ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.
ஒன்பதாவது ஸர்கம்
இராவணனின்
அந்தப்புரத்தின் செழிப்பும், புஷ்பக விமானத்தின் சிறப்பும்,
அங்கிருந்த
பெண்களின் தோற்றமும்.
வாயுவின் மைந்தனான ஸ்ரீஅனுமன், அந்த மாளிகை வளாகத்தின்
நடுவே, மிகவும் உயரமும் அகலமும் கொண்ட ஒரு சிறந்த மாளிகையைக் கண்டார்.
நீளத்தில் ஒரு யோஜனை அளவிற்கும், அகலத்தில்
அரை யோஜனை அளவிற்கும் இருந்த அந்த இராவணனின் மாளிகையில் ஏராளமான மேல்மாடங்கள் இருந்தன.
எதிரிகளை அழிப்பதில் வல்லவரான ஸ்ரீஅனுமன், நீள்விழியாளான
வைதேஹியெனப்படும் சீதையைத் தேடியவண்ணம், அந்த மாளிகை எங்கும் சுற்றித் திரிந்தார்.
திருவருள் மிக்க ஸ்ரீஅனுமன், சிறப்புமிக்க அரக்கர்களின்
வீடுகளில் நன்றாகத் தேடிப்பார்த்தவண்ணம், அரக்கர்களின் வேந்தனின் இருப்பிடத்தைச் சென்றடைந்தார்.
பரப்பளவு மிக அதிகம் கொண்ட அந்த மாளிகையை, நான்கு
மற்றும் மூன்று தந்தங்களுடைய யானைகள் சூழ, உயர்த்திப்பிடித்த ஆயுதங்களுடன் அரக்கர்கள்
காவல் காத்து வந்தனர்.
அந்த மாளிகை முழுவதும், இராவணின் மனைவிகளும்,
போரில் வென்று கைப்பற்றிக் கொண்டுவரப்பட்ட அரசகுமாரிகளும் நிரம்பியிருந்தனர்.
அந்த மாளிகையானது, முதலைகள், திமிங்கிலம், சுறா
போன்ற பெரிய பெரிய மீன்களும், பாம்புகளும் நிறைந்து, காற்றின் வேகத்தில் எழும்பும்
பேரலைகளைக் கொண்டிருக்கும் பெருங்கடலைப் போன்றிருந்தது.
குபேரன் மற்றும் இந்திரன் ஆகியோரது இல்லங்களில்
உள்ளது போல் இராவணனின் இல்லத்திலும் செல்வமானது பெருகி வழிந்தது.
பேரரசனான குபேரன், எமதர்மன் மற்றும் வருணதேவன்
ஆகியோரது செல்வச்செழிப்பிற்கு ஈடாகவோ அல்லது அதனை மிஞ்சும் வண்ணமோ அந்த அரக்கர்களின்
வீடுகளில் செல்வச்செழிப்பு மிகுந்திருந்தது.
அந்த மாளிகையின் மேல்தளத்தின் நடுவில், மிகவும் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய இன்னுமொரு அழகிய மாளிகையை, வாயுமைந்தனான ஸ்ரீஅனுமன் கண்டார். மேலும், அந்த மாளிகையைச் சுற்றிலும் மதங்கொண்ட யானைகள் நின்றிருப்பதையும் அவர் கண்டார்.
தனது கடுந்தவத்தால் நான்முகனிடமிருந்து வரமாகக்
குபேரன் அந்த புஷ்பகவிமானத்தைப் பெற்றான். அரக்கர்குல வேந்தன் தனது வலிமையால், அதைக்
குபேரனிடமிருந்து வென்று, தனதாக்கிக்கொண்டான்.
தங்கத்தால்
செய்யப்பட்டு,
ஒளிர்ந்து
கொண்டிருந்த
அந்த
அழகிய
சிற்ப
வேலைப்பாடுகள்
கொண்ட
தூண்களில்
ஓநாய்களின்
உருவங்கள்
செதுக்கப்பட்டிருந்தன.
மேருமலை, மந்தரமலை போன்றவற்றிற்கு நிகராக ஆகாயத்தை
முட்டும் உயரங்களுடன், எல்லா நலன்களையும் கொண்டிருக்கும் கோபுரங்கள் அதன் எல்லாத்திசைகளிலும்
நின்று ஒளி வீசின.
