Tuesday, April 11, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம். பதினான்காவது ஸர்கம்.

 

                         ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.

 

                                                       பதினான்காவது ஸர்கம்.


                                        


 

     ஒரு முகூர்த்த நேரத்திற்கு இவ்விதம் பலவித யோசனைகளில் ஆழ்ந்திருந்த, மிகவும் ஒளி பொருந்திய ஸ்ரீஅனுமன், மனதில் செய்துகொண்ட முடிவுடன், இராவணனது மாளிகையில் இருந்து குதித்து இறங்கி, அசோகவனத்தின் மதில்சுவற்றை அடைந்தார்.

     உற்சாக மிகுதியால் சிலிர்த்த உடலுடன், அசோக வனத்தின் மதில்சுவற்றில் அமர்ந்திருந்த ஸ்ரீஅனுமன், வசந்தகாலம் வந்துவிட்டதை உணர்த்தும் விதமாக, கிளைநுனிகளில் பலவிதமான வண்ண மலர்கள் பூத்திருந்த பலவிதமான மரங்களைப் பார்த்தார்.

     அங்கே சால் முதலிய தேக்கு மரங்களும், அழகிய அசோக மரங்களும், சம்பக மற்றும் நாககேசர மரங்களும், குரங்கின் முகம் போன்று சிவந்த பழங்களைக் கொண்டிருந்த மா மரங்களும் பூத்துக் குலுங்குவதைக் கண்டார்.

     நூற்றுக்கணக்கான கொடிகள் பின்னிக் கிடந்த ஏராளமான மரங்களும், மாந்தோப்புகளும் நிறைந்திருந்த அந்த அசோகவனத்தின் உள்ளே, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல மின்னல் வேகத்தில் ஸ்ரீஅனுமன் நுழைந்தார்.

     வியப்பைத்தரும் அந்த அசோகவனத்தில், நாலாபுறத்திலும் தங்கம் மற்றும் வெள்ளியின் நிறத்தில் மரங்கள் இருந்தன.  மரங்களிலிருந்த பறவைகள் எழுப்பிய ஒலி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.  உள்ளே நுழைந்த ஸ்ரீஅனுமன், சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்தினார்.  அங்கிருந்த விதவிதமான பறவைகளும் மான் கூட்டங்களும் வியப்பானதொரு உணர்வை ஏற்படுத்தின.  அந்த வனமானது உதிக்கின்ற சூரியனின் செந்நிறத்தில் இருந்ததைக் கண்டார்.

     அங்கிருந்த பலவிதமான மரங்களில் பூத்துக்குலுங்கிய மலர்களால் கவரப்பட்டு, மதிமயங்கிய குயில்களும் வண்டினங்களும், அந்தப் பூக்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தன.

     அந்த வனத்தினுள் மனிதர்கள் மகிழ்வுற்று இருக்க, விலங்குகளும் பறவைகளும் மதிமயங்கி அலைந்துகொண்டிருந்தன.  இணைதேடும் மயில்களின் அகவல் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன.  அங்கு பலவகையான பறவைகள் வசித்து வந்தன.

     குறைகளற்ற வனப்புடைய அரசகுமாரியான சீதையைத் தேடும் பணியைத் தொடங்கிய ஸ்ரீஅனுமன், தன்னுடைய செயல்களால், சுகமான உறக்கத்தில் இருந்த பறவைகளை விழித்துக்கொள்ளச் செய்தார்.

     அதனால் கூடுகளிலிருந்து பறவைகள் பறந்ததால், அவற்றின் இறகுகளால் அசைக்கப்பட்டு, மரங்களிலிருந்து பலவிதமான வண்ண மலர்கள் மழையைப் போல நிலத்தின் மீது சொரிந்தன.

     வாயுகுமாரனான ஸ்ரீஅனுமனின் உடல் முழுவதும் பல வண்ணப்பூக்கள் தெளிக்கப்பட்டு, அந்த அசோக வனத்தில், அவர் ஒரு மலர்களாலான மலையைப் போலத் தோற்றமளித்தார்.

     அசோக வனத்தின் எல்லாத் திசைகளிலும், மரங்களினூடேயும் ஓடித்திரிந்த ஸ்ரீஅனுமனைப் பார்த்த அனைத்து உயிரினங்களும், வசந்தத்தின் அரசனே வானர வடிவெடுத்து வந்துள்ளானோ? என்று வியந்தனர்.

