ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்
அறுபத்தொன்றாவது ஸர்கம்.
மதுவனத்தில்
வானரர்கள்.
அப்பொழுது வானரோத்தமரான அனுமனும், அங்கதன் முதலான அனைத்து வானர வீரர்களும் ஜாம்பவான் சொல்லிய கருத்தை ஆமோதித்தார்கள்.
“அந்த வானர வீரர்கள், மேரு மலையைப் போலவும்,
மந்தர மலையைப் போலவும், மதங்கொண்ட யானைகள் போலவும் பலசாலிகளாய்ப் பெரிய உருவங்கள் கொண்டிருந்தார்கள். அவர்கள், இராகவனுக்கான காரியம் வெற்றிகரமாகப் பெரும்
புகழ் தரத்தக்கதாய் நிறைவேறியதில், பெரும் பெருமை கொண்டவர்களாய் இருந்தார்கள். நல்ல
செய்தியைச் சென்று கூறும் முனைப்பிலும், படை திரட்டிப் போர் புரியும் முனைப்பிலும்
அனைவரும் இருந்தனர். ஸ்ரீராமனை மனம் மகிழ்ச்சி
கொள்ள வைக்க வேண்டும் என்ற பெரும் எண்ணத்தினால், உற்சாகத்துடனும், மன மகிழ்வுடனும்
இருந்தார்கள். பூத கணங்களால் புகழப்பட்டவரும்,
பேராற்றலும், பெரும் வேகமும், அறிவிற்சிறந்தவருமான அனுமனைக் கண் கொட்டாமல் கண்களால்
சுமந்து கொண்டே (பார்த்தவாறே) , வாயு குமாரரான அவரை முன் செல்ல விட்டு அந்த மஹேந்திர
மலையிலிருந்து ஆகாயத்தை மறைக்கும் வண்ணம், பாய்ந்து சென்றார்கள்.
ஆகாயத்தில் தாவிப் பறந்தபடி அந்த வனத்தில் வாசம்
செய்யும் வானரர்கள், நூற்றுக்கணக்கான மரங்கள் அடர்ந்திருந்த நந்தவனம் போன்ற பொலிவுடன் இருந்த ஒரு வனத்தை அடைந்தார்கள்.
அது சுக்ரீவனுடைய மதுவனம் என்பதாகும். அதனுள் யாரும் சுலபமாய் நுழையமுடியாதபடி பாதுகாக்கப்பட்ட
அந்த வனம், அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
வானரர்களில் முக்கியமானவரும் பெருமை மிக்கவருமான
சுக்ரீவனுடைய மாமனாகிய ததிமுகன் என்ற பெரும் வீரன், அந்த வனத்தை இடைவிடாது பாதுகாத்து
வந்தான்.
அந்த வானரர்கள், வானர வேந்தனுக்கு விருப்பமானதும்,
பெரியதாகவும் இருந்த அந்த வனத்தில் ஒன்றாகக் கூடி, அளவிட முடியாத உற்சாகம் கொண்டார்கள். தேனின் நிறத்தில் இருந்த அந்த வானரர்கள் அந்தப்
பெரிய மதுவனத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.
இளவரசனிடம் அதில் தேன் உண்ணுவதற்கு அனுமதி வேண்டினார்கள்.
இளவரசன் அங்கிருந்த வயதான ஜாம்பவான் முதலான பெரிய
வானரர்களின் சம்மதம் பெற்று, அந்த வனத்தில் தேன் உண்பதற்கு, வானரர்களுக்கு அனுமதி அளித்தான்.
அறிவிற் சிறந்த வாலியின் மகனாகிய இளவரசன் அங்கதனின் அனுமதி பெற்ற அந்த வானரர்கள், வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மரங்களில் ஏறினார்கள். நறுமணமிக்க பூக்கள், பழங்கள், கிழங்குகளைச் சாப்பிட்ட அவர்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். அனைவரும் தேனுண்ட மயக்கத்தில் தம்முடைய நிலை மறந்தார்கள்.
