Wednesday, January 10, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம். அறுபத்து நான்காவது ஸர்கம்.

 

                                         

                                     ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

                                  சுந்தர காண்டம்.

                     அறுபத்து நான்காவது ஸர்கம்.

                  (அனுமன் ஸ்ரீராமனைச் சந்தித்தல்)

 


     சுக்ரீவனின் வார்த்தைகளைக் கேட்ட வானர ததிமுகன், மகிழ்வுற்றவனாகி, ஸ்ரீராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவனைப் பணிந்து வணங்கினான்.

     பேராற்றல் கொண்ட ஸ்ரீராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவனைப் பணிந்து வணங்கிய அவன் (ததிமுகன்) தன்னுடன் இருந்த வானர வீரர்களுடன் ஆகாய வழியாகக் கிளம்பிச் சென்றான்.

     அவன் முன்பு எவ்விதம் வந்தானோ, அது போலவே வேகமாகத் திரும்பிச் சென்றான்.  ஆகாயத்தில் இருந்து தரையில் இறங்கி, அந்த மதுவனத்தினுள் நுழைந்தான்.

     மது வனத்தினுள் நுழைந்த அவன், அங்கிருந்த வானர வீரர்கள் அனைவரும் மயக்கம் தெளிந்து தங்கள் சுயநிலைக்கு வந்திருந்ததையும், தாங்கள் குடித்திருந்த மதுவினைச் சிறுநீர் மூலம் கழித்துக் கொண்டிருப்பதையும் கண்டான்.

     அந்த வீரன் ததிமுகன் அவர்களை நெருங்கிச் சென்றான்.  அங்கதனைப் பார்த்துக் கைக் கூப்பி வணங்கியபடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கூறினான்.

     “சிறப்பு மிக்கவரே! காவலர்களின் அறியாமையாலும், கோபத்தாலும் நீங்கள் தடுக்கப் பட்டீர்கள்.  இவர்கள் தடுக்கப்பட்டதை எண்ணி, சினம் கொள்ள வேண்டாம்.”

     “வெகு தொலைவிலிருந்து களைத்து வந்திருக்கும் நீங்கள் பழங்கள் மற்றும் மது அருந்துங்கள்.  ஆற்றல் மிக்க இளவரசே! இந்த வனத்திற்கு நீங்களே தலைவர்!”

     “அறியாமையாலும், கோபத்தின் வசப்பட்டதாலும், நாங்கள் முன்னர் செய்த தவற்றைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்.  உங்கள் தந்தையான வாலி முன்பு வானரத் தலைவராக இருந்தது போல, இப்பொழுது சுக்ரீவனும் நீங்களும் இருக்கின்றீர்கள்.  உங்களையன்றி வேறு யாரும் எங்களுக்குத் தலைவர்கள் இல்லை!”

     “குற்றமற்றவரே! நான் இங்கிருந்து சென்று தங்கள் சிற்றப்பனிடம் வானரர்கள் இங்கு திரும்பி வந்துள்ள செய்தியை அறிவித்தேன்.”

     “இந்த வானரர்களுடன் நீங்கள் திரும்பிய செய்தி கேட்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.  அவருக்கு மதுவனம் அழிக்கப்பட்ட செய்தியால் சிறிதும் சினம் உண்டாகவில்லை!”

     “உங்கள் சிற்றப்பனும் வானர வேந்தனுமாகிய சுக்ரீவன், ‘அவர்கள் அனைவரையும் விரைவில் அனுப்பிவிடு’ என்று மிகவும் மகிழ்ச்சியுடன் என்னிடம் சொன்னார்.”

     வார்த்தைப் பிரயோகத்தில் வல்லவனும், பெருமை மிக்க வானரனுமான அங்கதன், ததிமுகன் சொன்ன இனிய வார்த்தைகளைக் கேட்டு, அனைவரிடமும் இவ்வாறு உரைத்தான்.

     “தலைவர்களே! இவர் மிகவும் மகிழ்வுடன் சொல்வதைக் கேட்கும் போது, ஸ்ரீராமனுக்கு நாம் திரும்பிவிட்ட செய்தி தெரிந்துவிட்டது என்பதை அறிகின்றேன்.  எதிரியை  வெல்லும் வீரர்களே! நாம் இனியும் இங்கு தங்கியிருந்து காலவிரயம் செய்ய நமக்கு நேரமில்லை!”

