Thursday, January 18, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் அறுபத்தாறாவது ஸர்கம்.

                                           

                                                     ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

                                                                சுந்தர காண்டம்

                                                   அறுபத்தாறாவது ஸர்கம்.

                        (சூடாமணியைக் காணும் ஸ்ரீராமனின் கழிவிரக்கம்) 



     இலக்குமணன் உடன் இருக்க, அனுமன் சொன்னதைக் கேட்டதும், அந்த மணியைத் தன் மார்பினில் அணைத்த வண்ணம் கண்களில் நீர் வழிய ஸ்ரீராமன் அழுதார்.

     அந்த உத்தமமான மணியைப் பார்த்ததும், கண்கள் குளமான ஸ்ரீராமன், மிகுந்த மன வேதனையில் கலக்கமடைந்தவராய், சுக்ரீவனைப் பார்த்து பின்வருமாறு உரைத்தார்.

     “அன்புமிக்க பசுவின் காம்புகளிலிருந்து கன்றினைக் கண்டதும், பால் தானாகச் சுரப்பது போல், இந்த உத்தமமான மணியைக் கண்டதும், என் இதயமும் உருகி ஈரமாகிறது!”

     “இந்த மணிரத்னமானது எனது மாமனாரால் வைதேஹிக்கு அளிக்கப்பட்டதாகும்.  மண நாளன்று தனது தலையில் சீதை இதை அணிந்திருந்ததால், மேலும் அழகு பெற்று விளங்கியது.”

     “நீரில் உற்பத்தியானதும், ஆன்றோர்களால் போற்றப்பட்டதுமான இந்த மணியை, அறிவாற்றல் மிக்க இந்திரன், யாகத்தின் பரிசாக, மன மகிழ்ச்சியுடன் அளித்தான்.”

     “சிறந்தவரே! (அனுமன்) எவ்வாறு என் தந்தையையும் ஜனகரையும் காணும்போது என் மன நிலை இருக்குமோ, இந்த மணியைக் கண்டு அவ்வாறே உணர்கிறேன்.”

     “என் அன்பிற்கினியவளான சீதையின் தலையில் இந்த மணி அழகுற அமைந்திருக்கும்.  நான் இப்பொழுது இதைப் பார்த்ததும், அவளையே அடைந்துவிட்டது போல உணர்கின்றேன்.”

      பின்னர் அனுமனைப் பார்த்து, “நற்பண்பு மிக்கவரே! மூர்ச்சை அடைந்தவன் மீது எவ்விதம் நீர் தெளித்து அவனை உணர்வடையச் செய்வார்களோ, அது போல, கண்ணீரின் நனைந்த வார்த்தைகளால் விதேஹ அரச குமாரியான சீதை சொல்லியவற்றை மீண்டும் சொல்லி, என்னைத் தெளிவிப்பீராக!” என்றார்.

     பின்னர் இலக்குமணனைப் பார்த்து, “இலக்குமணா! சீதை இங்கில்லாமல் இருக்கும் சமயத்தில் இந்த மணியை நான் பார்க்க நேர்ந்திருப்பது எவ்வளவு வருத்தத்தை உண்டாக்கும் தெரியுமா?” என்றார்.

      பின்னர் அனுமனிடம், “வீரனே! இன்னும் ஒரு மாத காலம் சீதை உயிர் தரித்திருப்பாள் என்றால், அவள் சிரஞ்சீவியாகிறாள்.  ஆனால், மைவிழியாளான அவள் இல்லாமல் இனி நான் கணப்பொழுதும் உயிர் தரித்திட மாட்டேன்” என்றார். 

     மேலும், “என் அன்பிற்கினியவளை எங்கு கண்டாயோ, அங்கேயே என்னையும் அழைத்துச் சென்றுவிடு! அவளின் நிலைமையைப் பற்றிக் கேட்ட பின்னர், இனி கணப் பொழுதும் நான் இங்கு காத்திருக்க மாட்டேன்!”

