Thursday, February 16, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பத்தாவது ஸர்கம்



            ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                                    பத்தாவது ஸர்கம்

         ஸ்ரீஅனுமன் மந்தோதரியைப்பார்த்து அவள் சீதையோ என எண்ணுதல்.



 

     அவ்வாறு அந்த மாளிகையில் சுற்றியலைந்த ஸ்ரீஅனுமன், தேவலோகத்திற்கு ஒப்பான ஒளிமிகுந்த மேடையொன்றைக் கண்டார். அங்கே அவர் ஸ்படிகங்களாலும் வைடூரியங்களாலும் செய்யப்பட்டிருந்த ஒரு விலைமதிப்பற்ற கட்டிலைக் கண்டார். அந்தக் கட்டிலின் பகுதிகள் தந்தத்தாலும், தங்கத்தாலும் செய்யப்பட்டிருந்த சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தன.  அந்தக் கட்டிலின் மீது மிகவும் விலையுயர்ந்த மெத்தைகளும் விரிப்புக்களும் விரிக்கப்பட்டு இருந்ததைக் கண்டார்.

     அவர் அந்தக் கட்டிலின் மேற்புறத்தில், மிகவும் உயரிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட, நிலவினைப்போல வெண்ணிறத்தில் இருந்த ஒரு குடையினைக் கண்டார்.

     தங்கத்தால் செய்யப்பட்டிருந்த அந்தக் கட்டில் நெருப்பைப் போல ஒளிர்ந்தது.  மேலும் அது அசோக மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

     அந்தக் கட்டிலைச் சுற்றிலும் பெண்கள் தங்கள் கைகளில் வெண்சாமரம் கொண்டு விசிறிக்கொண்டிருந்தனர். மிகச் சிறந்த வாசனைப்பொருட்கள், தூபங்கள் ஆகிவற்றின் நறுமணம் அங்கு நிறைந்திருந்தது. செம்மறியாட்டின் தோலினால் செய்யப்பட்ட மென்மையான கம்பளங்கள் அங்கு விரிக்கப்பட்டிருந்தன. மிகவும் உயரிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அந்தக் கட்டிலை அலங்கரித்தன. 

     அந்தக் கட்டிலின் மீது, மேகம் போன்று தோற்றமளித்துக் கொண்டு, அழகிய குண்டலங்களைக் காதுகளில் அணிந்துகொண்டு, சிவந்த கண்களையும், நெடிய கைகளையும் கொண்டிருந்த இராவணன், மிகச்சிறந்த தங்கத்தாலான ஜரிகைகளைக் கொண்ட உயரிய ஆடைகளை அணிந்து கொண்டு படுத்திருந்தான்.

     நறுமணம் வீசும் செந்நிற சந்தனத்தை உடல் முழுதும் பூசிக்கொண்டிருந்த அவன், ஆகாயத்தில் இருக்கும் மாலைநேரச் செந்நிற மேகம் போலத் தோற்றமளித்தான்.

     நினைத்த வடிவம் கொள்ளும் வல்லமை மிக்க அவன் மிகவும் பொலிவுடன், பலவித அழகிய அணிகலன்களை அணிந்துகொண்டு, மரங்களையும், அடர்ந்த புதர்களையும் கொண்டு நிலையாக நிற்கும் மந்தர மலைக்கு நிகராக இருந்தான்.     

     அரக்கர்குலப் பெண்களுக்கு அன்பானவனும், அரக்கர்களுக்கு நல்லது செய்பவனும், மிகவுயர்ந்த நகைகளை அணிந்திருந்தவனும், இரவு செய்த களியாட்டங்களால் களைத்திருந்தவனும், மதுவின் மயக்கத்தால் ஓய்ந்திருந்தவனும், அந்த அழகிய படுக்கையில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனும்,  வீரனுமான அந்த அரக்கர்களின் அரசனை  அவர் பார்த்தார்.

     சிறந்த வானரரான அவர் இராவணனை நெருங்கியதும், சீறிக்கொண்டிருக்கும் பாம்பினைப் பார்த்தவர் போல மனம் கலங்கி, பின்வாங்கினார்.

     பின்னர் அவர் அங்கிருந்து நகர்ந்து, அருகிலிருந்த படிகளின் மீது ஏறி, அங்கிருந்த மாடத்தை அடைந்து, உறங்கிக்கொண்டிருந்து சீர்மிகுந்த அரக்கனை உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தார்.

