சுந்தர காண்டம்.
ஐம்பத்தெட்டாவது ஸர்கம்.
அனுமன் முதலான மிகவும் ஆற்றல் மிக்க வானரர்கள்,
அந்த மகேந்திர மலையின் சிகரத்தில், மனத்திருப்தியுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அமர்ந்திருந்தார்கள்.
அன்பு நிறைந்தவர்களும், பெருமை மிக்கவர்களுமான
வானரர்கள் அமர்ந்துகொண்டதும், மகிழ்ச்சியினால் மயிர்க்கூச்சமெடுத்த ஜாம்பவான், மிகுந்த
திருப்தியுடன் இருந்த, வானரோத்தமரும் வாயுகுமாரருமான, அனுமனிடம் நடந்து முடிந்த காரியங்களைப்
பற்றி வினவினான்.
“தேவியைக் காணும் பாக்கியம் எவ்விதம் உமக்குக்
கிட்டியது? அவர் அங்கு எந்த நிலைமையில் இருக்கின்றார்?
கொடுந்தொழில் புரியும் தசமுகன் (இராவணன்) தேவியினிடத்தில் எவ்விதம் நடந்து கொள்கின்றான்?
போன்ற விபரங்களை அறிய ஆவல் கொண்டுள்ளோம். வானரோத்தமரே!
இதையெல்லாம் நடந்தது நடந்தபடியே நீங்கள் எங்களுக்கு விபரமாகச் சொல்லுங்கள்!”
“நீர் சீதா தேவியை எவ்விதம் தேடிக் கண்டுபிடித்தீர்கள்
என்பதையும், அவர் உம்மிடம் என்ன சொன்னார் என்பதையும் கூறவும். அனைத்து விபரங்களையும் அறிந்த பின்னர், மேற்கொண்டு
ஆற்ற வேண்டிய செயல்களைப் பற்றி முடிவு செய்வோம்.”
“மற்றவர்களுக்குச் சொல்லத் தகுந்த செய்தி என்ன?
மறைத்து வைக்க வேண்டிய செய்தி என்ன? என்பதனைப் பற்றி, அறிவாற்றல் மிக்க நீர்தான் எங்களுக்கு
விபரமாகச் சொல்ல வேண்டும்!”
ஜாம்பவானால் அவ்விதம் கேட்கப்பட்டதும், ஆனந்தத்தின்
மிகுதியால் மயிர்க்கூச்சம் கொண்ட அனுமன், சீதை இருக்கும் திசையில் தலை வணங்கி, பதிலிறுத்தார்.
“கடலின் தென் கரையைப் பார்க்க விரும்பி, நிலைத்த
மனதுடன், நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, மகேந்திர மலையின் உச்சியில் இருந்து
ஆகாயத்தில் கிளம்பினேன்.”
“என் பயணத்திற்கு இடையூறு விளைவிப்பது போல, பொன்னிற
ஒளியுடனும், கவர்ச்சியுடனும், கம்பீரத்துடனும், ஒரு மலைச் சிகரம் அங்கு இருந்தது. அந்த மலை, நான் செல்லும் வழியில் இருந்ததால், அது
எனக்குத் தடையாக இருப்பதாக நினைத்து விட்டேன்.”
“அந்த ஒளி மிகுந்த தங்க மயமான மலைக்கு அருகில்
சென்றதும், இதை நான் பிளக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் முடிவானது.”
“பிறகு, சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டிருந்த
அந்த மலைச் சிகரம், என் வாலினால் ஓங்கியடிக்கப்பட்டதால், ஆயிரம் சுக்கல்களாக நொறுங்கியது.”
“என்னுடைய செயலைப் பற்றி அறிந்து கொண்ட அந்தப்
பெரிய மலையானது, “மகனே!” என்று மனம் உருகும் வண்ணம் அழைத்தது. “மைனாகம் என்ற பெயர்
பெற்ற நான், இந்தப் பெருங்கடலில் வாழ்கிறேன்.
நான் வாயுதேவனுக்கு நண்பன். ஆகவே, தந்தை
வழியில் நான் உனக்கு உறவினன் ஆவேன் என்றது”.
“மகனே! முற்காலத்தில் பெரிய மலைகள் எல்லாம் சிறகுகள்
கொண்டிருந்தன. இந்தப் பூமியில் தங்கள் விருப்பம்
போலத் திரிந்து கொண்டு, மக்களுக்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருந்தன. மலைகளின் இந்த நடவடிக்கைகளை அறிந்த, “பாகன்” என்ற
அரக்கனை வென்ற தேவேந்திரன், தன் வஜ்ராயுதத்தால் மலைகளின் சிறகுகளைப் பலத் துணுக்குகளாய்
வெட்டியெறிந்தான்.”
“மகனே! அந்தச் சமயத்தில், உன் தந்தையான வாயுபகவான்,
என்னை இந்திரனிடமிருந்து காப்பாற்றி, இந்தப் பெருங்கடலில் போட்டு விட்டார்.”
“ஓ! பகைவரை அழிப்பவனே! என்னாலான உதவியை நான்
ஸ்ரீராமனுக்குச் செய்ய வேண்டும். இந்திரனையொத்த
ஆற்றல் மிக்க ஸ்ரீராமன், அறவழியில் நடப்பதில் நிகரற்றவர்!”
“அந்தப் பெரும் மைனாக மலையின் வார்த்தைகளைக்
கேட்ட நான், எனது பயணம் பற்றி அதற்கு விளக்கமாக உரைத்தேன். பின் அங்கிருந்து விடைபெற்று, நான் நினைத்த காரியத்தை
செயல் படுத்த விரும்பினேன்.”
“மனித உருவம் கொண்டிருந்த அந்த மைனாக மலை எனக்கு
விடை கொடுத்தது. மீண்டும் மலையாக மாற்றம் கொண்டு
கடலினுள் சென்று மறைந்தது.”
“நான், இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரத்தை
எண்ணியவனாய், எனது வேகத்தை அதிகப்படுத்தி, நீண்ட நேரம் விரைவாகப் பயணித்தேன்.”