     “மெல்லிடையாளான, கற்புக்கரசியான என் மனைவி அங்கே சதா சர்வ காலமும் பயங்கரமான அரக்கியரால் பயமுறுத்தப்பட்டு என்ன நிலைமையில் இருக்கிறாளோ?”

     “சரத் காலத்து ஒளி மிகுந்த நிலவு, எவ்விதம் மேகங்களால் மறைக்கப்பட்டு, ஒளி மங்கியிருக்குமோ, அது போல, அவளுடைய முகமானது (அரக்கியரால் சூழப்பட்டிருப்பதால்) ஒளியிழந்து கிடக்குமே?”

     “அனுமனே! சீதை என்னவெல்லாம் சொன்னாளோ, அவற்றையெல்லாம் முழுமையாக என்னிடம் கூறிவிடு! நோயுற்றவன் மருந்தைக் குடித்து உயிர் வாழ்வது போல, நான் இவற்றைக் கேட்டுத்தான் உயிர் தரித்திருக்க வேண்டும்!”

     “பிரியமானவளும், இனிய வார்தைகள் பேசுபவளும், கட்டழகியும், என்னை விட்டுப் பிரிந்திருப்பவளுமான அவள் என்ன சொல்லி அனுப்பினாள்?  துன்பத்திற்கு மேல் துன்பத்தைத் தாங்கிய வண்ணம் அவள் எவ்விதம் உயிர் தரித்திருக்கிறாள்? அனுமனே! நீ எனக்கு விவரமாகச் சொல்வாயாக!” என்றார்.

 

                                   அறுபத்தாறாவது ஸர்கம் நிறைவு

Wednesday, January 10, 2024

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம். அறுபத்தைந்தாவது ஸர்கம்.

 

                                     ஸ்ரீ வால்மீகி ராமாயணம்                                                          சுந்தர காண்டம்.     

                       அறுபத்தைந்தாவது ஸர்கம்.


     அவர்கள் வித விதமான காடுகள் மண்டியிருந்த பிரஸ்ரவனமென்னும் மலையில் வந்திறங்கி, அங்கே ஸ்ரீராமனுக்கும், வலிமைவாய்ந்த இலக்குமணனுக்கும், சுக்ரீவனுக்கும் கை கூப்பி வணக்கம் செய்தார்கள்.  பிறகு இளவரசர் முன் நடத்திச் செல்ல, சீதையின் இப்போதைய நிலவரத்தைச் சொல்வதற்காகக் காத்து நின்றார்கள்.

     இராவணனது அந்தப்புரத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதையும், அரக்கியரால் அவர் மிரட்டப் படுவதையும், ஸ்ரீராமனிடம் அவர் (சீதை) வைத்திருந்த அன்பினைப் பற்றியும், அவருக்கு (சீதைக்கு) காலக் கெடு விதிக்கப் பட்டிருப்பதையும் உள்ளது உள்ளபடி, அந்த வானரர்கள் ஸ்ரீராமன் முன்னிலையில் அறிவித்தார்கள்.

     ஸ்ரீராமன் அவர்களைப் பார்த்து, “வானரர்களே! சீதை எங்கிருக்கிறாள்? என்னைப் பற்றி என்ன சொல்கிறாள்? வைதேஹியைப் பற்றிய இப்படிப்பட்ட எல்லா விபரங்களையும் சொல்லுங்கள்!” என்றார்.

     ஸ்ரீராமனின் மொழிகளைக் கேட்ட வானரர்கள், சீதையைப் பற்றி முற்றிலும் அறிந்தவரான அனுமனை, ஸ்ரீராமனுக்குப் பதிலிறுக்குமாறு வேண்டினர்.