     மரங்களிலிருந்து உதிர்ந்த வண்ண மலர்களால் நிரம்பியிருந்த அந்த அசோகவனத்தின் தரையானது, பலவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மங்கையைப் போலத் தோற்றமளித்தது.

     மிகுந்த ஆற்றல் மிக்க வானர வீரரான ஸ்ரீஅனுமனால் வேகமாக அந்த மரங்கள் அசைக்கப்பட்டதால், பல வண்ண மலர்கள் மழையைப் போலத் தூவிக்கொண்டிருந்தன.

     ஸ்ரீஅனுமனின் வேகத்தால் அலைக்கழிக்கப்பட்ட அந்த மரங்கள், தங்களது கிளைகள், இலைகள், பூக்கள், கனிகள் யாவற்றையும் இழந்து நின்ற காட்சியானது, சூதாடித் தோற்றுப்போனவர்கள் தங்கள் ஆபரணங்களையும், விலையுயர்ந்த உடைகளையும் இழந்து நிற்பது போல இருந்தது.

     மலர்களாலும் கனிகளாலும் நிறைந்திருந்த அந்த மரங்கள், ஸ்ரீஅனுமனது வேகத்தைத் தாளாது, அவையத்தனையையும் இழந்து நின்றன.

     இலைகளும் கனிகளும் இல்லாது வெறும் கிளைகளோடு இருந்த அந்த மரங்களிலிருந்து பறவைக்கூட்டங்கள் இடம் பெயர்ந்துவிட்டதால், அவை கவனிப்பாரற்றுக் கிடந்தன.

     ஸ்ரீஅனுமனது கை, கால்கள் மற்றும் வால் இவற்றினால் தாக்கப்பட்டு, மரங்கள் நிர்மூலமானதால், அந்த அசோக வனமானது, அழகிய பெண்ணானவள், காமக்கேளிக்கைகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவிழ்ந்த தலைமுடியுடன், பூசியிருந்த சந்தனம் கலைந்து, உலர்ந்த உதடுகளுடனும், மேனியெங்கும் நகங்கள் மற்றும் பற்களால் உண்டான காயங்களுடன் இருப்பதைப் போல இருந்தது. 

     வீசும் காற்றானது, மழைக்கால மேகங்களை அலைக்கழித்து விசிறியடிப்பதுபோல, ஸ்ரீஅனுமன் தனது வேகத்தினால், மரங்களைச் சுற்றியிருந்த கொடிகளையும், புதர்களையும் கலைத்து எறிந்தார்.

     அந்த வனத்தின் பல இடங்களில் உலவிவந்த ஸ்ரீஅனுமன், அங்கிருந்த நிலப்பகுதிகள், தங்கம், வெள்ளி போன்றவற்றாலும், முத்து, வைரம் போன்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.

          அந்த வனத்தினில் பல வடிவங்களில் தூய்மையான நீரால் நிரப்பப்பட்ட தடாகங்கள் இருந்தன.  அவற்றின் படிக்கட்டுக்கள் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  முத்துக்களும் பவழங்களும் மணல்திட்டுக்கள் போல அவற்றைச் சூழ்ந்திருந்தன.  அந்தத் தடாகங்களின் தரைப்பகுதிகள் ஸ்படிகக் கற்களால் நிரவப்பட்டிருந்தன.  அந்தத் தடாகங்களைச் சுற்றிலும் விதவிதமான பொன்னிற மரங்கள் இருந்தன. 

     அந்தக் குளங்களில் தாமரைப்பூக்கள் பூத்திருந்த செடிகள் அடர்ந்திருந்தன.  சக்ரவாகப் பறவைகள் தங்கள் இணையுடன் சுற்றிச்சுற்றி வந்தவண்ணம் இருந்தன.  கொக்கு, அன்னப்பறவை போன்றவற்றின் குரல்கள் அங்கு கேட்ட வண்ணம் இருந்தன.

     அமுதம் போன்ற இனிமையான நீரினால் நிரம்பியிருந்த அந்தக் குளங்களின் கரைகளில் உயரமான மரங்கள் சூழ்ந்திருந்தன.  கண்களுக்கு விருந்தளித்த வண்ணம், நான்கு திசைகளிலிருந்தும் ஓடைகள் அந்தக் குளங்களுக்கு நீரைக் கொண்டு சேர்த்தன. 

