ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்
நாற்பதாவது ஸர்கம்.
தேவமங்கை போன்றவளான சீதை,
வாயுகுமாரனான சீர்மிகுந்த அனுமனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டுத், தன் மனதிற்கு இதமான
வார்த்தைகளைக் கூறத் தொடங்கினாள்.
“வானரரே! இனிய மொழிகளைக் கூறும் உம்மைக் கண்டு,
முளைவிட்ட பயிர்களைக் கொண்ட நிலத்தில் மழை பெய்வது போன்ற மகிழ்ச்சியைப் பெறுகின்றேன்.”
“துன்பத்தால் உடல் நலிவுற்றிருக்கும் நான், என்னுடைய
இந்த அவயவங்களால், மனிதருள் சிறந்தவரான ஸ்ரீராமனைத் தொடக்கூடிய அந்த நல்ல தருணம் உண்டாவதற்கான
உரிய செயல்களைச் செய்ய அருள் புரிய வேண்டும்.”
“வானரோத்தமரே! சினம் கொண்டதினால், சிறு புல்லினை
எறிந்து, காகத்தின் ஒரு கண்ணினைக் குருடாக்கிய ஸ்ரீராமனது அந்தச் செயலை, நீர் என்னைக்
கண்டதற்கு அடையாளமாய் அவரிடம் உரைக்கவும்.”
““விளையாட்டுக்காக என் நெற்றிப் பொட்டினைக் கலைத்து,
காவிக் கற்களைப் பொடி செய்து என் நெற்றியில் ஸ்ரீராமன் தீட்டியதை நான் நினைவுகூர்ந்ததை
அவரிடம் நீர் சொல்ல வேண்டும். இதைக் கேட்டு
ஸ்ரீராமன் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.”
“சீதையை அபகரித்துச் சென்று அரக்கர்கள் மத்தியில்
இருக்கும்படி செய்யப்பட்ட செயலை, தேவேந்திரனுக்கும், வருணனுக்கும் நிகரான வலிமை கொண்ட
ஸ்ரீராமன், எவ்விதம் பொறுத்துக்கொள்கிறார்? என்பதையும் அவரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.”
“மிகவும் பொறுப்புடன் என்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்த
திவ்யமான இந்த சூடாமணியை, நான் மிகவும் வருத்தமுறும் காலங்களில் மீண்டும் மீண்டும்
பார்த்து, ஸ்ரீராமனையே பார்ப்பது போன்ற மன மகிழ்ச்சி கொள்வேன் என்பதனையும், மனிதர்களால்
இழைக்கப்படும் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவரான ஸ்ரீராமனிடம் கூற வேண்டும்.”
“நீரில் தோன்றியதும், மனதிற்கு மகிழ்ச்சி தர
வல்லதுமான இந்தச் சூடாமணி என்னால் ஸ்ரீராமனுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது என்பதையும்,
இனியும் என்னால் வருத்தத்துடன் வாழ்ந்திருக்க இயலாது என்பதையும் கூறவும்.”
(பின் வருபவை சீதை நேரடியாக ஸ்ரீராமனிடம் சொல்வது போல் அமைந்துள்ளன.)
“பொறுத்தற்கரிய
இன்னல்களையும், இந்த அரக்கிகளால் நெஞ்சைக் கீறும் வண்ணம் சொல்லப்படும் பேச்சுக்களையும்,
உங்களுக்காகத்தான் நான் சகித்துக் கொண்டுள்ளேன்”
“பகைவர்களை அழிக்கும் ஸ்ரீராம! ஒரு மாதம் வரை
மட்டுமே நான் உயிர் தரிப்பேன். மன்னர் மன்னனே!
ஒரு மாதத்திற்கு மேல் சென்றால் உங்களைப் பிரிந்து நான் உயிர் தரிக்க மாட்டேன்.”
“இந்தக் கொடிய அரக்கர்களின் அரசன் என்னைப் பார்க்கும்
பார்வையே தவறாக உள்ளது. இனியும் உங்களால் இங்கு
வருவதற்குத் தாமதமாகும் எனத் தெரிந்த நொடியே நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்.”
கண்களில் நீர் தளும்ப, மிகவும் பரிதாபத்தை உண்டாக்கும்
வண்ணம் வைதேஹியால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட வாயுகுமாரனான அனுமன், பின் வருமாறு
கூறலானார்.