     “வானரர்களே!  நீங்கள் தாகம் தீருமளவு மதுவருந்தி ஓய்வு கொண்டுவிட்டீர்கள்.  இனி இங்கு காரியம் எதுவும் நமக்கில்லை.  ஆகவே, சுக்ரீவர் இருக்குமிடம் செல்லலாம்!”

     “வானரத் தலைவர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி நான் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.  ஏனென்றால், உங்கள் சொல்படித் தான் நான் இயங்க வேண்டும்!”

     “காரியத்தை முடித்து வந்துள்ள உங்களுக்கு நான் கட்டளையிட முடியாது.  நான் இளவரசனாக இருந்த போதிலும், இது விஷயமாக முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை!”

     இவ்வாறு பேசிய அங்கதனின் உயரிய வார்த்தைகளைக் கேட்ட வானரர்கள், மிகவும் மகிழ்ச்சி கொண்டு, பின்வருமாறு உரைத்தார்கள்.

     “வானரோத்தம அரசே! தலைவனாக இருக்கும் யாரால் இவ்விதம் பேசமுடியும்?  செலவச் செருக்கில், ‘எல்லாம் நானே’ என்று அதிகாரம் செய்பவர்களே இந்த உலகில் இருக்கின்றார்கள்.”

     “இது மாதிரி வார்த்தைகளை உங்களைத் தவிர வேறு யாராலும் பேச முடியாது.  உங்களின் இந்தப் பணிவு, எதிர்காலத்தில் தாங்கள் பெறவிருக்கும் சிறப்பினைத் தெரிவிக்கின்றது.”

     “வானர வீரர்களின் வேந்தரும், மிகுந்த கவனத்துடன் செயலாற்றுவதில் வல்லவருமாகிய சுக்ரீவர் இருக்குமிடம் செல்வதற்கு எந்த நிமிடமும் தயாராக இருக்கிறோம்!"

     “பெருமை மிக்க வானர வீரரே! உங்கள் உத்தரவில்லாமல் வானரர்களால் ஓரடி கூட எடுத்து வைப்பதென்பது இயலாத செயலாகும்.  நாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையாகும்!”

     அவர்கள் அவ்விதம் சொன்னதும், ‘சபாஷ்! (மிக நன்று!) நாம் செல்வோம்!’ என்று (அங்கதன்) பதில் சொன்னார்.  இவ்வாறு சொல்லி முடிக்கும் முன்பே, பலசாலியான வானரர்கள் ஆகாயத்தில் கிளம்பி விட்டார்கள்.

     அந்த வானர வீரர்கள் அனைவரும், பொறியிலிருந்து விடுபட்ட பாறைக்கற்கள் போல, வேகமாக, ஆகாயத்தை மறைத்துக்கொண்டு, முன் செல்லும் அங்கதனைத் தொடர்ந்து சென்றார்கள்.

     அங்கதனும் அனுமனும் முன்னே செல்ல, வேகம் நிறைந்த அந்த வானரர்கள், காற்றினால் விரட்டப்படும் மேகங்கள் போலச் சப்தித்துக்கொண்டு ஆகாயத்தில் பறந்து சென்றார்கள்.

     அங்கதன் நெருங்கி வந்ததும் வானர வேந்தன் சுக்ரீவன், தாமரையைப் போன்ற கண்களைக் கொண்ட, துயரத்தில் மூழ்கியிருக்கும் ஸ்ரீராமனைப் பார்த்து உரைத்தார்.   

     “நீங்கள் மனம் சமாதானம் அடையுங்கள்! உங்களுக்கு நலம் உண்டாகட்டும்! தேவி இருக்குமிடம் காணப்பட்டு விட்டது என்பதில் ஐயம் ஏதுமில்லை.  ஏனென்றால் நாம் கொடுத்திருந்த காலக்கெடு முடிந்த பிறகு, அவர்களுக்கு இங்கே வரும் துணிவு இருக்காது!”

     “அங்கதனின் முக மலர்ச்சியினால் நான் இதை அறிகின்றேன்.  செய்ய நினைத்த காரியம் வெற்றியடைந்திருக்கவில்லை என்றால், தோள் வலிமை மிக்க இளவரசன் அங்கதன் என் முன்னர் வர மாட்டான் என்பது நிச்சயம்!”

     “காரியத்தில் தோல்வியடைந்தவர்கள் நடவடிக்கை இவ்வாறு இருந்திருக்குமேயானால் (மது வனத்தை அழித்தது) அவன் நெஞ்சம் கலங்கியவனாய், முக வாட்டத்துடன் இருப்பான்.”

