Wednesday, January 10, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். அறுபத்து மூன்றாவது ஸர்கம்.

 

                                        

                                        ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

                                     சுந்தர காண்டம்.

                         அறுபத்து மூன்றாவது ஸர்கம்.

 


     அப்பொழுது தன் காலில் தலை வைத்து வணங்கிய வானரனைக் கண்ட வானரத்தலைவனான சுக்ரீவன், பட படக்கும் நெஞ்சுடன் இவ்விதம் சொல்லலானான்.

     “எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! வீரரே! நீர் எதற்காக என் கால்களில் விழுந்தீர்?  என்ன நடந்தது என்பதை விளங்கக் கூறுங்கள்! உமக்கு எமது அருள் கிட்டட்டும்!”

     “எதைக் கண்டு அஞ்சி இங்கு வந்துள்ளீர்? நல்ல செய்திகளைச் சொல்வீராக! மதுவனத்தில் எல்லாம் நலமா? உம் வாயால் நான் கேட்க விரும்புகிறேன்!”

     அறிவாற்றல் மிகுந்த ததிமுகன், தலைவனான சுக்ரீவனின் வார்த்தைகளால் மனம் தெளிவடைந்து, பின் வருமாறு சொன்னான்.

     “அரசே! ரிக்ஷரஜஸ்ஸினாலும் (சுக்ரீவனின் தந்தை), வாலியினாலும், தங்களாலும் அந்த மதுவனத்தினுள் நுழைய யாருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டதில்லை! அவ்வாறிருந்தும் அது வானரர்களால் நாசம் செய்யப்பட்டது.”

     “என்னுடைய காவலர்கள் உதவியுடன் நான் அவர்களைத் தடுக்க எவ்வளவோ முயன்றேன்.  அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியுடன் பழங்களை உண்ணுகின்றனர்.  மதுவினைப் பருகுகின்றனர்.”

     “அரசே! எனது பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டும், அதைப் பொருட்படுத்தாது வானரர்கள் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.”

     “அங்கே எல்லாவற்றையும் உண்டு அழித்துக் கொண்டுள்ளார்கள்.  சிலர், அளவிற்கதிகமானதை அங்கங்கே கொட்டுகின்றார்கள்.  ஆகவே அவர்களை அங்கிருந்து விலக்கினால், புருவங்களைச் சுழித்துக் கேலி செய்கின்றார்கள்.”

     “மது வனத்திலிருந்து அவர்களை விரட்டச் சென்ற இவர்களும் பெரிய வானர வீரர்களால் நையப் புடைக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டதால், பயந்து ஓடி வந்துவிட்டனர்.”

     “வானர வேந்தே! கோபத்தில் சிவந்த கண்களைக் கொண்ட அந்த வானர வீரர்கள் அந்த இடத்தைக் காவல் காக்கும் இந்த வானரர்களை மனம் பேதலிக்கச் செய்து விட்டார்கள்”.

     “சிலர் கைகளால் அறையப்பட்டனர்.  சிலர் முழங்கால்களால் எட்டி உதைக்கப்பட்டனர்.  சிலரை இழுத்துச் சென்று, தங்கள் மனம் போனபடி, அவர்களின் அபான துவாரத்தையும் காட்டச் செய்யப்பட்டனர்.”

     “நீங்கள் அரசராக இருக்கும்போதே, இந்த வீரர்கள் இவ்வாறு அவர்களால் தாக்குண்டார்கள்.  மதுவனம் முழுவதையும் அவர்கள் தங்கள் விருப்பம் போல் நாசம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.”

     வானரோத்தமரான சுக்ரீவனிடம் ததிமுகன் வேண்டிக்கொண்டதைக் கேட்ட, எதிரி வீரர்களை நாசம் செய்பவரும், அறிவுக் கூர்மை உடையவருமான இலக்குமணன், “அரசே! வனத்தைக் காக்கும் இவன் இங்கு எதற்காக வந்தான்? எதைப் பற்றிப் பேசுவதற்காக இவ்விதம் கவலை கொண்டவனாகப் பேசினான்?” என்று ததிமுகனைப் பற்றி சுக்ரீவனிடம் கேட்டார்.



     பெருமை மிக்க இலக்குமணன் இவ்வாறு கேட்டதும், பேச்சாற்றல் மிக்க சுக்ரீவன், இலக்குமணனைப் பார்த்து இது விஷயமாகத் தன் பதிலைச் சொன்னார்.

     “நற்பண்பு மிக்க இலக்குமணரே! ததிமுகன் என்ற வானர வீரர், அங்கதன் முதலான முக்கியமான வீரர்களால் மதுவனம் சூறையாடப்பட்டது என்று அறிவித்தார் என்று சொன்னார்.

     “வானரர்கள் மதுவனத்திற்கு வந்து விட்டார்கள்.  அவர்கள் போன காரியம் கை கூடியிராவிட்டால், இது போன்ற தண்டனைக்குரிய காரியங்களைச் செய்யத் துணிய மாட்டார்கள்” என்றார்.