     அரக்கர்குல அரசனான இராவணன் உறங்கிக்கொண்டிருந்த அந்தக் கட்டிலானது, மதங்கொண்ட யானைகளுள் மிகவும் வலியதான கந்தஹஸ்தியெனும் யானை உறங்கிக்கொண்டிருக்கும் ப்ரஸ்ரவனத்து மலையைப் போலத் தோற்றமளித்தது.

     தங்கத்தாலான அணிகலன்கள் பூட்டப்பட்டிருந்த அவனது இரண்டு நெடிய கைகளும், இந்திரனின் கொடிக்கம்பங்கள் போலத் தோற்றமளித்தன.  விரிந்து கிடந்த கைகள் இரண்டிலும், ஐராவதமென்னும் இந்திரனின் யானையின் தந்தங்களின் நுனிகள் குத்தியதால் ஏற்பட்ட வடுக்கள் இருந்தன.  திண்ணிய அவனது தோள்களிலும் கைகளிலும் வஜ்ராயுதம் உரசியதால் ஏற்பட்டிருந்த காயங்களின் வடுக்கள் இருந்ததையும் அவர் கண்டார்.

     அந்தக் கைகள் சீராகவும், அழகிய வடிவிலும், நல்ல சதைப்பிடிப்புடனும் இருந்தன. கட்டைவிரல்களும், நகங்களும் திருத்தமுடன் இருந்தன.   ஏனைய விரல்களும், உள்ளங்கைகளும் நல்ல அழகுடன் இருந்தன.  இரும்பு உலக்கையைப்போல உருண்டையாக இருந்த அந்தக் கைகள், யானையின் தும்பிக்கையின் வீச்சுடன் இருந்தன.  வெண்மையான படுக்கையில் இவ்விதம் கிடந்த அந்தக்கைகளைப் பார்க்கும்போது, படுத்திருக்கும் ஐந்து தலை நாகங்கள்  போல விளங்கின.

     அவனது கைகளில் குளிர்ச்சியூட்டக்கூடிய, நறுமணம் கமழும், முயலின் குருதி போன்று செந்நிறத்தில் இருந்த சந்தனம் பூசப்பட்டிருந்தது.  நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கைகளை, சந்தனம் பூசியவண்ணம் அழகிய மங்கையர் இதமாகப் பிடித்துவிட்டபடி இருந்தனர். யட்சர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், மற்றும் தானவர்கள் போன்றோரை அச்சுறுத்தி வெருட்டிய அந்தக் கைகள் படுக்கையில் உறங்கிக்கிடந்தன.  அப்படிக்கிடந்த அந்தக் கைகள், மந்தர மலையின் நடுவில் கிடந்துறங்கும் பெரும்பாம்புகள் போலவும் இருந்ததை அந்த வானரர் கண்டார்.

     சிறப்புமிக்க இரண்டு மலைச்சிகரங்களுடன் எவ்விதம் மந்தர மலை விளங்குமோ, அவ்விதமே தனது சிறப்புமிக்க இரண்டு கைகளுடன், மலைக்கு ஒப்பாக இருந்த அந்த அரக்கவேந்தன் விளங்கினான்.

       உறக்கத்திலிருந்த அந்த அரக்கர்குல அரசனின் மூச்சுக்காற்றானது, மா மற்றும் புன்னாகம் ஆகியவற்றுடன் மகிழம்பூ கலந்த வாசத்துடனும், சிறந்த உணவுப்பண்டங்களின் வாசத்துடனும், மதுவின் வாசத்துடனும், அந்த அறையே நிறைந்திருக்கும் வண்ணம், அவனது பெரிய முகத்திலிருந்து வீசிகொண்டிருந்தது.

     முத்துக்களாலும், மணிகளாலும் வியக்கும்வண்ணம் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தாலான அவனுடைய மணிமுடி சற்றே சாய்ந்திருந்தது. காதுகளில் அணிந்திருந்த குண்டலங்களால் அவனது முகம் ஒளிபெற்று விளங்கியது.

     மாலைகளணிந்திருந்த அவனது விரிந்து அகன்ற, மார்பின் மீது செஞ்சந்தனம் பூசப்பட்டிருந்தது. அவனது பளபளப்புடன் கூடிய வெண்ணிறப்பட்டாலான மேலாடை நழுவியிருந்தது. விலையுயர்ந்த மஞ்சள் வண்ணப்பட்டாலான ஆடையுடுத்தியிருந்த அவனின் கண்கள் சிவந்திருந்தன.

