Friday, December 15, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். நாற்பத்தெட்டாவது ஸர்கம்.

 

                          ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

                                     சுந்தர காண்டம்

                         நாற்பத்தெட்டாவது ஸர்கம்.





 தன்னுடைய குமாரனான அக்ஷன், அனுமனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த, பெரும் புகழுடைய அரக்கர் குல அரசன், தன் மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டான். இந்திரனுக்கு ஒப்பான ஆற்றல் மிக்கவனும், எப்பொழுதும் ஆத்திரம் மிகுந்து இருப்பவனுமான இந்திரஜித்திடம் இவ்வாறு கூறலானான்.

 “நீ சகலவிதமான அஸ்திர வித்தைகளைக் கற்றவன். ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தலை சிறந்தவன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இன்னல் விளைவிப்பதில் தேர்ந்தவன். இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடையே அவர்கள் வியப்படையும் வண்ணம் செயல் புரிய வல்லவன். பிரம்மாவைப் பணிந்து அவரிடமிருந்து பல அஸ்திரங்களைப் பெற்றவன்.”

 “போரில் உன்னுடைய ஆயுதங்களை எதிர்த்து நிற்க, அசுரர்களாலும் முடியாது. தேவ கணங்களாலும் இயலாது. இந்திரனைத் துணையாகக் கொண்ட தேவர்களாலும் முடியாது.”

 “மூன்று உலகங்களிலும் உன்னுடன் போரிட்டுக் களைத்துப் போகாதவன் இருக்க முடியாது. நீயோ தவ வலிமையால் முற்றிலும் பாதுகாப்பைப் பெற்றவன். அன்றியும் வலிமை மிக்க தோள்களைக் கொண்டவன். தேச காலங்களை அனுசரித்து நடக்கும் நுண்ணறிவு உள்ளவன்.”

 “போர்க் களத்தில் உனது முயற்சியால் முடிக்க இயலாத செயல் ஒன்றும் இல்லை. நன்கு சிந்தித்து நோக்கினாலும் உன்னால் செய்ய இயலாத செயல் என்று ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. உன்னுடைய அஸ்திரங்களின் சக்தியையும் உன்னுடைய வலிமையையும் அறியாத எவனும் மூவுலகிலும் இல்லை.”

 “உனது தவத்தின் வலிமையும், போர்க்களத்தில் உன்னுடைய ஆற்றலும், போரில் உன்னுடைய அஸ்திரங்களின் பெருமையும் எனக்கு ஈடானவையாகும். போர்க்களத்தில் உறுதியான வெற்றியைப் பெறும் உன்னைப் பெற்றதனால், என் மனதில் சற்றும் கவலையில்லை.”

 “கிங்கரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். ஜம்புமாலி என்னும் ராக்ஷஸனும், வீரர்களான மந்திரிகுமாரர்களும் , ஐந்து சேனாதிபதிகளின் குமாரர்களும் கொல்லப்பட்டு விட்டனர். குதிரைகள், யானைகள், தேர்களோடு கூடிய பெரும் சேனைகளும் அழிக்கப் பட்டன. உனது அன்பிற்குரிய சகோதரனான அக்ஷனும் கொல்லப்பட்டான். எதிரிகளை அழிக்க வல்லவனே! உன்னிடத்தில் உள்ளது போன்ற சக்தி அவர்களிடத்தில் இல்லை.”

 “அறிவிற் சிறந்தவனே! அந்த வானரத்தின் இவ்வாறான பெரும் வலிமையையும், செயல் வேகத்தையும், ஆற்றலையும் நன்கு கண்டறிவாயாக! உனது திறமைகளை முழுவதுமாய்ச் செயல் படுத்தி, உன் வலிமைக்கேற்றவாறு நீ முயற்சிகளைச் செய்வாயாக!”

 ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றவனே! எதிரிகளை இல்லாது ஆக்கும் திறனுள்ள நீ, எவ்விதம் போரில் இறங்கினால், நமது சேனைகளின் அழிவைக் கட்டுப்படுத்த முடியுமோ, அவ்விதம் செயலாற்று. உனது வலிமையையும், எதிரியின் வலிமையையும் நன்றாகத் தெரிந்து கொண்டு செயலாற்று!”