நெருப்பு, சூரியன் போன்று ஒளிவீசும் வண்ணம் விஷ்வகர்மாவினால்
வடிவமைக்கப்பட்ட அந்த விமானத்தில், தங்கத்தால் செய்யப்பட்ட படிக்கட்டுக்களுடன் கூடிய
அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த விமானத்தின் ஜன்னல்களும் சாளரங்களும் தங்கத்தினாலும்,
ஸ்படிகத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. இந்த்ரநீலம், மகாநீலம் எனப்படும் உயர்ந்தரக கற்களினால்
அதன் மேடைகள் அழகுபடுத்தப்பட்டிருந்தன.
அதனுடைய தரையானது, பவழங்களாலும், வியப்பளிக்கும்
விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களாலும், நிகரற்ற முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவீசிக்கொண்டிருந்தது.
செக்கச்சிவந்த, உருக்கிய தங்கம் போன்ற நிறத்தில்,
நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்த சந்தனம் அதில் இருந்ததால், அது உதிக்கின்ற சூரியனைப்போலப்
பிராகாசித்தது.
பலவித அழகிய மேல்மாடிகளால் அலங்கரிக்கப்பட்ட
அந்த மிகச்சிறந்த புஷ்பகவிமானத்தின் மீது ஸ்ரீஅனுமன் தாவி ஏறினார்.
அங்கே,
உணவுப்பண்டங்கள்,
பானங்கள்
ஆகிவற்றின்
நறுமணம்
நிறைந்து,
தவழ்ந்துகொண்டிருந்த காற்றை
அவர்
முகர்ந்துபார்த்தார்.
மதிப்புமிக்க உறவினரை, “இங்கே வருக!” என்று விரும்பியழைக்கும்
உறவினன் போல, அந்த நறுமணம் இராவணனின் வீட்டிற்கு, ஆற்றல்மிக்க ஸ்ரீஅனுமனை அழைப்பது
போல் இருந்தது.
முன்னே சென்ற அவர், மிகவும் விசாலமானதும், சிறந்த
குலமகள் போன்ற சிறப்புப் பெற்றதுமான, இராவணனின் மனதிற்குப் பிடித்தமான மண்டபத்தைப்
பார்த்தார்.
அந்த மண்டபத்தில் இருந்த படிகளில், விலையுயர்ந்த
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கதவுகளும் ஜன்னல்களும் தங்கத்தால் இழைக்கப்பட்டிருந்தன.
மண்டபத்தின் தரையானது ஸ்படிகக்கற்களால் வேயப்பட்டிருந்தது. இடையிடையே தந்தத்தால் செய்யப்பட்ட
சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்த
மண்டபத்தைத் தாங்கி நின்ற தூண்கள், தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டு, முத்துக்கள்,
பவழங்கள் மற்றும் இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மேலும் அங்கிருந்த பல தூண்கள் சமமானதாகவும்,
உயரமானதாகவும், சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தன. இறக்கைகள் போலக் காட்சியளித்த
அந்த
உயர்ந்த
தூண்களால்,
அந்த
விமானம்,
உயரக்கிளம்பி,
வானுலகம்
நோக்கிச்
செல்லவிருப்பது
போல
இருந்தது.
அந்த மண்டபத்தின் தரையில் மிகவும் பெரியதான கம்பளம்
விரிக்கப்பட்டிருந்தது. அதில் பூமியின் முக்கிய
பாகங்கள் (மலை, காடு, ஆறு) சித்திரங்ளாக வரையப்பட்டிருந்தன. மேலும் அதில் மாளிகைகளும்,
வீடுகளும் ஒரு வரிசையாய் மாலையைப்போல வரையப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்போது,
பூமியே தன் விசாலமான உருவத்துடன் அங்கு வந்துவிட்டதுபோல இருந்தது.
அந்த மண்டபத்தில் இணைதேடும் பறவைகளின் கூக்குரல்
ஓசைகள் கேட்ட வண்ணம் இருந்தன. அரக்கவேந்தன் வசிக்கும் அந்த இடம் நறுமணம் நிறைந்ததாய்
இருந்தது. பல வண்ணங்களில் வரையப்பட்ட சித்திரங்கள் கொண்ட திரைச்சீலைகள் எங்கும் தொங்கியபடி
இருந்தன.