     குவித்து வைக்கப்பட்ட உளுந்துக்குவியல் போலக் கிடந்த அவன், பாம்பு போல மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான்.  கங்கையின் பெருவெள்ளத்தின் நடுவில் கலங்காது கிடந்து உறங்கும் யானையைப் போல அவன் விளங்கினான். 

      மின்னல்களினால் எல்லாத்திசைகளிலும் வெளிச்சம் பெரும் மேகக்கூட்டம் போல, நான்கு திசைகளிலும் எரிந்துகொண்டிருந்த பொன்விளக்குகளால் அவனது உடல் முழுவதும் ஒளிர்ந்தது.  தனது மனைவிகளிடம் அன்பு கொண்டவனும், பேராற்றல் மிக்கவனுமான அந்த அரக்கவேந்தனின் காலருகில் அவனது மனைவியர் படுத்திருந்ததையும் அவர் கண்டார்.

     அந்த மங்கையரின் முகங்கள் நிலவினைப்போல ஒளிவீசின. காதுகளில் அழகான குண்டலங்களோடு இருந்த அவர்கள் வாடாத மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்திருந்ததையும் வானரவீரர் கண்டார்.

     இசையிலும் நடனத்திலும் வல்லவர்களான அந்த மங்கையர், சிறந்த அணிகலன்களை அணிந்திருந்தனர். அவர்கள் அவனது தோள்களின்மீதும், மடியின் மீதும் சாய்ந்து கிடந்ததையும் அவர் கண்டார்.

     அந்தப்பெண்களின் தோள்களில் பசும்பொன்னினால் செய்யப்பட்ட நகைகளும், காதுகளில் வைர வைடூரியங்களால் இழைக்கப்பட்ட குண்டலங்களும் இருந்ததை அவர் கண்டார்.

     நிலவினையொத்த முகங்களையும், பலவிதமாக ஒளிரும் குண்டலங்களையும் கொண்ட அந்தப் பெண்களை அங்கே பார்க்கும்போது, அந்த விமானம், நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கும் ஆகாயம் போலத் தோற்றமளித்தது.

     அரக்கவேந்தனின் மனைவியரான அந்த மெல்லிடை மங்கையர், மதுவின் மயக்கத்தினாலும், காமக்களியாட்டங்களினால் உண்டான அழற்சியாலும் அவர்கள் இருந்த நிலையிலேயே உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

     பேரழகு வாய்ந்த பெண்ணொருத்தி, நளினமான நாட்டிய முத்திரைகளை அபிநயித்தவண்ணம், தன் சீரிய அங்கங்களைப் படுக்கையில் கிடத்தியவாறு உறங்கிக்கொண்டிருந்தாள்.

     நீரோட்டத்தில் தத்தளிக்கும் தாமரைக்கொடியானது, நீரில் மிதந்துகொண்டிருக்கும் படகொன்றை அண்டி, தழுவிக்கொண்டிருப்பதுபோல, அங்கே இன்னொரு பெண் வீணையை அணைத்தவாறே உறங்கிக்கொண்டிருந்தாள்.

     பச்சிளங்குழந்தைதைத் தன் தோளினில் அணைத்தவண்ணம் இருக்கும் பெண் போல், அங்கே ஒரு கருவிழியாள், மத்தளத்தைத் தன் தோள்களுக்கிடையில் அணைத்தவண்ணம் உறங்கிக்கொண்டிருந்தாள்.

     வெகுநாட்கள் கழித்துத் தன் கணவனைக் காணும் பெண்ணொருத்தி, தன் கணவனைத் தழுவியவண்ணம் உறங்குவதைப்போல, சிறந்த வடிவழகும், அழகிய மார்பகங்களையும் கொண்டிருந்த பெண்ணொருவள், “படஹம்” என்ற இசைக்கருவியைத் தன் மார்புடன் அணைத்தவாறு உறங்கிகொண்டிருந்தாள்.

     காதலியானவள், தனிமையில் தன் காதலனைக் காதலுடன் ஆரத்தழுவிக்கிடப்பது போல், தாமரை மலர் போன்ற கண்களைக் கொண்டிருந்த பெண்ணொருவள் வீணையைத் தழுவியபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

     நடனத்தில் வல்லவளும், நல்லொழுக்கம் கொண்டவளுமாகத் தோன்றிய இன்னொரு அழகிய பெண், தன் நாயகனுடன் கூடியிருப்பவள்போல, தனது “விபஞ்சி” (ஏழு தந்திகள் கொண்டது) என்னும் வீணையைக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்.