 வீரனே! பெருஞ்சேனைகளைக் கூண்டோடு அழிக்க வல்ல இவனிடத்தில் படைகள் பயன்படாது. உபயோகப் படாத வஜ்ராயுதத்தையும் நம்பிச் செல்லாதே! காற்றைவிட வேகமாக இயங்க வல்ல அவன், நெருப்பிற்கு ஈடானவன். ஆகவே, கைகளாலும் கொல்ல முடியாதவன்.”

 “நீ செய்ய வேண்டிய செயலைப் பற்றி நன்றாக சிந்தித்துணர்ந்து, ஒருமித்த எண்ணத்துடன் மன உறுதி கொள்வாயாக! தேவர்களிடமிருந்து கற்ற அஸ்த்திர மந்திரங்களை நன்றாக நினைவிற் கொண்டு செல்வாயாக! உன் செயலானது தோல்வியைத் தழுவா வண்ணம் செயலைச் செய்து முடிப்பாயாக!”

 “நான் உன்னைப் போருக்கு அனுப்பும் இந்த முடிவு எனக்கு விருப்பம் இல்லாததுதான். ஆனால், இந்த முடிவு தான், ஒரு அரசனுக்கும் அவனது அரச தர்மத்திற்கும் ஏற்றது!”

 “எதிரிகளை அழிக்க வல்லவனே! பல சாஸ்திரங்களில் உனக்கு உள்ள நிபுணத்துவத்தை இந்தப் போரில் எவ்வாறேனும் நீ வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் எதிரியை அழித்து வெற்றி பெறுவது ஒன்றே போரில் விரும்பத்தக்கதாகும்.”

 தேவர்களுக்கு ஒப்பான ஆற்றலும், குறைவில்லாத வலிமையும் கொண்ட வீரனான அவன், தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டதும், போருக்குச் செல்வதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவனாய், தன் தந்தையை வலம் வந்தான்.

 அரசவையிலிருந்த தனக்குப் ப்ரியமானவர்களால் வாழ்த்துக்களைப் பெற்ற இந்த்ரஜித், போரைச் சந்திக்கும் அவசரத்துடனும், பெரும் உற்சாகத்துடனும் போருக்குக் கிளம்ப ஆயத்தமானான்.

 தாமரையிதழ் போன்ற கண்களை உடையவனும், பெரும் ஆற்றல் கொண்ட பெருமகனான அரசகுமாரன், பருவகாலக் கடல் போல பொங்கிப் பிரவாகமாய்ப் போருக்குக் கிளம்பினான். 

 இந்திரனுக்கு உவமையாகத் திகழும் இந்த்ரஜித், பறவைகளின் அரசனான கருடனின் வேகத்திற்கு இணையான வேகம் கொண்டவையும், வெண்மையான கூரிய கோரைப் பற்களைக் கொண்டவையுமான நான்கு புலிகளால் பூட்டப்பெற்றதும், தடையில்லாது எங்கும் செல்லத்தக்கதுமான தேரினுள் ஏறிக் கொண்டான்.

 


  ஆயுதக் கலைகளை நன்கு அறிந்து அவற்றில் நிபுணத்துவம் பெற்றவனும், வில்லாளிகளுள் மிகச் சிறந்தவனும், சிறந்த தோரோட்டியுமான அவன், அனுமன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

 அவனுடைய தேரின் ஓசையையும் வில்லின் நாணொலியையும் கேட்ட வானர வீரரான அனுமன், மேலும் மகிழ்ச்சி அடைந்தார்.

 போர் செய்வதில் நிபுணனான இந்த்ரஜித், வில்லையும், கூரிய முனைகளுடைய அம்புகளையும் எடுத்துக் கொண்டு அனுமனை நோக்கிச் சென்றான்.

 யுத்தம் செய்வதில் ஆனந்தம் கொள்ளக் கூடிய அவன், கைகளில் வில் அம்புகளுடன் போருக்குக் கிளம்பும் போது, எல்லாத் திசைகளும் கலக்க முற்றன. கொடிய மிருகங்கள் பலவிதமாகக் கூக்குரலிட்டன.

 இந்த சமயத்தில் அங்கே நாகர்களும், யக்ஷர்களும், பெரும் முனிவர்களும் ஆகாயத்தில் உலவும் சித்தர்களும் வந்து கூடினார்கள். பறவைக் கூட்டங்கள் பெருமகிழ்ச்சியுடன் ஆகாயத்தை மறைக்கும் அளவிற்கு ஒன்று கூடி உரத்த குரலில் கூச்சலிட்டன.