“பிறகு, நடுக்கடலில், ஸுரஸை என்னும் நாக தேவதையைக்
கண்டேன். என்னைப் பார்த்து, அவள், ‘ஓ! வானரோத்தமரே!
தேவர்களால் எனக்கு இரையாவதற்காக நீ நியமிக்கப் பட்டுள்ளாய். நீண்ட நாட்கள் காத்திருந்த எனக்கு இன்று நீ கிடைத்துள்ளதால்,
உன்னை உண்ணப் போகின்றேன்’ என்று சொன்னாள்.”
“ஸுரஸையின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான் மன
வாட்டம் அடைந்தேன். பின் பணிவுடனும், வணக்கத்துடனும்,
அவளிடம் இவ்விதம் சொன்னேன்.”
“தசரத குமாரரான ஸ்ரீமான் ஸ்ரீராமன், தன் சஹோதரரான
இலக்குமணனுடனும், தன்னுடைய மனைவியான சீதையுடனும், தண்டகாவனத்தில் தங்கியிருந்தார். கெட்டவனான இராவணனால், அவருடைய மனைவியான சீதையானவள்,
அபகரித்துச் செல்லப் பட்டாள். ஸ்ரீராமனது ஆணைப்படி,
சீதையின் இருப்பிடம் நோக்கி, நான் தூதுவனாகச் செல்கின்றேன். நீயும் ஸ்ரீராமனது ஆட்சியில் தான் வாழ்கின்றாய். ஆகவே நீயும் உதவி செய்ய வேண்டும்!” அப்படிச் செய்யாவிட்டாலும்,
சீதையையும், எப்பொழுதும் நன்மையே செய்கின்ற ஸ்ரீராமனையும் பார்த்த பிறகு, நானே உன்
வாயில் இரையாக நுழைவேன்! இது சத்தியம்!’ என்றேன்.”
“இவ்விதம் நான் உரைத்த பின்னும், நினைத்த வடிவம்
கொள்ளத்தக்கவளான அந்த ஸுரஸை, ‘இது எனக்குக் கொடுக்கப்பட்ட வரம்! ஆகவே, என்னை யாரும் கடந்து செல்ல முடியாது’ என்றாள்.”
“ஸுரஸையினால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நான்
கணப் பொழுதில், பத்து யோஜனை உயரம் கொண்டவனாகவும், அதில் பாதியளவு உடல் பருமன் கொண்டவனாகவும்
மாறினேன். உடனே அவளின் வாயும் என் உடலின் அளவிற்கேற்பத்
திறந்து கொண்டது. நான் உடனே என் உடலைச் சிறிதாக்கிக்
கொண்டேன். அந்தக் கணத்தில் விரலளவில் சுருங்கிக்
கொண்டேன். பிறகு ஸுரஸையின் வாயில் நுழைந்து
நொடிப் பொழுதில் வெளியே வந்து விட்டேன்.”
“தேவதையான ஸுரஸை, தன் சுயரூபத்தைக் கொண்டாள். மீண்டும் என்னைப் பார்த்து, ‘தோள் வலியனே! உன்னிடத்தில்
எனக்கு அன்பு ஏற்பட்டுவிட்டது. அழகானவனே! நீ நினைத்த காரியம் வெற்றி பெற, உன் பயணம்
சுகமாக அமையட்டும். வைதேஹியை, ஸ்ரீராகவனோடு
சேர்த்து வைப்பாயாக! நீ மகிழ்வுடன் வாழ்வாயாக!’ என்று சொன்னாள்.”
“அனைத்து உயிர்களாலும், ‘நன்று! நன்று!’ என்ற
பாராட்டுக்கு உள்ளானேன். பிறகு நான், அகன்ற
ஆகாயத்தில் கருடன் போலப் பறந்து சென்றேன்.
எனது நிழல் தடைப்பட்டது போல உணர்ந்தாலும், நான் எதையும் பார்க்கவில்லை. எனது வேகம் தடைப் பட்டதும் நான் பத்துத் திக்குகளிலும்
தேடிப் பார்த்தேன். எனது வேகம், எதனால் தடைப்பட்டது
என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.”
“எனது பயணம் தடைப்பட்டாலும் எந்த உருவமும் என்
கண்களுக்குத் தட்டுப்படவில்லை. ‘இதென்ன?’ என்ற
எண்ணமும் என்னுள்ளே ஏற்பட்டது. இவ்விதமான எண்ணத்தில் ஆழ்ந்திருந்த நான், என் பார்வையைக்
கீழே செலுத்திய போது, நீரில் படுத்திருந்த ஒரு கொடும் அரக்கியைக் கண்டேன்.”
“அச்சமூட்டும் வண்ணம் இருந்த அந்த அரக்கி, பெரும்
உற்சாகத்துடன், தன் மனதில் இருந்த அறமற்ற வார்த்தைகளைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல்,
மிகவும் பேரிரைச்சலுடன் சொல்லக் கேட்டேன்.”
“’பருத்த உடலுள்ளவனே! எங்கே செல்கின்றாய்? பசியுடன்
இருக்கும் எனக்கு நீ விருப்பமான உணவாவாய்! நீண்ட நாட்களாக உணவின்றி இருக்கும் என் உடலுக்கு
நீ இன்பத்தை கொடுப்பாயாக!’ என்று சொன்னாள்.”
“நான் உடனே, ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று கூறி,
அவளது வாயின் அளவை விட என் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டேன். என்னைச் சாப்பிடுவதற்காக
அவளது வாயும் பெரியதாகவும், பயங்கரமானதாகவும் வளர்ந்தது. ஆனால் அவள் நான் செய்யும் தந்திரத்தை உணர்ந்து கொள்ளவில்லை. அப்பொழுது நான் நொடிப்பொழுதில் என் உருவத்தைச் சிறிதாக்கிக்
கொண்டு அவளது இதயத்துள் நுழைந்து, அதைப் பிளந்து கொண்டு, ஆகாயத்தில் பறந்தோடினேன்.”
