Friday, January 5, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். ஐம்பத்தேழாவது ஸர்கம்.

                                                     ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

சுந்தர காண்டம்.

ஐம்பத்தேழாவது ஸர்கம்.

 

 இறக்கைகள் கொண்ட மலையைப் போல, அனுமன் பெருத்த வேகத்துடன், அந்த அழகிய கடல் போன்ற ஆகாயத்தில் பயணம் செய்தார். அந்த ஆகாயக் கடலில், நாகர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்கள் மலர்ந்த தாமரை மலர்கள் போலவும், நீராம்பல் மலர்கள் போலவும் ஜொலித்தனர்.

 சந்திரன், ஆம்பல் மலர் போலவும், பெருமை கொண்ட சூரியன், நீர்க்கோழியைப் போலவும் இருந்தனர். புஷ்யம், ஸ்ரவணம் ஆகிய நக்ஷத்திரங்கள் இரண்டு கலஹம்சங்களைப் போல இருந்தன. மேகங்கள் நன்கு செழித்த பாசிகளைப் போல இருந்தன.

 புனர்வசு நக்ஷத்திரம் பெரிய மீன் போலவும், அங்காரகன் முதலையைப் போலவும் தோற்றமளித்தன. ஐராவதம் என்னும் யானையானது பெரிய தீவைப் போல விளங்கியது. ஸ்வாதி நக்ஷத்திரம் அன்னப்பறவையைப் போல உலா வந்தது. காற்று கடலலைகளைப் போல வீசிக்கொண்டிருந்தது.

 சந்திரனின் கதிர்கள் கடலின் குளிர்ந்த நீரைப் போல இருந்தன. இப்படிப்பட்ட கடல் போன்ற ஆகாயத்தில் அனுமன் களைப்பின்றி பாய்ந்தோடினார்.

 

 

 அனுமன் ஆகாயத்தை விழுங்கி விடுபவர் போலவும், சந்திரனை உரசுபவர் போலவும், நக்ஷத்திரங்களோடு கூடிய சூரிய மண்டலத்தைக் கொள்ளை கொள்பவர் போலவும், மேகக் கூட்டங்களைத் தன்னுடன் இழுத்துச் செல்பவர் போலவும் அனாயாசமாக கரைகளற்றுப் பரந்து விரிந்த ஆகாயக் கடலில் பறந்து சென்றார்.

 

 

 ஆகாயத்தில் சூழ்ந்திருந்த மேகங்கள், வெண்ணிறத்திலும், சிவப்பு நிறத்திலும், நீல நிறத்திலும், மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திலும், பச்சை கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்பட்டன.

 மேகக்கூட்டங்களில் நுழைவதும், மறைந்து பின்னர் வெளிவருவதுமாக அவர், நிலவினைப் போலத் தோற்றமளித்தார். வெண்ணிற ஆடையில் இருந்த அந்த வீரர் ஆகாயத்தில் பல தரப்பட்ட மேகங்களுக்கிடையில் மறைந்தும், வெளிப்பட்டும், பார்வையில் பட்டும் படாமலும் நிலவெனவே விளங்கினார்.

 


 மேகக் கூட்டங்களில் மீண்டும் மீண்டும் நுழைவதும், மறைவதும், பிறகு வெளிப்படுவதுமாக இருந்த வாயு குமாரரான அனுமன், கருடனைப் போலவே விளங்கினார்.

 பேராற்றல் கொண்ட அனுமன், மேகங்களின் இடிச்சத்தத்தை மிஞ்சும் வண்ணம் கர்ஜித்தபடி சென்றார். ஏற்கனவே புகழ்பெற்ற அரக்க வீரர்களைக் கொன்று பெரும் புகழ் பெற்றவர் அவர். சிறந்த பல வீரர்களை வென்று, இலங்கை நகரத்தையே கதிகலங்கச் செய்து விட்டவர் அவர். இராவணனையும் கவலை கொள்ளச் செய்து விட்டார். பிறகு சீதையைச் சந்தித்து, அவரை வணங்கி, விடைபெற்று, இப்பொழுது பெரும் வேகத்தில் கடலின் மீது பயணம் செய்தார்.

 சக்தி மிக்க அவர், மைநாகம் என்னும் உயரிய மலையைத் தடவிக் கொடுத்தபடி, வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போலப் பெரும் வேகத்தில் பயணித்தார்.

 அந்த வானர வீரர், கரையின் அருகில் சென்ற பொழுது, மேகத்திற்கு ஒப்பாக விளங்கிய மகேந்திர மலையைக் கண்ணுற்றதும் கம்பீரமாய் கர்ஜித்தார்.

 அந்த வானர வீரர், இடிச் சத்தம் போன்ற பெரும் ஓசையுடன் கர்ஜித்துக் கொண்டு, அந்தப் பெரும் சப்தமானது பத்துச் திசைகளெங்கும் பரவச் செய்தார்.

 தனது நெருங்கிய நண்பர்களைக் காணப் போகும் மகிழ்ச்சியில், அந்தச் சிறந்த வானர வீரர், அந்த இடத்தை அடைந்ததும், வாலை ஆட்டியபடி இரைந்து கூச்சலிட்டார்.

