Tuesday, January 9, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் அறுபத்திரண்டாவது ஸர்கம்.

 

                                            

                                  ஸ்ரீ வால்மீகி ராமாயணம் 

                                  சுந்தர காண்டம்

                   அறுபத்திரண்டாவது ஸர்கம்.


     சிங்கத்திற்கு இணையான வலிமை வாய்ந்தவரும், சிறப்பு மிக்க வானரருமான அனுமன், அவர்களைப் பார்த்து, ‘ஏ! வானரர்களே! நீங்கள் கவலையற்ற மனத்தினராய் மதுவை அருந்துங்கள்! உங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை நான் விலக்கி விடுகிறேன்!’ என்று சொன்னார்.

     வானரர்களின் தலைவனான அங்கதன், அனுமனின் வார்த்தைகளைக் கேட்டு அதை ஆமோதிக்கும் வண்ணம் இவ்விதமாகப் பதில் சொன்னான்.

     “வானரர்கள் மது அருந்தட்டும்.  தன் காரியத்தை வெற்றிகரமாக முடித்து வந்துள்ள அனுமனின் வார்த்தைகள் ஏற்புடையனவல்லவாகினும், நான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இந்த விஷயத்தில் நான் என்ன சொல்வது?” என்றான்.

     பெரும் வானர வீரர்களான அவர்கள் அங்கதன் மொழிந்த வார்த்தைகளால் அகமகிழ்ந்து, ‘நன்று! நன்று!’ எனப் பாராட்டினார்கள்.

     எல்லா வானரர்களும், உயர்ந்த வானரரான அங்கதனைப் போற்றி வணங்கி, மேலும் மது இருக்கும் வனங்களை நாடி, திடீரென்று பெருகும் காற்று வெள்ளம் போல ஓடினார்கள்.

     சீதையைக் கண்டு வந்த அனுமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மனம் மகிழ்ந்ததாலும், தங்கள் விருப்பம் போல மது அருந்த அனுமதி பெற்றதாலும், மேலும் உற்சாகம் கொண்ட அவர்கள், மதுவனத்தில் புகுந்தார்கள்.  அங்கிருந்த காவலர்களை மதிக்காமல், செருக்குடன் அலட்சியம் செய்து, மது அருந்தினார்கள்.  அங்கிருந்த சாறு நிரம்பிய பழங்களையும் பறித்து உண்டார்கள்.

     மது வனத்தின் பொறுப்பாளர்களும் காவல்காரர்களும் அருகில் நெருங்கி வந்தனர்.  அவர்களை எல்லா வானரர்களும் உயரக் குதித்துக் குதித்துப் பலவாறாகத் தாக்கினார்கள்.

     “ஒன்று கூடிய அவர்கள் அனைவரும் கைகளால் மதுக் குப்பிகளை வாங்கிக் கொண்டு குடித்து மகிழ்வுற்றார்கள்.  தேனைப் போன்ற வண்ணத்தில் இருந்த வானரர்கள், மதுவைக் குடித்துவிட்டு, அதைக் கீழே சிந்திப் பாழாக்கினார்கள்.  மது வெறியில் சிலர் தேனடைகளால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.  போதை தலைக்கேறி நிதானமிழந்த சிலர், மரக்கிளைகளைத் தாங்கிப் பிடித்தபடி நின்றிருந்தனர்.

     அப்பொழுது மதுவின் மயக்கத்தால் மதம் கொண்ட வானரர்கள் சிலர் தட்டுத் தள்ளாடியபடி வீழ்ந்தார்கள்.  சிலர் மரத்தினடியிலேயே இலைகளைப் பரப்பிப் படுத்துக் கிடந்தார்கள்.  சிலர் போதை தலைக்கேற, ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டார்கள்.

     சிலர் கேலியாகக் குதித்து விளையாடினார்கள். சிலர் தங்களின் உற்சாகத்தின் வெளிப்பாடாய்க் கீச்சு கீச்சு என்று சப்தமிட்டார்கள்.  மது மயக்கத்தில் சில வானரர்கள் தரையிலேயெ படுத்து உறங்கி விட்டார்கள்.

