Friday, January 6, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம். ஐந்தாவது ஸர்கம்.

 

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்.

 

                                                                  ஐந்தாவது ஸர்கம்.


                               இலங்கையின் நகர மாந்தரைக் கண்டு வியத்தல்.





      மாட்டுத்தொழுவத்தில் தினவெடுத்துத் திரியும் காளையைப் போல், தன் ஒளிக்கிரணங்களை வெள்ளமாகப் பாய்ச்சியபடி ஆகாயத்தின் மையப்பகுதிக்கு  அப்பொழுது சந்திரன் வந்துவிட்டிருப்பதை, அறிவாற்றல் மிக்க ஸ்ரீஅனுமன் கண்டுணர்ந்தார்.

     இந்த உலகத்தின் வன்செயல்களைப் போக்கிக்கொண்டும், கடல் அலைகளைத் தன் பால் ஈர்த்து கடலினைப் பெரியதாக்கிக்கொண்டும், அனைத்து உயிரினங்களுக்கும் வெளிச்சம் அளித்துக்கொண்டும் ஆகாயத்தில் சந்திரன் வந்திருப்பதைக் கண்டார்.

     எவ்விதம் திருமகளின் கடைக்கண்பார்வையானது,(திருவருள்), மந்தார மலையிலும், மாலைநேரக்கடலிலும், நீர்நிலைகளில் பூத்துக்குலுங்கும் தாமரைமலர்களிலும் விளங்குமோ, அவ்விதமே அந்த சந்திரனிடத்திலும் விளங்கிக்கொண்டிருந்தது.

     வெள்ளிக்கூண்டில் இருக்கும் அன்னத்தைப் போலவும், மந்தர மலையின் குகையில் உலவும் சிங்கத்தைப் போலவும், செருக்குற்ற யானையின் மீது அமர்ந்திருக்கும் வீரனைப் போலவும் சந்திரன் விளங்கினான்.

     கூரிய கொம்புகளைக் கொண்ட காளையைப் போலவும், நெடிய சிகரங்களைக் கொண்ட வெள்ளியிலான மலையைப் போலவும், பொன்னாலான பூண்களால் அழகுபடுத்தப்பட்ட தந்தங்களைக் கொண்ட யானையைப் போலவும், பலவிதமாக அழகினை வெளிப்படுத்தியபடி சந்திரன் மேலும் விளங்கினான்.

     குளிர்ந்த பனியிலிருந்து விலகியிருப்பவனும், சூரியனின் ஒளிக்கிரணங்களால் தன் இருளைப் போக்கிக்கொள்பவனும், தூய்மையான திருவருள் போன்ற ஒளியைக் கொண்டவனும், முயலின் வடிவத்தைத் தன்னிடம் கொண்டிருப்பவனுமான சந்திரன் ஆகாயத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்தான்.

     மலையுச்சியில் நிற்கும் விலங்குகளின் அரசனான சிங்கம் போலவும், போர்க்களத்தில் செருக்குடன் நிற்கும் யானையைப் போலவும், பெரிய சாம்ராஜ்யத்தை வென்றெடுத்த அரசன் போலவும் சந்திரன் மிகவும் ஒளிபொருந்தி விளங்கினான்.

     சந்திரனின் ஒளியால் இருளான களங்கம் நீங்கப்பெற்றும், அரக்கர்களின்  புலாலுணவால் களங்கமுற்றும், காதலர்களின் ஊடல் என்னும் களங்கம் விலகப்பெற்றும், சுவர்க்கம் போன்ற மகிழ்வையளித்துக்கொண்டும், வணங்கத்தக்க பிரதோஷ காலம் விளங்கியது. 

     வீணை முதலான கருவிகளில் தந்திகள் மீட்டப்படுவதால் எழும் இனிய ஓசை கேட்ட வண்ணம் இருந்தது. நற்குலப் பெண்கள், தங்கள் கணவன்மாருடன் உறங்கிக்கொண்டிருந்தனர். அதேநேரத்தில், விசித்திரமானதும், பயங்கரமானதுமான பூதகணங்கள் உலவத்தொடங்கியிருந்தன.

     அறிவிற்சிறந்த ஸ்ரீஅனுமன், அந்த மாளிகைகளில் மது பானம் அருந்தி மயங்கிக்கிடந்தவர்களையும், கூடியிருந்த அரக்கர் கூட்டங்களையும், தேர்கள், குதிரைகள், ரத்ன சிம்மாசனங்கள் முதலியவைகளையும், வெற்றித்திருமகளின் அருள்பெற்று விளங்குபவர்களையும் கண்டார்.