“மலை போலப் பயங்கரமாகப் பருத்திருந்த அவள், அந்த
உப்புக் கடலில், என்னால் இதயம் பிளக்கப்பட்டு, கைகளை விரித்துக் கொண்டு, நீரில் மூழ்கிப்
போனாள்.”
“அப்பொழுது ஆகாயத்தில் உலவும் சித்தர்களும்,
சாரணர்களும், ‘ஸிம்ஹிகை என்னும் பொல்லாத அரக்கி, அனுமனால் ஒரு நொடிப்பொழுதில் கொல்லப்பட்டாள்’
என்று சொல்லக் கேட்டேன்,”
“அவளைக் கொன்ற பிறகு, நான் செய்ய வேண்டிய செயலைச்
சிந்தித்தபடியே, நெடுந்தூரம் பயணம் செய்தேன்.
நான் சென்றடைந்த மலைகள் அடர்ந்த தென் கரையில், அந்த இலங்கை நகரம் இருந்தது. சூரியன் மறைந்து இருட்டான பிறகு, அரக்கர்கள் வசிக்கும்
அந்த நகரத்தினுள், அந்தக் கொடிய அரக்கர்களின் கண்களுக்குப் புலப்படா வண்ணம் நுழைந்தேன்.”
“அவ்வாறு நுழையும் போது, யாரோ ஒரு பெண், ஊழிக்கால
மேகம் போல, கர்ஜனை செய்து கொண்டு என் எதிரில் வந்தாள். நெருப்பைப் போல ஒளிர்ந்துகொண்டிருந்த தலைமுடியையும்,
பயங்கரமான உருவத்தையும் கொண்டு, என்னைக் கொல்வதற்காக வந்த அவளை, நான் என் இடக்கை முஷ்டியினால்
தாக்கினேன். அஞ்சி நடுங்கித் தோல்வியுற்ற அவள்,
‘ஏ! வீரனே! நான் லங்கை நகரத்தின் தெய்வம் ஆவேன். உன் பராக்ரமத்தால் நான் தோற்றுப் போனதால்,
நீ அனைத்து அரக்கர்களையும் வென்றவனாகிறாய்! என்று சொன்னாள்.”
“பிறகு நான், இரவு முழுவதும் ஜனகனின் மகளைத்
தேடித் திரிந்து, இராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்தேன். அங்கும், சிற்றிடையை உடையவளான
சீதையை நான் காணவில்லை. பிறகு இராவணனுடைய இல்லத்திலும் சீதையைக் காண இயலாததால், கரைகாணாத்
துன்பத்திற்கு உள்ளானேன்.”
“இவ்வாறு கவலையுற்றுக் கலங்கிய மனம் கொண்டிருந்த
நான், பொன்னால் செய்யப்பட்ட சுற்றுச் சுவர்களைக் கொண்டிருந்த, அதிசயமாகவும், அற்புதமாகவும்
இருந்த ஒரு பூந்தோட்டத்தைக் கண்டேன்.”
“அந்த மதில் மேல் தாவி ஏறிய நான், நிறைய மரங்கள்
அடர்ந்த ஒரு தோப்பைக் கண்டேன். அந்த அசோக வனத்தின்
நடுவில், ஒரு பெரிய சிம்சுபா மரத்தைக் கண்டேன்.
அதில் ஏறிப் பார்க்கும் போது, பொன்னிறமான வாழைத் தோட்டத்தைக் கண்டேன். அதற்குச்
சற்றுத் தூரத்தில் சிம்சுபா மரத்தினடியில் நான் அந்த அழகு தேவதையைக் கண்டேன்.”
“இளமை மிடுக்கில் இருந்த அவள் கண்கள், தாமரை
இதழ்கள் போல இருந்தன. உண்ணா நோன்பில் இருந்ததால் அவளின் உடல் மெலிந்திருந்தது. அவளது
தலைமுடி அழுக்குடனும், மாற்று உடையணியாமல் ஒரே உடையுடனும் இருந்தாள். அதிகத் துன்பத்தால் கலங்கியவளாகவும், கணவனுக்கு
நன்மை வேண்டும் என்று மனதில் நினைப்பவளாகவும் இருந்தாள். இரத்தம், மாமிசம் போன்றவற்றை உண்ணும் அதி பயங்கரமான
தோற்றம் கொண்ட அரக்கியரால் சூழப்பட்டிருந்தாள்.
பெண் புலிகளால் சூழப்பட்ட மான் குட்டியின் நிலை எவ்வாறு இருக்குமோ, அவ்வாறான
நிலையிலேயே இருந்தாள்.”
“அரக்கியரால் சூழப்பட்டிருந்த அவள், அவர்களால்
அடிக்கடி மிரட்டப்பட்டாள். ஒற்றைப் பின்னலுடன்,
கணவனையே நினைத்துக் கொண்டிருந்த அவளது நிலை, மிகவும் இரக்கம் கொள்ளத்தக்கதாய் இருந்தது. தரையே அவளது படுக்கையாக இருந்தது. பனிக் காலத் தாமரைத்
தடாகம் போலக் களையிழந்து இருந்தாள். இராவணனது
துன்புறுத்தல்களினால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் உறுதியில் இருந்தாள். மானின் கண்களைப் போலக் கண்களைக் கொண்டிருந்த அவளின்
அருகில் நான் எவ்வாறோ சென்றேன்.”
“பெருமை மிக்க ஸ்ரீராமனின் மனைவியான,
அப்பழுக்கற்ற சீதையை அப்படிப்பட்ட நிலையில் பார்த்த நான், அந்த சிம்சுபா மரத்தின் மீது
நின்று விட்டேன். அப்போது இராவணனது மாளிகையிலிருந்து
இடையில் அணியும் ஆபரணங்கள் மற்றும் சலங்கைகள் எழுப்பிய பேரொலியைக் கேட்டேன். இதனால் மிகவும் கவலை கொண்ட நான், என் உடலை மிகவும்
சிறியதாக ஆக்கிக் கொண்டேன். சிம்சுபா மரத்தின்
இலைகள் அடர்ந்த பகுதியில் ஒரு பறவையைப் போல அசையாமல் இருந்தேன்.”
