ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.
மதுபான அரங்கத்தில் ஸ்ரீஅனுமன் சீதையைத் தேடுதல்.
அந்தப் பெண் சீதையாக இருக்கக்கூடும்
என்று தன் மனதில் தோன்றிய எண்ணத்தை உதறித்தள்ளிய ஸ்ரீஅனுமன், மீண்டும் சீதையைத் தேடும்
எண்ணம் கொண்டவராய் நிலைத்த மனதுடன் சிந்தனையில் ஆழ்ந்தார்.
இராமனைப் பிரிந்து வாடும் சீதையானவள் எவ்விதம்
இவ்வாறு உறக்கம் கொள்ள இயலும்? அன்ன ஆகாரம் தான் உட்கொள்ள முடியுமா? இவ்விதம் விதவிதமாகத்
தன்னை அலங்கரித்துக்கொள்ளத்தான் முடியுமா? அதிலும் மதுவருந்தி மயக்கத்தில் தான் இருக்க
முடியுமா?
ஒருவன் தேவலோகத்திற்கே தலைவனாக இருந்தபோதிலும்,
அவனை சீதை நாடமாட்டாள். தேவர்களிலும் கூட இராமனுக்கு
இணையானவர் யாரும் இல்லை. ஆகவே இந்தப் பெண்
வேறு யாரோதான் என்ற உறுதிகொண்டு மீண்டும் அங்கிருந்த மதுசாலையில் சீதையைத் தேடி உலவத்தொடங்கினார்.
அங்கே அந்த மதுவரங்கத்தில், சில பெண்கள் அதிகமான
களியாட்டங்களில் ஈடுபட்டதால் களைப்புற்றிருந்தார்கள். சில பெண்கள், பாட்டுக்கள் பாடியதாலும்
சில பெண்கள் அதிகமாக நடனமாடியதாலும் களைத்திருந்தனர். சிலர் மதுவின் மயக்கத்திலும் ஆழ்ந்திருந்தனர்.
சில பெண்கள், தங்களின் இசைக்கருவிகளான டோலக்,
மிருதங்கம் போன்றவற்றின் மீதே சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். சிலர் சிறிய ஆசனங்களிலும்,
சிலர் உயர்ந்த விரிப்புக்களிலும் படுத்திருந்தனர்.
விதவிதமான நகைகள் அணிந்திருந்த சில பெண்கள்,
உறக்கத்திலும் தங்கள் மேனியழகினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் உறக்கத்திலும் பாடற்கலையினைப் பற்றிய சரியான
வாதங்களைப் பேசக்கூடியவர்களாக இருந்தனர்.
காலத்திற்கேற்றவாறு பொருத்தமான கருத்துக்களைப் பேசுபவராகவும் சிலர் இருந்தனர்.
இவ்விதமான
பலவித குணநலன்கள் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்களுடன், உள்ளும் புறமும் காம விளையாட்டுக்களில்
ஈடுபட்டு களிப்புற்று, மெய்மறந்து, இராவணன் உறங்கிக்கொண்டிருந்ததை வானரப்படைக்குத்
தலைவரான ஸ்ரீஅனுமன் கண்டார்.
தனது பெருத்த கரங்களுடன் இராவணன் அந்தப் பெண்களுக்கிடையில்
படுத்துக்கிடந்ததைப் பார்க்கும்போது, பசுக்களின் பெரிய தொழுவத்தில் இருக்கும் காளைமாடு
போலத் தோன்றினான்.
பெண்களே விரும்பி அவனைச் சூழ்ந்து படுத்திருந்ததைப்
பார்க்கும்போது, காட்டில், பெண் யானைகள் சூழ்ந்திருக்கும் பெரிய ஆண் யானையைப் போல விளங்கினான்.
சிறந்த வானரரான ஸ்ரீஅனுமன், பெரும் பேறு பெற்ற
அந்த இராவணனின் மாளிகையில், அனைத்துவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல ஒரு மதுவருந்தும்
அரங்கத்தைப் பார்த்தார்.
அவர் அந்த மதுசாலையில், மான், எருது மற்றும்
பன்றி ஆகியவற்றின் மாமிசங்கள், தனித்தனியே பிரித்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.
அந்த வானரோத்தமர் அங்கே அகலமான தங்கமயமான பாத்திரங்களில்
பாதி உண்ணப்பட்டு மீதம் வைக்கப்பட்டிருந்த மயில்கள், கோழிகள் ஆகியவற்றின் இறைச்சிகளைக்
கண்டார்.
தயிர் மற்றும் செளவர்சலம் என்னும் ஒருவகை உப்பையும்
கலந்து செய்யப்பட்ட பன்றி மற்றும் காட்டுக்கோழிகளின் மாமிசங்களையும், மான், மயில்,
முள்ளம்பன்றி ஆகியவற்றின் மாமிசங்களையும் ஸ்ரீஅனுமன் கண்டார்.