     அந்த அரக்கர்களில் சிலர் ஒருவரையொருவர் கேலிசெய்துகொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் பெருத்த தோள்களை ஆட்டிக்கொண்டிருந்தனர்.  மதுவினால் தம்வசமிழந்த அவர்கள், நிதானமற்ற பேச்சுக்களை பேசிக்கொண்டும், ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டும் இருந்தனர்.

     மேலும் அந்த அரக்கர்களில் சிலர், தங்கள் மார்புகளைத் தட்டி, தங்கள் வலிமையை மற்றவர்க்குப் பறைசாற்றிக்கொண்டிருந்தார்கள்.  சிலர் தங்கள் உடல்கள் தங்கள் மனைவியரை உரசும்வண்ணம் அணைத்துக்கொண்டிருந்தனர்.  சிலர் விதவிதமான வடிவங்களில் தங்களை அழகுபடுத்திக்கொண்டும், சிலர் தங்கள் விற்களில் நாணேற்றியபடியும் இருந்தனர்.

     தங்கள் மேனியில் நறுமணம் வீசும் சந்தனம் பூசியபடி இருந்த பெண்களையும், இருந்த இடத்திலேயே உறங்கிக்கொண்டிருந்த பெண்களையும்,  தங்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்த , நிலவினைப்போன்ற முகவடிவம் கொண்டிருந்த பெண்களையும், சினம் கொண்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த பெண்களையும் ஸ்ரீஅனுமன் அங்கே கண்டார்.

     பெரும் யானைகள் பிளிறிக்கொண்டிருந்த அந்த இலங்கை நகரத்தில், அனைவரும் மதிக்கக்கூடிய நன்மக்களும் இருந்ததைக் கண்டார். பெரியதாக சுவாசம் விட்டுக்கொண்டு, திரிந்துகொண்டிருந்த வீரர்களைப் பார்க்கையில், அந்த லங்கை நகரமானது, பாம்புகள் சீறிக்கொண்டிருக்கும் மடுவினைப் போல இருந்தது.

     அந்த நகரத்தில் இருந்த அரக்கர்கள், அறிவாற்றல் மிக்கவர்களாகவும், பிறரைக் கவர்ந்திழுக்கும் சொல்வன்மை கொண்டவர்களாகவும், நல்லிதயம் கொண்டவர்களாகவும், பலரால் போற்றப்படும் மதிப்பு மிக்கவர்களாகவும், பல வடிவங்கொண்டவர்களாகவும், நற்பெயர் கொண்டவர்களாகவும், பலவிதமாக இருந்ததை ஸ்ரீஅனுமன் கண்டார்.

     அழகான வடிவம் கொண்டிருந்த அந்த அரக்கர்கள், தங்கள் இயல்புக்கேற்ற வடிவம் கொண்டிருந்ததைப் பார்த்த ஸ்ரீஅனுமன் மன மகிழ்ச்சி கொண்டார். மாறுபட்ட வடிவம் கொண்டவர்களாக சிலர் இருந்தபோதிலும், அந்த இயல்புக்கேற்றவாறே அவர்கள் இருந்தனர். 

     உயர்ந்த ஆடை ,அணிகலன்கள் அணியும் உடலமைப்பு கொண்ட அழகிய பெண்களையும், தூய்மையான, மற்றும் நல்லொழுக்கம் கொண்ட பெண்களையும், மதுமயக்கத்திலும்  தங்கள் கணவர்களிடம் மிக்க காதல் கொண்ட மனைவிகளையும், விண்மீன்கள் போல் ஒளிர்ந்திருக்கக் கண்டார்.

     திருவருள் ஒளிர்கின்ற அந்தப் பெண்கள், மிகுதியான மோகத்தால் தங்கள் கணவர்களின் அணைப்பில் வெட்கத்துடன் கட்டுண்டு கிடந்ததைப் பார்க்கும்போது, பூக்குவியல்களினிடையே, மறைந்து விளையாடும் பெண் பறவைகளைப் போலத் தோற்றமளித்தார்கள்.