“தேவீ! உண்மையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஸ்ரீராமன் தங்களை இழந்த துயரத்தில் மற்ற எல்லா விஷயங்களிலும்
பற்றற்று இருக்கின்றார். ஸ்ரீராமனது இந்தத் துயரம் இலக்குமணனையும் வருத்தமடையச் செய்துள்ளது.”
“பெண்ணரசியே! நீங்கள் தெய்வச்செயல் போலத்தான்
என் கண்ணில் காட்சியளித்தீர்கள். இது வருத்தப்படுவதற்கான
நேரமில்லை. இந்த நொடியிலேயே நீங்கள் உங்கள்
துயரங்கள் யாவும் விலகுவதைக் காணப் போகின்றீர்கள்.”
“குறைகள் ஏதுமற்றவர்களும், ஆண் புலிகள் போன்ற
வலிமை மிக்கவர்களுமான அந்த இரண்டு அரச குமாரர்களும் உங்களைக் காணப் போகும் உற்சாக மிகுதியால்
இந்த இலங்கை மாநகரத்தையே எரித்துச் சாம்பலாக்கப் போகின்றார்கள்.”
“அகன்ற விழிகளைக் கொண்ட தேவீ! ரகு குலத்தைச்
சேர்ந்த அந்த இரண்டு அரச குமாரர்களும் நடக்க இருக்கும் போரில், கொடிய இராவணனை அவனது
உற்றார் உறவினர் அனைவருடனும் கொன்றழித்து, உங்களைத் தங்கள் சொந்த நகரத்திற்கு அழைத்துச்
செல்லப் போகின்றார்கள்.”
“குற்றங்கள் எதுவுமற்ற தேவீ! எதனைக் கண்டால்
ஸ்ரீராமனுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுமோ, அப்படிப்பட்ட வேறு அடையாளம் எதுவும் இருந்தால்,
என்னிடம் கொடுத்தருள வேண்டும்.”
சீதை அனுமனைப் பார்த்து, “வீரனே! என்னால் கொடுக்கப்பட்ட இந்த அடையாளமே யாவற்றிலும் மேலானது. நான் தலையில் அணியும் இந்த நகையைக் கண்டவுடனே, ஸ்ரீராமனுக்கு நீங்கள் சொல்லும் வார்த்தைகள் யாவற்றிலும் நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.”
உத்தம வானரனான பெருமை மிக்க அனுமன் அந்தப் பெருமை
மிக்க நகையை மரியாதையுடன் பெற்றுக்கொண்டு, சீதைக்குத் தலை வணங்கி, அவளிடம் விடை பெறுவதற்காகக்
காத்து நின்றார்.
மிகப்
பெரும் வடிவமும் விரைந்து செல்லும் ஆற்றலும் கொண்டு, அங்கிருந்து பறந்து செல்லும் எண்ணம்
கொண்டிருந்த அனுமனைக் கண்ட, பார்ப்பவர் கருணை கொள்ளத்தக்க நிலையில் இருக்கும் ஜனகனின்
மகளான சீதை, கண்களில் நீர் சொரிய, நாத் தடுமாற
உரைக்கலானாள்.
“அனுமனே! சிங்கங்களை ஒத்தவர்களும், சகோதரர்களுமான
ஸ்ரீராம, இலக்குமணர்களுக்கும், மந்திரிகளோடு கூடிய சுக்ரீவன் மற்றும் அனைவருக்கும்
என்னுடைய நல விசாரிப்புக்களைத் தெரியப்படுத்தவும்.”
“என்னை இந்தத் துன்பப் பெருங்கடலிலிருந்து மீட்கும்
வண்ணம், நீ ஸ்ரீராமனிடம் செய்திகளை அறிவிக்க வேண்டும்.”
“வானரோத்தமனே! நான் இங்கு அனுபவிக்கும் துன்பத்தின்
தீவிரத்தன்மையையும், இந்த அரக்கிகள் சுடுசொற்களைக் கொண்டு என்னை மிரட்டுவதையும் ஸ்ரீராமனின்
அருகில் சென்று அவரிடம் உரைப்பாயாக. நீ திரும்பிச்
செல்லும் வழியில் உனக்குத் தடையேதும் ஏற்படாதிருக்கட்டும்.”
அரச குமாரியால் வாழ்த்தப்பட்ட அந்த அனுமன், தான் நினைந்து வந்த காரியம் ஈடேறியதால் திருப்தியுற்று, அந்த காரியத்தில் இன்னும் சிறிது மிச்சம் இருப்பதை எண்ணியவராய் வடக்குத் திசை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினார்.
நாற்பதாவது ஸர்கம் நிறைவு.


No comments:
Post a Comment