பலவிதமாக பக்குவம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட
க்ரகர என்னும் பறவைகளின் மாமிசங்களும், பாதி உண்ணப்பட்டிருந்த சகோரப்பறவைகளின் மாமிசங்களும்,
எருதுகள், பன்றிகள், செம்மறியாடுகள், ஏகசல்யான் எனப்படும் ஒருவகை மீன் ஆகியவற்றின்
மாமிசங்கள் சுவைபட சமைக்கப்பட்டும் அங்கே வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.
நாவினால் நக்கிச்சுவைக்கப்படத்தகுந்த பலவிதமான
பண்டங்களும், குடிப்பதற்கு ஏதுவான உயர்ந்த
பானங்களும், வாயினால் சுவைத்து மகிழக்கூடிய உணவுப்பொருட்களும் அங்கே வைக்கப்பட்டிருந்ததை
ஸ்ரீஅனுமன் கண்டார்.
மேலும் உப்பு மற்றும் புளிப்பினால் சுவையூட்டப்பட்ட
உணவு வகைகளாலும், திராட்சை, மாதுளை பழங்களின் ரசங்கள் கலக்கப்பட்ட மதுவகைகளாலும், விலையுயர்ந்த நகைகள், சலங்கைகள், தோள்வளைகள் போன்றவை
இறைந்து கிடந்ததாலும், மதுக்கோப்பைகளில் வைக்கப்பட்டிருந்த பழவகைகளாலும், மலர்கள் தூவப்பட்டிருந்ததாலும்
அந்த இடமே அழகுற விளங்கியது.
அந்த மது அருந்தும் இடத்தில், நன்கு கட்டமைக்கப்பட்டு,
வரிசைக்கிரமமாய் அமைக்கப்பட்டிருந்த படுக்க ஏதுவான ஆசனங்கள் அழகுற விளங்கி, நெருப்பற்ற
தீக்கங்குகள் போல ஒளிர்ந்துகொண்டிருந்தன.
சிறந்த சமையல் நிபுணர்களால் திறமையுடன் சமைக்கப்பட்டு
அவற்றிற்குரிய நறுமணப்பொடிகளால் தூவப்பட்டு தனியாக வைக்கப்பட்டிருந்த மாமிச உணவுகளாலும்,
மிகச்சிறந்த மதுவகைகளாலும், சர்க்கரைப்பாகு, தேன், பூக்களின் சாறு, பழங்களின் சாறு
இவைகள் கலக்கப்பட்டு அவற்றிற்கான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு அவை அங்கு தனித்தனியே
சிறப்புற வைக்கப்பட்டிருந்ததாலும், பலவிதமாக அலங்கரிக்கப்பட்ட மலர் மாலைகளாலும், பலவிதமான
தங்கப்பாத்திரங்கள், ஸ்படிகப்பாத்திரங்கள், தங்கக்குடங்கள் நிரம்பியிருந்ததாலும் அந்த
மதுவரங்கம் அழகுற விளங்கியது.
வெள்ளி மற்றும் தங்கத்திலான குடங்களில் உயர்வகை
மதுபானங்கள் நிரப்பபட்டு, அங்கு எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டிருந்ததை அந்த வானரர்
கண்டார்.
மணிகளும் ரத்தினக்கற்களும் பதிக்கப்பட்டிருந்த
தங்க, வெள்ளிக் குடங்கள், மதுவகைகளால் நிரப்பப்பட்டு அங்கிருந்ததை அந்த பெரும் வானரர்
கண்டார்.
மதுபானங்கள் வைக்கப்பட்டிருந்த குடங்களில் சில,
பாதி குடிக்கப்பட்டும், சில, முழுவதுமாகக் குடிக்கப்பட்டும், மற்றும் சில, குடிக்கப்படாமல்
நிரம்பி இருந்ததையும் அவர் கண்டார்.
ஓரிடத்தில் உண்பதற்கான உணவு வகைகளும், இன்னுமொரு
இடத்தில் அருந்துவதற்கான மதுபானங்களும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்ததையும், வேறோரிடத்தில்
சமைக்கப்பட்ட உணவுகள் பாதியுண்ணப்பட்டிருந்ததையும் அவர் உலவியபடியே கண்டார்.
சில இடங்களில் உடைந்து கிடந்த ஜாடிகளையும்,
சில இடங்களில் உருண்டு கிடந்த குடங்களையும் கண்டார், சில இடங்களில், மலர்மாலைகள் பழங்களுடனும்,
தண்ணீருடனும் பின்னிக்கிடந்ததையும் கண்டார். (இந்த ஸ்லோகம் கீதாபிரஸ் பதிப்பில் இல்லை)
அங்கிருந்த பல படுக்கைகள் காலியாக இருந்தன(கீதா
பிரஸ்). பல படுக்கைகள் விரிப்புக்கள் கசங்காமல்
இருந்தன. (வேறு பதிப்புகள்). பல அழகிய பெண்கள்
ஒருவரையொருவர் தழுவியபடி உறங்கிக்கொண்டிருந்ததையும் அவர் கண்டார்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்களில் சிலர்,
தங்கள் அருகில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் ஆடைகளைத் தங்கள் மீது போர்த்துக்கொண்டிருந்தனர்.
