ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.
சுந்தர காண்டம்.
ஐம்பத்தொன்பதாவது ஸர்கம்.
வாயு குமாரரான அனுமன், இவ்வாறு எல்லாச் செய்திகளையும்
சொல்லிய பிறகு முக்கியமான செய்தியாகப் பின் வரும் வார்த்தைகளைச் சொல்லலானார்.
“சீதையின் பண்பு நலன்களை நேரடியாகப் பார்த்த
பின்னர் என் மனம் மகிழ்ச்சியுற்றது. இராகவனுக்கான
காரியமும் நிறைவேறி, சுக்ரீவனின் மாண்பும் நிலை பெற்றது.”
“மதிப்பு மிக்க வானரர்களே! சீதைக்குச் சமமான
பண்பு நலன்களைப் பெற்ற உயர்ந்த மகளிர் தங்கள் தவ வலிமையால் அனைத்து உலகங்களையும் ஆட்சி
செய்வார்கள். அல்லது அவர்கள் கோபம் கொண்டால்,
மூவுலகங்களையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவார்கள். இந்த அரக்கர் குல அரசன் அதிகத் தவ வலிமை மிக்கவன். சீதையைத் தொட்ட இராவணனின் உடல் அதன் காரணமாக அழிந்து
போகவில்லை.”
“ஜனகரின் உத்தம மகளாகிய சீதை, கோபம் கொண்டு,
மன வருத்தமுற்று செய்யக் கூடிய செயல்களால் உண்டாகும் விளைவுகளை, தன்னைத் தொடும் கைகளுக்கு, அக்னி
ஜ்வாலையால் கூட செய்ய முடியாது.” (சீதையின்
கோபம் தனக்குத் தீங்கு செய்பவர்களை, நெருப்பைக் காட்டிலும் தீவிரமாக எரித்து விடும்.)
“நான் ஈடுபட்ட செயலில் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளேனோ,
அவையனைத்தையும் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.
இனி ஜாம்பவான் முதலான சிறந்த வானர வீரர்களின் ஒப்புதலோடு, சீதையை இராவணனிடமிருந்து
மீட்டுக் கொண்டு வந்த பிறகே, ஸ்ரீராம, இலக்குமணர்களைப் பார்ப்பது நியாயமாகும்.”
*“நான் ஒருவனே இலங்கையை, அதில் உள்ள அரக்கர்களோடு
அதிவிரைவில் அழித்து விடுவேன். மாவீரனான இராவணனையும்
மாய்த்து விடுவேன். அவ்வாறிருக்கையில், அனைத்து
ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்ற, ஆற்றல் மிக்க, சக்தி மிக்க, வெற்றி பெரும் வேட்கையோடு
இருக்கும் உங்களைப் போன்ற வீரர்கள் உடனிருக்கும்போது, வேறென்ன வேண்டும்?”
“இராவணனைப் போர்க்களத்தில் அவனது சேனைகள், மகன்
மற்றும் சகோதரர்களுடன் நானே கொன்றுவிடுவேன்.
பிரம்மாஸ்திரம், ரெளத்ராஸ்திரம், வாயவ்யம் மற்றும் வாருணம் போன்ற அஸ்திரங்கள்
கண்களுக்குப் புலப்படாதவை. இருந்தபோதிலும்,
பிரம்மாவிடமிருந்து பெற்றுள்ள வரத்தால், நான் அவைகளைக் கண்டறிந்து, அவற்றை அழித்து,
அரக்கர்களையும் அழித்து விடுவேன்.”
“நீங்கள் அனுமதித்தால் என்னுடைய ஆற்றலினால் இராவணனை
அழித்து விடுவேன். என்னால் தொடர்ந்து வீசப்படும்
பாறைகளின் வேகத்தில் தேவர்களே யுத்தத்தில் இறக்க நேரிடும். அவ்வாறிருக்கையில், அரக்கர்கள் எம்மாத்திரம்?”
“உங்களது அனுமதி இல்லாததன் காரணமாகவே என்னால்
என் ஆற்றலைப் பிரயோகிக்க முடியவில்லை. கடல்
தன் பெருமையை இழக்கலாம். மந்திர மலையானது தனது
இடத்திலிருந்து பெயர்ந்து விடலாம். ஆனால், யுத்த பூமியில் , ஜாம்பவானைத் தோற்கடிப்பது
என்பது, எதிரிகளின் படைகளுக்கு இயலாத செயலாகும்.”
“அனைத்து அரக்கர்களையும், அவர்களது முன்னோர்களோடு
சேர்த்து எமனுலகம் அனுப்ப, வாலியின் மகனான அங்கதன் ஒருவனே போதுமானவன்.”
“பெரிய வீரனான நீலனின் பெரும் வேகத் தாக்குதலால்,
மந்தார மலையே பொடிப் பொடியாகும் என்றால், அரக்கர்கள் அவனுக்கு எம்மாத்திரம்?”
“தேவர்கள், அசுரர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள்,
நாகர்கள் மற்றும் பறவைக் கணங்கள் இவர்கள் யாவரிலும், மைந்தன் மற்றும் த்விவிதனிடத்தில்
மோதுவதற்குத் தகுந்த வீரர்கள் எவரேனும் உளரோ?”
