ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
ஐம்பத்திரண்டாவது ஸர்கம்.
கோபத்தில் தன்னிலை
மறந்த இராவணன், அரக்கர்களிடம் அந்த வானரரைக் கொன்றுவிடும்படி பணித்தான்.
தூதனாக வந்து, சொல்லப் பணிக்கப்பட்ட வார்த்தைகளைச்
சொல்ல வந்த அவருக்கு (அனுமனுக்கு), நல்லிதயமற்ற இராவணனால் விதிக்கப்பட்ட மரணதண்டனை
சரியல்ல என்று விபீஷணன் (இராவணனின் தம்பி) எண்ணினார்.
ஒருவன் செய்யத்தக்க செயல்முறைகளின் நெறிமுறைகளை நன்கு
உணர்ந்திருந்த அவர் (விபீஷணன்), அரக்க அரசனான இராவணன், மிகுந்த கோபத்தில் இருப்பதையும்,
தூதுவனைக் கொல்லும் செயலில் விரைவாக முனைந்திருப்பதையும் கண்டு, செய்ய வேண்டிய செயல்
பற்றி சிந்திக்கலானார்.
பகைவர்களை வெல்லும் வல்லமை கொண்டவரும், நல்ல பேச்சாற்றல்
மிக்கவரும், அடுத்து செய்ய வேண்டிய செயலை முடிவு செய்து கொண்டவருமான விபீஷணன், தன்
அண்ணனுக்கு மிகவும் பணிவுடன் மரியாதைகள் செய்து, பிரியமான வார்த்தைகளைச் சொல்லலானார்.
“ராக்ஷஸேந்திரரே! சினத்தை விட்டுவிட்டுத், தெளிந்த
மனதுடன் பொறுத்தருளுங்கள்! நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். எல்லா நெறிமுறைகளையும்
நன்கு அறிந்த புவிச்சக்ரவர்த்திகள் எவரும் தூதுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில்லை!”
“வீரரே! இந்தக் குரங்கிற்கு மரண தண்டனை விதிப்பது,
அரச நெறிமுறைகளுக்கு எதிரானது. உலக நடைமுறைக்கு உகந்ததாகவும் இல்லை. இது தங்களுக்கு
ஏற்புடைய செயலுமல்ல!”
“தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவர் தாங்கள்தான். நீங்கள்
கருணை மிக்கவர். அரசியல் தந்திரமும், அரச நீதியையும் அறிந்தவர். உலக நியதிகளை நன்கு
அறிந்தவர். அனைத்துவித ஞானங்களையும் பெற்றவர்.”
“உம்மைப் போன்ற பேரறிஞர்கள் கூட , சினத்தில் திளைப்பதால்,
இவ்வளவு அறிவினால் கிடைக்கும் பலன்கள் வீணானதாக ஆகிவிடும்.”
“எவரும் எதிர்க்க முடியாதவரும், பகைவர்களை கொன்றழிக்க
வல்லவருமான ராக்ஷஸ மன்னரே! ஆகவே தாங்கள் அமைதி அடையுங்கள். எது சரியென நிச்சயித்து,
தூதுவனுக்கு உரிய தண்டனை வழங்கப்படட்டும்.”
ராக்ஷஸர்களின் அரசனான இராவணன், விபீஷணனின் வார்த்தைகளைக்
கேட்டு பெருங்கோபம் கொண்டு இவ்விதம் சொல்லலானான்.
“எதிரிகளை வெல்பவனே! கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை
விதிப்பது பாவச் செயலாகாது. ஆகவே, கொடுஞ்செயல்களைச் செய்யக் கூடிய இந்த வானரத்தைக்
கொல்லப் போகின்றேன்.”
அறமற்றதும், குறைகள் நிரம்பியதும், பண்பில்லாதவர்களுக்குமானதுமான
வார்த்தைகளைக் கேட்ட, பண்பில் உயர்ந்த விபீஷணன், சிறந்த கடமைகளுக்கான அறவழிகளைப் பற்றிச்
சொல்லலானார்.
“இலங்கைக்கு அதிபதியே! அரக்கர்குலத் தலைவரே! சினத்தைத்
தவிருங்கள்! அறவழியில் சொல்லப்பட்டுள்ள நல்ல வார்த்தைகளைக் கேளுங்கள். அரசே! தூதர்கள்
கொல்லத் தக்கவர்கள் அல்ல என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.”
