துவிடும். இடையில் நிற்காமல், என் செயலை முடிப்பேன்
என்று சபதமேற்றிருப்பதால், அந்த சபதத்தை முறிக்கும் வண்ணம் என்னால் இங்கு நின்று செல்ல
இயலாது.” என்று சொன்னார்.
இவ்வாறாக
மைநாக மலையிடம் சொன்ன அச்சமற்ற ஸ்ரீஅனுமன், தன் கைகளால் அந்த மலையை வருடிக்கொடுத்துவிட்டு,
சிரித்துக்கொண்டே, ஆகாயத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஸ்ரீ அனுமனை,
மிக்க மதிப்புடன் பார்த்த கடலரசனும், மைநாக மலையும் அவரை வணங்கி வாழ்த்தினர்.
பிறகு ஸ்ரீஅனுமன்,
அந்தக் கடலையும் மலையையும் விட்டு நீங்கி, உயரே ஆகாயத்தில், தன் தந்தையான வாயுதேவனின்
பாதையில் பயணித்தார்.
ஸ்ரீஅனுமன்
இன்னும் உயரமாக மேலேறி, அந்த மலையைப் பார்த்தவண்ணம், எவ்விதத் தாங்கலும் இல்லாத அந்த
ஆகாயத்தில் பறந்து, தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஸ்ரீஅனுமனின்
இந்த இரண்டாவது கட்ட, கடினமான பயணம் தொடர்வதைப் பார்த்த, தேவர்களும், சித்தர்களும்,
மாமுனிவர்களும் அவரைப் போற்றினர்.
பொன்னிறமான
மைநாக மலையின் செயலைக் கண்ணுற்ற ஆயிரம் கண்களுடைய தேவேந்திரனும், பிற தேவர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
அளவற்ற
மகிழ்ச்சியால், குரல் தழுதழுக்க, மலைகளிற்சிறந்த
அந்த மைநாக மலையைப் பார்த்து, தேவேந்திரன் இவ்வாறு பேசலானான்.
“ஓ! மலைகளிற்சிறந்த
மைநாக மலையே! உன் செயலால் நான் மகிழ்வுற்றேன். நான் உனக்குப் பாதுகாப்புத் தருகிறேன்.
நீ உன் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!”
“நூறு
யோஜனை நீளமுள்ள கடலைக்கடக்க, அது அச்சம் கொள்ளத்தக்க செயலாக இருப்பினும், சிறிதும்
அச்சமின்றி செல்லும் ஸ்ரீஅனுமனுக்கு ஓயவளிக்க நீ விரும்பியது மிகப் பெரிய உதவியாகும்.!”
“தசரதனின்
மைந்தனான ஸ்ரீராமனுக்கு உதவுவதற்காகச் செல்லும் ஸ்ரீஅனுமனுக்கு நீ தக்க மரியாதை செலுத்தியது
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.!”
தன்னுடைய
செயலினால் மிகவும் மகிழ்ச்சியுற்ற தேவர்களின் அரசனான தேவேந்திரன் சொன்ன வார்த்தைகளால்,
மைநாக மலையும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
தேவேந்திரனிடமிருந்த
வரத்தைப் பெற்ற மைநாக மலையும் கடலில் உயரமாக அப்படியே நிலைத்து நின்றது. அதே நேரத்தின்,
ஸ்ரீஅனுமனும் கடலின் அந்தப் பகுதியைக் கடந்து விட்டிருந்தார்.
பிறகு,
தேவர்களும், கந்தர்வர்களும், யோகிகளும், முனிவர்களும், நாகர்களின் தாயான, சூரியனின்
ஒளிக்கு ஒப்பான ஸுரஸயைப் பார்த்து இவ்விதம் சொன்னார்கள்.
“வாயுவின்
மைந்தனும், பெருமையும் பெற்ற ஸ்ரீஅனுமன் என்பவர், அலைகடலின் மேல் பறந்துகொண்டுள்ளார்.
நீ பெரிய மலையின் அளவிற்கு ராட்சச வடிவம் கொண்டு,
பெரிய கோரைப்பற்களும், சிவந்த கண்களும் கொண்டு, ஆகாயத்தை மறைத்த வண்ணம், அவரது வழியில்,
ஒரு முகூர்த்த காலம் அளவிற்கு நிற்க வேண்டும்.”