     அந்தத் தடாகங்களின் கரைகளில் ஆயிரக்கணக்கான செடி,கொடிகள் புதர்போல மண்டியிருந்தன.  நன்கு பூத்துக்குலுங்கிய கல்ப மரங்கள் அவற்றைச் சூழ்ந்திருந்தன.  இடையிடையே பூத்திருந்த மரங்கள், அவற்றை அலங்கரித்தது போல இருந்தன. 

     பிறகு ஸ்ரீஅனுமன், உயரமான சிகரம் கொண்ட, மேகத்திற்கு ஒப்பான மலையொன்றை அங்கே கண்டார்.  அந்த மலையில் மலைமுகடுகள் வியப்பைத்தருவதாய் இருந்தன.  பல்வேறு மலைக்குன்றுகள் அந்த மலையைச் சூழ்ந்திருந்தன.  அந்த மலையில் பாறைகளால் ஆன குகைகள் பல இருந்தன.  பலவிதமான மரங்களும் வளர்ந்திருந்தன. 

     காதலனின் மடியிலிருந்து துள்ளி விழும் மங்கையைப் போல, அந்த மலையிலிருந்து விழுந்து ஓடி வரும் ஒரு நதியினை ஸ்ரீஅனுமன் கண்டார். 

     காதலனிடம் ஊடல் கொண்டு, பிரிந்துசெல்லும் பெண்ணை, அவளது உறவினர்கள் தடுத்து நிறுத்துவது போல, அந்த நதிக்கரையின் கரையிலிருந்த மரங்களின் கிளைகள், அந்த நதியில் ஓடிக்கொண்டிருந்த நீரின் மீது வளைந்து, படர்ந்து அவற்றின் வேகத்தைக் குறைத்து அழகு சேர்த்தன. 

     மரக்கிளைகளால் தன் வேகம் குறைந்து, தான் வந்த திசையில் திரும்பிச்சென்ற நதியைப் பார்க்கும்போது, கோபம் குறைந்த காதலி, மகிழ்வுடன் தன் காதலனை நாடி, திரும்பிச்செல்வது போலத் தோன்றியது.

     அந்த மலையின் அருகில், தாமரை மலர்கள் நிரம்பியிருந்த குளத்தைக்கண்ட ஸ்ரீஅனுமன், அங்கு பல பறவைகள் மகிழ்ச்சியுடன் ஒலியெழுப்பியவண்ணம் இருந்ததையும் கண்டார்.  அதற்கு அருகில், குளிர்ந்த நீரால் நிரப்பப்பட்டிருந்த ஒரு குளத்தையும் அவர் கண்டார்.  அதில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட படிக்கட்டுக்கள் இருந்தன.  முத்துக்கள் மணல் போல அங்கே நிரம்பியிருந்தன. 

     தேவதச்சன் விஸ்வகர்மாவினால் கட்டப்பட்ட பல மாளிகைகள், அங்கே அழகிய மரங்களால் சூழப்பட்டிருந்தன.  பலவகையான மிருகங்கள் அங்கே அலைந்து திரிந்தன.  பல அழகிய மலர்த்தோட்டங்கள் அங்கே இருந்தன. 

     மலர்களும் கனிகளும் நிரம்பியிருந்த மரங்கள் குடை போலக் கவிழ்ந்து அடர்ந்த நிழலைத் தந்தன.  தரைகள் வெள்ளியாலும், கூரைகள் தங்கத்தாலும் வேயப்பட்ட மேடைகள் அங்கே இருந்தன.

     அங்கே ஸ்ரீஅனுமன் பொன்னிறத்தாலான ஒரு அசோக மரத்தைக்(ஸிம்சுபா) கண்டார்.  அந்த மரத்தைச் சுற்றிப் பலவித செடிகொடிகள் இருந்தன. அந்த மரத்தைச் சுற்றி, ஒரு தங்க நிற மேடை அமைக்கப்பட்டிருந்தது. 

     மேலும் அந்த மலைப்பகுதியில், பலவித திறந்த சமவெளிகளையும், மலையருவிகளையும் நெருப்புப் போல ஒளிவீசக்கூடிய மரங்களையும் ஸ்ரீஅனுமன் கண்டார்.