     “ஜனகனின் மகளைப் பார்த்திராவிட்டால், தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் எனது மதுவனத்தை, இந்த வானரத் தலைவன் அழித்திருக்க மாட்டான்.”

     “கெளஸல்யாவின் திருக்குமாரனாகிய ஸ்ரீராமனே! நல் விரதங்கள் பூண்டவரே!  சமாதானம் கொள்ளுங்கள்! அனுமனால் தான் தேவி காணப்பட்டிருக்கின்றாள்.  வேறு யாராலும் இது முடிந்திருக்காது.  இதில் ஐயம் எதுவுமில்லை.”

     “அறிவிற் சிறந்தோனே! இந்தக் காரியம் செயலாக்கப் பட்டதற்கு அனுமனைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.  அனுமனிடம் மட்டுமே, வெற்றி பெறும் சக்தியும், அறிவாற்றலும், செயலாற்றும் திறனும், அதற்கான ஆற்றலும் குடி கொண்டுள்ளன.”

     “அதுவுமல்லாது, இந்தக் காரியத்திற்காக அமைக்கப்பட்ட படைக்குச் சேனைத் தலைவனாக அங்கதனும், தலைவனாக ஜாம்பவானும், திட்டமிட்டுச் செயலாற்றுபவனாக அனுமனும் இருக்கும்போது, அந்தப் படையின் இயக்கம் வேறு மாதிரியாக இருக்க முடியாது! பேராற்றல் கொண்டவரே! கவலை கொண்டு இருக்க வேண்டாம்!”

     “இந்த வானரர்கள் இவ்வளவு கர்வமுடன் வருகிறார்கள் என்றால், இவர்கள் தங்கள் காரியத்தை வெற்றிகரமாக முடிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.  மது வனத்தில் நுழைந்து மதுவருந்தி, வனத்தை நாசம் செய்ததாலேயே அது விளங்குகிறது.”

     அனுமனின் செயலில் திருப்தி அடைந்தவர்களாய், காரியம் வெற்றி பெற்றதைச் சொல்லும் வண்ணம், அப்பொழுது கிஷ்கிந்தையை நெருங்கி வந்த வானரர்கள் செய்த கிலுகிலுவென்ற சப்தமானது ஆகாயத்திலிருந்து வருவதைச் சுக்ரீவன் கேட்டான். 

     வானரர்களின் அந்தச் சப்தத்தைக் கேட்ட அந்த வானரோத்தமன் (சுக்ரீவன்) மகிழ்ச்சியடைந்து வளைந்திருந்த தன் வாலினை நீட்டிக் கொண்டான்.

     ஸ்ரீராமனைக் காணும் ஆவலில் அந்த வானரர்கள், அங்கதன், அனுமன் முன்னே வர அங்கே வந்து சேர்ந்தார்கள்.

     அங்கதன் முதலான அந்த வீரர்கள், நிறைந்த மனத்துடனும், முக மலர்ச்சியுடனும், வானர வேந்தனுக்கும், இராகவனுக்கும் அருகில் வந்து தரையிறங்கினார்கள்.

     பேராற்றல் கொண்ட அனுமன் ஸ்ரீராமனின் பாதங்களில் தலைவைத்து வணங்கினார். “சீதை, கற்பு நெறி தவறாத கடுந்தவத்துடன், உடலுக்கு கேடு நேரா வண்ணம் இருக்கிறார்” என்று அவரிடம் சுருங்கச் சொன்னார்.

     இலக்குமணரோடு அங்கிருந்த ஸ்ரீராமன், அனுமனின் வாயிலிருந்து “தேவி காணப்பட்டாள்!” என்ற அமிர்தம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

     ‘அனுமனே இந்தக் காரியத்தை முடித்திருப்பான்’ என்ற திட நம்பிக்கைக் கொண்டிருந்த சுக்ரீவனைப் பெருமையுடனும், அன்புடனும், மரியாதையுடனும் இலக்குமணன் உற்று நோக்கினான்.

     அப்பொழுது பகையழிக்கும் வீரரான ஸ்ரீராமன், அனுமனை அன்புடனும், மரியாதையுடனும் தன் கண்களால் கண்டருளினார்.

 

           அறுபத்து நான்காவது ஸர்கம் நிறைவு.

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...