“அவர் தன்னுடைய
வலிமை மற்றும் அறிவாற்றலால் உன்னை வெற்றிகொள்கிறாரா இல்லை சோர்வுற்று மனம் வருத்தம்
கொள்கிறாரா என்பதை அறிய நாங்கள் ஆவலாக உள்ளோம்.”
தேவர்களால் மதிக்கப்படும் ஸுரஸையானவள், தேவர்களின் வார்த்தைகளைக் கேட்டதும், யாவரும் அஞ்சும் வண்ணம் மிகவும் கோரமான அரக்கி வடிவம் எடுத்து, கடலுக்கு மத்தியில் உயர்ந்து நின்றாள். அவள், பறந்து கொண்டிருந்த ஸ்ரீஅனுமனை மறித்து, இவ்விதமாகப் பேசினாள்.
“ஓ! வானரர்களில்
மிகச் சிறந்தவரே! தேவர்களால் நீ எனக்கு உணவாக அளிக்கப்பட்டுள்ளாய்! ஆகவே, நான் உன்னைச்
சாப்பிடும் பொருட்டு, நீ எனது வாயினுள் நுழைவாயாக!”
“முன்னொரு
காலத்தில், பிரம்மதேவனால் எனக்கு இந்த வரம் அளிக்கப்பட்டுள்ளது!” என்று தொடர்ந்து கூறிய
அவள், உடனே தன் வாயை அகலத்திறந்து கொண்டு ஸ்ரீஅனுமன் முன்பாக நின்றாள்!
ஸுரஸையின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ அனுமன்,
மலர்ந்த முகத்துடன், அவளிடம் இவ்வாறு கூறினார்.
“தசரத மாமன்னரின் மைந்தரான ஸ்ரீராமன், தனது மனைவி சீதா, மற்றும் தம்பியான லக்ஷ்மணனுடன்
தண்டக வனத்திற்கு வந்தார்.”
“அங்கு
ஸ்ரீராமருக்கு அரக்கர்களிடம் கடும் பகை ஏற்படும் வண்ணம் பல செயல்கள் நடந்ததால், ஸ்ரீராமனின்
அன்பு மனைவியான சீதாதேவியை இராவணன் அபகரித்துச்சென்றுவிட்டான்.”
“நான் சீதாதேவியின்
இருப்பிடத்தை அறிவதற்காக, ஸ்ரீராமரின் தூதுவனாகச் சென்று கொண்டுள்ளேன். ஸ்ரீராமரின் ஆட்சிக்குட்பட்ட இடத்தில் இருக்கும்
உனக்கும் அவருக்கு உதவும் தகுதி உள்ளது.”
“அதில்
உனக்கு விருப்பம் இல்லையென்றால், சீதையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, ஸ்ரீராமரிடம்
தெரிவித்து, ஸ்ரீராமர், சீதையின் துன்பங்களைப் போக்கிய பிறகு, நான் உன் வாயினுள் உணவாக
நுழைகிறேன்.” என்று சொன்னார்.
தான் விரும்பும்
உருவத்தில் மாறும் வல்லமை கொண்ட ஸுரஸை, ஸ்ரீஅனுமனின் வார்த்தைகளைக் கேட்டதும், “நான்
என்னை யாராலும் வெல்ல முடியாத வரத்தைப் பெற்றுள்ளேன்” என்று சொன்னாள்.
தன்னை விட்டு
விலகிச் செல்லும் ஸ்ரீஅனுமனின் வலிமையை சோதிக்க எண்ணிய, நாகர்களின் தாயான ஸுரஸை இவ்விதமாக
மேலும் கூறினாள்.
“ஓ! சிறந்த
வானர வீரனே! நீ எனது வாயினுள் நுழைந்த பிறகு தான், மேலும் உன் பயணத்தைத் தொடர முடியும்.
இது ப்ரம்ம தேவரால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகும்!” என்று சொல்லி, தன் அகலமான வாயைத்திறந்து
கொண்டு ஸ்ரீஅனுமன் முன்னே நின்றாள்.
ஸுரஸையின்
வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீஅனுமன் சினம் கொண்டு, “என்னை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நீ உன்
வாயினைப் பெரிது படுத்திக் கொள்” என்றார்.
