Thursday, November 19, 2009

கூரை வீடு

இது நாங்கள் குடி இருந்த கூரை வீடு. சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய என் நினைவுகளை வருடி , இன்று காலை இருபது நிமிடங்களில் நான் வரைந்த படம். சரியாக இருக்கின்றதா என்று என் அக்காக்கள் தான் சொல்ல வேண்டும்.

3 comments:

RAMA RAMANAN said...

ஸ்ரீதர்,
நம்பவே முடியவில்லை. உன் நினைவாற்றலை சிலாகிப்பதா, உன் வரைகலையை சிலாகிப்பதா? உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கொஞ்ச நாட்களாக பழைய நினைவுகள் கண்ணீரில் நனைந்து கொண்டே தான் வருகின்றன. அந்தக் கூரை வீட்டின் திண்ணையில் தான் எவ்வளவு நினைவுகள் தேங்கிக்கிடக்கின்றன? அந்த அகன்ற திண்ணையில் தான் அழகழகாக பொங்கலுக்குக் கோலம் போடுவோம். அந்தக் குறுகலான திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தான் பட்டாசுகளைப்பிரித்துக்கொண்டோம். மிகச்சிறு வயதில் அதன் இரு பக்கங்களிலும் நீ தாண்டிக்குதித்து விளையாடுவாய்.
அம்மாவின் நினைவாற்றலும் அப்பாவின் கலைத்திறமையும் உன்னிடத்தில் ஒருங்கே சேர்ந்துள்ளன.
ஆனால் இவையெல்லாம் அம்மா இருக்கும் போது நமக்கு என் தோன்றவில்லை? இதைப் பார்த்து மகிழும் கொடுப்பினை அம்மாவுக்கு இல்லையா?
கண்ணீருடன் கலந்து வரும் இந்த நினைவுகள் ஏன் இவ்வளவு இனிமையாகவும் சுகமாகவும் இருக்கின்றன ? இதைத்தான் irony என்று சொல்கிறார்களோ?
நிறைய எழுது.
வேலூரில் எவ்வளவோ வீடுகளில் இருந்திருக்கிறோம். ஆனால் கூரை வீட்டின் நினைவுகளில் வலியும் அதிகம். ஆழமும் அதிகம். அந்தச் சின்னஞ்சிறு வீட்டை தாஜ்மஹாலின் நிலைக்கு உயர்த்தி விட்டாய். அம்மாவின் சார்பில் நான் சொல்கிறேன்: 'வாழ்க வளமுடன்!'
அன்புடன்,
ரமா

RAMA RAMANAN said...

இன்னும் தொடர்கிறேன்.
அகல் விளக்கு வைத்திருக்கும் பிறை , பொங்கலின் போது வருடா வருடம் அடிக்கும் காவியும் சுண்ணாம்பும் சேர்ந்த பட்டை, நாமெல்லாம் ஒரு கையால் கட்டிக்கொண்டு சுற்றிச்சுற்றித் தட்டாமாலை ஆடிய பழைய தூண்கள், மின்சார இணைப்புக்காக கூரை மேல் உள்ள ஏரியல் என்று எதையும் நீ மறக்கவில்லை. அந்தச்சின்ன அறையில் தான் நாம் அனைவும் தூங்குவோம். அதற்கு மேலே உள்ள கூடத்தில் தான் நம் வீட்டின் பொக்கிஷமான புத்தகங்கள் கல்லிப்பெட்டிகளில் இருந்தன. உனக்கு நினைவிருக்காது. அப்பா பாகல்பூர் போயிருந்த போது ஒரு இரவில் மிகவும் பலத்த மழை. நம் வீட்டில் எப்போதுமே 'நனைசுவர்க்கூரை' தான். இடி பயங்கரமாக இடிக்கிறது. கீதா 'அர்ஜுனா அர்ஜுனா' என்று அலறுகிறாள். நீ ஒரு புறம் பயந்து அழுகிறாய். அம்மாவின் கண்ணில் ஒரு சொட்டுக்கண்ணீர் இல்லை. நம் மூவரையும் சமாதானப்படுத்திக்கொண்டே ஒழுகாத இடமாகப் பார்த்து கள்ளிப்பெட்டிகளை நகர்த்தி முடிந்த வரை புத்தகங்களைக் காப்பாற்றுகிறார்.
நான் தரிசித்த அம்மா வீரம் நிறைந்தவர். அப்பாவுக்கு தைரியம் சொல்லி நம்மையெல்லாம் படிக்க வைத்தவர். அந்த தைரியத்தை நினைத்தால் அம்மாவின் மீது மரியாதை இன்னும் இன்னும் உயர்ந்து கொண்டே போகிறது.
நம் அம்மா great!
ரமா

geethasrinivasan said...

அன்புள்ள ஸ்ரீதர்
கூரை வீடு படம் பிரமாதம் . அந்த தூண்கள் தொட்டு விளையாட்டு விளையாடும் போது ஆடும் . அப்போது ஒரு சின்ன பயத்துடன் தூண் விட்டு தூண் தாவி விளையாடும் நினைவுகள் .ஓடி வருகின்றன. ராமநாதன் அன்ன பற்றி நினைத்தாலே அவர் கொண்டு வந்து தந்த கரும்பு பாஹு அதை எறும்பு வராமல் இருக்க உரியில் கட்டி வைத்து அம்மா அடை செய்யும் போது போடுவார்கள். ஆனால் ஏனோ பின்னாட்களில் அம்மாவுக்கு அடை என்றல் பிடிக்காமல் போய்விட்டது. இப்போது நினைத்தாலும் அந்த ருசி அடி நாவில் கொஞ்சம் ஒட்டி கொண்டு இருப்பது போல் இருக்கிறது.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...