Friday, November 24, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் நாற்பத்தொன்றாவது ஸர்கம்.

 

                                           ஸ்ரீ வால்மீகி ராமாயணம்                          சுந்தர காண்டம்            நாற்பத்தொன்றாவது ஸர்கம்.



     சீதையினால் புகழப்பட்டும், வாழ்த்தப்பட்டும் பெருமையுற்றவரான அந்த வானரமான அனுமன், அங்கிருந்து புறப்படத் தலைப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகன்று சிந்திக்கத் தொடங்கினார்.

     “கருமையான விழிகளையுடைய சீதையைக் காணும் காரியம் நிறைவேறிவிட்டது. இருந்தாலும் ஏதோ ஒரு செயல் செய்ய எஞ்சியுள்ளதாய்த் தோன்றுகிறது.  அதனைச் செய்வதற்கு, ஸாம, தான, பேதமென்ற மூன்று வழிமுறைகளைத் தவிர்த்து, நான்காவது வழியான தண்டத்தையே செயல்படுத்த வேண்டுமென்று தோன்றுகிறது.”

     “இவர்கள் அரக்கர்கள் ஆனதால் ஸாமம் (அறிவுரை வழங்குதல்) ஏற்றதன்று.  இந்த அரக்கர்கள் செல்வச் செழிப்பில் மிதப்பதால், தானமும் (பொருள் வழங்குதல்) ஏற்றதாகாது.  இவர்கள் வலிமையிலும் விஞ்சியிருப்பதால் பேதமும் (அச்சுறுத்துதல்) பயன் தராது.  ஆகவே, நான்காவது வழியான தண்டத்தையே (தாக்குதல்) உபயோகிக்க வேண்டும்.”

     “ஆகவே, எஞ்சியுள்ள செயலைச் செய்ய ஆற்றலைக் காட்டுவது ஒன்றே வழியாகும்.  வேறு எந்த வழிமுறையும் பயன் தராது.  இங்கு நடக்க இருக்கும் போரில், முக்கியமான அரக்கர்கள் கொல்லப்பட்டால், இந்த அரக்கர்கள் அச்சமடைந்து, பணிந்து நடப்பார்கள்.”

     “ஒரு செயலைச் செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒருவன், தான் மேற்கொண்ட செயலுக்கு ஒரு தீங்கும் நேரா வண்ணம் , இன்னும் பல செயல்களைச் செய்ய வல்லவனாய் இருந்தால், அவனே அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதில் வல்லவனாய் விளங்குவான்.”

     “இந்த உலகத்தில், மிகவும் அற்பமான செயலைச் செய்வதற்குக் கூட ஒரே வழிமுறை உபயோகப் படாது.  ஆகவே, எவன் ஒருவன், தான் செய்து முடிக்க வேண்டிய செயலைப் பல வழிமுறைகளில் செய்து முடிக்கும் வழி அறிகிறானோ, அவனால்தான் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்க முடியும்.”

     “நான் இங்கிருந்து செல்லுமுன்பே, பகைவர்களின் போர்முறைகளை நமது போர் முறைகளுடன் ஒப்பிட்டு அறிந்து கொண்டு எனது அரசனான சுக்ரீவனிடம் சென்றால் மட்டுமே, எனது அரசன் இட்ட கட்டளையை முழுவதுமாக நிறைவேற்றியவன் ஆவேன்.”

       “நான் இங்கு வந்து சென்றது மிகவும் எளிதான செயலாக ஆகிவிட்டால், அரக்கர்களுடன் எவ்விதம் வலுவில் போர் உண்டாகும்?  அவ்விதம் போர் நடந்தால் மட்டுமே, என்னுடைய வலிமைக்கு முன்னே, தசமுக இராவணன் தன் வலிமையைக் காட்டத் துணிவான்.”

     “அவ்வாறு போர் நடைபெற்றால், அமைச்சர்கள் மற்றும் சேனைத்தலைவர்கள் புடைசூழ வரும் தசமுக இராவணனின் வலிமையையும், அவன் மனதில் இருக்கும் எண்ணங்களையும் நான் நேரில் அறிந்து கொண்டு, மகிழ்வுடன் இங்கிருந்து திரும்பிச் செல்ல முடியும்.”

     “கொடியவனான இராவணனின் இந்த நந்தவனம் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் பலவகையான மரம், செடி, கொடிகளைக் கொண்டு மிகவும் சிறப்பாக உள்ளது.”