இதனால் சினம்
கொண்ட ஸுரஸை, தன் வாயினை, பத்து யோஜனை அளவிற்குப் பெரியதாக்கிக்கொண்டாள். உடனே ஸ்ரீஅனுமனும் தன் உருவத்தினைப் பத்து யோஜனை
அளவிற்கு வளர்த்துக்கொண்டார். பெரும் மேகத்தைப் போல, பத்து யோஜனை அளவிற்கு வளர்ந்து
நின்ற ஸ்ரீஅனுமனைக் கண்டதும், ஸுரஸை தன் வாயினை இருபது யோஜனை அளவிற்குப் பெரியதாக்கினாள்.
இதனைக் கண்ட
ஸ்ரீஅனுமன், தன் உடலை முப்பது யோஜனை அளவிற்கு வளர்த்துக்கொண்டார். ஸுரஸையானவள் தன்
வாயினை நாற்பது யோஜனை அளவிற்குப் பெரியதாக விரித்தாள்.
உடனே ஸ்ரீஅனுமன்
ஐம்பது யோஜனை அளவிற்குத் தன் உடலினை வளர்த்துக்கொள்ள, ஸுரஸை அறுபது யோஜனை அளவிற்குத்
தன் வாயை அகலமாக்கினாள்.
உடனே ஸ்ரீஅனுமன்,
எழுபது யோஜனை அளவிற்கு வளர, ஸுரஸையும் எண்பது யோஜனை அளவிற்குத் தன் வாயினைத் திறந்தாள்.
நெருப்பினைப்
போல் ஒளிர்ந்துகொண்டிருந்த ஸ்ரீஅனுமன், மேலும் தொண்ணூறு யோஜனை அளவிற்கு வளர்ந்துவிட,
ஸுரஸை, நூறு யோஜனை அளவிற்குத் தன் வாயினைத் திறந்தாள்.
தன் அகலமான
நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு, நரகத்திற்கு இணையான தன் கொடூரமான வாயினைத் திறந்துவைத்துக்கொண்டு
ஸுரஸை நின்று கொண்டிருந்தாள். ஸ்ரீஅனுமன்,
அறிவாற்றலுடன், மேகத்தைப் போல சுருங்கி, தன் உடலை நொடிப்பொழுதில், ஒரு விரற்கடை அளவிற்கு
சுருக்கிக்கொண்டார்.
கண நேரத்தில்,
ஸ்ரீஅனுமன், ஸுரஸையின் திறந்திருந்த வாயினுள் நுழைந்துவிட்டு, அதி வேகமாக வெளியேறிவிட்டார்.
பின்பு வானத்தில் நின்றபடி, இவ்விதம் கூறினார்.
“தட்சனின்
மகளே! நான் உன் வாயினுள் நுழைந்துவிட்டதால், உன் வரமும் பலித்துவிட்டது. உனக்கு என்
வாழ்த்துக்கள். இனி நான் சீதையைத் தேடி என
பயணத்தை தொடர்வேன்” என்றார்.
தன் இயல்பான
வடிவத்தில் மாறிய ஸுரஸை, ராகுவின் பிடியிலிருந்து வெளிவந்த நிலவினைப் போல், தனது வாயினுள்
நுழைந்து வெளியே வந்துவிட்ட ஸ்ரீஅனுமனைப் பார்த்து, இவ்விதம் கூறினாள்.
“கருணை
மிக்க சிறந்த வானரனே! நீ உன் இயல்பிற்கு ஏற்றவாறு, நீ நினைத்த காரியத்தை முடிக்கச்
செல்வாயாக! வைதேகியான சீதையை ஸ்ரீராமனிடம்
சேர்ப்பித்து விடு” என்றாள்.
தனக்கு
ஏற்பட்ட தடையை உடைத்துக்கொண்டு, மூன்றாவது முறையாகத் தன் பயணத்தை தொடர்ந்த ஸ்ரீஅனுமனைப்
பார்த்து, அனைத்து உயிரினங்களும், “நன்று! நன்று” என வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வருண
தேவனின் இருப்பிடமான கடலினை நெருங்கி, கருடனின் வேகத்தோடு ஆகாயத்தில் நுழைந்த ஸ்ரீஅனுமன்,
தன் வழியில் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஸ்ரீஅனுமன்
ஒரு கருடனைப் போல பறந்து சென்ற அந்த ஆகாயமானது, நீர் நிறைந்த மேகங்களாலும், பறவைக்கூட்டங்களாலும்
நிரம்பியிருந்தது. தம்பூரா போன்ற இசைக்கருவிகள்
இசைப்பதில் வல்லவர்களும், கந்தர்வர்களும் அங்கு நிரம்பியிருந்தார்கள்.
