ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்
நாற்பத்தாறாவது ஸர்கம்.
மஹான் அனுமனால் மந்திரி குமாரர்கள் கொல்லப்பட்டதை
அறிந்து கொண்ட இராவணன், தனக்குண்டான கவலையை வெளியே
காட்டிக் கொள்ளாமல், அடுத்தென்ன செய்வது என்பதை மனதினில் நிச்சயித்துக் கொண்டான்.
பெரும் வீரர்களும் , போர் யுக்திகளில் வல்லவர்களும்,
காற்றின் வேகத்தின் போர் புரியும் ஆற்றல் மிக்கவர்களுமான, விரூபாக்ஷன், யூபாக்ஷன்,
துர்த்தரன், பிரகசன், பாஸகர்ணன் எனப்படும் ஐந்து சேனைத் தலைவர்களிடம், பத்துத் தலைகளைக்
கொண்ட இராவணன், அனுமனைப் பிடித்துக் கொண்டு வர, பின்வருமாறு ஆணையிட்டான்.
“சேனாதிபதிகளே! நீங்கள் அனைவரும் குதிரைகள், யானைகள்,
தேர்கள் கொண்ட பெரும் படையுடன் சென்று, அந்த வானரத்திற்குத் தக்க பாடம் புகட்டுங்கள்.”
“அந்த வானரத்தை நெருங்கும் போது, உங்களது நல்ல முயற்சி,
மிகவும் எச்சரிக்கையுடன் கூடியதாக இருக்க வேண்டும். உங்கள் செயல்கள் காலத்திற்கேற்றவாறு
இருத்தல் அவசியம்!”
“நடந்த செயல்களை ஆராய்ந்து பார்க்கும் நான் அந்த வானரத்தைச் சாதாரணமானதாகக் கருதவில்லை.
எப்படியிருந்தாலும், அது அளவற்ற சக்தி கொண்ட பெரும் பூதமாக இருக்கக் கூடும்.”
“அதை வெறும் வானரமாக என் மனம் நினைக்கவில்லை. நடந்த
செயல்களைக் கேள்வியுறும் நான், அதை வெறும் வானரமாக ஏற்கவில்லை.”
“நம்முடைய அழிவிற்காக இந்திரன் தன் வலிமையால் இதனைப்
படைத்திருக்கலாம். நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், அசுரர்கள், பெரும்
தவ முனிவர்கள் ஆகிய அனைவரும் என்னால் வெல்லப்பட்ட போது, நீங்கள் அனைவரும் என் கூடவே
இருந்துள்ளீர்கள். ஆகவே, அவர்கள் நமக்கெதிரான செயல்கள் புரிவது நிச்சயமே. ஆகவே எந்த
ஐயமும் இல்லாததால், அதனை நீங்கள் நிச்சயம் பிடிக்க வேண்டும்.”
“மிகுந்த பராக்ரமம் மிக்க அதனைச் சாதாரண வானரமென்று
அவமதிக்க வேண்டாம். நான் முன்னமே, பராக்ரமம் கொண்ட வானரர்களையும், கரடிகளையும் பார்த்துள்ளேன்.”
“சுக்ரீவனோடு வாலி, மகா பலசாலியான ஜாம்பவான், சேனாதிபதியான
நீலன், மற்றும் திவிதன் முதலானோர் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இப்படிப்பட்ட பயங்கரமான
வேகமும், பேரொளியும், பராக்ரமும் கிடையாது. இவ்வளவு அறிவுக் கூர்மையும், உற்சாகம் கொப்புளிக்கும்
பலமும் அவர்களிடம் இருந்ததில்லை. மேலும் நினைத்தபடி வடிவம் எடுக்க வல்ல ஆற்றலும் அவர்களிடம்
இல்லை.”
“வானர வடிவில் இருக்கும் இதை ஒரு மகத்தான பூதமென்று
அறிய வேண்டும். ஆகவே பெரு முயற்சி எடுத்து இதை அடக்கியே தீர வேண்டும்.”
“இந்திரனோடு கூடிய தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள்
வாழக்கூடிய மூன்று உலகத்திலுமே, உங்களைப் போர்க்களத்தில்
எதிர்த்து நிற்கும் திறமையுள்ளவர் எவருமில்லை.”