     வானரர்களின் வேண்டுகோளை ஏற்ற பேச்சாற்றல் மிக்க, வாயுவின் மைந்தனான அனுமன், சீதை இருக்கும் திசை நோக்கித் தலை வணங்கினார்.  பிறகு, தானாகவே ஒளி வீசிக்கொண்டிருக்கும் அந்த உயர்ந்த காஞ்சனமணியை, ஸ்ரீராமனின் கைகளில் கொடுத்த அனுமன், பின்வருமாறு கூறலானார்.

     “நான் ஜனகரின் மகளாகிய சீதையைக் காண விரும்பி, தேடிச் செல்கையில், நூறு யோஜனை அளவு அகலமான, ஒரு கடலைத் தாண்டிச் சென்றேன். அப்பொழுது கடலின் தென் திசையில் இருந்த தெற்குப்புறக் கரையில் கெட்டவனான இராவணனின் இலங்கை என்னும் நகரம் இருந்தைப் பார்த்தேன்.”

     “ஸ்ரீராம! கற்புநெறி மிக்க அழகுமிகு சீதையை, இராவணனுடைய அந்தப்புரத்தில் கண்டேன்.  தனது மனம் முழுவதிலும் உங்களது நினைவை நிரப்பியே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.  அங்கிருந்த அழகான வனத்தில் அரக்கியர்கள் காவல் காக்க, விகாரமான அரக்கியரால் மீண்டும் மீண்டும் மிரட்டப்பட்டு, திகிலடைந்தவராக இருப்பதைக் கண்டேன்.”

           “தங்களுடன் இன்புற்றிருக்க வேண்டிய தேவி மிகவும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளார்.  அரக்கியரின் காவலுக்கு நடுவில் இராவணனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.  எப்பொழுதும் தங்கள் நினைவாகவே இருக்கும் தேவி, ஒற்றைப் பின்னலுடன் தரையில் படுத்து உறங்குபவராகக் காணப்பட்டார்.  இராவணனிடமிருந்து தப்ப வழியறியாது, பனிக் காலத் தாமரை மலர் போல வாடிக் களையிழந்து, உயிரை மாய்த்துக் கொள்ள நிச்சயித்துள்ளார்.  காகுஸ்தரே! தங்களிடம் மனதைச் செலுத்தியவராய், தங்களின் நினைவாகவே இருந்தை நான் கவனமுடன் பார்த்தேன்.”

     “குற்றமற்ற உயர்ந்த மானுடரே! இஷ்வாகு குலத்தின் பெருமைகளை நான் போற்றிப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த அவருக்கு இயல்பாக என் மீது நம்பிக்கை ஏற்பட்டது. அப்பொழுது என்னிடம் பேசிய தேவியிடம் எல்லாச் செய்திகளையும் சொன்னேன்.  உங்களுக்கும் சுக்ரீவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள நட்பை அறிந்து மனமகிழ்ச்சி கொண்டார்.  உங்களிடம் கொண்ட பக்தியால் கற்பு நெறி தவறாது இருப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.”

     “புருஷோத்தமரே! இவ்வாறு உங்களிடம் கொண்ட பக்தி என்னும் கடுந்தவம் இருப்பவராக, ஜனகனின் மகளாகிய திருமங்கையைக் கண்டேன்.”

     “சர்வ ஞானியான இராகவரே! சித்ரகூடத்தில் தங்களுக்கும் தேவிக்கும் இடையே ஒரு காகத்தின் பொருட்டு நடந்த நிகழ்வை, எங்கள் சந்திப்பின் அடையாளமாக உங்களுக்கு நினைவு படுத்தச் சொன்னார்.”

     சீதை என்னிடம், “வாயுகுமாரரே! இங்கு காணப்படும், சொல்லப்படும் அனைத்தையும் புருஷோத்தமரான ஸ்ரீராமனிடம் தெரிவிக்க வேண்டும்.  என்னால் ஒருவரும் அறியா வண்ணம் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த சூடாமணியை அவரிடம் கொடுத்து விட வேண்டும்!” என்றும் சொன்னார்.

