Saturday, November 14, 2009

கூரை வீட்டு நினைவுகள் கடல் அலையாய்மீண்டும் மீண்டும் என் தலையில் மோதிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் வேலூர் அக்ரகார வாய்க்காலின் மறுமுனைக்கு நீந்திச்சென்று காலடி படாத இடத்தில் இருந்து களிமண் எடுத்து வந்து (இது நான் சிறிது வளர்ந்த பிறகு என் வேலை ஆனது) மரப்பலகையில் அப்பா செய்யும் பிள்ளையார். இது முதல் நாளே நடக்கும் ஒரு மரபு. எனக்கு ஓவியத்தில் ஆசை வந்தபோது எனது படங்களில் பிள்ளையாருக்கு முன்னுரிமை வந்ததற்கு இதுவே காரணமாக இருக்க்கலாம். சதுர்த்தி அன்று காலை சைக்கிள் ஹண்ட்ல் பாரின் இருபுறமும் ஒயர் கூடையை மாட்டிக்கொண்டு இலைதலை கொண்டுவர செல்வேன். காவேரிக்கு செல்லும் வழியில் பாதையின் இருபுறமும் ஓடிக்கொண்டிருக்கும் வடிகால் வாய்க்கால்களின் ஓரத்தில் எவ்வளவு பூக்கள். சாம இலைகளில் நீர் ஊற்றி அவை மின்னும் பாதரசமாய் இங்கும் அங்கும் ஓடி வழிவதில் எவ்வளவு நேரங்கள் கழிந்திருக்கின்றன. இது ஒவ்வொரும் வருடமும் ஒரு சடங்காகவே நடக்கும்.

ஆனால் இன்று,,,, வீட்டு தோட்டத்தில் உதிர்ந்து கிடக்கும் பவள மல்லிகைப்பூக்களை பொறுக்க மனமோ நேரமோ இல்லாமல் போய்விட்டது வேதனை. அம்மா விரிந்து இறைந்து கிடக்கும் பூக்களை முடியும் வரை சேகரித்துவிட்டு முடியாமல் என்னிடம் அந்த வேலையே செய்ய சொல்லும்போது (அதுவும் ஒரு வேண்டுகோளாகத்தான் இருக்கும் - இவ்வளவு பூக்கள் ஆண்டவனுக்கு அர்பணிக்க முடியாமல் வீணாகின்றதே என்ற அங்கலாய்ப்பும் கூட) எனக்கு வந்த சலிப்புக்கும் கோபத்திற்கும் பொருள் விளங்கவில்லை. வசதிகள் வர வர வாழ்க்கை அவசரமாய் தொலைந்து போனது.

அம்மா மூச்சடங்கி அசையாமல் வீட்டு ஹாலில் எனக்கென்ன ? என்று குளிர் பதன பெட்டியில் படுத்திருக்கும் பொது .. தோட்டத்தில் உதிர்ந்து கிடந்த பவள மல்லிகைப்பூக்களை பறித்துத்தரட்டுமா என்று நான் கதறியபோது என் அம்மா பதிலேதும் சொல்லவில்லை. போடா.. உன்னைப்பற்றி தெரியாதா என்ற அந்த புன்னகை...

வாழ்க்கையில் நாம் பெறுவதை விட தொலப்பதுதான் அதிகம். இதை உணரும் முன் காலம் கடந்து விடுகின்றதே!

காவிரிக் கரையில் அள்ளி வந்த களிமண் இன்று காசு கொடுத்தாலும் கிடப்பதில்லை..மார்கெட்டில் வாங்கி வரப்படும் பிள்ளயாருக்கு மூஞ்சூறு செய்ய க்கூட கெஞ்சி கொஞ்சம் களிமண் வாங்கி வர வேண்டியுள்ளது. பிள்ளையார் அரசியலுக்கு வந்த பிறகு பிள்ளையார் சதுர்திகள் பிள்ளையாரை அடித்து துவம்சம் செய்து அவரை வழி அனுப்புவது வாடிக்கையாகிவிட்டது..

தொடர்வேன்.....

1 comment:

das said...

Very tru dad ... i miss grandma a lot

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...