ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்
மூன்றாவது ஸர்கம்
லங்கையை வியத்தலும் லங்காதேவியை
வீழ்த்தலும்
அறிவாற்றலும், பேராண்மையும் மிக்கவரும், சிறந்த வானரருமான, வாயுவின் மைந்தனாகிய ஸ்ரீஅனுமன்,
அந்த லம்பா மலையுச்சியில், வானத்திலிருந்து கீழே தொங்கிக்கொண்டிருக்கும் மேகங்கள் போல
விளங்குவதும், அழகான நீர்நிலைகளையும், அடர்ந்த
வனப்பகுதிகளையும் கொண்டதுவுமாய், இராவணனால் நன்கு பாதுகாக்கப்படுவதுமான அந்த இலங்கை
நகரத்தினுள், அச்சம் சிறிதுமின்றி, இரவு நேரத்தில் நுழைந்தார்.
அந்த நகரத்தில் இருந்த மாளிகைகள், இலையுதிர்கால மேகங்கள்
போல் வெண்ணிறத்தில் இருந்தன. கடலின் பேரோசை
அந்நகரம் முழுவதும் நிரம்பியிருந்தது. கடலிலிருந்து
காற்றானது அந்த நகரத்தில் வீசிக்கொண்டிருந்தது.
குபேரனுடைய தலைநகரமான விடபாவதியைப் போல ஆற்றல்மிக்க
படைகளால் காவல் காக்கப்பட்டிருந்தது. தோரண வாயில்களில் மதம் கொண்ட யானைகள் நின்றிருந்தன. வெள்ளியின் நிறத்தில் தோரண வாயில்கள் உள்ளும் புறமும்
ஒளி வீசிக்கொண்டிருந்தன.
பாதாள நகரமான போகவதியைப் பாம்புகள் பாதுகாப்பது
போன்ற பாதுகாப்பைக் கொண்டிருந்தது. நகரத்தின்
மீது மின்னல்களுடன் மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்தன. நட்சத்திரக்கூட்டங்களைத் தொடும்வண்ணம்
இருந்த அந்த நகரத்தில் மெல்லிய நறுமணம் மிக்க தென்றல் காற்று வீசிய வண்ணம் இருந்ததைப்
பார்க்க, அது, இந்திரனின் அம்ராவதி நகரத்தைப் போலத் துலங்கியது.
தங்கமயமான மதிற்சுவர்களில், கட்டப்பட்டிருந்த
மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிகள் இனிமையான ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்து வியந்தபடி ஸ்ரீஅனுமன் அந்த
தோரண வாயிலை நோக்கித் தாவினார்.
தன்னைச் சுற்றி எல்லா இடங்களிலும் பார்த்த ஸ்ரீஅனுமன்,
பெரும் வியப்புடன் மகிழ்ச்சி கொண்டார். அந்த
மாளிகைகள் தங்க நிறத்தாலான கதவுகளைக் கொண்டிருந்தன. அவற்றிற்கு முன்புறம் வைர, வைடூரியங்கள்
பதிக்கப்பட்ட நடைமேடைகள் இருந்தன. முத்துக்களாலும், வைரம், வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த
திண்ணைகளும், உருக்கிய பொன்னால் செய்யப்பட்ட யானை உருவங்களும் இருந்தன.
வெள்ளியினால் செய்யப்பட்ட அப்பழுக்கற்ற வெள்ளை
நிறத்தில் இருந்த படிக்கட்டுக்களும், வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்டு விளங்கின. மாளிகைகளின் நடைகள் தூய்மையான ஸ்படிகங்களால் பதிக்கப்பட்டிருந்தன.
முற்றங்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அன்றில், மயில் போன்ற பறவைகளின் இன்னிசையும்,
ராஜஹம்ஸங்களின் நடமாட்டமும், இசைக்கருவிகள் மற்றும் ஆபரணங்களின் ஒலிகளும் அந்த நகரமெங்கும்
எதிரொலித்துக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது, இந்திரலோகத்தைப் போன்று, லங்கை நகரம்
விண்ணில் மிதக்கக் கண்டார்.