 தேரின் மீதேறி வேகமாய் வந்து கொண்டிருந்த இந்திரஜித்தை அனுமன் தன் கண் எதிரே கண்டதும் பேரொலியை எழுப்பினார். உடனே வேகமாகப் பரபரப்புடன் தன் உருவத்தைப் பெரிதாக்கினார்.

  சிறந்த தேரின் மீது இருந்த இந்த்ரஜித், நினைத்ததை முடிக்கவல்ல விசித்திரமான வில்லினைக் கையிலேந்தி, பேரிடி முழக்கம் போல ஓசையெழ, வில்லின் நாணை இழுத்து சப்தம் செய்தான்.

 போரினில் அச்சம் கொள்ளாத வானரரும், அந்த அரக்க அரசனின் மகனும், தேவர்களின் அரசனும், அரக்கர்களின் அரசனும் போல பெரும் எதிர்ப்பைக் காட்டியவர்களாய், கடும் ஆத்திரத்துடன் போரிட்டார்கள்.

 பல போர்களை வென்று பரிசுகள் பல பெற்றவனும், சிறந்த வில் வீரனும், தேரோட்டுவதில் வல்லவனுமான அந்த வீரன் எய்த அம்புகளை, அளவிட முடியாத ஆற்றல் கொண்ட அனுமன் வீணாகப் போகும்படி செய்த படியே, மேன்மேலும் பெரிய உருவம் கொண்டபடி, தன் தந்தை உலவும் ஆகாயத்தில் உலவினார்.

 எதிர்த்து வரும் பகைவர்களை அழிக்க வல்ல வீரனான அவன் (இந்த்ரஜித்) அப்பொழுது, நீண்ட கூரிய முனைகளைக் கொண்டவையும், நல்ல இறகுகளையும், பொன்னாலான முனைகளையும் கொண்டவையும், நன்கு இழைக்கப்பட்டவையும், இடிபோன்ற வேகத்துடன் இயங்கக் கூடியவையுமான அம்புகளை அனுமன் மீது எய்தான்.




 அவனுடைய தேர் எழுப்பிய ஓசையையும், மிருதங்கம், பேரிகை போன்ற இசைக் கருவிகள் எழுப்பிய ஓசைகளையும், நாணேற்றப்பட்டிருந்த அவனது வில்லின் ஓசையையும் செவியுற்ற அனுமன், இன்னும் மேலே துள்ளிப் பாய்ந்தார்.

 ஆகாயத்தில் மேலே சென்ற ஒப்பற்ற வானரரான அனுமன், குறி வைத்து இந்த்ரஜித் செலுத்திய குறி தப்பாத எல்லா அம்புகளையும் பயன்படாமற்போகச் செய்து, அம்புகளின் இடைவெளியில் பாய்ந்து சுற்றி வந்தார்.

 வாயுகுமாரனான அனுமன், அவனுடைய அம்புகளுக்கு இலக்காக நின்று கொண்டு, அம்பு தாக்கும் நொடியில், கைகளை விரித்துக் கொண்டு தப்பிப் பாய்ந்து விட்டார்.

 அதி விரைவாக போர் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற அவ்விருவரும், சகல பூதங்களின் மனங்களைக் கவரும்படி போர் புரிந்தார்கள்.

 அனுமனின் போர்த் தந்திரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. மிகவும் தைரியம் மிக்க இந்த்ரஜித்தின் போர்முறைகளின் இரகசியத்தை அனுமனும் அறிந்திருக்கவில்லை. தேவர்களுக்கு ஒப்பான ஆற்றல் மிக்க அவ்விருவரும் ஒருவருக்கொருவர் ஈடு இணையற்றவராய் இருந்தனர்.

 குறிதப்பாது அம்புகளை எய்யவல்ல சிறப்பு மிக்க அவன், தன் குறி நிலையாக இல்லாததால், வீணாகாத அவனது அம்புகள் குறி தவறி வீழவே, பெரும் கவலை கொண்டான்.

 அந்த வானரரைக் கொல்ல இயலாது என்பதை உணர்ந்து கொண்ட ராக்ஷஸ அரச குமாரன், அந்த வானர வீரரை எவ்விதம் மடக்கிப் பிடிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

 அஸ்த்திர வித்தைகளில் கை தேர்ந்தவனும், பேராற்றல் கொண்டவனுமான அந்த வீரன், அந்த வானர வீரரின் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவினான்.