“அப்பொழுது சீதை இருக்குமிடத்திற்கு, வலிமை மிக்க
இராவணனும், அவனது மனைவியரும் வந்தனர். சிறப்பு
மிக்க சீதை, அந்த அரக்கர் குல அரக்கனைக் கண்டதும், தனது தொடைகளை மடக்கிக் கொண்டு, தனது
கைகளால் தனது பெருத்த மார்பகங்களை மூடிக்கொண்டாள்.”
“அதிகத் துன்பத்தில் நடுங்கிய வண்ணம் தன்னைக் காப்பாற்ற யாரும் வருவார்களா? என்று அங்குமிங்கும் பார்த்து, யாரும் இல்லாததால், மிகவும் கவலை கொண்டு, மதி மயங்கியும் இருந்தாள். கற்பு நெறி தவறாத அந்தச் சீதையைப் பார்த்த தசகண்ட இராவணன், தலை கவிழ்ந்து, ‘ஏ! சீதையே! நீ என்னை மதிக்க வேண்டும். செருக்கு மிக்கவளே! அகந்தை கொண்டு நீ என்னை அவமதித்தால், இவ்விதம் மேலும் இரண்டு மாதங்கள் நீ இருந்தாயானால், உன் இரத்தத்தை நான் குடித்து விடுவேன்’ என்று சொன்னான்.”
“கேடு கெட்ட இராவணனின் வார்த்தைகளைக் கேட்ட சீதை
மிகவும் கோபம் கொண்டவளாய், மிகவும் சிறப்பான தன் பதிலைச் சொன்னாள்.”
“இழிந்தவனே! இஷ்வாகு குலத்தின் தலைவரான தசரதரின்
மருமகளும், அளவற்ற ஆற்றல் மிக்க ஸ்ரீராமனின் மனைவியுமானவளைப் பார்த்து, இவ்விதம் சொல்லத்
தகாத வார்த்தைகளைப் பேசும் உன் நாக்கு, இன்னும் ஏன் அறுந்து விழாது இருக்கிறது?”
“மானமிழந்த பாவியே! கணவன் உடன் இல்லாத சமயம்,
அவர் அறியாவண்ணம் என்னைக் கவர்ந்து வந்தது ஒரு வீரமான செயாலா? நீ ஸ்ரீராமனுக்கு ஈடாகமாட்டாய். அவரைப் பணிந்து அவருக்கு ஒரு சேவகனாக இருக்கவும்
உனக்குத் தகுதி இல்லை. யாராலும் வெல்ல முடியாத,
உண்மையையே பேசும் இராகவர், போர் புரிவதில் பெரும் ஈடுபாடு கொண்டவர்.” என்று சொன்னாள்.”
“தசமுக இராவணன் ஜானகியிடமிருந்து இவ்விதமான கொடூரமான,
வலிமையான வார்த்தைகளைக் கேட்டதும், உடனே சிதையில் மூட்டப்பட்ட நெருப்புப் போல ஆத்திரம்
அடைந்தான். சிவந்த கண்களை உருட்டி விழித்தபடி,
தன் வலது கை முஷ்டியை ஓங்கி, சீதையைத் தாக்க முயற்சித்தான். உடனிருந்த பெண்கள், ‘ஆ’ வென அலறி ஓலமிட்டார்கள்.”
“அந்த மோசமானவனின் உத்தம மனைவியான மண்டோதரி என்பவள்,
பெண்களின் நடுவிலிருந்து வெளிப்பட்டு, அவனை விலக்கினாள்.”
“காம வசப்பட்டிருந்த அவனிடம், மண்டோதரி, இதமான
வார்த்தைகளால், ‘இந்திரனுக்கு ஈடான ஆற்றல் மிக்கவரே! இந்த சீதையினால் உமக்குக் கிட்டப்
போகும் நன்மை தான் என்ன? பிரபுவே! இங்கிருக்கும் தேவ, கந்தர்வ கன்னிகளுடனும், யக்ஷ
கன்னிகளுடனும் விளையாடி இன்புற்றிருங்கள். சீதையை வைத்துக் கொண்டு என்ன அடையப்போகின்றீர்கள்?’
என்றாள்.”
“பெரும் வலிமை வாய்ந்த அந்த அரக்கன், அப்பொழுது
உடனிருந்த பெண்களால் சமாதானம் செய்யப்பட்டு, அவனுடைய அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்
பட்டான்.”
“அந்தப் பதின்முகன் அங்கிருந்து சென்றதும், விகாரமான
முகமுடைய அரக்கிகள், இரக்கமற்ற கொடிய வார்த்தைகளால் சீதையை மிரட்டினார்கள். ஜானகி அவர்களின்
வார்த்தைகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
ஆகவே, அவர்களின் செயல்களால் ஒரு பயனுமில்லாது போனது.”
“இரைந்து மிரட்டியதெல்லாம் வீணாகிப் போனதும்,
அந்தப் பிணம் தின்னும் அரக்கியர், இராவணனிடம் சென்று, ‘சீதையின் மனத் துணிவு மிகவும்
வலிமையானது’ என்று உரைத்தார்கள்.
“பிறகு அந்த அரக்கியர், தாங்கள் நினைத்ததைச் செயலாக்க
முடியாதவர்களாகி, அவளை நான்கு புறங்களிலும் சூழ்ந்துகொண்டு உறங்கத் தொடங்கினர்.”
“அவர்கள் உறங்கியதும், கணவனின் நலன் ஒன்றிலேயே
மனம் ஈடுபட்ட சீதை, மிகவும் துன்பம் மேலிட, கலக்கத்துடன் பரிதாபம் மேலிட, புலம்பி,
நொந்து கொண்டாள்.”
“அவர்களின் நடுவிலிருந்து, திரிஜடை என்பவள் எழுந்து
வந்து, அந்த அரக்கியரிடம் பின் வருமாறு கூறினாள்.”