     மேலும் அவர் என்னிடம், “சுக்ரீவன் அருகிலிருந்து நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், நான் பாதுகாப்பாக வைத்திருந்த இந்த அபூர்வ சூடாமணியை அவரிடம் கொடுக்க வேண்டும்.  நீரில் தோன்றியதும், மனக் கிளர்ச்சி தருவதுமான இந்தச் சூடாமணி எம்மால் உமது வழியாக அனுப்பப்படுகிறது.  கற்களைப் பொடித்த காவியினால் எனது நெற்றியில் அவர் (ஸ்ரீராமன்) வைத்த திலகத்தையும் நினைவூட்டுங்கள்!” என்றார்.

       “குற்றமற்றவரே! நான் துன்புற்றிருக்கும் சமயத்தில் எல்லாம் இதனைப் பார்த்துத்தான் உம்மைப் பார்ப்பது போல ஆறுதல் கொள்வேன். தசரதனின் மைந்தனே! இன்னும் ஒரு மாதமே நான் உயிர் தரித்திருப்பேன்.  அரக்கியரின் பிடியில் இருக்கும் நான், அந்த ஒரு மாதம் கழிந்ததும் உயிர் தரித்திருக்க மாட்டேன்” என்று இராவணனின் அந்தப்புரத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள, மான் குட்டியின் கண்களையொத்த மலர்ந்த கண்களைக் கொண்ட, கற்பு நெறி வழுவாது வாழும் அவர், (சீதை) மனம் கலங்கி, உடல் இளைத்தவராய் உம்மிடம் சொல்லச் சொல்லி என்னிடம் சொன்னார்.”

     “இராகவரே!  இவ்விதமாக அனைத்து விவரங்களையும் ஒன்றுவிடாமல் நான், தங்களிடம் சொல்லிவிட்டேன். இனி எவ்வாறாகிலும் கடலைக் கடந்து செல்வதற்கான முயற்சியைச் செய்யுங்கள்!” என்றார்.

     இவ்வாறாக வாயுகுமாரரான அனுமன், அந்த இரண்டு அரச குமாரர்களும் மனம் தேறியிருப்பதை அறிந்து கொண்டார்.  இராகவரிடம் அந்த அடையாளச் சின்னத்தைக் கொடுத்தார்.  தேவியால் சொல்லப்பட்ட அனைத்தையும், முதலிலிருந்து முடிவு வரை வாய்மொழியாகவும் உரைத்தார்.

       

                    அறுபத்தைந்தாவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம். அறுபத்து நான்காவது ஸர்கம்.

 

                                         

                                     ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

                                  சுந்தர காண்டம்.

                     அறுபத்து நான்காவது ஸர்கம்.

                  (அனுமன் ஸ்ரீராமனைச் சந்தித்தல்)

 


     சுக்ரீவனின் வார்த்தைகளைக் கேட்ட வானர ததிமுகன், மகிழ்வுற்றவனாகி, ஸ்ரீராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவனைப் பணிந்து வணங்கினான்.

     பேராற்றல் கொண்ட ஸ்ரீராமன், இலக்குமணன் மற்றும் சுக்ரீவனைப் பணிந்து வணங்கிய அவன் (ததிமுகன்) தன்னுடன் இருந்த வானர வீரர்களுடன் ஆகாய வழியாகக் கிளம்பிச் சென்றான்.

     அவன் முன்பு எவ்விதம் வந்தானோ, அது போலவே வேகமாகத் திரும்பிச் சென்றான்.  ஆகாயத்தில் இருந்து தரையில் இறங்கி, அந்த மதுவனத்தினுள் நுழைந்தான்.

     மது வனத்தினுள் நுழைந்த அவன், அங்கிருந்த வானர வீரர்கள் அனைவரும் மயக்கம் தெளிந்து தங்கள் சுயநிலைக்கு வந்திருந்ததையும், தாங்கள் குடித்திருந்த மதுவினைச் சிறுநீர் மூலம் கழித்துக் கொண்டிருப்பதையும் கண்டான்.