“இருந்த போதிலும், போர்க்களத்தில் வெற்றியை விரும்பும்
தந்திரமிக்கவனாயினும், தகுந்த முயற்சியோடு தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால்
போர்க்களத்தில், வெற்றியென்பது நிச்சயமற்றது.”
நெருப்பின் ஜ்வாலைக்கு ஒப்பாக ஒளி வீசக் கூடிய, பெரும்
வேகமும் பலமும் கொண்ட அந்த அரக்கர்கள், தங்கள் அரசனின் ஆணையை ஏற்றுக்கொண்டு, வேகத்துடன்
செல்லக் கூடிய குதிரைகள், மதங்கொண்ட யானைகள், மற்றும் பெரிய பெரிய தேர்கள் அடங்கிய
பெரும் சேனையுடன் புறப்பட்டார்கள். அவர்களிடம் மிகவும் கூர்மையான ஆயுதங்களும், பெரும்
படையும் இருந்தன.
தனது ஒளிக் கிரணங்களுடன் உதிக்கின்ற சூரியனைப் போல,
ஜ்வலித்துக் கொண்டிருந்த அந்த பெரிய வானரத்தை அந்த வீரர்கள் கண்டார்கள்.
பெரும் உற்சாகம் கொண்டவரும், பெரும் மன உறுதியைக்
கொண்டவரும், பெரும் பலமும் சக்தியும் கொண்டவரும், பெரும் திறமை மிக்கவரும், பெரும்
வடிவமும் கொண்டிருப்பவருமான, பேரறிவு படைத்த அவரைத் தோரண வாயிலில் கண்ட அவர்கள், உடனே,
எல்லாத் திசைகளிலும் நின்று கொண்டு, அந்தந்த ஆயுதங்களால், அந்தந்த இடத்திலிருந்து தாக்கத்
தொடங்கினார்கள்.
மிகவும் கொடியதும், கூர்மையானதும், கருநெய்தல் போன்று
கரிய நிறமுள்ளதும், சிவந்த நுனிகளையுடையதுமான இரும்பால் செய்யப்பட்ட ஐந்து அம்புகளை,
அனுமனின் தலையைப் பார்த்து, துர்த்தரன் எய்தான்.
அந்த ஐந்து அம்புகளும் தலையில் தாக்கியதும், அந்த
வானரர், பத்துத் திக்குகளும் அஞ்சி நடுங்கும்படி கர்ஜித்துக் கொண்டு, ஆகாயத்தில் சீறிப்
பாய்ந்தார்.
அப்பொழுது தேரினில் இருந்தவாறே, பெரும் வீரனும்,
பராக்ரமம் மிக்கவனுமான துர்த்தரன், வில்லில் நாணேற்றி, கணக்கற்ற கூர்மையான அம்புகளால்
அனுமனைத் தாக்கினான்.
மழைக்கால இறுதியில் மழை பொழியும் மேகங்களைக் காற்று
கலைத்து விடுவதைப் போல, அந்த வானரர் ஆகாயத்தில் தன் மீது அம்புகளைத் தொடுக்கும் துர்த்தரனைத்
தடுத்து விட்டார்.
துர்த்தரனின் அம்புகளால் தாக்கப்பட்ட, சாமர்த்தியம்
மிக்க வாயுகுமாரர், இன்னும் பெரிய வடிவம் கொண்டு, மிகப் பெரிய கர்ஜனை செய்தார்.
பெரும் ஆற்றல் கொண்ட அந்த வானரர், ஆகாயத்தில் வெகு
உயரம் எழும்பி, பெரும் வேகத்துடன், மலையின் மீது இடி விழுவது போல, அந்த துர்த்தரனின்
தேரின் மீது குதித்தார்.
அதனால் தேரில் இருந்த எட்டுக் குதிரைகளும் தலை நசுங்கி
இறந்து விழ, தேர்க்காலும், அச்சும் முறிந்த அந்தத் தேரிலிருந்து துர்த்தரன் உயிரற்று
தரையில் வந்து விழுந்தான்.
