ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்
நாற்பத்திரண்டாவது
ஸர்கம்.
அங்கே அப்பொழுது உண்டான பறவைகளின்
பேரிரைச்சல்களாலும், பெரும் மரங்கள் முறிந்து விழுந்த ஒலிகளாலும், இலங்கை நகரத்தில்
வசித்தவர்கள் பீதியடைந்தார்கள்.
அந்த வனத்தில் அஞ்சி நடுங்கி வெருண்டோடிய பறவைகள்
மற்றும் விலங்குகள் விகாரமாய் ஊளையிட்டன. அதனால்
அங்கிருந்த அரக்கர்களுக்கும் கெட்ட சகுனங்கள் தோன்றின.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த, விகாரமான வாயமைப்புக்களைக்
கொண்டிருந்த அரக்கியர் உறக்கம் கலைந்தவர்களாய்த்,
தங்கள் முன்னே அழிந்து கிடந்த வனத்தையும், வானர வீரனான அனுமனையும் கண்டனர்.
மிகுந்த தைரியமும், வலிமையான தோள்களையும் கொண்ட
பெரும் வலிமை மிக்க அனுமன், அந்த அரக்கியரைப் பார்த்து , அவர்கள் அச்சமுறும் வண்ணம்
பெரிய வடிவம் எடுத்துக் கொண்டார்.
அப்பொழுது அந்த அரக்கிகள், மலை போன்ற பெரிய வடிவத்துடனும்,
பெரும் வலிமையுடனும் திகழ்ந்த வானரத்தைப் பார்த்து, ஜனகனின் மகளான சீதையிடம் வினவினார்கள்.
“இது என்ன? யாருடையது? எங்கிருந்து வந்தது? மேலும் நீ எங்களுடன் பேசுவது போல இதனுடன் எவ்விதம்
பேச முடிந்தது? இவற்றையெல்லாம் அறிய விரும்புகிறோம்.”
“அகன்ற கரிய விழிகளை உடையவளே! இது உன்னுடன் பேசிக்கொண்டிருந்தது
உண்மை தானே? பெருமை மிக்கவளே! எங்களுக்கு விளங்கும்படி உரைப்பாயாக! உனக்கு ஒரு கெடுதலும்
நேராது!”
அழகே வடிவான, குண நலன் மிக்க சீதை, “நினைத்தபடி
உருவம் கொள்ளத்தக்க அரக்கர்கள் விஷயத்தில் நான் ஏன் தலையிடவேண்டும்?” என்று அப்பொழுது
பதிலுரைத்தாள்.
“பாம்பின் காலைப் பாம்பு நன்கு அறியும் என்பதில்
சந்தேகமில்லை. இவன் யாரென்றும், என்ன செய்யப் போகின்றான் என்பதையும் நீங்களாகவே தெரிந்து
கொள்ளுங்கள்.”
“இங்கு வந்திருக்கும் இவனைப் பார்க்கும் பொழுது
விரும்பிய வண்ணம் உருவம் கொள்ளும் குணம் கொண்ட அரக்கர்களின் இயல்பைக் கொண்டவனாகவே இருக்கின்றான். இவன் யார் என்ற செய்தி அறியாமல் நானும் கவலை கொண்டுள்ளேன்.”
வைதேஹியின் வார்த்தைகளைக் கேட்ட அரக்கியர் திகைப்புற்று
அங்கிருந்து சிதறி ஓடினர். சிலர் அங்கேயே நின்றிருந்தனர். சிலர் நடந்த அனைத்தையும் இராவணனிடம் தெரிவிக்க அவனிடம்
சென்றார்கள்.
பயங்கரமான முக அமைப்புகளைக் கொண்டிருந்த அந்த
அரக்கியர், இராவணன் அருகில் சென்று, அச்சமூட்டும் வண்ணம் பல வடிவம் எடுக்க வல்ல வானரத்தைப்
பற்றி வர்ணனை செய்யத் தொடங்கினர்.
“அரசே! அசோக வனத்தில் பெரும் ஆற்றலும் வடிவமும்
கொண்ட வானரம் ஒன்று சீதையுடன் பேசிக் கொண்டிருந்தது. அந்த வானரம் இன்னமும் அங்கு இருக்கின்றது,”
“மானின் விழிகளைப் போன்ற கண்களைக் கொண்ட ஜனகனின்
மகளான சீதையிடம் நாங்கள் பல முறை கேட்டும், அவள் அந்த வானரத்தைப் பற்றிய விவரங்களைக்
கூற விரும்பவில்லை.”
“அந்த வானரம் ஒரு வேளை, இந்திரனது தூதுவனாகவோ,
இல்லை, குபேரனது தூதுவனாகவோ இருக்கலாம். அவ்வாறில்லையெனில்,
சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க இராமனால் அனுப்பப்பட்ட தூதுவனாக இருக்கலாம்.”
“அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியதும், பல வகையான
மிருகங்கள் அலைந்து திரியக் கூடியதுமான உங்களது அந்தப்புர நந்தவனம் அற்புதமான உருவம் கொண்ட அவனால்
முற்றிலும் அழித்து நாசமாக்கப்பட்டது.”
“அந்த நந்தவனத்தில் அந்த வானரத்தால் அழிக்கப்படாத
இடம் ஏதும் இல்லை. இருந்த போதிலும், சீதை தங்கியிருக்கும்
இடத்தை மட்டும் அது அழிக்கவில்லை.”
“ஜானகியைக் காப்பதற்காகவோ, அல்லது களைப்புற்றதனாலோ
அது அவ்விதம் செய்ததா என்று தெரியவில்லை. ஆனால்
அந்த வானரத்திற்குக் களைப்பு என்பதே கிடையாது. ஆகவே சீதையின் இடத்தைக் காப்பாற்றவே
அவ்வாறு செய்திருக்க வேண்டும்.”
“அழகிய தளிர்களும், இலைகளும், பூக்களும் கொண்ட
எந்த மரத்தினடியில் சீதை அமர்ந்துள்ளாளோ, அந்த சிம்சுபா மரம் மட்டுமே அந்த வானரத்தால்
தீண்டப்படாமல் பாதுகாப்பாக விடப்பட்டது."
“சீதையுடன் பேசிய, அந்த வனத்தை அழித்த, அந்தப் பயங்கர வடிவம் கொண்ட வானரத்திற்கு, மிகவும் கொடுமையான தண்டனையொன்றை நீங்கள் விதித்து எங்களுக்கு அருள் புரிய வேண்டும்.”
அரக்கர் கோமானே! நீங்கள்
மனதார ஆசைப்பட்டு இங்கு கொண்டு வந்திருக்கும் சீதையிடம், உயிர் மேல் ஆசையை
விட்டவனைத் தவிர வேறு எவரும், பேசத்துணிவார்களா?”?”
அரக்கியரின்
வார்த்தைகளைக் கேட்ட அரக்கர் குல அரசனான இராவணன், கோபத்தால் சிவந்த கண்களை உருட்டிக்கொண்டு,
ஓங்கியெரியும் வேள்வித்தீ போலத் தகிக்கலானான்.
சுடர் விட்டு எரியும் இரு விளக்குகளிலிருந்து
தீக்கங்குகளுடன் சொட்டும் எண்ணெய்த் துளிகள் போல, கோபத்தில் துடித்த அவனது இரண்டு கண்களிலிருந்தும்
கண்ணீர்த் துளிகள் வழிந்தன.
பெரும் வீரனான அவன், அனுமனது கொட்டத்தை அடக்குவதற்காக,
வீரத்தில் தனக்கு இணையானவர்களும், திறமைசாலிகளுமான கிங்கரர்கள் என்னும் பெயர் கொண்ட
அரக்கர்களை ஏவினான்.
அரசனின் கட்டளையை ஏற்று, எண்பதாயிரம் கிங்கரர்கள்,
பெரும் வேகத்துடனே, கூடம், முத்கரம் முதலிய ஆயுதங்களைத் தாங்கியபடி அந்த மாளிகையிலிருந்து
வெளியேறினார்கள்.
அந்த கிங்கரர்களுள், வயிறு பெருத்தவர்களும்,
பெரும் கோரைப் பற்களைக் கொண்டவர்களும், அச்சம் தரும் தோற்றம் கொண்டவர்களும், மிகவும்
பலம் வாய்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும்
போர் புரிய வேண்டும் என்ற உவகையும் அனுமனைப் பிடிக்க வேண்டும் என்ற துடிப்பும் இருந்தன.
அசோக வனத்தின் கோபுரத்தின் மேல் அவர்களை எதிர்நோக்கி
அமர்ந்திருந்த அந்த வானரரை, அந்த அரக்கர்கள் பெரும் வேகத்துடன், நெருப்பைச் சுற்றி
விட்டில் பூச்சிகள் சுழன்று பறப்பது போல, சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள்.
அவர்கள் விநோதமான கதாயுதங்களாலும், பொன்னால்
செய்யப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பரிகம் எனப்படும் ஆயுதங்களாலும், சூரியனைப் போலப் பிரகாசிக்கும்
அம்புகளாலும் வானர வீரரைத் தாக்கினார்கள்.
பிராஸம், தோமரம் ஆகியவற்றைக் கைகளில் கொண்ட அவர்கள்,
முத்கரங்கள், பட்டிசங்கள், சூலங்கள் முதலியவற்றைக் கைகளில் ஏந்திக்கொண்டு, அனுமனின்
எதிரில், பலத்துடன் அவரை வளைத்துக் கொண்டு நின்றார்கள்.