     “எவ்விதம் உலர்ந்த காடுகள் நெருப்பினால் எரிந்து சாம்பல் ஆகின்றனவோ, அது போல இந்த வனத்தை நான் அழித்து விடுகிறேன்.  இந்த வனத்திற்குத் தீங்கு உண்டானால், தசமுக இராவணன் சினம் கொள்வான்.”

     “அப்பொழுதுதான், அரக்கர்களின் அரசன், குதிரைகள், யானைகள், பெருந்தேர்களுடன் கூடியதும், திரிசூலம், காலாயஸம் மற்றும் பட்டிஸம் போன்ற ஆயுதங்களைக் கொண்டதுவுமான பெரிய சேனையை அனுப்பி வைப்பான்.  அதனால், அது பெரும் போராக உண்டாகும்.”

     “தடுக்க முடியாத பெருஞ்சக்தி கொண்ட நான், பெரும் உக்கிரம் கொண்ட அரக்கர்களுடன் போர் புரிந்து, இராவணனால் அனுப்பி வைக்கப்பட்ட அந்தப் படை முழுவதையும் அழித்த பின், மகிழ்வுடன் வானர ராஜ்ஜியமான கிஷ்கிந்தையைச் சென்றடைவேன்.”

      இவ்விதம் யோசித்த பேராற்றல் மிக்க மாருதி, கடுஞ்சினம் கொண்ட காற்றைப் போல, பெரும் வேகத்தில், தன் தொடையைக் கொண்டு பெரும் மரங்களை முறித்தெறியத் தொடங்கினார்.


     வீர அனுமன் இவ்விதமாக, நல்ல செழிப்புடன் இருக்கும் பறவைக் கூட்டங்கள் வசித்து வரும், பலவிதமான மரம், செடி, கொடிகளைக் கொண்ட அந்த நந்தவனத்தை அழிக்கத் தொடங்கினார்.   

      முறிந்து விழுந்திருக்கும் மரங்களாலும், கரைகள் உடைத்தெறியப்பட்ட நீர் நிலைகளாலும், உடைத்து நொறுக்கப்பட்ட மலைச் சிகரங்களாலும் அந்த வனமானது காணச் சகிக்க முடியாததாய் மாறிவிட்டது.

     எண்ணிலடங்காப் பறவைகளின் கூக்குரல்களாலும், கரையழிக்கப்பட்ட நீரோடைகளாலும், வாடி வதங்கிய செம்மையான துளிர்களாலும், முறிந்து விழுந்து வாடிக் கிடந்த மரஞ்செடிகளாலும் அந்த வனமானது காட்டுத்தீயால் பற்றியெறிந்து நாசமானது போலப் பொலிவிழந்து காணப்பட்டது.  வேலிகள் அழிந்ததால், பரிதவித்த கொடிகள், பயத்தால் நடுங்கும் பெண்கள் போலத் துடித்தன.

     அழகிய கொடிகள் கொண்ட வீடுகள் தகர்க்கப்பட்டும், ஓவியக் கூடங்கள் அழிக்கப்பட்டும், பாம்புகள் நசுக்கப்பட்டும், பலவிதமான கொடிய மிருகங்கள் விரட்டியடிக்கப்பட்டும், கல் மண்டபங்கள் வீழ்த்தப்பட்டும் அந்த வனமானது அலங்கோலமாகக் காட்சியளித்தது.

      அந்த வனத்தில், இராவணனின் அந்தப்புர மகளிர் விளையாடி மகிழ்வதற்காக, கலையாமல் படர்ந்திருந்த அசோகக் கொடிகள் நிரம்பிய அழகிய சோலையும் வானரத்தில் ஆற்றலினால் அழகிழந்து, சோகக் கொடிகளடர்ந்த  சோலையாயிற்று.

     பெரும் ஆணவம் கொண்டவனும், பெருஞ்செல்வம் கொண்ட பிரபுவுமான இராவணனின் மனதிற்குப் பிடிக்காத காரியத்தை இவ்விதமாகச் செய்துவிட்டு, இங்குமங்கும் ஓடித் திரிந்த அந்த வானரமான அனுமன், தன்னுடைய பெரும் ஆற்றலினால், தனியொருவனாக, வலிமை மிக்கப் பலருடன் போர் புரியும் எண்ணம் மிகுந்து, வீரப் பொலிவுடன், கோட்டை வாயிலில் அமர்ந்து விட்டார்.

 

                  நாற்பத்தொன்றாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...