ஸ்ரீ வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்
இரண்டாவது
ஸர்கம்
மிகவும் ஆற்றல்மிக்கவரான ஸ்ரீஅனுமன், கடக்க இயலாத பெருங்கடலைக் கடந்து, த்ரிகூடம்(லம்ப)
என்னும் மலையின் சிகரத்தில், உடற்சோர்வு ஏதுமின்றி நின்றுகொண்டு, லங்கா நகரத்தின் அழகை
ரசித்தார்.
அங்கிருந்த மரங்கள்
எல்லாம் தங்களது வண்ண வண்ணப் பூக்களை ஸ்ரீஅனுமனின் உடல் முழுவதும் சொறிந்திருந்தன.
அவரைக் காணும் போது, அவர் பூக்களால் உருவாக்கப்பட்ட வானரம் போலக் காட்சியளித்தார்.
போற்றத்தகுந்த
அச்சமின்மையைக் கொண்ட ஸ்ரீஅனுமன், நூறு யோஜனை தூரம் கடலைக் கடந்து வந்த பின்னரும்,
எந்த ஒரு துன்பமும் உடல் அசதியும் இல்லாது விளங்கினார்.
“பலநூறு யோஜனை
கொண்ட தொலைவுகளை எளிதில் கடக்கவல்ல நான், இந்த நூறு யோஜனை தூரத்தைக் கடந்தது எம்மாத்திரம்?”
என்று மனதில் நினைத்தார்.
வலிமைவாய்ந்தவர்களுள்
மிகச்சிறந்தவரும், பறக்கும் வல்லமை கொண்டவர்களில் முதன்மையானவருமான ஸ்ரீஅனுமன், பெரும்
கடலை, பெரும் வேகத்தில் கடந்து, லங்காபுரியை அடைந்தார்.
கரும்பச்சை நிறத்தில்
இருந்த மரங்கள் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே, பாறைகளும்
குன்றுகளும் நிறைந்திருந்த பாதையில் சென்றார்.
பூக்கள் சொறியும்
மரங்கள் நிறைந்த மலைகளின் வழியே, மிகச்சிறந்த வானர வீரரான ஸ்ரீஅனுமன், ஒளிவீசியவண்ணம்
பயணம் செய்தார்.
சிகரங்களோடு
இருந்த மலையின் மீது நின்றிருந்த ஸ்ரீஅனுமன், எண்ணிலடங்கா வனங்களையும், தோட்டங்களையும்
கண்டார். அப்போது இலங்கை மாநகரத்தையும் அவர்
பார்த்தார்.
வானரவீரரான ஸ்ரீஅனுமன்,
அங்கே அழகழகாய்ப் பூத்திருந்த தேவதாரு, கோங்கு மரங்களையும்,பேரிச்சை மரங்களையும் கண்டார்.
பூத்திருந்த முரளிச் செடிகளையும், தாழம்பூ புதர்களையும், நறுமணம் கொண்ட ப்ரியங்குகளையும்,
மலை மல்லிகைச்செடிகளையும் கண்டார். பலவிதமான காட்டுச்செடிகளையும், எலுமிச்சை மரங்களையும்
கண்டார்.
அங்கே கடம்ப, அசோக மர வகைகளைக் கண்டார். ஏழிலைப்பாலை மரங்களையும், பூத்துக்குலுங்கிய அரளிச்செடிகளையும், மருத மரங்களையும், மலைச்சாத்திச் செடிகளையும் கண்டார். மலர்ந்தும், மலராத பூக்கள் நிரம்பிய மரங்களில் பலவிதமான பறவைகளைக் கண்டார். அந்த மரக்கிளைகள் காற்றில் ஊஞ்சலாடின.
தாமரை, அல்லி
மலர்கள் நிறைந்த தடாகங்களையும், அவற்றில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவைகள், நீர்க்காகைகள்(வாத்து)
முதலானவைகளையும் கண்டார். விதவிதமான நீர்நிலைகளையும், அழகிய விளையாடும் தோட்டங்களையும்
கண்டார்.
அந்த விதவிதமான
நீர்நிலைகளைச் சுற்றியும் அனைத்துப் பருவங்களிலும் பூக்களையும், கனிகளையும் குறையின்றி
வழங்கும் மரங்கள் நிறைந்திருந்தன. பலவிதமான தோட்டங்களையும் அங்கே அவர் கண்டார்.
ஒளிபொருந்திய ஸ்ரீஅனுமன், இராவணனால் ஆளப்படும் லங்கை நகரை நெருங்கினார். அந்த நகரத்தைச் சுற்றிலும் பெரிய பெரிய அகழிகள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் நிரம்பியிருந்த நீரில் தாமரை மலர்களும், ஆம்பல் மலர்களும் பூத்துக்குலுங்கி அழகு சேர்த்தன.