பெரும் மலையைப் போன்ற அனுமன், அளவற்ற பிரகாசத்துடன்,
தன் வாலினைத் தரையில் மோதி, பெருத்த சப்தம் ஒன்றை எழுப்பினார்.
வாயுபுத்ரனான அனுமன், மிகப்பெரிய வடிவம் எடுத்து,
வாலினை ஆட்டி, தோளைத் தட்டி அட்டஹாசம் செய்து, பெருத்த ஓசையை உண்டாக்கி, இலங்கை
நகரத்தையே அதிரும்படி செய்தார்.
அனுமன் தோள்களைத் தட்டியதால் எழுந்த பெரும் ஓசையானது,
இலங்கை நகரம் முழுவதும் எதிரொலித்ததால், அதைக் கேட்டு அச்சமுற்ற பறவைகள் ஆகாயத்திலிருந்து
கீழே விழுந்தன. அனுமன் பின் வருமாறு உரத்த குரலில் கூறினார்.
“கரை புரளும் வலிமை மிக்க இராமனுக்கும், பெரும்
பலசாலியான இலக்குமணனுக்கும் வெற்றி உண்டாகட்டும்.
இராகவனால் பாதுகாக்கப்படும் ராஜா சுக்ரீவனுக்கும் வெற்றி உண்டாகட்டும்.”
“நான் அனுமன்! வாயுவின் புதல்வனாகிய நான் பகைவர்களின்
சேனைகளைச் சின்னாபின்னமாக்கும் வல்லமை கொண்டவன்! எவ்விதத் துன்பமுமின்றி செயல் முடிக்கும்
திறமை கொண்ட கோசல அரசனாகிய இராமனின் அடியவன் நான்!”
“ஆயிரக் கணக்கான விதத்தில் கற்களைக் கொண்டும்,
மரங்களைக் கொண்டும் போர்க்களத்தில் போரிடும் என் முன்னே, ஆயிரம் இராவணர்களாக இருந்தாலும், எனக்குச் சமமாக மாட்டார்கள்.”
“இந்த இலங்கை மாநகரத்தையே கதி கலங்கச் செய்து,
மிதிலை குமாரியான மைதிலியின் ஆசியுடனே, எல்லா அரக்கர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே திரும்பிச் செல்வேன்.”
அனுமனின்
பெரிய ஓசையினால் அரக்கர்கள் குலை நடுங்கிப் போனார்கள். அனுமனை அவர்கள் பார்க்கும் போது,
அவர் மாலை நேரத்து மேகம் போலச் சிவந்து, வானளாவ உயர்ந்து காணப்பட்டார்.
பின்னர் அந்த அரக்கர்கள், தங்கள் அரசனின் ஆணையால்
தைரியம் கொண்டு, பலவிதமான பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு, அனுமனைச் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள்.
பெருஞ்சூரர்களான அரக்கர்களால் சுற்றி வளைக்கப்பட்ட
மகா பலசாலியான அனுமன், தான் அமர்ந்திருந்த தோரண வாயிலில் இருந்த இரும்பாலான உத்திரத்தைக்
கையில் எடுத்தார்.
அந்த உத்திரத்தைக் கையில் எடுத்துச் சுழற்றியே
அந்த அரக்கர்களைக் கொன்றார். பாம்பைக் கொத்திக்
கொண்டு, ஆகாயத்தில் உயர எழும்பும் கருடனைப் போல. அவர் அந்த்த தடியைத் தாங்கிக்கொண்டே
வானத்தில் பறந்து திரிந்தார். ஆயிரம் கண் கொண்ட
இந்திரன் வஜ்ராயுதம் கொண்டு பகைவர்களை அழித்தது போல எல்லா அரக்கர்களையும் கொன்றழித்தார்.
வீரனான வாயுபுத்ர அனுமன், கிங்கரர்கள் எனப்படும் அரக்கர்களைக் கொன்று விட்டு, மேலும் போரிட விரும்பியவராய்,
மீண்டும் அந்தத் தோரண வாயிலின் கோபுரத்தைச் சென்றடைந்தார்.
பயத்திலிருந்து சிறிது தெளிந்த அரக்கர்கள் சிலர்,
இராவணனிடம் சென்று கிங்கரர்கள் அனைவரும் மாண்டுவிட்டதாகத் தெரிவித்தனர்.
கிங்கரர்களின் பெருஞ்சேனை அழிவுற்றதைக் கேட்ட
அரக்கர்களின் அரசன், கண்களையுருட்டி விழித்து, நிகரற்ற ஆண்மையும், போரில் எவராலும்
வெல்ல முடியாதவனுமான பிரஹஸ்தனின் மகனை அனுமனுடன் போரிட ஆணையிட்டான்.
நாற்பத்திரண்டாவது
ஸர்கம் நிறைவு.



No comments:
Post a Comment