“இவன் (அனுமன்) பெரும் கொடுமை வாய்ந்த எதிரி என்பதில்
ஐயம் எதுவுமில்லை. இவனால் அளப்பரிய இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. தூதனுக்கான பலவித தண்டனைகளை
அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். ஆனாலும், தூதனைக் கொல்லலாம் என்று எங்கும் சொல்லப்படவில்லை.”
“உருவத்தைச் சேதப்படுத்துதல் கசையால் அடித்தல், மொட்டையடித்தல்,
அங்கங்களில் பச்சை முதலிய குறிகள் இட்டு சுட்டுவிடுதல் போன்றவையே தூதனுக்கான தண்டனை
என்று விதிக்கப்பட்டுள்ளது. தூதனுக்கு மரணதண்டனை என்பது கேள்விப்படாத ஒன்றாகும்.”
“அறவழிகளில் தெளிந்த அறிவுடன்,
நடைமுறைக்கு ஏற்றவற்றையும் நன்கறிந்த தங்களைப் போன்றவர்கள்
சினம் கொள்ளக் கூடாது. நீதி வழுவாதவர்கள் சினத்தை அடக்குகிறார்கள் அல்லவா?”
“வீரரே! அனைத்து தேவ, அசுர குலத்தில் உமக்கு இணையாக
அறத்தைப் போதிப்பவர் இல்லை. நடைமுறை வாழ்க்கைத் தத்துவங்களை அறிந்தவரும் இல்லை. நீதி
நூட்களைக் கண்டு தெளிந்து உணர்ந்தோரும் இல்லை. நீர் ஒருவரே அனைவரிலும் மேலானவர்.”
“ஆற்றலும் உற்சாகமும் மிக்க தேவ, அசுரர்களால் உங்களை
வெல்ல முடியாது. தாங்கள் அளப்பரிய ஆற்றல் மிக்கவர். பல போர்களில் தேவர்களின் தலைவனையும்,
பல மன்னர்களையும் தோற்கடித்துள்ளீர்கள்”. *
“தேவர்கள் முதலானோரிடம் பகைமை கொண்டவரும், யாராலும்
வெல்லமுடியாதவருமான உங்களை வெல்ல வேண்டுமென்று மனதால் கூட யாராலும் நினைக்க முடியாது.
(உங்களுக்கு எதிரே) யாராவது தலையை உயர்த்தினாலும் அவர்களுக்கு உடனே மரணம் நிச்சயம்!”
*
*மேலிரண்டும் கீதா பிரஸ் பதிப்பில் உள்ள ஸ்லோகங்கள்.
“இந்த வானரத்திற்கு மரண தண்டனை விதிப்பதில் எந்த
வித சிறப்பையும் நான் காணவில்லை. இந்த வானரத்தை அனுப்பியவர்களே அந்தத் தண்டனைக்கு ஏற்றவர்கள்.”
“இவன் நல்லவனோ இல்லை கெட்டவனோ? ஆனால் பிறரால் கட்டளையிடப்பட்டு,
இங்கு சொல்லும்படி சொல்லப்பட்ட செய்திகளைச் சொன்னவன் ஆவான். ஆகவே, இவன் கொலைத் தண்டனைக்கு
ஏற்றவன் இல்லை!”
“அரசே! இவன் (அனுமன்) கொல்லப்பட்டு விட்டால், (நமது
பகைவர்களின் இடத்திலிருந்து) வானத்தில் பறந்து, கடலைக் கடந்து மீண்டும் இங்கு வரத்தக்க
வேறு எவரையும் நான் காணவில்லை. பகைவரின் கோட்டைகளை நாசம் செய்ய வல்லவரே! ஆகவே இந்தத்
தூதனைக் கொல்வதில் தாங்கள் ஈடுபட வேண்டாம். இந்திரன் முதலான தேவர்களே உங்கள் எதிர்ப்புக்கு
ஏற்றவர்கள்.”
“போர் புரிவதில் உற்சாகம் மிக்கவரே! இவன் (அனுமன்)
இறந்து விட்டால், உங்களுக்கு எதிராக வெகு தொலைவில் இருக்கும் அந்த மானிட மன்னரின் புதல்வர்களை,
(இங்கு) போருக்கு வரத் தூண்டக்கூடிய (திறமை மிக்க) தூதுவன் வேறு எவரையும் நான் காணவில்லை!”