இராவணனால் ஆளப்படும் அந்த நகரம், ஒளி பொருந்தியதாயும்,
செல்வச்செழிப்பு மிக்கதாயும், ஈடுஇணையற்றதாகவும் இருக்கக் கண்ட அந்த மாவீரர், இவ்விதம்
நினைக்கத்தொடங்கினார்.
போரில் உடனடியாக ஈடுபடுத்தவல்ல பயங்கரமான ஆயுதங்களுடன்,
இராவணனின் படையானது இந்த நகரத்தைப் பாதுகாத்துவருகிறது. ஆதலால், வேறு எவராலும் தன்
உடலாற்றலால் மட்டுமே, இந்த நகரத்தை வெல்லுதல் இயலாது.
ஒருவேளை, குமுதன், அங்கதன், சிறந்த வானரரான சுஷேணன்,
மைந்தன் மற்றும் த்விதன் இவர்களால், இதைப் பற்றி அறிந்திருக்க இயலும்.
சூரியனின் புதல்வரான சுக்ரீவர், வீர வானரரான
குசபர்வர், ஜாம்பவான் முதலானவர்களாலும் மற்றும் என்னாலும் இதைச் செய்ய இயலும்.
ஸ்ரீராமர், மற்றும் இலக்குவனின் ஆற்றலயும் ஆண்மையையும் நினைத்த தோள்வலியரான
ஸ்ரீஅனுமன் மனம் மகிழ்வுற்றார்.
இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளை ஆடையாகவும்
, பசுக்கள், குதிரைகள் கட்டப்பட்ட கொட்டடிகள் மற்றும் இருப்பிடங்கள் காதணிகளாகவும்,
ஆயுதக் கிடங்குகள் மார்பகங்களாகவும் கொண்ட ஒரு செழுமையான, அழகான பெண் போல அந்த நகரம்
அவருக்குத் தோற்றமளித்தது. மாளிகைகளில் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் மாசற்ற ஒளி வெள்ளத்தால்
அங்கிருந்த இருள் விரப்பட்டிருந்தது.
பேராற்றல்மிக்கவரும், வாயுகுமாரரும், சிறந்த
வானரருமான ஸ்ரீஅனுமன், அந்த நகரத்தினுள் நுழைவதை, அப்பொழுது, நகரத்தின் காவல் தேவதையானவள்
தன் இயல்பான வடிவத்தில் வெளிப்பட்டு, கண்ணுற்றாள்.
இராவணனின் அதிகாரத்தின் கீழிருக்கும் அந்த காவல்
தேவதை, சிறந்த வானர வீரரான ஸ்ரீஅனுமன், அந்த நகரினுள் நுழைவதைக் கண்ணுற்றதும் தனது
விகாரமான முகத்துடன் தானாகவே வெளிப்பட்டாள்.
வீரரான வாயுகுமாரரின் முன் நின்ற அவள், பெருஞ்சத்தத்துடன்
அவரிடம் பேசினாள்.
“காட்டினுள் வசிக்கும் குரங்கே! நீ யார்? எதற்காக
இங்கு வந்துள்ளாய்? என்பதை, நீ உயிருடன் இருக்க விரும்பினால் தெரிவிப்பாயாக” என்றாள்.
“ஓ வானரமே! இராவணனின் படைகளால், நாற்புரங்களிலும்
வெகு நெருக்கமாக இந்த நகரம் பாதுகாக்கப்படுகிறது! உன்னால் உள்ளே நுழையமுடியாது என்பது
நிச்சயம்.” என்று சொன்னாள்.
தன் முன்னே நின்று கொண்டிருக்கும் அந்த உருவத்தைப்
பார்த்து, “நீ கேட்கும் விவரங்களை நான் உனக்கு உண்மையாகச் சொல்வேன்” என்று வானரவீரரான
ஸ்ரீஅனுமன் சொன்னார்.