அந்தப் பெண்களின் மேலாடைகளும் மாலைகளும் அவர்களது
மூச்சுக்காற்றினால், இளந்தென்றலினால் அசைந்தாடுவது போலவே அசைந்துகொண்டிருந்தன.
குளிர்ந்த
சந்தனத்தினுடையதும், மதுவகைகளினுடையதும், பலவித மலர்மாலைகளினுடையதுமான நறுமணங்கள் கலந்த
காற்று அங்கே வீசியது. மேலும் அந்த புஷ்பக
விமானத்தில், குளிக்கும்போது பயன்படுத்தும் சந்தனத்தின் நறுமணமும், தூபங்களின் நல்ல
நறுமணமும் கலந்து நிறைந்திருந்தது.
அந்த அரக்கனின் மாளிகையில் இருந்த பெண்கள் நீல
நிறத்திலும், கரிய நிறத்திலும், நல்ல வெண்ணிறத்திலும், சிலர் பொன்னிறத்திலும் தோற்றமளித்தனர்.
காம கேளிக்கைகளினால் களைப்புற்று ஆழ்ந்த உறக்கத்தில் அந்தப் பெண்கள் இருந்த போதிலும்,
அவர்கள் இரவு நேரத்து தாமரை மொட்டுக்கள் போல கண்களைக் கவரும் வண்ணம் இருந்தனர்.
பேரொளிமிக்க வானரரான ஸ்ரீஅனுமன், இவ்வாறாக
அந்த அந்தப்புரம் முழுமையும் ஒரிடம் விடாமல் தேடிப்பார்த்தார். சீதையை அவரால் காண இயலவில்லை.
உறக்கத்திலிருந்த பெண்களைத் தான் பார்க்க நேர்ந்ததால்,
அச்செயல், அறவழிக்குப் புறம்பானதோ என்ற எண்ணத்தில் அந்த வானரர் கவலையுற்றார்.
உறக்கத்திலிருக்கும் பிறரது மனைவியரைத் தான்
பார்த்த செயல் அறத்திற்கு இழுக்கானதே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
“அடுத்தவர் வீட்டுப் பெண்களை ஏறெடுத்தும் பார்த்திராத
நான், இங்கு அவ்வாறு பார்க்க நேர்ந்துவிட்டதே” என்று நினைத்தார். இவ்வாறு எண்ணங்கள்
தோன்றினாலும், ஒருமித்த கவனத்துடன் இருக்கும் அவர் அடுத்துத் தான் செய்யவேண்டிய செயலைப்
பற்றிச் சிந்தித்தார்.
“தங்களுக்கு எதுவும் ஆபத்தில்லை என்று தம்மை
மறந்த நிலையில் உறங்கிக்கிடக்கும் இராவணனது மனைவியரைப் பார்த்தாலும் என் மனதில் தீய
எண்ணங்கள் சிறிதும் தோன்றவில்லை.”
“மனதின் தூண்டுதலாலேயே, புலன்கள் நல்ல மற்றும்
தீய செயல்களைச் செய்கின்றன. ஆனால் என்னுடைய மனமோ, நிலைபிறழாதது. மேலும் பெண்கள் இருக்குமிடங்களில் தான் பெண்களைத்
தேட இயலும். ஆகவே வைதேஹியை வேறு இடங்களில்
தேட முடியாது.”
“காணாமல் போனவர்களைத் தேடும்போது, அவர்களைச்
சேர்ந்தவர்களிடையேதான் தேட முடியும், மானிடப் பெண்ணை பெண்மான் களின் கூட்டத்தில் தேட முடியாது”.
“ஆகையினால், களங்கமற்ற மனத்துடன், இராவணனின்
இந்த அந்தப்புரம் முழுமையாக என்னால் தேடப்பட்டது, ஆனாலும் சீதை கண்ணுக்குப் புலப்படவில்லை”.
இவ்வாறாக சிந்தித்த, வீரராகிய ஸ்ரீஅனுமன், அங்கே
தேவலோகத்துப் பெண்களையும், கந்தர்வப்பெண்களையும், நாக கன்னிகைகளையும் கண்டபோதிலும்,
சீதையை மட்டும் காண முடியவில்லை.
அங்கு வேறு சிறந்த பெண்களைக் கண்ட வீர அனுமன்,
சீதையை மட்டும் காணாததால், அங்கிருந்து வெளியேறி மீண்டும் சிந்திக்கலானார்.
பேரருளாளரான ஸ்ரீஅனுமன், அந்த மதுவரங்கத்தை விட்டு வெளியேறி, புது முயற்சியுடன் மீண்டும் தன் தேடும் பணியினைத் தொடர்ந்தார்
பதினொன்றாவது ஸர்கம் நிறைவு.




1 comment:
மிக அருமையான வர்ணனைகள்..
ஸ்ரீஹனுமனின் உயரிய சிந்தனைகள்...👍🏻🙏
Post a Comment