 


 அஸ்த்திரங்களின் தன்மைகளை நன்கு அறிந்த பெரும் தோள்களைக் கொண்ட இந்திரஜித், “இவர் மரணமற்றவர்” என்பதை அறிந்து கொண்டு, வாயுகுமாரரான அவரை அந்த அஸ்திரத்தைக் கொண்டு கட்டி விட்டான்.

 அந்த அரக்கனால் அம்புகளால் கட்டப்பட்ட அந்த வானரர், அந்தக் கணமே கை கால்களை அசைக்க முடியாதபடி கட்டுண்டதால், தரையில் விழுந்து விட்டார்.

 


  

 தான் பிரம்மாஸ்த்திரத்தால் கட்டுண்டதை அறிந்த வானர வீரர், பிரம்மாவின் கருணையால் அந்த அஸ்திரத்தினால் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாததை நினைத்து, பிரம்மாவின் மகிமையை நினைத்துக் கொண்டார்.

 ஸ்வயம்புவான பிரம்மாவின் மீது ஜபித்து விடுக்கப்பட்ட அந்த பிரம்மாஸ்திரத்தால் கட்டுப்பட்டிருந்தாலும், பிரம்மாவிடமிருந்து தான் பெற்றிருந்த வரம் பற்றியும் நினைத்துக் கொண்டார். (ஒரு முகூர்த்த நேரமே அந்த அஸ்திரம் அவரைக் கட்டிப் போடும் என்ற வரத்தை, அனுமன், பிரம்மாவிடமிருந்து பெற்றிருந்தார்.)

 “உலகத்தின் குருவாகிய பிரம்மாவின் அஸ்திரத்தின் சக்தியால் என்னால் விடுபட முடியாது என்பதை அறிந்துதான், இது என் மீது ஏவப் பட்டுள்ளது. ஆகவே, பிரம்மாஸ்திரத்தின் அஸ்திரக்கட்டை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமே!”

 இவ்வாறு நினைத்த அந்த வானரர், பிரம்மாஸ்திரத்தின் சக்தியை நன்கு ஏற்றுக்கொண்டார். அதன் பிடியிலிருந்து தான் மீள்வதற்கான சக்தியையும், அதற்கான பிரம்மாவின் கருணையையும் நினைவில் கொண்டு, பிரம்மாவின் கட்டுக்கு இணங்கியிருந்தார்.

 “பிரம்ம தேவர், இந்திரன் மற்றும் வாயு பகவான் ஆகியவர்களால் நான் காப்பாற்றப் படுவதால், இந்த அஸ்திரத்தால் கட்டுண்டாலும் எனக்குப் பயமென்பதே உண்டாகவில்லை.”

 “அரக்கர்களிடம் பிடிபடுவதால், ராக்ஷஸ ராஜனுடன் பேசக் கூடிய ஒரு நன்மை எனக்குக் கிடைக்குமே! ஆகவே, எதிரிகள் என்னை இழுத்துக் கொண்டு போகட்டும்!”

 நடக்க இருக்கும் கார்யத்தின் நன்மை தெரிந்தவரும், நடக்க இருப்பதை முன் கூட்டியே அறிய வல்லவரும், பகைவரின் வீரத்தை ஒடுக்க வல்லவருமான அவர், கை,கால்களை அசைக்காமல் கிடந்தார். அவரருகில் எதிரிப் படைகள் வந்து அவரைப் பிடித்துத் தொந்திரவு செய்த போது பலமாக கர்ஜித்தார்.

 பகைவரை அழிக்க வல்ல அவர், செயலற்று இருப்பதைக் கண்ட அரக்கர்கள், அவரை உறுதியான சணல் கயிறுகளாலும், மரப் பட்டைகளால் செய்யப்பட்ட கயிறுகளாலும் கட்டினார்கள்.

 தான் பிடிபட்டதை அறிந்தால் மகிழ்வுடன் ராக்ஷஸராஜன் தன்னைப் பார்க்க வருவான் என்பதை நிச்சயமாக அறிந்து கொண்டதால், தன்னைக் கட்டிப் போட்ட எதிரி வீரர்கள், மிரட்டுவதையும் மனம் விரும்பியே பொறுத்துக் கொண்டார்.

