ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
பதினாறாவது ஸர்கம்
மிகவும் போற்றத்தகுந்தவரான
சீதையையும், நற்பண்புகளின் உறைவிடமான ஸ்ரீராமனையும் போற்றிய ஸ்ரீஅனுமனின் மனம் மீண்டும்
சிந்தனையில் ஆழ்ந்தது.
கிட்டத்தட்ட
ஒரு முகூர்த்த நேரம் (சுமார் ஒன்றரை மணி நேரம்) அளவிற்கு சிந்தனை வயப்பட்டிருந்த ஸ்ரீஅனுமனின்
கண்களிலிருந்து கண்ணீர் நிரம்பி வழிந்தது.
ஒளிபொருந்திய ஸ்ரீஅனுமன், சீதையின் நிலையைப் பார்த்து இவ்வாறு மனம் கலங்கலானார்.
“சிறந்த ஆசிரியப்
பெருமக்களிடம் கல்வி பயின்ற இலக்குமணனால் மதிக்கப்பட்டவளும், ஸ்ரீராமனின் அன்பு மனைவியுமான
சீதைக்கே இவ்விதம் இன்னல்கள் நேருமென்றால், காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது?”
“ஸ்ரீராமன் மற்றும்
அவரது அறிவாற்றல் மிக்க தம்பியான இலக்குமணனின் வீரத்தின் பெருமையை முற்றிலும் அறிந்திருந்த
சீதை, மழைக்காலத்திலும் கலங்காத கங்கை நதி போல, தன்னுடைய துயரத்தால் அதிகம் கவலையுற்றவராகத்
தெரியவில்லை.”
“கரிய விழிகளைக்
கொண்ட சீதை, தன் பண்பினாலும், இயல்பாலும், வயதாலும் மற்றும் நடத்தையாலும், ஸ்ரீராமனுக்கு,
மிகவும் பொருத்தமான இணையாவார்.”
புத்துருக்குத்
தங்கம் போல ஒளி பொருந்தியும், உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் திருமகள் போலவும்
இருந்த சீதையைப் பார்த்ததும், ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமனை மனதில் துதித்து, இவ்வாறு சொல்லலானார்.
“அகன்ற விழிகளையுடைய
இந்த சீதையின் பொருட்டு, ஸ்ரீராமன், மிக வலிமைமிக்க வாலியையும், இராவணனின் வீரத்திற்குச்
சற்றும் குறைவில்லாத கபந்தனையும் வதம் செய்துள்ளார்.”
“இந்தச் சீதையின்
பொருட்டு, ஸ்ரீராமன், காட்டில், மிகுந்த வீரத்தோடு, மிகவும் அச்சம் தரத்தக்க வீரம்
மிகுந்த விராதன் என்ற அரக்கனை, தேவர்களின் அரசன் இந்திரன், சம்பராசுரனைக் கொன்றது போலக்
கொன்றார்.”
“சீதையின் பொருட்டு,
ஜனஸ்தானம் என்னுமிடத்தில், நெருப்பை உமிழும் தன்னுடைய அம்புகளால், பதினான்காயிரம் அரக்கர்களை,
ஸ்ரீராமன் கொன்றார்.”
“பெரும் போர்களில்,
கரன், திரிசரன் மற்றும் வலிமை மிக்க தூஷணன் போன்றோரையும் ஸ்ரீராமன் வதம் செய்துள்ளார்.”
“அடைவதற்கு அரியதான,
வாலியினால் காக்கப்பட்டிருந்த வானர சாம்ராஜ்யம், சீதையின் நிமித்தமாகவே, உலகப் புகழ்
பெற்ற சுக்ரீவனுக்குக் கிடைத்தது.”
“அகன்ற விழிகளைக்
கொண்டவரான சீதையின் காரணமாகவே, நதிகள் மற்றும் ஓடைகளின் அரசனான பெருங்கடலை நான் தாண்டினேன். இந்த நகரம் முழுவதையும் நான் சோதனை செய்தேன்,”
“சீதைக்காக,
ஸ்ரீராமன், கடல்களுடன் கூடிய இந்த உலகம், மற்றும், வேறு எல்லா உலகங்களையுமே தலைகீழாக
மாற்றியிருந்தால் கூட, அவரது செயல் ஏற்புடையதாகவே இருந்திருக்கும்.”
“சீதைக்கு முன்னால்
மூவுலகங்களும் வந்து நின்று போட்டியிட்டாலும், அவரது ஒரு சிறிய பகுதிக்குக்கூட ஈடாக
முடியாது. “
“அறத்தில் சிறந்தவரான,
மைதிலி தேசத்தின் பேரரசரான ஜனகனின் மகளான சீதை, தன் கணவன் மீது கொண்ட பக்தியிலிருந்து
சிறிதளவும் விலகமாட்டார்.”
“கலப்பையினால்
நிலத்தை உழுதுகொண்டிருந்த பொழுது, அந்தப் பாத்திகளின் உயர்ந்த மண் துகள்கள், தாமரைப்
பூக்களின் மகரந்தத் தூள்கள் போல தன் மீது போர்த்தியபடி, நிலத்தைப் பிளந்து கொண்டு பிறந்தவர்
சீதை!”
சீதை, பெரும்
வீரம் மிக்கவரும், நற்பண்புகள் வாய்ந்தவரும், போரில் என்றுமே புறமுதுகிட்டுத் திரும்பாதவருமான,
மாமன்னர், தசரதனின் புகழ்மிக்க மூத்த மருமகளுமாவார்.”