“உங்களை இப்பொழுதே, நீங்களே சாப்பிட்டுக் கொள்ளுங்கள். தசரதரின் மருமகளும், ஜனகரின் மகளும், கற்புக்கரசியுமான
சீதைக்கு அழிவு நேரப் போவதில்லை.”
“என்னால் உண்மையாகவே இப்பொழுது ஒரு கனவு காணப்பட்டது.
நினைக்கவே அச்சமூட்டும் வண்ணமும் மயிர்க்கால்கள்
சிலிர்க்கும் வண்ணமும் அந்தக் கனவு இருந்தது.
அது அரக்கர்களின் அழிவைப் பற்றியதாகவும், இவளது (சீதையின்) கணவனின் வெற்றியைப்
பற்றியதாகவும் இருந்தது.”
“இராகவனிடமிருந்து அரக்கியர்கள் கூட்டத்தை முழுவதுமாகக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாம் வைதேஹியை வணங்கி
வேண்டிக் கொள்ளுவோம். இதுவே சரியென்று எனக்குத் தோன்றுகிறது.”
“மிகவும் துன்பத்திலிருக்கும் யாரைப் பற்றி இவ்விதமான
கனவு ஏற்படுகிறதோ, அவள் தான், அனைத்துவிதமான இன்னல்களிலிருந்தும் விடுபட்டு, அளவற்ற மேன்மையான இன்பத்தைப் பெறப் போகின்றாள். நாம் பணிவுடன் கேட்டால், ஜனகனின் மகளான மைதிலி மகிழ்ச்சியடைவாள்
என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இந்த அளவற்ற
பயத்திலிருந்து அரக்கியரான நம்மைக் காப்பாற்றுவாள்.”
“அப்பொழுது தன் கணவனின் வெற்றிச் செய்தியைக்
கேட்ட நாணமிகுந்த நங்கையான சீதை, மகிழ்ச்சி கொண்டாள். ‘நீங்கள் சொல்வது உண்மையென்றால், உங்களுக்கு நிச்சயம்
அடைக்கலம் தருவேன்’ என்றாள்.”
“சீதையின் அந்தக் கொடுமையான, இரக்கப்படத்தக்க
நிலையைப் பார்த்ததும், நான் நிதானத்துடன் மனதினுள் நினைக்கலானேன். ஆனால் என் மனம் அமைதியுறவில்லை. சீதையுடன் பேசுவதற்கான ஒரு தக்க யோசனை மனதில் தோன்றியது. எனவே, இதன் காரணமாக, இஷ்வாகு வம்சத்தின் சிறப்பைப்
புகழ்ந்துரைக்கலானேன்.”
“ராஜரிஷிகளின் வம்ச பரம்பரையைப் பற்றிய வார்த்தைகளை
நான் சொல்லக் கேட்ட தேவி சீதை, கண்ணீர் தளும்பும் கண்களை மூடியவளாய் என்னைப் பார்த்துச்
சொன்னாள்.”
“’வானரோத்தமனே! நீர் யார்? எந்தக் காரணத்திற்காக,
எவ்விதமாக நீர் இங்கு வந்தீர்? இராமனுடனான நட்பு உமக்கு எவ்விதம் ஏற்பட்டது? இவற்றை அருள் கூர்ந்து எனக்கு விளக்குவீராக!’ என்றாள். அதைக் கேட்ட நான் இவ்வாறு பதிலுரைத்தேன்.”
“தேவீ! உமது கணவரான ஸ்ரீராமனுக்கு சுக்ரீவன்
என்றொரு நண்பர் இருக்கின்றார். அவர் வானரர்களின்
அரசன். மிகுந்த பலமும், ஆற்றலும் மிக்க போர்
வீரர் அவர். இங்கு வந்துள்ள நான், அவருடைய மந்திரியான அனுமன் என்பவன் ஆவேன் என்பதை
அறிந்துகொள்ளுங்கள். எந்தச் செயலையும் குறைவின்றி
நிறைவேற்றும் ஆற்றல் மிக்க உமது கணவரான ஸ்ரீராமனால், உங்களுக்காக தூதுவனாக அனுப்பப்பட்டுள்ளேன்.”
“புகழ் மிக்கவரே! சிறப்பு வாய்ந்த மாமனிதரான தாசரதியும் (ஸ்ரீராமன்)
உமக்கு அடையாளம் காட்டுவதற்காகத், தாமே இந்தக் கணையாழியைக் கொடுத்தனுப்பினார்.”
“ஆகவே, உங்கள் ஆணையை வேண்டுகிறேன். நான் என்ன செய்வது? ஸ்ரீராம, இலக்குமணர்கள் இருக்குமிடத்திற்கு
உம்மை அழைத்துச் சென்று விடவா? எனக்குத் தகுந்த மறுமொழி கூறுங்கள்! என்றேன்.”
“என்னுடைய வார்த்தைகளைக் கேட்ட ஜனகரின் திருமகளான
சீதை, என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து, ‘ஸ்ரீராகவரே இராவணனை அழித்துவிட்டு என்னை
அழைத்துச் செல்லட்டும்’ என்று பதில் உரைத்தாள்.”
“களங்கமற்றவளும், நற்குணங்கள் மிக்கவளுமான தேவியை
நான் தலை வணங்கினேன். பிறகு ஸ்ரீராமனுக்கு
மகிழ்ச்சி தரும் விதமான ஒரு அடையாளத்தை என்னிடம் தருமாறு வேண்டினேன்.”
“’எதைப் பார்த்ததும் ஸ்ரீராமன் உம்மை மிகவும்
மதித்துக் கொண்டாடுவாரோ, அந்த சிறப்புமிக்க மணியை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீராக!’
என்று சொன்னாள்.
“களங்கமற்றவளான சீதை இவ்வாறு சொல்லிய பின்னர்,
மிகவும் உன்னதமான மணிரத்தினத்தை என்னிடம் தந்தார். மிகவும் கவலையுடன் வாய்மொழியாகவும் என்னிடம் செய்தியைச்
சொன்னாள்.”