     சிலர் ஏதோ சில காரியங்களைச் செய்தார்கள்.  ஏதோ சிலவற்றைப் பேசினார்கள்.  சிலருக்கு நினைவு திரும்பியது.  அங்கு ததிமுகனுக்கு வேலை செய்பவர்களாய் இருந்தவர்களும், தேனுக்குப் பாதுகாவலராய் இருந்தவர்களும் அந்த வலிமை மிக்க வானரர்களால் எதிர்த்து மடக்கப் பட்டதால், மூலைக்கொருவராய் ஓடிவிட்டார்கள்.

     முழங்கால்களால் பிடித்து இழுக்கப்பட்டு, தங்கள் அபானத் துவாரத்தைக் காட்டும்படி செய்யப்பட்டதால் மனவருத்தம் அடைந்திருந்த அவர்கள் ததிமுகனிடம் சென்று இவ்விதம் சொன்னார்கள்.

     “அனுமனால் கொடுக்கப்பட்ட வரத்தால், அந்த வானரர்கள் மதுவனத்தைப் பலவந்தமாய் அழித்தார்கள்.  நாங்களும் எங்களது முழங்கால்களால் இழுக்கப்பட்டோம்.  அபானத்துவாரத்தையும் வெளியே காட்டச் செய்யப்பட்டோம்.”

     மதுவனத்தின் காவலனான ததிமுகன், வனம் நாசம் செய்யப்பட்ட செய்தியைக் கேட்டு கோபம் கொண்டான்.  இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர்களைப் பொறுத்திருக்கச் சொன்னான்.

     “வாருங்கள்! வாருங்கள்! நாம் அங்கு செல்வோம்! மதுவைக் குடித்து விட்டு தங்கள் பலத்தினால் கொழுத்திருக்கும் அவர்களை, நாம் வலிமையுடன் துரத்தியடிப்போம்” என்றான்.

     அந்த தைரியமிக்க சிறந்த வானர வீரர்கள் ததிமுகனுடைய பேச்சைக் கேட்டு மீண்டும் மதுவனம் நோக்கிச் சென்றார்கள்.

     அந்தப் பாதுகாவலர்கள் அனைவரும் உடன் வர, ததிமுகன் தன் வலிமையால் ஒரு மரத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, அவர்கள் மத்தியில் வேகமாக ஓடினான். 

                              



       கோபத்தில் இருந்த அந்த வானரர்கள் தங்கள் கைகளில் கற்கள், மரங்கள், மலைப் பாறைகளை எடுத்துக் கொண்டு மதுவனத்தில் இருந்த வானரர்களை நோக்கி வந்தார்கள்.

     கோபத்தில் பற்களால் உதட்டைக் கடித்தபடி உறுமிக்கொண்டு வந்த அந்த வானரக் காவலர்கள் பலவந்தமாக அவர்களை மீண்டும் மீண்டும் தாக்கிய வண்ணம் தடுத்தார்கள்.

     தங்கள் தலைவனின் (ததிமுகனின்) கட்டளையை மனதில் ஏற்றுக்கொண்ட அந்த வானரக் காவல் வீரர்கள், மரங்கள், கற்களை ஆயுதமாகக் கொண்டு அவர்கள் மேலே விழுந்து ஆக்ரோஷமாகத் தாக்கினார்கள்.

     தைரியம் மிகக் கொண்ட அந்த காவல்கார வானரர்கள் பலரும், தங்கள் பெருகிய பலத்தால், மரத்தின் மேலும், தரையிலும் இருந்த வானரர்களை அந்த இடத்திலேயே சூழ்ந்துகொண்டு மடக்கிக் கொண்டார்கள்.

     ததிமுகன் கோபத்தில் இருப்பதையும், அங்கு நடப்பதையும் கண்டு அனுமன் முதலான வானரத் தலைவர்கள் வேகமாக அங்கு ஓடி வந்தார்கள்.