“விகாரமான கண்கள் கொண்டவளாய் இந்த வாயிலில் நிற்கும்
நீ யார்? கோரமானவளே! நீ எதற்காக என்னைத் தடுத்து கோபத்துடன் மிரட்டுகிறாய்?” என்று
கேட்டார்.
நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவம் எடுக்கும்
வல்லமை கொண்ட அந்த அரக்கியானவள், ஸ்ரீஅனுமனின் வார்த்தைகளைக் கேட்டதும் வெகுண்டு கொடிய
வார்த்தைகளைப் பேசினாள்.
“அரக்கர்களின் அரசனான இராவணனின் ஆணைப்படி, யாராலும்
வெல்லமுடியாதவளான நான், இந்த நகரத்தைக் காவல் காத்து வருகிறேன்.”
“ஓ! வானரமே! என் பேச்சைப் பொருட்படுத்தாதுவிட்டு,
உன்னால் இதில் நுழைய இயலாது. என்னால் தாக்கப்பட்டு, உயிரிழந்து நீ இந்த மண்ணில் மீளாத்துயில்
கொள்ளப்போகிறாய்!”
“வானரமே! நானே லங்கா நகரம்! எல்லாத் திக்குகளிலும்
நானே இந்த நகரத்தைப் கவனமுடன் பாதுகாக்கிறேன். இந்த செய்தி உனக்காகச் சொல்லப்பட்டதை
நீ அறிவாயாக!” என்றாள்.
லங்கா தேவதையின் வார்த்தைகளைக் கேட்ட வாயுகுமாரரும்
சிறந்த வானர வீரருமான ஸ்ரீஅனுமன், அவள் முன்னே மலையைப் போல அசையாது, எதிர்த்து நின்றார்.
தாவிப்பறப்பதில் வல்லவரும், அறிவாற்றல் மிக்கவரும்,
சிறந்த வானரருமான அவர், அந்த கோர வடிவம் கொண்ட பெண்ணுருவில் இருந்த லங்காதேவியைப் பாத்து
இவ்விதம் சொன்னார்.
“கோபுர வாயில்களைக் கொண்ட மாடமாளிகைகள் நிறைந்த
இந்த லங்கா நகரத்தைக் காணவே வந்துள்ளேன். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியுண்டாகிறது”
“இந்த நகரத்தின் தோட்டங்கள், பூங்காக்கள், அடர்ந்த
காடுகள் மற்றும் பெரிய மாளிகைகளையும் கண்டு களிக்கவே வந்துள்ளேன்!” என்று சொன்னார்.
விரும்பிய வடிவம் கொள்ளும் அந்த லங்காதேவதை,
ஸ்ரீஅனுமனின் வார்த்தைகளைக் கேட்டபின்னரும், மீண்டும் கடுமையான வார்த்தைகளைப் பேசினாள்.
“ஓ! தீய எண்ணம் கொண்ட கீழான வானரமே! இப்பொழுது
அரக்கர்களின் அரசனின் பாதுகாப்பில் இருக்கும் என்னை வெற்றிகொள்ளாமல் உன்னால் இந்த நகரினுள்
நுழைய இயலாது” என்றாள்.
இதைக் கேட்ட அந்த வானரவீரர், “பெண்ணே! இந்த நகரத்தைப்
பார்த்துவிட்டு, நான் வந்த வழியிலேயே சென்றுவிடுவேன்” என்று அந்த அரக்கியிடம் சொன்னார்.
அப்பொழுது அந்த அரக்க தேவதை, அச்சமூட்டும் வண்ணம்
ஓசையிட்டுக்கொண்டு, வேகமாகத் தன் கைகளால், வானரவீரரைத் தாக்கினாள்.
வானரவீரரான, ஆற்றல்மிக்க ஸ்ரீஅனுமன், அந்த லங்காதேவதையால்
தாக்கப்பட்டதும் பெரும் ஓசையெழுப்பினார்.
அப்பொழுது ஸ்ரீஅனுமன் கோபாவேசத்தில், தன் இடக்கைவிரல்களை
மடக்கிக்கொண்டு, தனது முஷ்டியால் அந்த அரக்கியைத் தாக்கினார்.
