சென்ற ஞாயிறு அன்று மீண்டும் வேலூர் செல்ல நேர்ந்தது. மீண்டும் காவிரி... இந்த முறை பிள்ளையாரை மறக்கவில்லை. முதலிலேயே அவரைப்பார்த்து விடுவது என்ற முடிவுடன் காரை பாலம் தாண்டியவுடன் நிறுத்திவிட்டேன். ஸ்ரீனிவாசனும் (பெரிய) எங்களுடன் (நான், பூமா மற்றும் ஹரி) வந்திருந்தான். பிள்ளயரைப்பார்க்க வசதியாக படிக்கட்டு கட்டப்பட்டிருந்தது. ஆனால் கோயில் தான் எல்லாம் மாறி விட்டது. அரச மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மணிகளைக் காணவில்லை. பிள்ளையாருக்குத் துணையாக குடிமகனொருவன் பின்புறமாக உறங்கிக்கொண்டிருந்தான். கோயிலுக்கு பின்புறமிருந்த ஓடையில் (குடத்தில் நாங்கள் நீர் மொண்ட) சிலர் குளித்துக்கொண்டிருந்தனர்.
அந்தோ... கோயிலிலிருந்து வாய்க்கால் வரை சென்ற அந்த ஒற்றையடிப்பாதையைக் காணவில்லை. புதர்கள் மண்டி பாதை இருந்த சுவடே தெரியவில்லை. கோயிலின் அருகில் இருந்த அந்த செங்கல்லினால் கட்டப்பட்ட வாய்க்கால் பாலம் மட்டும் அப்படியே இரு(டி)ந்துகொண்டு .....ம்ம் ..பாலம் வழியே காவிரிக்கு செல்லும் வழியைக் காணவில்லை. மீண்டும் புதர்கள்.. நிறைய விஷயங்களைக் காணவில்லை. ஆனால் ... அந்த பசுமை.... வாழையும், தென்னையும், வெற்றிலையும் மட்டும்தான் வேலுரை இன்னும் வேலூராக வைத்துள்ளது.
1 comment:
மிக அழகான போட்டோக்கள். அதே சமயம் நம் மனத்துக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் வேலூருக்கும் இப்போது உள்ள வேலூருக்கும் உள்ள வித்தியாசத்தால் ஏற்படும் வலி. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. ஏற்றுக்கொள்வோம். பட்டவர்த்திப் பிள்ளையாரைப் பார்த்தவுடனே என் வயதும் இப்போதைய உடம்பும் மறந்து போய் ஒல்லியாக இரட்டைப் பின்னலுடன் பாவாடை சட்டை போட்டுக்கொண்டு குதித்துகொண்டிருந்த ரமா ஒரு நிமிடம் உயிர் பெற்று விட்டாள்.
உண்மையில் நாம் எல்லாரும் மிகுந்த அதிருஷ்டசாலிகள் தான் என்று தோன்றுகிறது. நம் இளமைக்காலம் நமக்கு நினைவிருப்பதைப்போல் எல்லாருக்கும் இருப்பதில்லையா அல்லது அவர்கள் அதை முக்கியம் என்று நினைக்கவில்லையா? இவ்வளவு விதம் விதமான அனுபவங்கள் நமக்குக்கிடைத்ததற்கு நமக்கென்று ஒரு வீடு இல்லாதது கூட முக்கிய காரணமாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது .
இன்னும் பல விஷயங்களைப்பற்றி நீ எழுதவேண்டும். டாக்டர் வீட்டைப்பற்றியும் அவர்கள் வீட்டு பார்வதி அக்கா உன் உயிரைக்க் காப்பாற்றியதையும் எழுது.உன் பார்வையில் அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். பிறகு என் பார்வையில் நான் எழுதுகிறேன்.
அன்புடன்,
ரமா
Post a Comment