 மரப் பட்டைகளால் செய்யப்பட்ட கயிறுகளால் அவர் கட்டப்பட்டதால் அஸ்திரக் கட்டு தானாக விடுபட்டு விட்டது. ஏனெனில், பிரம்மாஸ்திரம் தன் மீது வேறொரு கட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ளாது.

 மரப் பட்டைகளால் செய்யப்பட்டிருந்த கயிறுகளால் கட்டப்பட்டிருந்த வானர வீரரான அவர், பிரம்மாஸ்திரத்தின் தளைகளிலிருந்து விடுபட்டிருந்ததை இந்திரஜித் கண்ணுற்றான். எனவே பின் வருமாறு மன வேதனையுற்றான். “பிரம்மாஸ்திரம் தன் மீது வேறொரு கட்டை அனுமதிக்காது. ஐயோ! என்னுடைய பெருஞ்செயல் வீணாகி விட்டதே! இந்த அரக்கர்களுக்கு மந்திரங்களின் நெறிமுறைகள் தெரிந்திருக்கவில்லையே! பிரம்மாஸ்திரம் வீணானால், வேறு எந்த அஸ்திரமும் பயன்படாதே! எல்லோருக்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டதே! நமது வெற்றி மீது ஐயம் ஏற்பட்டு விட்டதே” என்று கவலையுற்றான்.

 பிரம்மாஸ்திரத்திலிருந்து தான் விடுபட்டு விட்டதை அனுமன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. எனவே பலவிதக் கட்டுக்களால் கட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, அந்த அரக்கர்களால் இழுத்துப் போகப் பட்டார். கொடூரமான அரக்கர்களால் கட்டைகளாலும், கை முட்டிகளாலும் அடிக்கப்பட்டுக்கொண்டே, அவர் அரக்க அரசனின் அருகே இழுத்துச் செல்லப்பட்டார்.




 பிரம்மாஸ்திரத்திலிருந்து விடுபட்டவராயும், கயிறுகளால் கட்டப்பட்டவராயும் இருந்த மிக பலசாலியான அந்த வானரரைத் தன் பரிவாரங்கள் புடை சூழ இருந்த அரசனுக்குக் காட்டினான்.

 மதம் பிடித்த யானை கட்டுண்டது போலக் கட்டப்பட்டிருந்த அந்த வானர உத்தமரை, அரக்கர்கள், அரக்கர்களின் அரசனான இராவணன் முன் நிறுத்தினார்கள்.

 அப்பொழுது சபையில் இருந்த அந்தஅரக்கர்கள், அவரைப் பார்த்து, “இது யார்? யாரைச் சேர்ந்தது? எங்கிருந்து வந்தது? இங்கு ஏன் வந்தது? யாருக்காக வந்தது?” என்று பலவாறாகப் பேசிக் கொண்டார்கள்.

 மற்ற அரக்கர்களும் கோபம் கொண்டு, “கொன்று விடலாம்!”, “எரித்து விடலாம்!”, “தின்று விடலாம்!” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

 தான் செல்ல வேண்டிய வழியை வேகமாகக் கடந்த அந்த மகா வானரர் அங்கே அரக்கர் குல அரசனின் சிறந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையையும், அவனது காலடியில் அவனுக்குப் பணி செய்யக் காத்திருந்த பல பெரியோர்களையும்,கண்டார்.

 விகாரமான அரக்கர்களால் இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்டு இழுத்து வரப்படுகின்ற வானரோத்தமரை, ஒளி வீசும் இராவணன் கண்டான்.

 சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டு, மிகுந்த பலத்துடன் இருந்த ராக்ஷஸ ராஜனை, வானரோத்தமரும் கண் முன்னே கண்டார்.

 கோபத்தில் சிவந்த கண்களைக் கொண்டிருந்த தசமுகனான இராவணன் வானரரை உற்று நோக்கினான். சிறந்த குலத்தில் தோன்றி, தர்ம நியாயங்களை அறிந்தொழுகும் தன் மந்திரிகளைப் பார்த்து, அவரை விசாரிக்கும்படி ஆணையிட்டான்.

 அவர்கள் முறையே அனுமனிடம், அவரின் செயலின் தன்மையையும், அதனால் உண்டாகும் பயனையும் அதற்கான காரணத்தையும் கேட்டனர். அதற்கு அவர், “நான் வானர அரசன் சுக்ரீவனிடமிருந்து, தூதுவனாக வந்துள்ளேன்” என்றார்.

 

 நாற்பத்தெட்டாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...