ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்
அறுபதாவது ஸர்கம்.
(அங்கதன் ஜாம்பவான்
பேச்சு வார்த்தை)
அவருடைய (அனுமனின்) வார்த்தைகளைக் கேட்ட வாலியின்
மைந்தனாகிய அங்கதன், “அஸ்வினி குமாரர்களான மைந்தனும், த்விவிதனும் அதிக ஆற்றலும் சக்தியும்
கொண்ட வானர வீரர்கள் ஆவர் என்று சொன்னான்.
மேலும் அவன் இவ்விதம் சொல்லலானான்.
“முன்னொரு
காலத்தில், பிரம்மாவிடம் வரம் பெற்றதால் இவர்களின் புகழ் பரவப்பரவ இவர்களுக்கு கர்வமும்
ஏற்பட்டது. அஸ்வினிகுமாரர்களின் மரியாதையைக்
காப்பாற்ற, பிரம்மா இந்த இருவருக்கும், ‘உங்களை யாரும் அழிக்க முடியாது’ என்று வரம்
கொடுத்தார். வரத்தினால் கர்வம் தலைக்கேற, இரண்டு வீரர்களும் தேவர்களுடன் சண்டையிட்டு
அமிர்தத்தை உண்டனர்.”
“இந்த இருவர் மட்டுமே கோபம் கொண்டால், இலங்கை
நகரத்தை, அதன் குதிரை, யானை மற்றும் தேர்ப்படைகளுடன் அழித்துவிட முடியும். மற்ற வானரர்கள்
எதுவும் செய்ய வேண்டியதில்லை.”
“வாயுவின் மைந்தனாகிய அனுமன் தனி ஒருவனாகவே சென்று,
தன் ஆற்றலினால் இலங்கை நகரத்தை அழித்து வந்த செய்தியைக் கேட்டோம். அப்படியிருக்க, இவ்வளவு புகழ் வாய்ந்த வீரர்களைக்
கொண்டுள்ள நாம், இராமனிடம் சென்று, ‘சீதையைக் கண்டு விட்டோம், ஆனால் அழைத்து வரவில்லை’
என்று சொல்வது ஏற்புடையதாகாது.”
“ஆகவே, அரக்கர்களுடன் அந்த இலங்கையை அழித்து,
இராவணனைக் கொன்று, சீதையை மீட்டு வந்து, திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் ஸ்ரீராமனிடம்
செல்லலாம்.”
“அரக்கர்களின் முக்கியமான வீரர்களை அனுமனே அழித்துவிட்ட
பிறகு, சீதையை மீட்டு, அழைத்து வருவதைத் தவிர வேறு என்ன முக்கியக் கடமை நமக்கிருக்க
முடியும்?”
“வீரர்களே! ஜனக குமாரியை நாம் மீட்டு வந்து,
ஸ்ரீராம, இலக்குமணர் முன்பு நிறுத்துவோம்.
கிஷ்கிந்தையில் இருக்கும் மற்ற வானரர்களை ஏன் கஷ்டத்தில் ஆழ்த்த வேண்டும்? நாம் மட்டுமே இலங்கை சென்று அங்கிருக்கும் அரக்க
வீரர்களை அழித்து விட்டு, ஸ்ரீராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவனைச் சென்று சந்திக்கலாம்.”
செயலாற்றுவதில் நிபுணரும், வானர வீரர்களில்
சிறந்தவருமான ஜாம்பவான், அங்கதனின் முடிவான வார்த்தைகளைக் கேட்டு மனம் மகிழ்ந்தவராய்
பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானார்.
“நாம் எவ்வாறேனும் வெற்றி பெற்று, சீதையை மீட்டு,
அவரிடம் (ஸ்ரீராமனிடம்) சென்றால், அரசர்க்கரசரான அவர், தன் குலப் பெருமையை உத்தேசித்து,
நமது செயலை விரும்பமாட்டார்.”
“அனைத்து வானரர்கள் முன்பாக, ‘நானே முன் நின்று,
போரில் வென்று சீதையை மீட்டு வருவேன்’ என்று சூளுரைத்ததை, எவ்வாறு வீணாகப் போக்க விரும்புவார்?”
“ஆகவே, வானர வீரர்களே! அவ்வாறு நடந்தால், நமது
காரியம் வெற்றி பெற்றதாக ஆகாது! ஸ்ரீராமனுக்கு மகிழ்ச்சியும் ஏற்படாது. நாம் காட்டிய வீரமும் வீணாகப் போய்விடும்!”
“ஆகவே, நாம் அனைவரும் ஸ்ரீராமன், இலக்குமணன்,
சுக்ரீவன் ஆகியோர் இருக்குமிடம் சென்று, இந்த விஷயங்களை அறிவிப்போம்.”
“அரச குமாரனே! நீங்கள் உத்தேசித்துள்ள காரியம்,
நம்மால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை.
ஆனாலும் ஸ்ரீராமனுடைய தீர்மானமான முடிவை அறிந்து கொண்டு, அதன் படியே, நமது செயலைச்
தீர்மானிக்க வேண்டும்.”
இவ்வாறு ஜாம்பவான் அங்கதனிடம் தெரிவித்தார்.
அறுபதாவது
ஸர்கம் நிறைவு.



No comments:
Post a Comment