 கருடன் போன்ற பறவைகள் பறந்து திரியும் ஆகாயத்திலிருந்து கூச்சலிட்டபடி வரும் இவருடைய சப்தத்தால், சூரிய மண்டலம் இருக்கும் வானமே பிளப்பது போல இருந்தது.

 மிகவும் பலசாலிகளான வானர வீரர்கள், வாயுபுத்திரனைக் காணும் ஆவலில், கடலின் அந்த வடக்குக் கரையில் ஏற்கனவே குழுமியிருந்தனர். அப்பொழுது அவர்கள், காற்றினால் அலைக்கழிக்கப்படும் மேகங்களின் இடியோசை போன்று அனுமன் எழுப்பிய ஓசையையும், அவரது தொடைகள் அசைவதால் எழுந்த ஓசையையும் கேட்டார்கள்.

 ஏக்கத்துடன் காத்திருந்த அந்த வனத்தில் இருக்கும் வனவாசிகள் அனைவரும், வானரோத்தமரின் இடியோசைக்கு நிகரான ஒலியினைக் தங்கள் காதுகளால் கேட்டார்கள்.

 எங்கும் எதிரொலிக்கும் கர்ஜனையைக் கேட்ட அந்த வானரர்கள் அனைவரும், வருபவரை உணர்ந்து, அவரை நேரில் காணும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

 வானர, கரடி இனத்தில் மிகவும் சிறந்தவரான ஜாம்பவான், மனதில் ஆனந்தம் மிக்கவராய், எல்லா வானரர்களையும் கூவி அழைத்து இவ்விதம் கூறினார்.

 “இந்த அனுமன், காரியத்தைச் சாதித்து விட்டார் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஏனென்றால், காரியம் நிறைவேறியிராவிட்டால், இவரது கர்ஜனை இவ்விதம் இருக்காது.”

 சிறந்தவரான அனுமனின் கைகள், தொடைகள் இயங்கும் வேகத்தையும், அவரது கர்ஜனையையும் கேட்ட வானரர்கள், மிகவும் மனமகிழ்வுற்று, தாங்கள் நின்றிருந்த இடங்களில் துள்ளிக் குதித்தனர்.

 அவர்கள் அனுமனைக் காண மன விருப்பம் கொண்டு, ஆனந்தம் மிக்கவர்களாய், பெரும் ஆவலுடன், மரக் கிளையிலிருந்து மரக் கிளைக்கும், மலைச் சிகரங்களிலிருந்து மலைச் சிகரங்களுக்கும் தாவியபடி வந்து ஒன்று கூடினார்கள்.

 மரங்களின் உச்சிகளில் அமர்ந்திருந்த வானரர்கள், பூத்துக் குலுங்கிய மரக் கிளைகளைத் தங்கள் ஆடைகளை அசைப்பது போல, உற்சாகமாக இங்குமங்குமாய் ஆட்டினார்கள்.

 மலைக் குகைகளில் புகுந்த காற்றானது உண்டாக்கும் பேரொலியினைப் போன்று, வாயுகுமாரரும், ஆற்றல் மிக்கவருமான அனுமன், பேரொலி எழுப்பினார்.

 மேகக் கூட்டங்களுக்கு நிகராகப் பாய்ந்து வரும் அந்த பெரும் வானர வீரரைப் பார்த்து அனைவரும் கை கூப்பிக்கொண்டு நின்றார்கள்.

 பெரும் மலையை நிகர்த்த பலம் கொண்ட அந்த வானர வீரரும், அந்த மரங்களடர்ந்த மகேந்திர மலையின் சிகரத்தின் வந்து இறங்கினார்.

 தன் உடல் மகிழ்ச்சியில் திளைக்க, ஆனந்தம் மிக்கவராய், சிறகிழந்த மலை போல, ஆகாயத்திலிருந்து, அழகான மலையருவியில் வந்து குதித்தார்.

 


    



 அதனால் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், அனைத்து வானர வீரர்களும் பேராற்றல் மிக்க அனுமனைச் சூழ்ந்து கொண்டு, நெருங்கி நின்றார்கள்.

 நெருங்கி நின்ற அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்வுற்றார்கள். மிகுந்த நலமுடன் இருந்த அவரைக் கண்டு, முக மலர்ச்சியுடன் அவரை நெருங்கினார்கள்.

 அந்த வானரர்கள், வாயுகுமாரரான சிறந்த வானரரான அனுமனுக்குக் கிழங்கு வகைகளையும் பழ வகைகளையும் பரிசாகக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தனர்.

 சில வானரர்கள் மகிழ்ச்சியுடன் ஓசையிட்டார்கள். சிலர் கலகலவென்று சப்தம் செய்தார்கள். பல சிறந்த வானர வீரர்கள் அனுமன் அமர்வதற்காக, மரக்கிளைகளை உடைத்து வந்து இருக்கை அமைத்துத் தந்தார்கள்.