இந்திர
வில் அங்கிருந்தது. சிங்கங்கள், புலிகள், பறவை இனங்கள், மற்றும் பலவிதமான பாம்புகளை
வாகனமாகக் கொண்டவைகளும், நெருப்பை உமிழ்ந்தவாறு செல்லும் அலங்கரிக்கப்பட்ட விமானங்களும்
அங்கு இருந்தன. வஜ்ராயுதமும், இடியோசைகளும் கலந்ததால் உண்டான நெருப்பினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நற்செயல்
புரிந்தவர்களும், சொர்க்கத்தை வென்றவர்களும், யாகங்களில் உணவாகச் சமர்ப்பிக்கப்படும்
பொருட்களை ஏந்தி நிற்கும் அக்னிதேவன் முதலானோரும் அங்கிருந்தனர்.
அந்த
ஆகாயமானது, கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரிய, சந்திரர்கள் ஆகியோரது உறைவிடமாக இருந்தது.
சிறந்த முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யட்சர்கள் முதலானோரும், விஷ்வவசு என்னும்
கந்தர்வர அரசனும், தேவேந்திரனின் ஐராவதம் என்னும் யானையும் அங்கிருந்தனர்.
களங்கமற்றதாய்,
எங்கும் இனிமையாகப் பரந்து விரிந்திருந்த அது, சூரியன், சந்திரன் பயணம் செய்யும் பாதையாக
இருந்தது. நலம் விளைவிப்பதாகவும், ப்ரம்மனால் பூவுலகிற்கு ஒரு குடையைப் போலவும் இருந்தது.
வீரமும் பெருமையும் மிக்க வித்யாதரர்களால் நிரம்பியிருந்தது.
இப்படிப்பட்ட
வான்வழியில், ஸ்ரீஅனுமன் தன்னுடன், கருமை, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெண்மைநிற மேகக்கூட்டங்களை,
காற்றைப்போல இழுத்துச்சென்றார். பார்ப்பதற்கே
அழகிய தோற்றத்தில் இருந்த அந்த மேகக்கூட்டங்களிடையே நுழைந்தும், வெளிவந்தும் பயணம்
செய்த ஸ்ரீஅனுமன், மழைக்காலத்து நிலவினைப் போலத் தோற்றமளித்தார்.
ஸ்ரீஅனுமன்,
எல்லாத்திக்குகளிலிருந்தும் பார்க்கும் வண்ணம், எந்தத் தாங்கலும் இல்லாத ஆகாயத்தில்,
இறக்கைகள் கொண்ட மலையரசனைப் போலப் பறந்தார்.
நினைத்த வடிவத்தில் உருவெடுக்கும் வல்லமை பெற்ற,
கொழுத்த, ஸிம்ஹிகை என்ற அரக்கி, இவ்விதம் பறந்துகொண்டிருந்த ஸ்ரீஅனுமனைப் பார்த்ததும்,
தன் மனதில் இவ்வாறு நினைக்கலானாள்.
வெகுநாட்களுக்குப்
பிறகு எனக்கு விருந்தாக நல்ல உணவு கிடைத்துள்ளது.
ஏனென்றால் வெகு நாட்களுக்குப் பிறகு, என் முன்னே இவ்வளவு பெரிய விலங்கு ஒன்று
வந்தள்ளது.
இவ்வாறு
நினைத்ததும், ஸ்ரீஅனுமனின் நிழலினைப் பிடித்து இழுத்தாள். தன்னுடைய நிழல் இழுக்கப்பட்டதால், ‘பெருங்கப்பலொன்று
கடலில் செல்லும்போது, எதிர்க்காற்றால் பலமிழந்து தள்ளாடுவதுபோல’, தான் பின்புறமாக வலுக்கட்டாயமாக
இழுக்கப்படுவதாக நினைத்தார்.
தன்னைச்
சுற்றியும், மேலும், கீழும் பார்வையைச் செலுத்திய ஸ்ரீஅனுமன், கீழே, கடலின் மேல் ஒரு
பெரிய உடலுடன் நின்ற அரக்கியைப் பார்த்தார்.