அன்னப்பறவை போல, களங்கமற்ற வெண்ணிறத்தில் இருந்த
அந்த மண்டபத்தில் அகில் முதலானவைகளினால் உண்டான கரும்புகை சூழ்ந்திருந்தது. பலவித மலர்களால் அர்ச்சிக்கப்பட்டிருந்த அந்த மண்டபம்,
காண்பதற்கு, நினைத்ததையெல்லாம் கொடுக்கும் காமதேனு போல் மிளிர்ந்தது.
அந்த மாளிகையின் ஒளி அசாதாரணமாய் இருந்தது. மனதை
மயக்குவதாய் இருந்தது. மனதில் இருக்கும் கவலைகளைப் போக்கும் வல்லமை கொண்டதாய் இருந்தது.
அனைத்துவிதமான செல்வங்களும் உற்பத்தியாகும் இடம் போல அது இருந்ததை ஸ்ரீஅனுமன் பார்த்தார்.
ஒரு தாயானவள் எவ்விதம் தன் அரவணைப்பால் ஐம்புலன்களுக்கும்
மகிழ்ச்சி கொடுப்பாளோ, அது போல இராவணனின் அந்த மண்டபம், மனதிற்கு மகிழ்ச்சி கொடுப்பதை
உணர்ந்தார்.
“இது சொர்க்கலோகமோ, அல்லது தேவர்கள் வாழுமிடமோ
அல்லது இந்திரனின் அமராவதி நகரமோ அல்லது கிடைத்தற்கரிய வீடுபேறோ” என்ற பலவிதமான எண்ணங்கள்
ஸ்ரீஅனுமன் மனதினுள் ஏற்பட்டன.
அங்கிருந்த பொன்மயமான விளக்குகள் அசையாமல் ஒளிவீசிக்கொண்டிருந்ததைப்
பார்க்கையில், சூதாட்டத்தில், பெரிய ஆட்டக்காரனிடம் தன் உடமைகளை இழந்தவனின் எண்ணமானது
மீண்டும் ஆட்டம் ஆடி வென்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மாறாமல் இருப்பது போல
இருந்தது.
அங்கே எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளாலோ, அல்லது இராவணனிடமிருந்து வீசும் ஒளியினாலோ அல்லது அலங்கரிக்கப்பட்டிருந்த நகைகளின் காரணமாகவோ, அந்த இடமே தீப்பற்றியிருப்பது போன்ற தோற்றத்தைத் தந்தது.
பலவிதமான வண்ணங்களில் விதவிதமான உடைகள் அணிந்து,
கழுத்தில் மாலைகளுடன், அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் அந்த விரிப்பில்
இருந்ததை அவர் கண்டார்.
இரவு தொடக்கம் முதல் கேளிக்கை விளையாட்டுக்களில்
ஈடுபட்டிருந்த அவர்கள், களைப்புற்றதாலும்,
மதுவருந்திய மயக்கத்தினாலும், உறக்கம் மேலிட, அந்த பாதியிரவு கழிந்த நிலையில், ஆழ்ந்த
உறக்கத்தில் இருந்தார்கள்.
அணிந்திருந்த ஆபரணங்களின் ஓசையெதுவிமின்றி ,பெண்கள்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த இடமானது, ஒலியெழுப்பாமல்
நீந்தும் அன்னப்பறவைகளையும், ரீங்கரிக்காத வண்டுகளையும் கொண்ட பெரிய தாமரைக்குளம் போல இருந்தது.
பற்கள் தெரியாமல் ஒன்றுடன் ஒன்று கூடி மூடியிருந்த
உதடுகளையும், மூடிய கண்களையும் கொண்டிருந்த அந்தப் பெண்களின் முகங்கள், தாமரை மலர்களின்
நறுமணத்துடன் இருந்ததை , வாயுமைந்தன் பார்த்தார்.
பகற்பொழுதில் இதழ் விரித்துப் பொலிவுடன் இருக்கும்
தாமரை மலரானது, இரவினில் இதழ் குவித்து பொலிவிழந்து இருப்பது போல அந்தப் பெண்களின்
முகங்கள் இருந்தன.
அவர்கள் அணிந்திருந்த மாலைகளிலிருந்த பூக்களில்
தேனுண்ட கிறக்கத்தில் இருந்த வண்டுகள் மீண்டும் மீண்டும் அந்த முகத்தாமரைகளை விரும்பிச்
சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்கையில், அந்த முகங்களின் வடிவமைப்பால், அவை நீரில் பூத்த
தாமரை மலர்களுக்கு நிகர்த்தவையே என்று ஸ்ரீஅனுமன்
எண்ணினார்.