“அறநெறியிலிருந்து
வழுவாதவரும், கருணை மிக்கவரும், ஆத்ம ஞானியுமான ஸ்ரீராமனின், அன்பினிற்கினிய மனைவியான
சீதை இப்பொழுது அரக்கியர் பிடியில் இருக்கிறார்.”
“தன் கணவன் மீது
இருக்கும் அளவற்ற அன்பின் காரணமாக, தனது ஆடம்பரமான, சுகமான வாழ்க்கையைத் துறந்து, எதிர்கொள்ள
இருக்கும் இன்னல்களைப் பற்றிக் கவலைப்படாமல், மனித நடமாட்டமற்ற காட்டுக்குள் வந்தவர்
சீதை!”
“கிடைத்த கனி,
கிழங்குகளை உண்டு, திருப்தியுடன் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் மனம் செலுத்தி, அரண்மனையில்
இருப்பது போன்ற உற்சாகத்துடனும், மகிழ்வுடனும் அவர் காட்டில் வசித்தார்.”
“தங்கத்தைப்
போன்ற அங்கத்தைப் பெற்று, எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் பேசக்கூடிய சீதை, இது போன்ற
இன்னல்களுக்கு ஏற்புடையவள் இல்லை எனினும், இவைகளைச் சகித்துக் கொண்டுள்ளார்.”
“தாகத்தில் இருப்பவன்,
நீர்ச்சுனையை நாடித் திரிவது போல, இராவணனால் துன்புறுத்தப்பட்டும், தன் இயல்புகளை இழக்காமல்
இருக்கும் சீதையைக் காண, ஸ்ரீராமன் விருப்பம் கொண்டுள்ளார்.”
“தன் நாட்டை
இழந்த ஒரு மன்னன், அதை மீண்டும் பெறும்போது எவ்விதம் மகிழ்வானோ, அதைப் போலவே, சீதையை
மீண்டும் அடையும் ஸ்ரீராமனும் மகிழ்ச்சி அடைவார்.”
“தனது உற்றார்
உறவினரை இழந்து, வசதியான வாழ்க்கையினையும் இழந்து அல்லலுறும் சீதை, ஸ்ரீராமனை மீண்டும்
சந்திக்கும் நம்பிக்கையின் காரணமாகவே, தன் உடலில் உயிரைத் தரித்துள்ளார்.”
“சீதை, தன்னைச்
சுற்றியிருக்கும் அரக்கியரையோ, பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலைகளையோ பொருட்படுத்தாது,
ஸ்ரீராமனையே மனக் கண்களால் நினைத்து தியானித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.”
“எந்த ஒரு பெண்ணுக்கும்,
தன் கணவருடன் இருப்பதே, எல்லாவித அணிகலன்களையும் விட மேன்மையானதாகும். ஆனால், சீதையோ, தன் கணவனை விட்டுப் பிரிந்திருப்பதால்,
ஒளிமிகுந்து விளங்க வேண்டிய தகுதி பெற்றிருந்தும், ஒளியிழந்துள்ளார்.”
“மனைவியை விட்டுப்
பிரிந்திருக்கும் துயரத்தில் வெகுவாக மூழ்கிவிடாமல், தன் உடலை உயிருடன் தக்க வைத்திருப்பது,
ஸ்ரீராமனுக்கு மிகவும் கடினமான செயலாகும்.”
“கரிய கூந்தலையும்,
தாமரை மலர்களையொத்த விழிகளையும் கொண்டிருக்கும் சீதை, சுக போகங்களை அனுபவிக்க வேண்டியவர். அவர் இவ்வாறு துன்பப்படுவதைப் பார்த்து என் மனமும்
வருத்தமடைகிறது.”
“நிலமகளைப் போல
பொறுமை மிக்கவரும், மலர்ந்த தாமரை மலரையொத்த கண்களை உடையவருமான சீதையை, ஸ்ரீராம, இலக்குமணர்கள்
பாதுகாத்து வந்தனர். அவ்விதம் இருந்த சீதை,
இன்று, மரத்தினடியில், குரூரமான அரக்கியரின் பாதுகாப்பில் இருக்கிறார்.”
“கடும் பனியினால்
தாக்கப்பட்ட தாமரை மலரைப் போல ஒளியிழந்து, மீண்டும் மீண்டும் நேரும் இன்னல்களால் மிகுந்த
துயரத்தில் இருக்கும் ஜனகனின் மகளாகிய சீதை, தன் இணையிழந்த சக்ரவாகப் பறவையினைப் போல
அவல நிலையில் உள்ளார்.”
“வசந்த காலம்
ஆரம்பித்துவிட்டதால், அசோக மரக்கிளைகள் மலர்களால் நிரம்பி, அவற்றின் கனம் தாங்காமல்,
வளைந்து கிடப்பது, சீதையின் துயரத்தை அதிகரிக்கச் செய்கின்றது. ஆயிரக்கணக்கான ஒளிக்கதிகர்ளுடன் உதிக்கும் நிலவும்
கூட சீதையின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது.”
வலிமை மிக்க
வானரரான ஸ்ரீஅனுமன், இவ்வாறாக பலவித எண்ணங்களால் சூழப்பட்டு, இறுதியில், “இந்தப் பெண்தான்
சீதை” என்று உறுதிசெய்து கொண்டு அந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தார்.
பதினாறாவது
ஸர்கம் நிறைவு.

1 comment:
ஜெய் ஸ்ரீசீதா ராம்..!!!🙏
Post a Comment