“சிறந்த வானர வீரனான இவன் கொல்லப்பட்டால், பெரியோர்களின்
பழிச்சொல்லே மிஞ்சும். இந்தச் செயலில் ஒரு சிறப்பையோ, புகழையோ நான் காணவில்லை. எல்லோரும்
இகழும் பழிச்சொல் மட்டுமே கிடைக்கும்.”
“அரக்கர்களின் வேந்தே! இந்த வானரத்தை அனுப்பிய, அகம்பாவத்துடன்
புத்தியிழந்து, கொடிய வழியில் செல்லும் அந்த மனிதர்களின் அழிவிற்கு வேண்டிய செயலை விரைவில்
செய்வீராக!”
“தேவேந்திரனின் எதிரியே! இந்திரன் உள்ளிட்ட அனைத்து
தேவர்களிடத்திலும், தானவர்கள் உள்ளிட்ட அனைத்து தைத்யர்களிடத்திலும், அறவழிப்படி அனுசரித்து,
இதற்கான முயற்சியைத் தொடங்குவீராக!”
“அரக்கர்களின் வேந்தே! என்னுடைய வார்த்தைகளை நன்றாக
ஆராய்ந்து , விரைவாகவும் சரியாகவும் உறுதியான முடிவை எடுத்து, அந்த அரசகுமாரர்கள் இருவரையும்
அழித்து, பெரும் வெற்றியை அடைவீராக!”
“அரக்கர்களின் மனங்களுக்கு உற்சாகம் அளிப்பவரே! தேவர்களாலும்,
மற்ற அசுரர்களாலும், பேராற்றலும் உற்சாகமும் மிக்க வேறு எவராலும் வெல்ல முடியாதவரான
நீங்கள், ஒரு போர் நடக்க இருப்பதைத் தடுத்து விடுவது சரியல்ல!”
“உமது அரசவையில், உங்கள் நலம் விரும்புவர்களும்,
சூரர்களும், நன்மை செய்பவர்களும், சிறந்த குலங்களில் தோன்றியவர்களும், உற்சாகம் மிக்கவர்களும்,
ஆயுதங்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றவர்களும், சிறந்த போர் வீரர்களுமாகக் கோடிக்கணக்கில்
உள்ளார்கள். ஆகவே, அந்த இரு அரச குமாரர்களைப் போரினில் அழித்து, பகைவர்களிடம் உமது
பெருமையை நிலைநாட்ட, உமது ஆணையை முடிக்கக்கூடியவர்களாய்
உள்ள சேனையின் ஒரு பகுதி இப்பொழுதே புறப்பட்டுச் செல்லட்டும்!”
பெரும் வீரனும், அரக்கர்களின் தலைவனும், தேவர்களின்
எதிரியுமான அரக்க வேந்தன், தன் தம்பியான விபீஷணனின் சிறந்த பேச்சினால் மனம் கவரப்பட்டான்.
“இது எனது அழிவிற்காக, வானர வடிவம் கொண்ட விஷ்ணுவின்
சக்தியேதான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் குரங்கானது, அனைத்திலும்
சிறந்த, தாங்க முடியாத, அனைத்து உலகங்களுக்கும் மூல விதையாக உள்ள, தேவாதிதேவரான
விஷ்ணுவின் சக்தி கொண்ட அந்த பரஞ்சோதிதானோ? பரப்பிரம்மம் தானோ? “என்று
பலவாறாகச் சிந்தித்த அரக்க வேந்தன், இது பற்றி நினைத்து நினைத்து,மிகுந்த சினத்தில்
இருந்தான்.
பேராற்றல் கொண்ட அரக்க வேந்தன், தனக்கு உண்டான கோபத்தை
மனதினுள் அடக்கிக் கொண்டவனாய், சிறந்த ஆயுதம் தரித்தவரான விபீஷணனையும், அவரால் சொல்லப்பட்ட
வார்த்தைகளையும் மதித்து இவ்விதம் பேசலானான்.
ஐம்பத்திரண்டாவது ஸர்கம் நிறைவு.


No comments:
Post a Comment