“நான் வந்த நோக்கம் ஈடேறியவனாய், இங்கு திரும்பி
வர முடிவு செய்து, அந்த அரச குமாரியை வலம் வந்து வணங்கினேன்.”
“’இன்னும் இரண்டு மாதங்களே நான் உயிர் தரித்திருப்பேன். உம்முடைய இந்த முயற்சி வெற்றி பெறா விட்டால், நான்
அனாதரவாக உயிரை விட்டு விடுவேன். காகுஸ்தர் (ஸ்ரீராமன்) என்னைக் காண முடியாது’ என்றாள்.”
“அவருடைய இந்த மனதை உருகச் செய்யும் வார்த்தைகளைக்
கேட்டவுடனே, எனக்குப் பெருங்கோபம் உண்டாகி விட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவும் மனதில்
தோன்றி விட்டது.”
“உடனே, மலைக்கு நிகராக என் உருவத்தைப் பெரிதாக்கிக்
கொண்டேன். போர் புரிய வேண்டும் என்ற வேட்கை
கொண்டவனாய் நான் அந்த வனத்தை நாசம் செய்ய ஆரம்பித்தேன்.”
“அப்பொழுது, உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட,
சிதைந்த முக அமைப்புக்களைக் கொண்டிருந்த அரக்கியர், மிருகங்களும் பறவைகளும் பயத்துடன்
அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நாசமடைந்து கிடக்கும் வனத்தின் பகுதிகளைக் கண்டார்கள்.”
“அந்த வனத்தில் இருந்த அரக்கியர் கும்பலாக ஒன்று
கூடி என்னைக் கண்டனர். உடனே இராவணனிடம் சென்று
செய்தியைத் தெரிவித்தார்கள். ‘ஆற்றல் மிக்க
அரசே! யாரும் புக முடியாத உங்களது வனம், உங்களது சக்தியை அறியாத ஒரு துஷ்ட வானரத்தால்
அழிக்கப்பட்டது’ என்றார்கள்.”
“’தங்களுக்கு விருப்பமற்ற செயலைச் செய்த அந்த
மதியிழந்த வானரத்தைக் கொல்வதற்கு உடனே ஆணையிடுங்கள். அப்பொழுதுதான் அது தப்பிவிடாமல்
இருக்கும்’ என்றார்கள்.”
“இதைக் கேட்ட இராவணன், அவனுடைய மனதை அறிந்து
நடப்பவர்களும், வெல்வதற்கு அரியவர்களுமான கிங்கரர்கள் என்றழைக்கப்படும் அரக்கர்களை
ஏவி விட்டான்.”
“சூலமும் சம்மட்டியும் கைகளில் ஏந்திக் கொண்டு,
எண்பதாயிரம் அரக்கர்கள் அங்கு வந்தனர். வனத்தின்
ஓரிடத்தில் அவர்கள் அனைவரையும் ஒரு இரும்பு உலக்கையை வைத்துக் கொண்டு அடித்துக் கொன்றேன். அதில் தப்பிப் பிழைத்தவர்கள் சிலர், விரைந்து சென்று,
அந்தப் பெரும் படை அழிந்துவிட்ட செய்தியை இராவணனிடத்தில்
தெரிவித்தனர்.”
“அப்பொழுது எனக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. அங்கிருந்த யாகசாலை போன்ற ஒரு கட்டிடத்தை நெருங்கினேன். அங்கிருந்த அரக்கர் பலரையும் அங்கிருந்தத் தூணைப்
பிடுங்கி அதனால் அடித்துக் கொன்றேன். இலங்கை
நகருக்கே அழகூட்டுவதாய் விளங்கிய அந்த மாளிகையைத் தரை மட்டமாக்கினேன்.”
“பிறகு இராவணன், பிரஹஸ்தனுடைய மகனாகிய ஜம்புமாலி
என்பவனை, பயங்கரமான கோரமான உருவங்களைக் கொண்ட பற்பல அரக்கர்கள் துணையுடன் (என்னுடன்) போரிட, அனுப்பி வைத்தான்.
“பலமான சேனையுடன் வந்த போரில் வல்லவனான அவனை,
நான் மற்ற அரக்கர்களுடன் சேர்த்து, மிகப் பயங்கரமான இரும்பு உலக்கையைக் கொண்டு அடித்துக்
கொன்றேன்.”
“அதைக் கேள்வியுற்ற அரக்கர்குல அரசனான இராவணன்,
பெரும் காலாட்படைகளுடன், பெரும் ஆற்றல் கொண்ட மந்திரிகுமாரர்களை (என்னுடன் போரிட) அனுப்பினான்.
அந்த இரும்பு உலக்கையைக் கொண்டே நான் அவர்கள் அனைவரையும் எமனுலகிற்கு அனுப்பி வைத்தேன்.”
“சுறுசுறுப்பு மிக்க பேராற்றல் கொண்ட மந்திரிகுமாரர்கள்
போரில் இறந்துவிட்டதைக் கேட்ட இராவணனும் உடனே, தனது ஐந்து வீரம் மிக்க படைத்தளபதிகளைப்
போருக்கு அனுப்பினான். நான் அவர்கள் அனைவரையும், அவர்களுடன் வந்த சேனைகளோடு
கொன்றேன்.”
“அதன் பின்னர், தசமுகனான இராவணன், தன் மகனும்,
மிகச் சிறந்த வீரனுமான அக்ஷன் என்பவனைப் பல அரக்கர்கள் சூழ்ந்துவர, என்னுடன் போருக்கு அனுப்பினான்.”
“மண்டோதரியின் மகனான அவன் போர் புரிவதில் வல்லவன். ஆகாயத்தில் பறந்து சென்ற அவனை, சட்டென அவனது இரண்டு
கால்களையும் பற்றிக் கொண்டு, பல முறை சுழற்றி, பூமியில் வீசியெறிந்து கொன்றுவிட்டேன்.”