அந்தப்
பெண்களின் அழகால், இராவணனின் அந்த மண்டபமானது, மின்னும் நட்சத்திரங்களினால் ஒளிரும்
இலையுதிர்கால ஆகாயம் போல் ஒளிர்ந்தது.
அந்தப் பெண்களால் சூழப்பட்டிருந்த அந்த இராவணனும்,
அழகிய நிலவானது ஒளிரும் நட்சத்திரங்களால் சூழப்பட்டிருப்பதுபோல விளங்கினான்.
ஆகாயத்திலிருந்து, மீதமிருந்த தங்கள் நல்வினைகளோடு
பூமியில் விழுந்த நட்சத்திரங்களெல்லாம் ஒன்றுகூடி அங்கிருந்த பெண்களாக இருந்தார்களோ
என்று அந்த வானரர் எண்ணினார்.
ஏனென்றால், அந்தப் பெண்களின் வடிவழகும், கவர்ச்சியும்,
நட்சத்திரங்கள் வீசும், நலம் தரும் ஒளியின் சிறப்பையும் கவர்ச்சியையும் ஒத்திருந்தன.
காம விளையாட்டுக்களாலும், மதுவின் மயக்கத்தாலும்
அந்தப் பெண்கள், நிலைதிரிந்த மாலைகளுடனும், அவிழ்ந்துகிடந்த ஆபரணங்களுடனும் உறக்கத்தின்
பிடியில் இருந்தார்கள்.
அந்தப்பெண்களில் சிலருக்கு நெற்றித்திலகங்கள்
அழிந்திருந்தன. சிலருக்கு கால் கொலுசுகள் கழண்டிருந்தன.
சிலரது கழுத்தணிகள் அவிழ்ந்திருந்தன.
அணிந்திருந்த முத்துமாலைகள் சுற்றிலும் சிதறுண்டுகிடக்க
சில பெண்கள் இருந்தார்கள். ஆடைகள் அவிழ்ந்திருந்த பெண்கள் சிலர் இருந்தார்கள். இடையணிகள் அவிழ்ந்த நிலையிலும் சில பெண்கள் இருந்தார்கள். அவர்கள் இருந்த நிலையைப் பார்க்கும்போது, வெகுதூரம்
பாரம் சுமந்துவந்தபின் தங்கள் தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்குதிரைகள் களைப்புடன்
விழுந்துகிடப்பது போலத்தோன்றியது.
காதுகளில்
அழகிய குண்டலங்களை அணிந்திருந்த அந்தப் பெண்களின் கழுத்தில் இருந்த மாலைகள் கசங்கி,
பூக்கள் உதிர்ந்து கிடந்திருந்ததைப் பார்க்கும்போது, கானகத்தில் யானையின் கால்களால்
மிதிபட்டு நசுங்கியிருக்கும் செடிகொடிகளில் அழகிய பூக்கள் பூத்திருந்தது போலத் தோன்றியது. அந்தப்பெண்களின் மார்பகங்களுக்கு நடுவில் கிடந்த,
நிலவினைப்போல ஒளிர்ந்துகொண்டிருந்த முத்துமாலைகளைப் பார்க்கும்போது, அவை உறங்கிக்கொண்டிருக்கும்
அன்னப்பறவைகளைப் போலத் தோன்றின.
சில பெண்களின் மார்புகளில் இருந்த வைடூரிய மாலைகள்
அன்னப்பறவைகள் போலவும், சிலரது மார்பில் இருந்த தங்க நகைகள் சக்ரவாகப்பறவைகள் போலவும்
தோற்றமளித்தன.
நதிக்கரைகளில் உள்ள மணற்குன்றுகள் போலத்திகழ்ந்த
அந்தப் பெண்களின் பின்னழகுகள், அன்னப்பறவைகளும், நீர்ப்பறவைகளும், சக்ரவாகப் பறவைகளும்
நிறைந்து மிளிரும் ஆறுகள் போலத் தோற்றமளித்தன.