அதைப்பார்த்ததும்,
அது, வானரவேந்தர் சுக்ரீவனால் தன்னிடம் சொல்லப்பட்ட, ‘விகாரமான முகமும், அற்புதமான
வடிவமும் கொண்ட, நிழலைப் பிடித்துக்கொள்ளும் பூதம்’ இதுவாகத்தான் இருக்கும் என்பதில்
ஐயம் ஏதுமில்லை என நினைத்தார்.
தன்
அறிவுக்கூர்மையால், அந்த பூதம் ஸிம்ஹிகைதான் என்றறிந்து கொண்ட ஸ்ரீஅனுமன், மழைக்கால
மேகம் போலத் தன் உடலைப் பெரிதாக்கிக்கொண்டார்.
ஸ்ரீஅனுமன்
தன் உடலைப் பெரியதாக வளர்த்துக்கொண்டதைப் பார்த்த ஸிம்ஹிகை, ஆகாயத்திற்கும், பாதாளத்திற்குமாக
தனது வாயினை விரித்துக்கொண்டாள்.
மேகத்தின்
இடியோசை போல ஓசையிட்டுக்கொண்டு, ஸிம்ஹிகை, ஸ்ரீஅனுமனை நோக்கி ஓடினாள். அறிவாற்றல் மிக்க
ஸ்ரீஅனுமன், தன் உடலின் அளவிற்கு வாயினைத் திறந்துகொண்டு வரும் அவளின் உடல் பகுதிகளையும்,
உயிர்நிலைகளையும் நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினார்.
வலிமைமிக்க
ஸ்ரீஅனுமன், தன் உடலைச் சிறிதாக்கிகொண்டு, அந்த அகன்ற வாயின் உள்ளே, ஒரு வஜ்ராயுதம்
போல விழுந்தார். கிரகண காலத்தில், ராகுவின் பிடிக்குள் முற்றாக மறைந்துவிடும் நிலவினைப்
போல ஸ்ரீஅனுமன் அந்த வாயினுள் சென்று மறைந்ததை, சித்தர்கள், சாரணர்கள் பார்த்தனர்.
மனோவேகத்தில்
நினைத்தவாறு செல்லும் வல்லமை கொண்ட அந்த வானரர், தன் நகங்களினால் அந்த அரக்கியின் உயிர்நிலைகளைக்
கிழித்துக்கொண்டு, விரைவில் வெளியேறினார்.
அறிவாற்றலுடனும்,
மனவலிமையுடனும், ஆற்றலுடனும் அந்த அரக்கியைக் கொன்று வீழ்த்திய ஸ்ரீஅனுமன், மீண்டும்
முழுவேகத்துடன் தன் உருவத்தைப் பெரிதாக்கிக்கொண்டார்.
உயிர்களின் முக்கியமான உறுப்பு இதயமாகும். ஸ்ரீஅனுமன் அந்த அரக்கியின் இதயத்தைப் பிளந்துகொண்டு வெளியே வந்ததால், அந்த அரக்கி மிகுந்த துன்பத்துடன் இறந்து கடலினுள் விழுந்தாள். ஸ்ரீஅனுமன் அவளை அழிப்பதற்காகவே ப்ரம்மனால் படைக்கப்பட்டாரோ என்னும் விதமாக அந்தச் செயல் இருந்தது. இதைப் பார்த்த ஆகாயத்தில் இருந்த வானவர்கள் ஸ்ரீஅனுமனிடம் இவ்விதம் சொன்னார்கள்.
“ஓ! சிறந்த
வானர வீரரே! மிகப் பெரிய மிருகத்தைக் கொன்ற பெரிய வீரச்செயலைச் செய்துவிட்டீர்கள். இனி, நீங்கள் விரும்பி முனைந்துள்ள காரியத்தை வெற்றிகரமாகச்
செய்யுங்கள்!”
“ஓ! மதிப்புமிக்க
வானரரே! அச்சமின்மை, அறிவாற்றல், முன்யோசனை, செயல்திறன் ஆகிய இந்த நான்கு பண்புகளும்
உம்மிடம் இருப்பது போல் எவரிடம் இருப்பினும், அவர் எடுத்த காரியத்தில் தடைகளை விரும்பமாட்டார்.”