அவள் ஒரு பெண் என்பதால், இயல்பாகவே அதிகக் கோபம்
காட்டாது, சாதாரணமாக அடித்த அந்த ஒரு அடிக்கே, அவள் நிலைகுலைந்து, சிதறிய அங்கங்களுடன்,
அலங்கோலமாக நிலத்தினில் வீழ்ந்தாள்.
அறிவாற்றலும், ஆண்மையும் மிக்கவரான ஸ்ரீஅனுமன்,
கீழே விழுந்து கிடக்கும் அவள் ஒரு பெண் என்பதால், அவள் மீது இரக்கம் கொண்டவரானார்.
தன் கர்வம் முழுவதும் நீங்கியவளாய், மிகுந்த
அச்சம் கொண்டு, வானரவீரரான ஸ்ரீஅனுமனைப் பார்த்து, அந்த லங்கை தேவதை, குரல் நடுங்க,
இவ்விதம் சொன்னாள்.
“பெரும் தோள்வன்மை மிக்கவரே! என் மீது கருணை
கொள்ளுங்கள்! இரக்கம் மிக்க சிறந்த வானர வீரரே! என்னைக் காத்தருளுங்கள்! மிகவும் வலிமைகொண்ட
அறவழி நடப்பவர்கள், நெறி தவற மாட்டார்கள்.”
“வலிமைமிக்க வானர வீரரே! நான் தான் இலங்கை என்னும்
தேவதை! உம்முடைய ஆற்றலினால் நான் உம்மால் வெற்றி கொள்ளப்பட்டேன்!”
“வானரத்தலைவரே! பிரம்மதேவரிடம் இருந்து நானாகப் பெற்ற வரத்தைப்
பற்றிய செய்தியைப் பின்வருமாறு, உண்மைத்தன்மையுடன்,
நானுரைக்கக் கேளுங்கள்!”
“”எப்பொழுது ஒரு வானரன் உன்னைத் தன் வீரத்தால்
வென்று தன் வசமாக்கிக்கொள்கிறானோ, அப்பொழுதே அரக்கர் குலத்தினர் அச்சம் கொள்ளவேண்டிய
தருணம் வந்துவிட்டது என்பதை ஐயமின்றி அறிந்துகொள்வாயாக!” என்றார்.”
“கருணைமிக்கவரே! உங்களது செயல்களைப் பார்த்ததுமே,
அத்தருணம் இப்பொழுது வந்துவிட்டது என்பதை உணர்ந்தவளானேன்! பிரம்மாவின் வார்த்தைகள்
தவறாது நிறைவேறியே தீரும்!”
“சீதையின் காரணமாக, கெட்டவெண்ணம் கொண்ட இராவணனுக்கும்,
அவனைச் சார்ந்த அரக்கர் குலத்திற்கும் அழிவுகாலம் நெருங்கிவிட்டது!”
“ஆகவே, வலிமைமிக்க வானரரே! இராவணனால் ஆளப்படும்
இந்த இலங்கை நகரத்திற்குள் நுழைந்து, தாங்கள் விரும்பிய எல்லாச் செயல்களையும் செய்து கொள்ளுங்கள்!”
“அரக்கர்கள் மன்னனாம் இராவணனால் ஆளப்படும் இந்த
அழகிய நகரம் சாபம் பெற்றுவிட்டது. இதில் நீங்கள் நுழைந்து, உங்கள் விருப்பப்படி, எல்லா
இடங்களுக்கும் சென்று உங்கள் மனம் திருப்தியடையும்வரை, கற்பினுக்கணியான ஜனகனின் மகளைத்
தேடிக்கொள்ளுங்கள்!” என்று சொன்னாள்.
மூன்றாவது
ஸர்கம் நிறைவு
3 comments:
ஜெய் ஸ்ரீராம்..!!
ஜெய் வாயு புத்ரா..!!!🙏
ஜெய் ஸ்ரீராம்! நன்றி!
Good job!
Post a Comment