அவர்களின் காற்சதங்கைகள் மலர்மொட்டுக்களாகவும்,
முகங்கள் பொற்றாமரை மலர்களாகவும், உடலின் காம நெளிவுகள் முதலைகளாகவும், உடலின் ஒளிவண்ணங்கள்
ஆற்றின் கரைகளாகவும் தோற்றமளிக்க, அந்தப் பெண்கள், ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் நீரோட்டம்
போலவிருந்தனர்.
அந்தப்பெண்களின் மென்மையான உடற்பகுதிகளிலும்,
மார்பகங்களிலும் அவர்கள் அணிந்திருந்த நகைகளின் அழுத்தத்தினால் உண்டாயிருந்த தழும்புகள்,
உண்மையான நகைகள் போலவே தோற்றமளித்தன.
சில பெண்களின் முகம் வரை இழுக்கப்பட்டிருந்த
மேலாடைகள், அவர்களின் வாயிலிருந்து வரும் மூச்சுக்காற்றினால் மீண்டும் மீண்டும் அசைந்துகொண்டே
இருந்தன.
பலவிதமான நிறங்களில் இருந்த இராவணனின் மனைவியர்
அணிந்திருந்த பலவண்ண ஆடைகளின் புடவை நுனிகள், கழுத்திற்குக் கிழே அசைந்தவண்ணம் இருந்ததைப்
பார்க்கையில், கொடிக்கம்பங்களில் ஒளிவீசிக்கொண்டு பறந்துகொண்டிருக்கும் பலவண்ணக் கொடிகள்
போலத் தோற்றமளித்தன.
கவர்ந்திழுக்கும் அழகையுடைய சில பெண்கள் விடும்
மூச்சுக்காற்றினால் அவர்கள் காதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் அழகாக ஆடியவண்ணம் இருந்தன.
அந்தப்பெண்களின் இயல்பாகவே நறுமணத்துடன் இருக்கும்
மூச்சுக்காற்றானது, அவர்கள் அருந்தியிருந்த சர்க்கரை கலந்த மதுவிலிருந்து வந்த இனிய,
சுகமான வாசனையோடு, இராவணனுக்கு மேலும் இன்பம் அளித்துக்கொண்டிருப்பது (பணிவிடை) போல
இருந்தது.
இராவணனின் மனைவியருள் சிலர், அருகில் இருந்த
மற்ற மனைவியரின் முகங்களை, இராவணைனின் முகமென்று மயங்கி, முகர்ந்தவண்ணம் இருந்தனர்.
இராவணனிடம் இருந்த அதிக ஆசையால், அந்த உத்தம
மனைவியரும், தங்கள் சுயநினைவின்றி, அவர்களுடன் களித்திருந்தனர்.
சில பெண்கள், வளையல்கள் அணிந்திருந்த தங்கள்
கைகளையும், சில பெண்கள் தங்கள் புடவைத்தலைப்புக்களையுமே தலையணைகளாக வைத்துக்கொண்டு
உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஒருத்தி, இன்னொருத்தியின் மார்பின் மீது தலைவைத்துப்
படுத்திருக்க, அவளின் தோளின் மீது இன்னொருத்தி சாய்ந்திருக்க, வேறொருத்தி மற்றொருத்தியினுடைய மடியில் தலைவைத்திருக்க, இவ்விதம் பலநிலைகளில் அவர்கள் மயக்கத்தில் உறங்கிக்கிடந்தனர்.
காமத்தின் வேகத்திலும் மதுவின் மயக்கத்திலும்
வசமிழந்திருந்த அந்தப் பெண்கள், ஒருவர் மற்றவரின் இடைப்பகுதி, தொடைப்பகுதி, பின்புறம்,
முதுகுப்பகுதி, மடி ஆகியவற்றைக் கைகளால் தழுவிக்களித்திருந்தனர். மெல்லிடையினரான அந்தப்
பெண்கள், இவ்விதம் மற்றப்பெண்களின் உடற்பகுதிகளைத் தழுவிக்கொண்டு, தங்கள் காதலரையே
தழுவுவதாக நினைத்து மகிழ்ந்திருந்தனர்.
ஒருவருக்கொருவர்
கைகளால்
பின்னிக்கொண்டு
கிடந்த
அந்தப்
பெண்களின்
வரிசையைப்பார்க்கும்
பொழுது,
நூலில்
கோர்க்கப்பட்ட
ஒரு
பூமாலையை,
மதுவை
நாடி,
சுற்றித்திரியும்,
வண்டுகள்
சூழ்ந்திருப்பது
போலிருந்தது.