     அறிவாற்றல் மிக்க ஸ்ரீஅனுமன், அங்கிருந்த மேல்மாடிகளில், தங்கள் கணவர்களின் மடியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து, அவர்களுடன் கேளிக்கை விளியாட்டுக்களில் ஈடுபட்டவர்களாய், அதிகமான மோகவசப்பட்ட வேறுசில பெண்களையும், அறவழியின்பாற்பட்டவர்களான சில பெண்களையும் கண்டார்.

     பொன் கீற்றைப்போன்ற நிறங்களிலும், உருக்கிய தங்கத்தின் நிறங்களிலும் இருந்த சில பெண்கள், தங்கள் மேலாடைகள் நழுவிய நிலையில் இருந்ததையும், தங்களது அழகிய காதலர்களைக் காணாது தவித்து, அதனால், நிலவினைப் போல் வெளுத்த நிறத்தில் சில பெண்கள் இருந்ததையும் அவர் கண்டார்.  சில வீடுகளில் தங்கள் மனங்கவர்ந்த காதலருடன் கூடிமகிழ்ந்த களிப்பு மிக்க பெண்களையும் அவர் கண்டார்.  மேலும் சில வீடுகளில் மிகவும் அழகுவாய்ந்த பெண்கள் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் இருக்கக் கண்டார்.

     முழுநிலவினைப் போன்ற அழகிய முக அமைப்பு கொண்டவர்களையும், அடர்ந்து வளர்ந்திருந்த வளைவான மயிர்க்கற்றைகளாலான இமைகளைக் கொண்டிருக்கும் கண்களை உடையவர்களையும், மின்னல் போல மின்னும் ஆபரணங்களை அணிந்திருப்பவர்களையும் ஸ்ரீஅனுமன் அங்கே கண்டார்.

     எப்பொழுதும் அறவழியினின்று பிறழாதிருக்கும் அரச குடும்பத்தில் பிறந்தவளும், தானாகப் பிறந்த நற்பிறப்புடையவளும், மலர்களுடன் பூத்துக்குலுங்கும் கொடியைப் போல மெல்லியலாளுமான சீதையை மட்டும் அங்கே எங்கும் அவர் காணவில்லை.

     என்றுமே அழிவில்லாத அறவழியில் நடப்பவளும், ஸ்ரீராமனைத் தன்னுடைய கண்களுக்குள்ளேயே எப்பொழுதும் நிறைத்து வைத்திருப்பவளும், ஸ்ரீராமன்மீது பொங்கிவழியும் காதலைக் கொண்டிருப்பவளும், ஸ்ரீராமனின் இதயத்தில் எப்பொழுதும் வசித்திருப்பவளும், மிக உயரிய பெண்களுள் முதன்மையானவளுமான சீதையை அங்கே காண முடியவில்லை.

     கணவனின் பிரிவாற்றாமையால் துன்பம் கொண்டவளும், கண்களில் நீர் வழிய, குரல் தழுதழுக்கும் கழுத்தினையுடையவளும், ஸ்ரீராமனுடன் இணைந்திருந்த காலங்களில், வெகு சிறப்பான பதக்கங்களை அணிந்திருந்த கழுத்தினையுடையவளும், காட்டில், ஒளிரும் கழுத்துடன் அழகிய தோகைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் மயிலை ஒத்திருக்கும் சீதையை அங்கே காணவில்லை.

     தன் ஒளியினிற்குறைந்த பிறைச் சந்திரனைப் போலவும், மாசுபடிந்த தங்கத்தின் மங்கிய ஒளி போலவும், காயத்தில் தைத்து, துன்பம் தரும் அம்பு போலவும், காற்றினால் சிதறடிக்கப்பட்ட மேகக்கூட்டம் போலவும் காட்சிதரும் சீதையை அங்கே காணவில்லை.

     சொல்வன்மைமிக்கவரும், இந்த பூமியில் உள்ள அனைவருக்கும் அரசனுமான ஸ்ரீராமனின் மனைவியான சீதையை எங்கும் காண இயலாத ஸ்ரீஅனுமன், சோகமடைந்து மனம் பேதலித்தவரானார்.

 

                                         ஐந்தாவது ஸர்கம் நிறைவு.

1 comment:

K Aravindhankrishna said...

ஜெய் ஸ்ரீராம்..!!!🙏
மாருதியின் பார்வையில் லங்ங்காவை மிக அழகாக நயம்பட உள்ளது உங்களது வர்ணிப்பது...🙏

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...