     அந்த வீரன் ததிமுகன் அவர்களை நெருங்கிச் சென்றான்.  அங்கதனைப் பார்த்துக் கைக் கூப்பி வணங்கியபடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கூறினான்.

     “சிறப்பு மிக்கவரே! காவலர்களின் அறியாமையாலும், கோபத்தாலும் நீங்கள் தடுக்கப் பட்டீர்கள்.  இவர்கள் தடுக்கப்பட்டதை எண்ணி, சினம் கொள்ள வேண்டாம்.”

     “வெகு தொலைவிலிருந்து களைத்து வந்திருக்கும் நீங்கள் பழங்கள் மற்றும் மது அருந்துங்கள்.  ஆற்றல் மிக்க இளவரசே! இந்த வனத்திற்கு நீங்களே தலைவர்!”

     “அறியாமையாலும், கோபத்தின் வசப்பட்டதாலும், நாங்கள் முன்னர் செய்த தவற்றைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்.  உங்கள் தந்தையான வாலி முன்பு வானரத் தலைவராக இருந்தது போல, இப்பொழுது சுக்ரீவனும் நீங்களும் இருக்கின்றீர்கள்.  உங்களையன்றி வேறு யாரும் எங்களுக்குத் தலைவர்கள் இல்லை!”

     “குற்றமற்றவரே! நான் இங்கிருந்து சென்று தங்கள் சிற்றப்பனிடம் வானரர்கள் இங்கு திரும்பி வந்துள்ள செய்தியை அறிவித்தேன்.”

     “இந்த வானரர்களுடன் நீங்கள் திரும்பிய செய்தி கேட்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.  அவருக்கு மதுவனம் அழிக்கப்பட்ட செய்தியால் சிறிதும் சினம் உண்டாகவில்லை!”

     “உங்கள் சிற்றப்பனும் வானர வேந்தனுமாகிய சுக்ரீவன், ‘அவர்கள் அனைவரையும் விரைவில் அனுப்பிவிடு’ என்று மிகவும் மகிழ்ச்சியுடன் என்னிடம் சொன்னார்.”

     வார்த்தைப் பிரயோகத்தில் வல்லவனும், பெருமை மிக்க வானரனுமான அங்கதன், ததிமுகன் சொன்ன இனிய வார்த்தைகளைக் கேட்டு, அனைவரிடமும் இவ்வாறு உரைத்தான்.

     “தலைவர்களே! இவர் மிகவும் மகிழ்வுடன் சொல்வதைக் கேட்கும் போது, ஸ்ரீராமனுக்கு நாம் திரும்பிவிட்ட செய்தி தெரிந்துவிட்டது என்பதை அறிகின்றேன்.  எதிரியை  வெல்லும் வீரர்களே! நாம் இனியும் இங்கு தங்கியிருந்து காலவிரயம் செய்ய நமக்கு நேரமில்லை!”

     “வானரர்களே!  நீங்கள் தாகம் தீருமளவு மதுவருந்தி ஓய்வு கொண்டுவிட்டீர்கள்.  இனி இங்கு காரியம் எதுவும் நமக்கில்லை.  ஆகவே, சுக்ரீவர் இருக்குமிடம் செல்லலாம்!”

     “வானரத் தலைவர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி நான் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.  ஏனென்றால், உங்கள் சொல்படித் தான் நான் இயங்க வேண்டும்!”

     “காரியத்தை முடித்து வந்துள்ள உங்களுக்கு நான் கட்டளையிட முடியாது.  நான் இளவரசனாக இருந்த போதிலும், இது விஷயமாக முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை!”

     இவ்வாறு பேசிய அங்கதனின் உயரிய வார்த்தைகளைக் கேட்ட வானரர்கள், மிகவும் மகிழ்ச்சி கொண்டு, பின்வருமாறு உரைத்தார்கள்.