“இந்த இரு வானர வீரர்களும் அஸ்வினி குமாரர்களின்
புதல்வர்கள். யுத்த களத்தில் இவர்களின் வேகத்தை
எதிர்த்து நிற்பவர் எவரும் என் கண்களுக்குப் புலப்படவில்லை.”
“நான் மட்டுமே தனியொருவனாக, இலங்கையின் அரக்கர்களைக்
கொன்று, இலங்கை நகரத்தை எரித்துச் சாம்பலாக்கினேன். அந்த (இலங்கையின்) அரச வீதியில் என் பேராற்றலின்
கொடியை நாட்டி வந்துள்ளேன். ’பேராற்றல் மிக்க ஸ்ரீராம, இலக்குமணர்களுக்கு வெற்றி உண்டாகட்டும்.
ஸ்ரீராமரால் பாதுகாக்கப்படும் ராஜா சுக்ரீவனுக்கு வெற்றி உண்டாகட்டும். கோசல அரசனான ஸ்ரீராமனின் தூதுவன் நான்! வாயுபகவானின்
புதல்வனாகிய என் பெயர் அனுமன்!’ என்று எல்லா இடங்களிலும் முழக்கமிட்டு வந்துள்ளேன்.”
*
*இந்த ஸ்லோகங்கள் கீதாபிரஸ்
பதிப்பில் உள்ளபடி எழுதப்பட்டுள்ளன.
“கேடு கெட்ட இராவணனின் அசோகவனத்தின் நடுவில்,
சிம்சுபா மரத்தின் அடியில், பண்புநலன் மிக்கவளான சீதை, வருத்தத்தில் மூழ்கிக் கிடக்கிறாள்.”
“மேகங்களால் சூழப்பட்டு மங்கியுள்ள நிலவினைப்
போல, அரக்கியரால் சூழப்பட்டு, வருத்தம் மேலிட ஒளியிழந்து வாடிக் கிடக்கின்றாள்.”
“தன் சக்தியின் மமதையில் மிதக்கும் இராவணனின்
பிடியில் இருக்கும் அழகு தேவதையான அந்தக் கற்புக்கரசி, அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.”
“தேவேந்திரனிடத்தில் இந்திராணி இணைந்திருப்பது
போல, பெரும் கற்புக்கரசியான வைதேஹி, ஸ்ரீராமனிடமே, தன் மனதை நிலை நிறுத்தி, அவனது நினைவாகவே
இருக்கிறாள்.”
“சீதையானவள் உடுத்தியிருந்த துணியை மாற்றாமல்,
தன் மேனியெங்கும் புழுதி படிந்து இருக்கின்றாள்.
சோகத்தில் இளைத்த உடலுடன், கணவனின் நன்மையையே மனதினுள் நினைத்தபடி உள்ளாள்.”
(இது கீதாபிரஸ் பதிப்பில் இல்லை).
“அந்த அழகான வனத்தில், விகாரமான அரக்கிகளால்
சூழப்பட்டு, மீண்டும் மீண்டும் மிரட்டப்பட்டு கதிகலங்கியவளாய் அவள் இருந்ததை நான் பார்த்தேன்.”
“ஒற்றைப் பின்னலுடன், பரிதாபமான நிலையில், கணவனையே
எந்நேரமும் நினைத்திருந்தாள். தரையில் படுத்திருந்த
அவள் பனிக்காலத் தாமரையைப் போலக் களையிழந்திருந்தாள். இராவணனிடமிருந்து தப்புவதற்கு வழியறியாது, நம்பிக்கை
இழந்தவளாய், உயிரை மாய்த்துக்கொள்ள நிச்சயித்திருந்தாள். மான் குட்டியின் கண்களைப்
போன்ற கண்களைக் கொண்டிருந்த சீதை, பரிதாபம் மிகுந்திருந்தாள். அவளுக்கு என்னால் எவ்வாறு முடியுமோ, அவ்வாறு நம்பிக்கை
ஊட்டி வந்துள்ளேன்.”
“அவளிடம் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததும்,
எல்லா விஷயங்களையும் சொல்லி விட்டேன். ஸ்ரீராமனுக்கும்
சுக்ரீவனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நட்பினைப் பற்றிக் கேள்வியுற்றதும் மனமகிழ்ந்தாள்.”
“உறுதியானவரும், அறவழியின் படி நடப்பவரும், பெரும்
மனிதருமான ஸ்ரீராமனால் இராவணனுடைய வதம் நிகழப்போகின்றது. இதுவே விதியாகும். ஆகவே, கணவனிடம் கொண்ட பெரும் பக்திதான், குற்றவாளியான
தசமுகனைக் கொன்றுவிடாமல் உள்ளது.”
“சீதையானவள் இயல்பிலேயே மெலிந்தவள். அதுவும் இப்பொழுது, கணவனைப் பிரிந்த விரகத்தில்,
ப்ரதமையில் படிப்பைத் துவங்கும் மாணவனின் வித்தை தேய்வதைப் போல இன்னும் இளைத்து விட்டாள்.”
“இவ்வாறாக, சிறந்த பெண்ணான சீதை, துன்பத்திலிருக்கின்றாள். இது விஷயமாக எதிர் நடவடிக்கை என்னவெல்லாம் செய்யப்பட
வேண்டுமோ, அவையெல்லாம் செய்யப்பட வேண்டும்.”
ஐம்பத்தொன்பதாவது ஸர்கம்
நிறைவு.

No comments:
Post a Comment