தரையில் இறந்து கிடந்த துர்த்தரனைப் பார்த்த, பகைவர்களை
அழிக்கும் வல்லமை மிக்கவர்களும், யாராலும் அசைத்துப் பார்க்க முடியாதவர்களுமான விருபாக்ஷன்,
யூபாக்ஷன் இருவரும் கடுங்கோபம் கொண்டு, விண்ணில் உயரக் கிளம்பினார்கள்.
உயரக் கிளம்பிய அந்த இரண்டு பேர்களாலும், தெளிந்த
ஆகாயத்தில் நிலைபெற்றிருந்த அனுமன், சம்மட்டிகளால், தன் மார்பில் தாக்கப்பட்டார்.
மகா பலசாலியும், கருடனுக்கு நிகரான ஆற்றல் மிக்கவருமான
அவர், ஆத்திரத்துடன் தாக்கிய அவ்விருவருடைய வேகத்தை மட்டுப் படுத்தி, மீண்டும் தரையில்
வந்து இறங்கினார்.
அங்கிருந்த சாலமரமொன்றைப் பிடுங்கிய வாயுபுத்ரனான
வானரர், அந்த இரண்டு அரக்க வீரர்களையும் அதனால் அடித்துக் கொன்றார்.
ஆகவே, பலம் வாய்ந்த வானரத்தால், துர்த்தரன், விருபாக்ஷன்,
யூபாக்ஷன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டதை அறிந்த ப்ரகஸன் என்ற பலம் மிக்க
வீர அரக்கன், மிகுந்த வேகத்தோடு அந்த வானரத்தைத் தாக்கினான்.
பாசகர்ணன் என்னும் இன்னுமொரு பெரும் வீரன், பெருங்கோபம்
கொண்டு, கையில் சூலாயுதத்துடன் இன்னொரு புறத்திலிருந்து தாக்கினான்.
ப்ரகஸன் என்பவன் கூரிய முனையுள்ள பட்டிஸம் என்னும்
ஆயுதத்தால் வானர வீரரைக் குத்தினான். பாசகர்ணன் தனது சூலாயுதத்தால் அவரைக் குத்தினான்.
அந்த இருவராலும் அவரது உடலில் ஏற்பட்ட காயங்களால் வழிந்த இரத்தத்தால் அவருடைய
உடலில் இருந்த உரோமங்கள் நனைந்து வழிந்தன. பெருங்கோபம் கொண்டிருந்த அவர், இளஞ்சூரியனைப்
போல ஒளியுடன் விளங்கினார்.
சிறந்த வாரனரான அனுமன், மிருகங்களும், மலைப் பாம்புகளும்,
அடர்ந்த மரங்களும் நிறைந்த ஒரு மலையின் சிகரத்தை முறித்து, அதனால் அந்த இருவரையும்
தாக்கிக் கொன்றார். ஐந்து சேனாதிபதிகளும் கொல்லப்பட்ட பின், வானரரான அனுமன், மிகுந்திருந்த
சேனை முழுவதையும் அழித்தார்.
இந்திரன் அசுரர் சேனையை அழித்தது போல, அந்த வானரர்
குதிரைகளைக் குதிரைகளாலும், யானைகளை யானைகளாலும், படை வீரர்களைப் படை வீரர்களாலும்,
தேர்களை மற்ற தேர்களாலும் தாக்கி அழித்தார்.
இறந்து விழுந்து கிடந்த யானைகளாலும், எண்ணற்ற குதிரைகளாலும்,
சிதறுண்டு கிடந்த தேர்களாலும், எங்கும் இறந்து கிடந்த அரக்கர்களில் உடல்களாலும் அந்த
யுத்த பூமி சிறிது கூட இடைவெளி இல்லாது நிறைந்து கிடந்தது.
நடந்த போரில், அந்த ஐந்து சேனாதிபதிகளைப் படைவீரர்களோடும்,
அவர்களது வாகனங்களோடும் கொன்ற அந்த வானர வீரர், மீண்டும் அந்த வாயிலின் அருகே சென்று
காத்திருந்தார். அவரைக் காணும் போது, மனிதர்களை மாய்க்கும் யமதேவன் காத்திருப்பது போலத்
தோன்றியது.
நாற்பத்தாறாவது ஸர்கம் நிறைவு.



No comments:
Post a Comment