     “வானரோத்தம அரசே! தலைவனாக இருக்கும் யாரால் இவ்விதம் பேசமுடியும்?  செலவச் செருக்கில், ‘எல்லாம் நானே’ என்று அதிகாரம் செய்பவர்களே இந்த உலகில் இருக்கின்றார்கள்.”

     “இது மாதிரி வார்த்தைகளை உங்களைத் தவிர வேறு யாராலும் பேச முடியாது.  உங்களின் இந்தப் பணிவு, எதிர்காலத்தில் தாங்கள் பெறவிருக்கும் சிறப்பினைத் தெரிவிக்கின்றது.”

     “வானர வீரர்களின் வேந்தரும், மிகுந்த கவனத்துடன் செயலாற்றுவதில் வல்லவருமாகிய சுக்ரீவர் இருக்குமிடம் செல்வதற்கு எந்த நிமிடமும் தயாராக இருக்கிறோம்!"

     “பெருமை மிக்க வானர வீரரே! உங்கள் உத்தரவில்லாமல் வானரர்களால் ஓரடி கூட எடுத்து வைப்பதென்பது இயலாத செயலாகும்.  நாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையாகும்!”

     அவர்கள் அவ்விதம் சொன்னதும், ‘சபாஷ்! (மிக நன்று!) நாம் செல்வோம்!’ என்று (அங்கதன்) பதில் சொன்னார்.  இவ்வாறு சொல்லி முடிக்கும் முன்பே, பலசாலியான வானரர்கள் ஆகாயத்தில் கிளம்பி விட்டார்கள்.

     அந்த வானர வீரர்கள் அனைவரும், பொறியிலிருந்து விடுபட்ட பாறைக்கற்கள் போல, வேகமாக, ஆகாயத்தை மறைத்துக்கொண்டு, முன் செல்லும் அங்கதனைத் தொடர்ந்து சென்றார்கள்.

     அங்கதனும் அனுமனும் முன்னே செல்ல, வேகம் நிறைந்த அந்த வானரர்கள், காற்றினால் விரட்டப்படும் மேகங்கள் போலச் சப்தித்துக்கொண்டு ஆகாயத்தில் பறந்து சென்றார்கள்.

     அங்கதன் நெருங்கி வந்ததும் வானர வேந்தன் சுக்ரீவன், தாமரையைப் போன்ற கண்களைக் கொண்ட, துயரத்தில் மூழ்கியிருக்கும் ஸ்ரீராமனைப் பார்த்து உரைத்தார்.   

     “நீங்கள் மனம் சமாதானம் அடையுங்கள்! உங்களுக்கு நலம் உண்டாகட்டும்! தேவி இருக்குமிடம் காணப்பட்டு விட்டது என்பதில் ஐயம் ஏதுமில்லை.  ஏனென்றால் நாம் கொடுத்திருந்த காலக்கெடு முடிந்த பிறகு, அவர்களுக்கு இங்கே வரும் துணிவு இருக்காது!”

     “அங்கதனின் முக மலர்ச்சியினால் நான் இதை அறிகின்றேன்.  செய்ய நினைத்த காரியம் வெற்றியடைந்திருக்கவில்லை என்றால், தோள் வலிமை மிக்க இளவரசன் அங்கதன் என் முன்னர் வர மாட்டான் என்பது நிச்சயம்!”

     “காரியத்தில் தோல்வியடைந்தவர்கள் நடவடிக்கை இவ்வாறு இருந்திருக்குமேயானால் (மது வனத்தை அழித்தது) அவன் நெஞ்சம் கலங்கியவனாய், முக வாட்டத்துடன் இருப்பான்.”

     “ஜனகனின் மகளைப் பார்த்திராவிட்டால், தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் எனது மதுவனத்தை, இந்த வானரத் தலைவன் அழித்திருக்க மாட்டான்.”