     “காவலர்கள் தடுக்க முற்பட்டும், அவர்களைக் கால்களால் தாக்கியுள்ளார்கள்.  ஆற்றல் மிக்க ததிமுகனையும் மதிக்கவில்லை.  என்னால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர் இவர்.  அனுமனாலேயே சீதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளாள். வேறு எவராலும் இல்லை.  இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் காரியம் நடந்தேறியதில் அனுமனைத் தவிர வேறு எவரும் காரணமாக இருக்க முடியாது” என்றார்.

     “அந்த உத்தம வானரரிடம் மட்டுமே காரியத்தை நிறைவேற்றும் ஆற்றலும், புத்தி கூர்மையும்,செயல் திறனும், சிறந்த கல்வி அறிவும் ஒருங்கே நிறைந்துள்ளன”.

     “ஜாம்பவானும், வலிமை மிக்க அங்கதனும் ஒரு காரியத்தைத் தலைமை ஏற்று நடத்த, அதன் செயலாக்கத்தை அனுமன் திட்டமிட்டால், அந்தக் காரியத்தில் வெற்றி கிட்டாமல் இருக்காது.”

     “தெற்குத் திசையில் சென்ற அங்கதன் முதலான வீரர்கள் திரும்பி வந்து மது வனத்தை அழித்திருக்கின்றார்கள் அல்லவா?  ஆக, திரும்பி வந்த அவர்களாலேயே மதுவனம் அழிக்கப்பட்டுள்ளது. அதுவுமின்றி அந்த வானரர்களாலேயே மது அருந்தப்பட்டு, வனம் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது.”

     “அதுவுமன்றி, பாதுகாவலர்களைக் கால்களால் தாக்கியுள்ளார்கள்.  ததிமுகன் என்ற பெயரால் புகழுடன் அறியப்படும் இந்த வானர வீரர், தன் இன் சொற்களால், இந்த நிகழ்ச்சி பற்றி சொல்ல வந்துள்ளார்” என்று சொன்னார்.

     “தடந்தோள் வீரரே! சுமித்திரையின் மைந்தரே! வானரர்கள் திரும்பி வந்து மது அருந்திக் கொண்டுள்ளார்கள் என்பதால், சீதை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குப் புரியும்!”

     “மானுட மாவீரரே! சகலமும் அறிந்த சிறந்த வானரர்கள் வைதேஹியைக் காணாமல் இருந்திருந்தால், தவத்தினால் கிடைத்த அழகான வனத்தை அழிக்கத் துணிய மாட்டார்கள்.”

     சுக்ரீவனது வாயிலிருந்த வந்த காதுக்கினிய வார்த்தைகளைக் கேட்டதும்,  புகழ் மிக்க இலக்குமணன் மகிழ்ச்சியடைய,  அவனை விட அதிகமாக ஸ்ரீராமனும் பெரு மகிழ்ச்சி கொண்டார்.

     ததிமுகனது வார்த்தைகளால் மனம் மகிழ்ந்த சுக்ரீவன், அந்த வனக் காவலருக்கு மேற்கொண்டு செய்ய வேண்டியது பற்றி உரைக்கலானார்.

 


     “தாங்கள் சென்ற காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதாலேயே அவர்களால் வனத்தில் மது அருந்தப்பட்டுள்ளது.  நான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன்.  (ஆகவே) அவர்களுடைய இந்தச் செயல் என்னுடைய சம்மதத்தைப் பெறுகிறது.  நீங்கள் சென்று மதுவனத்தைப் பாதுகாக்கும் பணியைத் தொடருங்கள். அனுமன் முதலான வானரர்களை விரைவில் இங்கு அனுப்பி வைக்கவும்.”

     “செய்து முடிக்க மேற்கொண்ட காரியத்தை, அனுமனின் தலைமையில் சாதித்துக்காட்டிய, சிங்கத்தின் வலிமை கொண்ட அந்த வானரர்களை, ஸ்ரீராம, இலக்குமணன் ஆகியோரோடு நானும் விரைவாகக் காண ஆவலாக உள்ளேன்.  சீதையை மீட்கும் செயலைப் பற்றியும் விவாதிக்க விருப்பமாயுள்ளேன்.” என்றார்.

     வானரர்களுக்கு அரசனான அந்த சுக்ரீவன், அந்த இரு அரச குமாரர்களையும் ஆனந்தம் மேலிட்ட மலர்ச்சியான கண்களுடனும், மகிழ்வுடனும், காரியம் நிறைவேறியவர்களாயும் இருக்கக் கண்டார்.   காரியத்தின் வெற்றி கைக்குக் கிட்டிவிட்டதாக நினைத்து, ஆனந்த மிகுதியால் மெய் சிலிர்த்து, அடக்க முடியாத மகிழ்ச்சி கொண்டார்.

 


  

               அறுபத்து மூன்றாவது ஸர்கம் நிறைவு.

 

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...