“அக்ஷன் அழிந்ததைக் கேட்ட தசமுக இராவணன், பெருஞ்சினம்
கொண்டான். மிகுந்த பலசாலியும் போர்வெறி கொண்டவனுமாகிய
இந்த்ரஜித் என்றழைக்கப்படும் தன் இரண்டாவது மகனைப் போருக்கு அனுப்பினான். நான் அந்தப் படையையும், அரக்கர் திலகமான அவனையும்
போரில் பலமிழக்கச் செய்து, பெரும் மகிழ்ச்சி கொண்டேன்.”
“மிகுந்த நம்பிக்கையுடன், போர்வெறி மிக்க வீரர்களுடன்
இராவணனால் அனுப்பப்பட்ட அந்த ஆற்றல் மிக்க
வீரன், மிகுந்த வலிமை மிக்கவனாக இருந்த போதிலும், தன் படைகள் அழிவுற்றதைக் கண்டான். நான் யார் என்பதை அறிந்து கொள்ள இயலாத நிலையில்,
அவன், பிரம்மாஸ்திரம் கொண்டு வெகு விரைவில் என்னைப் பிணைத்து விட்டான்.”
“அப்பொழுது அங்கிருந்த அரக்கர்கள், மேலும் கயிறுகளைக்
கொண்டு என்னைக் கட்டினார்கள். என்னை இழுத்துக்
கொண்டு சென்று இராவணன் அருகில் சேர்ப்பித்தார்கள்.”
“நான் இராவணனைப் பார்த்த போது, என்னிடம் பேசிய
அந்தக் கேடு கெட்ட இராவணன், நான் இலங்கைக்கு வந்த நோக்கம் பற்றியும், நான் அரக்கர்களைக்
கொன்றது பற்றியும் விசாரித்தான். அதற்கு நான்,
‘என்னுடைய செயல்கள் அனைத்தும் சீதைக்காகவே நிகழ்ந்தது’ என்று கூறி மேலும் இவ்விதம்
விளக்கம் அளித்தேன்.”
“பிரபுவே! நான் சீதையைக் காணும் ஆவலில் உங்கள்
அரண்மனைக்கு வந்தேன். அனுமன் என்றழைக்கப்படும்
வானரனான நான், வாயு பகவானின் உடலிலிருந்து தோன்றிய மகனாவேன். ஸ்ரீராமனுடைய தூதுவனான
நான், சுக்ரீவனின் மந்திரியுமாவேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஸ்ரீராமனுடைய தூதுவனாக நான் இப்பொழுது இங்கு வந்து
சேர்ந்தேன். என்னுடைய தலைவனின் செய்தியை உம்மிடம்
சொல்கின்றேன், கேளுங்கள்! அரக்கர் குல அரசே!
வானர வேந்தன் சுக்ரீவன், முழுமுனைப்பாகச் சொல்லி அனுப்பிய செய்தியில் கவனத்தைச் செலுத்துங்கள்!”
“பேரொளி வீசக் கூடிய அந்த சுக்ரீவன், உங்களது
நலத்தை விசாரித்தார். அறம். பொருள், மற்றும்
இன்பம் ஆகிய மூன்றனுக்கு இசைந்தவாறு, நன்மை விளைவிக்கக்கூடிய பின் வரும் வார்த்தைகளைத்
தெரிவிக்கச் சொன்னார்.”
“வாலியினால் அரசிழந்த சுக்ரீவனோடு, பிரபுவான
இராகவனும், உடனிருந்த இலக்குமணனும், நெருப்பின் சாட்சி கொண்டு, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
போரில் வாலியை ஒரே அம்பினால் கொன்று அழித்த ஸ்ரீராமன், வானரர்களின் தலைவனாகிய சுக்ரீவனை,
வானரர்களின் பேரரசனாக நியமித்தார். ஆகவே இந்த விஷயத்தில், நாங்கள் (வானரர்கள்) முழுமனதுடன்,
குறைகள் எதுவுமின்றி அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமையாகும். அதன் பொருட்டே, அறவழியில்
உம்முடைய இடத்திற்கு இப்பொழுது தூதுவனாக அனுப்பப் பட்டுள்ளேன்.”
“ஆகவே, வானர வீரர்கள், உங்களது ஆற்றலைச் சோதிக்கும்
நிலை ஏற்படுவதற்கு முன்பே, உடனடியாகச் சீதை, திரும்பவும் அழைத்துச் செல்லப்பட்டு, இராகவனிடம்
ஒப்புவிக்கப் படவேண்டும்.”
“தேவர்களால் தங்கள் உலகத்திற்கு விருப்பப்பட்டு
அழைக்கப்படும் வானரர்களின் ஆற்றலை இதுவரை அறிந்திராதவர்கள் யாரும் இல்லை.”
“’வானர அரசனால் சொல்லப்பட வேண்டியனவாகச் சொல்லியனுபப்பட்ட
அனைத்தும் என்னால் உமக்குச் சொல்லப்பட்டு விட்டன’ என்றேன். இதைக் கேட்டதும் கடுங்கோபம் கொண்ட அவன், கண்களாலேயே
என்னை எரித்துவிடுபவன் போலப் பார்த்தான்.”
“என்னுடைய ஆற்றலை அறிந்து கொள்ளாத, கொடுந்தொழில்
புரியும் மோசமான அந்த இராவணன் என்னும் அரக்கன், எனக்குக் கொலைத்தண்டனை விதித்தான்.”
“அப்பொழுது அங்கு, அறிவாற்றல் கொண்ட விபீஷணன்
என்னும் அவனுடைய தம்பியானவர் என் பொருட்டு, அரக்கனிடம் வேண்டினார்.”
“’அரக்கர்களில் சிறந்தவரே! இது செய்யத் தகாதது!
இந்தக் கருத்தை விட்டு விடுங்கள். ஏனென்றால்,
உம்மால் அரச நீதிக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அரசே! அரச நீதி விதிமுறைகளில் தூதுவனுக்கு மரண தண்டனை
விதிப்பது பற்றி சொல்லப்படவில்லை. நல்ல முறையில் சாதகமான செய்திகளைச் சொல்லும் தூதுவனின்
மூலமே உண்மை நிலையினை அறிந்து கொள்ள வேண்டும்.