ஏற்கனவே
மகிழ்ச்சியில் இருந்த வானரர்கள், தங்களுக்கு அனுமதி கிடைத்ததால், அளவற்ற மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்.
அவர்களில் சிலர் பாடினார்கள். சிலர் கீழே கவிழ்ந்திருந்தார்கள். சிலர் நாட்டியமாடினார்கள்.
சிலர் தம்மை மறந்து பரிகாசமாய்ச் சிரித்தார்கள்.
சிலர் மேலிருந்து கீழே விழுந்தார்கள்.
சிலர் வனத்தில் சுற்றித் திரிந்தார்கள்.
சிலர் தாவித் தாவிக் குதித்தார்கள். சிலர் உளறிக் கொண்டிருந்தார்கள்.
சிலர் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். சிலர் ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டார்கள். சிலர் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டிருந்தார்கள். சிலர் மரத்திலிருந்து கீழே தரையில் குதித்து விளையாடினார்கள்.
சிலர் பெரும் வேகத்துடன் தரையிலிருந்து தாவி
பெரிய மரங்களின் உச்சிகளில் ஏறினார்கள். பாடிக்
கொண்டிருந்த சிலரை, சிலர் சிரித்துக் கொண்டே நெருங்கினார்கள். சிரித்துக்கொண்டிருந்த ஒரு வானரனை, இன்னொரு வானரன்
அழுது கொண்டே நெருங்கினான். அடித்த ஒரு வானரனை மிரட்டியபடி இன்னொரு வானரன் நெருங்கினான்.
இவ்வாறு அந்த மொத்த வானர சேனையும் மதுவுண்ட மயக்கத்தில்
விதவிதமான செயல்களில் ஈடுபட்டார்கள். அதில்
மது மயக்கம் கொள்ளாதவனோ, மது உண்டு திருப்தி அடையாதவனோ ஒருவனும் இல்லை.
அப்பொழுது அந்த வனத்தின் மரங்களும் இலைகளும்
முறிக்கப்பட்டு, அந்த வனம் பாழ்பட்டிருந்ததைக் கண்ட ததிமுகன் மிகுந்த கோபம் கொண்டு
அவர்களைத் தடுத்தான்.
தோட்டத்தின் காவலாளியும் வயதில் மூத்தவனும் பெரும் வீரனுமாகிய அவனை, மதுவின் மயக்கத்தில் இருந்த வானரர்கள் ஏளனம் செய்தனர். எனினும், இந்த வானரர்களிடமிருந்து தோட்டத்தைக் காப்பாற்ற வேண்டி யோசனை செய்தான்.
சிலரை கடுஞ்சொற்களால் ஏசினான். சிலரை உள்ளங்கால்களால் உதைத்துத் தள்ளினான். அவர்களிடையே நுழைந்து சிலரைக் கைகளால் அடித்தான்.
சிலரிடம் நல்ல வார்த்தைகளால் வேண்டிக் கொண்டான்.
மதுவின் மயக்கத்தில் இருந்த அவர்களை ததிமுகன்
கண்டித்ததாலும், பலத்துடன் தடுக்கப்பட்டதாலும், மது மயக்கத்தினால் உண்டான செருக்கால்
தங்களது செயலுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதையே மறந்து, அவனைச் சூழ்ந்துகொண்டு, தாக்கி
இழுத்தடித்தார்கள்.
குடிவெறியில் இருந்த அந்த வானரர்கள் அவனை நகங்களால்
பிராண்டியும், பற்களால் கடித்தும் துன்புறுத்தினார்கள். கைகளாலும் கால்களாலும் அந்தப்
பெரும் தோட்டத்தைப் பாழாக்கி, அழகிழக்கச்செய்து ஒன்றுமற்றதாய் ஆக்கினார்கள்.
அறுபத்தொன்றாவது
ஸர்கம் நிறைவு.







No comments:
Post a Comment