வசந்தகாலமான வைகாசி மாதத்தில் பூத்துக்குலுங்கும்
கொடிகள் போலவே இராவணனின் அந்த மனைவியர் தோற்றமளித்தனர். காற்றினால் கொடிகளின் கிளைகள்
ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொள்வது போல அந்தப் பெண்களின் தோள்கள் பின்னிக்கிடந்தன.
மலர்த்தோட்டங்களில் வேறு வேறு கொடிகளில் பூத்திருக்கும்
மலர்களும் ஒன்றுடன் மற்றொன்று கலந்திருக்க, அவற்றைச்சுற்றும் வண்டுகளும் தங்களுக்குள்
கலந்துவிடுவதுபோல, அந்தப் பெண்களின் கூந்தல்களும் அவற்றில் சூடியிருந்த மலர்களும் கலந்து
கிடக்க, அந்த இடமே ஒரு மலர்த்தோட்டம் போலத் காட்சியளித்தது.
அங்கு கிடந்திருந்த பெண்கள் அனைவரும் தத்தமது
உடலமைப்புகள், ஆடைகள், மாலைகள், அணிகலண்களுடன் விளங்கினாலும், இன்னாருடையது இது என்று
பிரித்துச்சொல்ல இயலாதவாறு ஒருவருடனொருவர் கலந்து கிடந்தார்கள்.
இராவணன் சுகமான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால்,
அந்த ஒளிவீசிக்கொண்டிருந்த பெண்களை இமைகொட்டாது பார்த்து ரசிக்க அதுவே தக்க தருணம்
என்று நினைத்தது போல, பொன்விளக்குகளில் எரிந்துகொண்டிருந்த ஒளிச்சுடர்கள் அசையாது நிலைத்திருந்தன.
“அரசர்கள், முனிவர்கள், தேவதைகளான முன்னோர்கள்,
தைத்யர்கள், கந்தர்வர்கள் முதலியோரது பெண்களும், அசுரகுலத்துப் பெண்களும் இராவணன் மேல்
மையல் கொண்டு அங்கிருந்தார்கள்.”
“அந்தப் பெண்களில் பலர், போர்மீது பெருவிருப்பம்
கொண்ட இராவணனால் கவர்ந்துவரப்பட்டவர்கள் என்றாலும் சிலர் இராவணன் மீது கொண்ட ஆசையால்
தாமாகவே அவனின் மனைவிகளாக அங்கு வந்திருந்தார்கள்.”
“ஜனகனின் மகளான சீதையைப்போலல்லாமல், அங்கிருந்த
பெண்கள் யாரும் (சதியின் மூலமாக) பலாத்காரமாகக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்ல. அனைவரும்
இராவணனின் போராற்றலால் வெல்லப்பட்டவர்கள்.
அந்தப் பெண்கள் வேறு ஆடவர் யாருடனும் விருப்பம் கொண்டவராகவோ, அதற்கு முன் வேறு
எவரின் மனைவியாகவோ இல்லை.”
“அந்தப்பெண்களில் யாரும் தாழ்ந்தகுலத்தில் பிறந்தவராகவோ,
வடிவழகில் குறைந்தவராகவோ, அறிவாற்றலில் குறைந்தவராகவோ, நன்கு மதிக்கப்படாதவராகவோ, திறமைகுறைந்தவராகவோ,
கணவனால் விரும்பப்படாதவராகவோ இல்லை.”
எவ்விதம் அரக்கர்குல அரசனின் மனைவியர் தங்கள்
கணவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்களோ, அவ்விதமே ஸ்ரீராமனின் மனைவியை அவரது கணவருடன்
இருக்கவிடுவது இராவணனுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் என்று நல்லறிவாற்றல் மிக்க வானரர்
தலைவரான ஸ்ரீஅனுமன் நினைத்தார்.
“சீதையானவள் எல்லாப் பெண்களையும் விட நற்குணங்களில்
சிறந்தவள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆனால் இந்தப் பேராண்மைமிக்க இராவணன் அவரை சூழ்ச்சியால்
கவர்ந்து வந்து இழிசெயலை செய்துவிட்டானே” என்று வருந்தி, மேலும் அவர் சிந்திக்கலானார்.
ஒன்பதாவது ஸர்கம் நிறைவு.

No comments:
Post a Comment