     தோள் வலிமையும் உடல் வலிமையும் கொண்ட போற்றத்தக்கவனான அவன் (ததிமுகன்), கைகளில் மரத்தைப் பிடித்தபடி எதிரே ஓடி வந்ததைக் கண்டு கோபம் கொண்ட அங்கதன் தன் கைகளினால் அவனைப் பிடித்துத் தடுத்தான்.

     மதுவருந்திய போதையில், மமதையில் இருந்த அவன் (அங்கதன்), ததிமுகனை, ‘இவன் வணங்கத்தகுந்தவன்!’ என்பதையும் மறந்தான்.  அவனைச் சடாரென்று குத்தித் தரையில் குப்புறத் தள்ளினான்.

     வானரத் தலைவனான அந்த வீரன் (ததிமுகன்) தன்னுடைய தோள்களிலும், கைகளிலும், தொடைகளிலும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டதால், முகூர்த்த நேரத்திற்கு மூர்ச்சையடைந்து கிடந்தான்.

     அரசனான சுக்ரீவனுக்கு மாமனாகிய அவன் (ததிமுகன்), மயக்கம் தெளிந்த உடனே, இன்னும் கோபம் மிகக் கொண்டு, மது மயக்கத்தால் அறிவிழந்து கிடந்த வானரர்களைத் தடி கொண்டு தடுத்தான்.

     பிறகு அந்த வானரத் தலைவன் (ததிமுகன்) அந்த வானரர்களை விட்டு விலகி, தனியிடம் நோக்கிச் சென்றான்.  உடனிருந்த தன் பணியாளர்களைப் பார்த்து இவ்விதம் சொன்னான்.

       “இவர்கள் கிடக்கட்டும்! நாம் நமது பெரும் கழுத்து கொண்ட தலைவரான சுக்ரீவனும், ஸ்ரீராமனும் இருக்கும் இடத்திற்குச் செல்வோம்.  அரசனிடம் சென்று இங்கே நடந்த செயல்களுக்கெல்லாம் அங்கதனே காரணம் என்று சொல்வோம்.  செய்தியைக் கேட்டதும் கோபம் கொள்ளப்போகும் அவர், இந்த வானரர்களைக் கொன்று விடுவார்.”

     “தேவர்களாலும் நுழையமுடியாத இந்த மதுவனம், பல தலைமுறைகளாய் அழகாக நிர்வகிக்கப்படுகிறது.  இந்த இடம் சுக்ரீவனுக்கு மிகவும் விருப்பமானது.  தேனுக்கு ஆசைப்பட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த இந்த வானரர்கள் அனைவரையும் அவர்களது உற்ற தோழர்களுடன், ஒரு தடிகொண்டே மாய்த்துவிடுவார்.”

     “அரச கட்டளையை மீறிய இந்தக் கேடுகெட்டவர்கள் மடிய வேண்டியதுதான்.  பொங்கிப் பிரவிக்கும் நமது கோபத்திற்கு நல்ல பலன் கிடைக்கப் போகின்றது.”

     இவ்வாறு தோட்டக்காரர்களிடம் சொல்லிய பெரும் பலசாலியான ததிமுகன், அவர்களை அழைத்துக் கொண்டு உடனே கிளம்பிச் சென்றான்.

     கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வானரன் (ததிமுகன்), அறிவாற்றல் நிரம்பிய சூரிய குமாரனான சுக்ரீவன் இருக்குமிடம் அடைந்தான்.

     ஸ்ரீராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவன் ஆகிய மூவரையும் கண்டவுடனேயே ஆகாயத்திலிருந்து தரையில் இறங்கி நின்றான்.

     எல்லாக் காவலர்களுக்குத் தலைவனும், பேராற்றல் மிக்கவனுமான ததிமுகன் என்ற அந்த வானரன், தன் காவலர்கள் புடைசூழ, வாடிய முகத்துடன் தலையில் கை வைத்து வணங்கியபடி சென்று சுக்ரீவனுடைய பாதங்களில் தலை வைத்து வணங்கினான்.

 

 

               அறுபத்திரண்டாவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...