     மயங்கிய விழிகளைக் கொண்டிருந்த இன்னுமொரு பெண், தன் பொன்மயமான மிருதுவான, செழிப்பான அங்கங்களால் மத்தளத்தைக் கட்டியணைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள்.

     குறையேதுமில்லாத அழகிய உடலையும், சுருங்கிய வயிற்றையும் கொண்டிருந்த இன்னுமொரு பெண், மதுவின் மயக்கத்தினால், தன் தோளுக்கும் விலாவிற்கும் இடைப்பகுதியான அக்குளில் “பணவ” என்னும் இசைக்கருவியை அணைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

     பெண்ணானவள் எவ்விதம் தன் இளங்குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி உறங்குவாளோ, அவ்விதம், இன்னுமொரு அழகிய பெண், “டிண்டிமம்” என்னும் இசைக்கருவியை தன் மார்புற அணைத்துக்கொண்டு உறங்கிக்கிடந்தாள். 

     மதுவருந்தியதால் உண்டான மயக்கத்தால், செந்தாமரை மலரின் இதழொத்த கண்களைக் கொண்டிருந்த இன்னுமொரு பெண், “ஆடம்பரம்” என்னுமொரு இசைக்கருவியைத் தன் தோளொடு அணைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.    

     இன்னுமொரு பெண், நீர் நிறைந்த குடத்தைச் சாய்த்துவிட்டு அதில் நனைந்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சியானது, வசந்த காலத்தில் நீரினால் தெளிக்கப்பட்ட பலவண்ண மலர்களைக்கொண்ட மாலையொன்று கிடப்பதைப் போல இருந்தது.

     ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு இளம்பெண், தங்கக்குடங்கள் போல இருந்த தன் மார்பகங்களை மறைக்கும் வண்ணம் தன் கைகளை அவற்றின் மீது வைத்துக்கொண்டிருந்தாள்.

     மதுவின் மயக்கத்தால், முழுநிலவினைப் போன்ற முகமும், தாமரையிதழ் போன்ற கண்களையும் கொண்டிருந்த இன்னொரு பெண், அழகிய இடையுடன் கூடிய இன்னொரு பெண்ணைத் தழுவியபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

      மையல் கொண்ட பெண்கள் தங்கள் காதலரைத் தழுவுவிக்கிடப்பது போல, அங்கு பல பெண்கள், தாங்கள் இசைக்கும் இசைக்கருவிகளை மார்புறத் தழுவியபடியே உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

     இப்படிப் பல பெண்களைக் கண்ட அந்த வானரர், அங்கே தனித்த ஓரிடத்தில், அழகிய கட்டிலின் மீது, பேரழகுவாய்ந்த ஒரு பெண்ணொருத்தி உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

     முத்துக்களாலும், வைர வைடூரியங்களாலும் ஒளிர்ந்த நகைகளை அணிந்திருந்த அந்தப் பெண், இயற்கையாகவே ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த மாளிகையை மேலும் ஒளிரச்செய்தாள்.


     தூய வெண்மையான நிறத்தில், பொன்னிறத்தில் ஒளிவீசும் அங்கங்களைக்கொண்டிருந்த அந்தப் பெண், இராவணனுக்குப் பிடித்தமானவள். அந்த அந்தப்புரத்திற்கே அவள்தான் தலைவி. அவள் பெயர் மந்தோதரியாகும். அந்தப் பெண்ணின் வடிவழகைக் கண்ட பெருந்தோள்களைக் கொண்ட வானர வீரரும், வாயுவின் மைந்தருமான அந்த வானரர், அவள் சீதையாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்தத்தால், பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

     வானரங்களுக்கு உரிய இயல்புடன், அவர் தன் தோள்களைத் தட்டிக்கொண்டார்.  தன் வாலினை முத்தமிட்டுக்கொண்டார்.  மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து ஆடிப்பாடினார். இங்குமங்கும் ஓடினார். தூண்களின் மீது தாவி ஏறி மிண்டும் கீழே நிலத்தில் குதித்தார்.

 

                              பத்தாவது ஸர்கம் நிறைவு.

 


No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...