 அந்தப் பெரும் வானரமான அனுமன், அப்பொழுது ஜாம்பவான் முதலிய குருமார்களையும் பெரியவர்களையும், இளவரசனான அங்கதனையும் வணங்கினார்.


 பேராற்றலும் பெருமதிப்பும் கொண்ட அனுமன், அவ்விருவர்களால் மனம் நிறைய வாழ்த்தப்பட்டார். வானரர்களால் வணங்கப்பட்டார். “தேவி (சீதை) என்னால் பார்க்கப்பட்டாள்” என்று சுருக்கமாக உரைத்தார்.

 மகிழ்வுடன் இருந்த அனுமன், வாலியின் மைந்தனைக் கைகளால் பிணைத்துக் கொண்டு, மகேந்திர மலையின் அழகான காட்டில், ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, வானரர்களைப் பார்த்துச் சொன்னார்.

 “ஜனகனின் மகளான அந்த இளம்பெண், அசோக வனத்தில் இருந்தாள். கொடிய அரக்கிகளால் காவல் காக்கப்பட்டாள். ஒரே பின்னலுடன், சிக்குப் பிடித்த தலைமுடியுடன், புழுதி படிந்து காணப்பட்டாள். ஸ்ரீராமனைக் காண மிகவும் ஏக்கம் கொண்டவளாய், உண்ணாநோன்பின் காரணமாக உடல் மெலிந்து இளைத்தவளாகக் காணப்பட்டாள்!”

 அனுமனின் வாயிலிருந்து “காணப்பட்டாள்” என்னும் அமுதத்திற்கொப்பான பொருள் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து வானரர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாக ஆனார்கள்.

 அங்கிருந்த பலசாலிகள் சிலர், இங்குமங்கும் தாவிக் குதித்தார்கள். சிலர் எக்காளம் இட்டார்கள். சிலர் பேரொலி எழுப்பினார்கள். இன்னும் சிலர் கலகலவென்ற ஓசையை எழுப்பினார்கள். மற்றவர்கள் இந்த சப்தங்களின் எதிரொலி போன்ற ஓசையை எழுப்பினார்கள்.

 சில சிறந்த வானர வீரர்கள், அளவில்லாத மகிழ்ச்சி கொண்டவர்களாய், தங்கள் வால்களை உயரத் தூக்கி, அந்த நீண்ட பருத்த வால்களை ஆட்டினார்கள்.

 பல ஆற்றல் மிக்க வானரர்கள், மலையின் சிகரங்களிலிருந்து குதித்து வந்து, ஒப்புயர்வில்லாத வானரரான அனுமனை, மகிழ்ச்சியுடன் ஆரத் தழுவிக்கொண்டார்கள்.

 அனுமனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்ட அங்கதன், அந்த அனைத்து வானரர்களின் மத்தியில், அனுமனிடம் இவ்விதம் சொன்னான்.

 “மிகவும் அகலமான இந்தக் கடலைக் கடந்து சென்று மீண்டும் திரும்பி வந்ததினால், வானர வீரரே! உங்களுக்கு நிகரான வலிமையும் ஆற்றலும் கொண்டவர் யாருமில்லை!”

 “வானரோத்தமரே! உம் ஒருவரால் தான் நாங்கள் உயிர் பெற்றோம். நீங்கள் கொண்டு வந்திருக்கும் பிரசாதத்தோடு (மகிழ்ச்சியான செய்தி) வெற்றிக் களிப்புடன் ஸ்ரீராமனைச் சந்திப்போம்.”

 “தலைவனிடம் நீர் எவ்வளவு பக்தி கொண்டிருக்கின்றீர்! எவ்வளவு ஆற்றலும் தைரியமும் தங்களிடம் உள்ளது! பெருமை மிக்க தேவியான ஸ்ரீராமனின் மனைவி, கடவுளின் அருளால் தங்களால் காணப்பட்டாள். காகுஸ்தரும், சீதையின் பிரிவால் உண்டான துன்பத்திலிருந்து நல்லவேளையாக விடுபடுவார்!”

 அந்த வானரர்கள் அங்கதனையும், அனுமனையும், ஜாம்பவானையும், பெரிய பெரிய பாறைகளில் அமர்ந்து சூழ்ந்துகொண்டு, தங்களது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கடலினைக் கடந்து, இலங்கை, இராவணன் மற்றும் சீதை ஆகியோரைப் பார்த்தது முதலான செய்திகளைக் கேட்க ஆவல் கொண்டு, அனுமனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு, கை கூப்பி வணங்கி நின்றனர்.

 தேவலோகத்தில் தேவர்களால் போற்றப்படும் தேவேந்திரன் போல, அங்கதன் அங்கு பல வானரர்களால் போற்றப்பட்டு விளங்கினான்.

 புகழ் மிக்க அனுமனும், தோள்வளையணிந்த புஜங்களைக் கொண்ட அங்கதனும், அங்கே சிறப்புற அமர்ந்திருந்ததால், அந்த உன்னதமான மலைச் சிகரமானது, மிகவும் ஒளிமயமாய் விளங்கியது.


                 ஐம்பத்தேழாவது ஸர்கம் நிறைவு

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...