     “கெளஸல்யாவின் திருக்குமாரனாகிய ஸ்ரீராமனே! நல் விரதங்கள் பூண்டவரே!  சமாதானம் கொள்ளுங்கள்! அனுமனால் தான் தேவி காணப்பட்டிருக்கின்றாள்.  வேறு யாராலும் இது முடிந்திருக்காது.  இதில் ஐயம் எதுவுமில்லை.”

     “அறிவிற் சிறந்தோனே! இந்தக் காரியம் செயலாக்கப் பட்டதற்கு அனுமனைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.  அனுமனிடம் மட்டுமே, வெற்றி பெறும் சக்தியும், அறிவாற்றலும், செயலாற்றும் திறனும், அதற்கான ஆற்றலும் குடி கொண்டுள்ளன.”

     “அதுவுமல்லாது, இந்தக் காரியத்திற்காக அமைக்கப்பட்ட படைக்குச் சேனைத் தலைவனாக அங்கதனும், தலைவனாக ஜாம்பவானும், திட்டமிட்டுச் செயலாற்றுபவனாக அனுமனும் இருக்கும்போது, அந்தப் படையின் இயக்கம் வேறு மாதிரியாக இருக்க முடியாது! பேராற்றல் கொண்டவரே! கவலை கொண்டு இருக்க வேண்டாம்!”

     “இந்த வானரர்கள் இவ்வளவு கர்வமுடன் வருகிறார்கள் என்றால், இவர்கள் தங்கள் காரியத்தை வெற்றிகரமாக முடிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.  மது வனத்தில் நுழைந்து மதுவருந்தி, வனத்தை நாசம் செய்ததாலேயே அது விளங்குகிறது.”

     அனுமனின் செயலில் திருப்தி அடைந்தவர்களாய், காரியம் வெற்றி பெற்றதைச் சொல்லும் வண்ணம், அப்பொழுது கிஷ்கிந்தையை நெருங்கி வந்த வானரர்கள் செய்த கிலுகிலுவென்ற சப்தமானது ஆகாயத்திலிருந்து வருவதைச் சுக்ரீவன் கேட்டான். 

     வானரர்களின் அந்தச் சப்தத்தைக் கேட்ட அந்த வானரோத்தமன் (சுக்ரீவன்) மகிழ்ச்சியடைந்து வளைந்திருந்த தன் வாலினை நீட்டிக் கொண்டான்.

     ஸ்ரீராமனைக் காணும் ஆவலில் அந்த வானரர்கள், அங்கதன், அனுமன் முன்னே வர அங்கே வந்து சேர்ந்தார்கள்.

     அங்கதன் முதலான அந்த வீரர்கள், நிறைந்த மனத்துடனும், முக மலர்ச்சியுடனும், வானர வேந்தனுக்கும், இராகவனுக்கும் அருகில் வந்து தரையிறங்கினார்கள்.

     பேராற்றல் கொண்ட அனுமன் ஸ்ரீராமனின் பாதங்களில் தலைவைத்து வணங்கினார். “சீதை, கற்பு நெறி தவறாத கடுந்தவத்துடன், உடலுக்கு கேடு நேரா வண்ணம் இருக்கிறார்” என்று அவரிடம் சுருங்கச் சொன்னார்.

     இலக்குமணரோடு அங்கிருந்த ஸ்ரீராமன், அனுமனின் வாயிலிருந்து “தேவி காணப்பட்டாள்!” என்ற அமிர்தம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

     ‘அனுமனே இந்தக் காரியத்தை முடித்திருப்பான்’ என்ற திட நம்பிக்கைக் கொண்டிருந்த சுக்ரீவனைப் பெருமையுடனும், அன்புடனும், மரியாதையுடனும் இலக்குமணன் உற்று நோக்கினான்.

     அப்பொழுது பகையழிக்கும் வீரரான ஸ்ரீராமன், அனுமனை அன்புடனும், மரியாதையுடனும் தன் கண்களால் கண்டருளினார்.

 

           அறுபத்து நான்காவது ஸர்கம் நிறைவு.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...