பெரும் வீரரே! மிகப் பெரிய குற்றம் செய்திருப்பினும் நீதி நூல்களின்படி கொலைத்
தண்டனை என்பது தூதுவனுக்குக் கிடையாது. அவனது
உடல் அங்கங்களை பங்கம் செய்யலாம் என்றே கூறப்பட்டுள்ளது’ என்றார்.”
“விபீஷணனால் மேற்கண்டவாறு வேண்டிக் கொண்டதன்
பிறகு, இராவணன் அந்த அரக்கர்களைப் பார்த்து, ‘இதுவே சரியானது! இதனுடைய வால் எரியூட்டப் படட்டும்’ என்று ஆணையிட்டான்.”
“அரசனது அந்த உத்தரவைக் கேட்டதும், எனது வால்
பகுதி முழுவதும் பருத்திப் பஞ்சினால் செய்த துணிகளாலும், சணற்கயிறுகளாலும் சுற்றப்பட்டது.
வெறி மிகுந்த அந்த அரக்கர்கள் என் மீது ஆத்திரம் கொண்டு, கட்டைகளாலும், கை முட்டிகளாலும்
என்னைத் தாக்கியபடி, எனது வாலில் தீ மூட்டினார்கள்.”
“இலங்கை நகரத்தைப் பகற்பொழுதில் பார்க்க விரும்பியிருந்த
நான், கட்டப்பட்டு அரக்கர்களால் துன்புறுத்தப் பட்டபோதிலும், சிறிதும் சோர்வடையவில்லை. அந்த அரக்க வீரர்கள், என்னை நகரத்தின் வாயிலுக்கு
இழுத்து வந்து, கட்டுக்களுடன் எரிந்து கொண்டிருந்த என்னைப் பற்றி அந்த ராஜ வீதியில்
இரைந்து கூவினார்கள்.”
“அப்பொழுது நான் எனது பெரிய உருவத்தை மறுபடியும்
சிறியதாக ஆக்கிக்கொண்டு, அந்தக் கட்டுக்களிலிருந்து விடுபட்டு விட்டு, மீண்டும் எனது
பழைய வடிவத்தை அடைந்தேன். ஓர் இரும்பு உலக்கையைக் கொண்டு அந்த அரக்கர்களைக் கொன்றேன். பிறகு நான் அந்தக் கோட்டை வாயிலின் மீது வேகமாகத்
தாவி ஏறினேன்.”
“பிரளய காலத்து நெருப்பு மக்களை எவ்விதம் எரிக்குமோ,
அது போல நான் அவசரம் எதுவுமின்றி, என் வாலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பினால், இலங்கை
நகரத்தின் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கினேன்.”
“’நகரம் முழுவதும் எரிந்து விட்டது. இலங்கையில்
பற்றியெரியாத இடம் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. ஆகவே, சீதை உறுதியாக உயிருடன் இருக்க முடியாது. இலங்கையைக் கொளுத்திய என்னால் சீதையும் கொளுத்தப்பட்டாள்,
இதில் ஐயம் எதுவுமில்லை. ஸ்ரீராமனுக்காகச்
செய்ய வேண்டியிருந்த பெரும் செயல் என்னால் வீணடிக்கப்பட்டு விட்டது!.’ இவ்விதம் என் மனதில் தோன்றிய எண்ணத்தினால் எனக்கு
பெரும் மன வேதனை ஏற்பட்டது.”
“அப்பொழுது ஆகாயத்தில் உலவும் சாரணர்கள் மிகுந்த
வியப்புத் தோய்ந்த குரலில், ‘சீதை மட்டும் எதுவும் துன்பம் நேராமல் இருக்கின்றாள்!’
என்று கூறிய நல் வார்த்தைகளைக் கேட்டேன்.”
“மேலே அவ்வாறு கூறப்பட்ட அந்த நல்ல வார்த்தைகளை
அசரீரியாகக் கேட்டதாலும், எனக்குத் தோன்றிய நல்ல நிமித்தங்களாலும், ‘சீதை எரியுறவில்லை’
என்று அறிந்ததால் மனம் தெளிவுற்றேன்.”
” ஏனென்றால் எனது வால் எரிந்து கொண்டிருந்த
போதும், நெருப்பு என்னைச் சுடவில்லை. மாறாக,
வீசிய காற்றில், குளிர்ந்த நறுமணமே வீசியதை என் மனம் உணர்ந்தது.”
“நான் நேரில் உணர்ந்த நல் நிமித்தங்களாலும்,
நற்பலனை அளிக்கக் கூடிய காரணங்களாலும், ஆன்றோர்களின் சொற்களைக் கேட்டதாலும் மனம் திருப்தி
அடைந்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். ஆகவே, மீண்டும் வைதேஹியைக் கண்களால் கண்டு வணங்கினேன்.
அவளிடம் விடை பெற்றுக் கொண்டேன். அங்கிருந்த
அரிஷ்டம் என்ற மலையை மீண்டும் சென்றடைந்தேன்.
உங்களைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் மீண்டும் பறந்து வருவதற்கு ஆயத்தமானேன்.”
“பிறகு காற்று, சூரிய சந்திரர்கள், சித்தர்கள்,
கந்தர்வர்கள் உலவும் ஆகாயத்தில் தாவிப் பறந்து வந்து, நான் இங்கே உங்களைப் பார்த்து
விட்டேன்.”
“இராகவனுடைய அருளாலும், உங்கள் அனைவரின் ஆற்றலாலும்
சுக்ரீவன் நினைத்த காரியம் நிறைவேறும் வண்ணம், அனைத்தும் செயற்படுத்தப்பட்டது.”
“இந்த விதமாக அங்கு நடந்தவை யாவையும்
நான் சுருக்கமாகக் கூறிவிட்டேன். ஆகவே, இனிமேல்
நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யலாம்.”
ஐம்பத்தெட்டாவது ஸர்கம் நிறைவு.











No comments:
Post a Comment