     மேரு மலையைப் போன்ற பொன்னிற ஒளி மிகுந்த மரங்களின் காரணமாக, தானும் பொன்னிறத்தில் மின்னுவது போல ஸ்ரீஅனுமன் உணர்ந்தார்.

     அந்தப் பொன்னிறமான மரங்களினிடையே காற்று நுழைந்து செல்கையில், நூற்றுக்கணக்கான மணிகள் அசைந்து ஒலியெழுப்புவது போல இருந்ததைக் கண்டு ஸ்ரீஅனுமன் வியப்புற்றார்.  அந்த மரங்களில் கிளைகளில் விதவிதமான கனிகள், மலர்கள், விதைகள் ஆகியவை நிரம்பி வழிந்து மிகவும் அழகாக இருந்தன.  மிகுந்த இலைகளுடன் இருந்த அந்த அசோக மரத்தின் மீது ஸ்ரீஅனுமன் ஏறத்தொடங்கினார்.

     “இராமனைக் காணும் ஆவலில், துயரம் தோய்ந்த வைதேஹி, இங்கு தற்செயலாக வரப்பெற்றால், நான் அவளைக் காண்பேன்” என்று பெரும் தோள்வலியரான  ஸ்ரீஅனுமன் நினைத்தார்.

     “கெட்ட எண்ணம் கொண்ட இராவணனின் இந்த அசோகவனமோ, சந்தனம், சண்பகம் மற்றும் வகுள மரங்களால் நிரம்பி மிகவும் வனப்புடன் உள்ளது.”

     “தாமரை மலர்கள் நிரம்பி, பறவைகள் வசிக்கும் இந்த அற்புதமான குளத்தை நோக்கி, இராகவனின் அன்பு மனைவியான சீதை நிச்சயமாக வருவார்.”

     “இராகவனின் அன்பிற்குரியவளும், அரசகுமாரியுமான சீதை, காடுகளில் அதிகம் அலைந்து திரிந்துள்ளதால், இந்த அழகிய இடத்தைக்காண நிச்சயம் வருவார்.”

     “இல்லையேல், இராமனது பிரிவால் துயருற்று மெலிந்து வாடும், மானின் விழிகளையொத்த விழிகளைக் கொண்டவளான சீதை, காடுகளைப் பற்றி அறிந்துள்ளதால், இந்த வனப்புமிக்க இடத்திற்கு அவசியம் வருவார்.”

     “இராமனின் பிரிவால் விரகதாபத்தில் வாடும், மிக அழகிய விழிகளைக் கொண்ட சீதைக்கு காடுகளில் வசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகையால், அவர் அவசியம் இந்த இடத்தை நாடி வருவார்.”

     “ஜனகனின் மகளும், இராமனின் அன்பினுக்கினிய மனைவியுமான சீதைக்கு வன வலங்குகளிடம் அன்பு அதிகம்.  ஆகவே, அவர் அவைகளை நாடி நிச்சயம் இங்கு வருவார்.”

     “எப்பொழுதும் இளமை மாறாத ஜனக குமாரி சீதா, தனது காலை நேரப் ப்ரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்காக, இந்தக் காலை நேரத்தில், மிகவும் தூய்மையான நீரைக் கொண்ட இந்த இடத்தை நாடி வருவார்.”

     “அரசருக்கெல்லாம் அரசனாகிய ஸ்ரீராமனின் மதிப்பிற்குரிய மனைவியின் இயல்புகளுக்கு ஏற்றவாறு இந்த அசோகவனமானது எல்லாத் தகுதிகளையும் பெற்றுள்ளது.”

     “நிலவின் முகமொத்த வனப்பு மிக்க தோற்றம் கொண்ட சீதை, உயிருடன் இருப்பாரானால், இந்த குளிர்ந்த நீரைக்கொண்ட ஓடைக்கரைக்கு நிச்சயம் வருவார்.”

     இவ்வாறாக, பலவிதமான எண்ணங்களால் நிரம்பியிருந்த ஸ்ரீஅனுமன், மனிதர்களின் மாபெரும் அரசனான ஸ்ரீராமனின் மனைவியான சீதையின் வரவை எதிர்பார்த்து, அடர்ந்த இலைகளைக் கொண்டிருந்த அந்த அசோகமரத்தில் தன்னை மறைத்துக்கொண்டு, அந்தத் தோட்டம் முழுவதிலும் தன் பார்வையைச் செலுத்தினார்.




 

 

                      பதினான்காவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...