தான் கைக்கொண்டுள்ள
செயலின் தன்மையை முற்றிலும் உணர்ந்த அனுமன், வணக்கத்திற்குரிய அவர்களால், கெளரவிக்கப்பட்டு,
ஆகாயத்தில் உயர்ந்து கருடனைப் போல வேகங்கொண்டு பறந்தார்.
மேலும்
நூறு யோஜனை தூரம் பறந்த பிறகு கடலின் மறு கரையை அடைந்திருந்த ஸ்ரீஅனுமன் நாலாத்திசைகளிலும்
தன் பார்வையைச் செலுத்தினார். அங்கு மரங்களடர்ந்த
வனப்பகுதியைக் கண்டார்.
மேலே பறந்தவாறே,
வானரர்களில் சிறந்தவரான ஸ்ரீஅனுமன், பலவிதமான மரங்கள் அடர்ந்த தீவினையும், மலயம் என்னும்
மலையின் வனப்பகுதிகளையும் கண்டார்.
அச்சமின்மையும் மனத்திண்மையும் கொண்ட ஸ்ரீஅனுமன், கடலையும், கடலை ஒட்டியிருந்த நீர்ப்பகுதிகளையும், அந்தப் பகுதிகளில் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்களையும், கடலின் மனைவிகளாகக் கருதப்படும் நதிகள் அந்தக் கடலில் கலக்கும் முகத்துவாரங்களையும் கண்டார். பிறகு ஆகாயத்தை மறைத்திருக்கும் பெரிய மேகத்தைப்போல தன் வடிவம் இருபதைக் கண்டு, “என்னுடைய பெரிய வடிவத்தையும், எனது வேகத்தையும் காணும் ராக்ஷஸர்கள், பெருதும் உற்சாகம் அடைவார்கள்.“ என்று நினைதார்.
எனவே,
மலைக்கு நிகரான தன் உருவத்தை, ஆசையைத் துறக்கும் துறவி போல, சுருக்கிக்கொண்டு, தன்
இயல்பான வடிவம் கொண்டார்.
மூன்று
அடிகளால் அண்டத்தை அளந்து, பலிச்சக்ரவர்த்தியின் கர்வத்தைப் போக்கிய வாமனரான மஹாவிஷ்ணுவைப்
போல், ஸ்ரீஅனுமன் தன் சுய வடிவத்தை அடைந்தார்.
அழகிய
பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் கொண்ட ஸ்ரீஅனுமன், யாராலும் செய்ய இயலாத செயலான கடலைக்
கடந்ததும், தான் செய்யவேண்டிய செயலினைப் பற்றி நினைத்தவராய், தன் வடிவத்தை இயலபான நிலைக்கு
மாற்றிக்கொண்டார்.
பெரிய மேகக்கூட்டத்தைப்
போலிருந்த ஸ்ரீஅனுமன், தாழம்பூ, உத்தாளகம் மற்றும் தென்னை மரங்கள் அடர்ந்த விசித்திரமான
மலைச்சிகரங்களைக் கொண்டிருந்த லம்பா எனப்படும் மலையின் சிகரத்தின் மீது வந்திறங்கினார்.
கடற்கரையை
அடந்து, மலையுச்சியில், லங்கா நகரத்தைப் பார்த்த
ஸ்ரீஅனுமன், தன் உருவத்தையும் சிறிதாக்கிக்கொண்டு, அங்கிருந்த விலங்குகள், பறவைகள்
அச்சம் கொள்ளும் வண்ணம் அந்த மலையில் குதித்தார்.
கொடியவர்களும், விஷம்கொண்டவர்களும் நிறைந்த , பேரலைகள் கொண்ட ஆழ்கடலை, மன வலிமையுடன் கடந்து, மறுகரையில் இறங்கிய ஸ்ரீஅனுமன், அமராவதி நகரத்திற்கு ஒப்பான லங்கை நகரத்தைக் கண்டார்.
முதல் சர்க்கம் முடிவுற்றது.
Colour Images generated by Bing AI.









.jpeg)

.jpeg)

2 comments:
நல்ல தெய்வீக அனுபவம் தந்த பதிவு..
ஹனுமனின் அருளால் வாழ்க வளமுடன்..🙏🙏🙏
மிகச்சிறப்பான முயற்சி! பொருள் உணர்ந்து சுந்தர காண்டம் படிக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்ரசாதம்! வாழ்க வளமுடன்!
Post a Comment