சீதை அங்கு சிறைவைக்கப்பட்டிருந்ததால்,
அந்நகரம், இராவணனாலும், கொடிய வில்லாயுதங்களைத் தாங்கியபடி, இடைவிடாது சப்தமிட்டபடி
சுற்றியலையும் அரக்கர் கூட்டத்தாலும் காவல் காக்கப்பட்டு வந்தது.
பொன் தகடுகளால்
அலங்கரிக்கப்பட்ட மதிற்சுவர்களுக்குள் இருந்த அந்த நகரத்தினுள், குளிர் கால மேகங்கள்
போல வெண்மையாக, மலைகளைப் போன்று உயரமாக மாளிகைகள்
இருந்தன.
அந்த நகரம் முழுவதிலும்
நீண்டு, அகன்ற வெண்ணிறமான சாலைகள் இருந்தன. நூற்றுக்கணக்கான மாட மாளிகைகளில் பல விதமான
கொடிகள் பறந்து அழகு சேர்த்தன.
விதவிதமான சித்திரங்கள்
பொறிக்கப்பட்ட தங்கத்தாலான தோரணவாயில்களைக் கொண்டிருந்த அந்த மாளிகைகளில் கொடிகள் வரிசையாக
இருந்தன. தேவர்களின் தேவலோகம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது அந்த இலங்கை நகரம்.
மலையுச்சியிலிருந்த
அந்த நகரம், வெண்ணிற மாளிகைகளுடன் ஏதோ ஆகாயத்தில் மிதக்கும் நகரமோ என்று வானர வீரரான
ஸ்ரீஅனுமன் நினைத்தார்.
மயனால் நிர்மாணிக்கப்பட்டு,
இராவணனால் பாதுகாக்கப்பட்ட அந்த நகரம், ஆகாயத்தில் மிதந்து கொண்டிருப்பது போன்று ஸ்ரீஅனுமனுக்குத்
தோன்றியது.
ஒரு பெண்ணை நினைத்துக்கொண்டு, மயன் அந்த நகரத்தை நிர்மாணித்திருப்பாரோ என நினைக்கும் வண்ணம், அதன் மதில்கள் பெண்ணின் இடைப்பகுதியைப் போலவும், நீரால் நிரம்பிய அகழிகள் ஆடையைப்போலவும், பீரங்கி, சூலம் போன்ற ஆயுதங்கள் கூந்தலைப்போலவும் மாடமாளிகைகள் அழகிய காதணிகள் போலவும் தோற்றமளித்ததைப் பார்த்துக்கொண்டே, ஸ்ரீஅனுமன், அந்நகரத்தின் வடக்கு வாயிலை நெருங்கினார்.
அங்கே, அந்த
வாயில், கைலாய மலையில் அமைந்திருக்கும் அல்காபுரியின் உயர்ந்த வெளிப்புற வாயில் போலவும்,
வானத்தை உரசும் வண்ணம் உயரம் கொண்டதாக விளங்கிய மாளிகைகள், அந்த வானத்தைத் தாங்கிப்
பிடிப்பது போலவும் இருந்தன. பாதாள உலகமான,
போகவதி என்னும் நகரத்தில் நிரம்பிவழியும் நாகர்களைப் போல, கொடிய உருவத்துடனிருந்த அரக்கர்களால்
அந்நகரம் நிரம்பியிருந்தது. அந்நகரம் நல்ல
வடிவமைப்பு கொண்டதாய், குறைகளற்று மிகவும் சிறப்பாக இருந்தது. அது முன்பு குபேரனின்
இருப்பிடமாகவும் இருந்திருந்தது. கொடிய பாம்புகளால்
காவல் காக்கப்படும் அவற்றின் குகையைப் போல, சூலம், பட்டசம் போன்ற கொடிய ஆயுதங்களைத்
தாங்கியவண்ணம், கோரைப்பற்களுடன் இருந்த அரக்கர்களால் அந்த நகரம் பாதுகாக்கப்பட்டு வந்தது.
அந்நகரம் அதிகமான
கட்டுக்காவலுடன் இருந்ததையும், அதைச் சுற்றி பெருங்கடல் இருந்ததையும், இராவணன் போன்ற
பயங்கரமான எதிரியையும் நினைத்த ஸ்ரீஅனுமன் இவ்விதம் யோசிக்கலானார்.
“வானரர்கள் கடலினைக்
கடந்து இங்கே வந்தாலும், ஒரு பயனுமில்லை. ஏனென்றால், போரில் இலங்கையை வெற்றி கொள்வது
தேவர்களுக்கே கடினமான செயலாகும்.”
“இராவணனால் ஆளப்படும்
இந்த நகரம், அறிதற்கரியதாய் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. ஆகவே, தன் தோள்வலிமையை நம்பியிருக்கும்
ஸ்ரீராமனால், இங்கு வந்து என்ன செய்ய இயலும்?”
“இந்த அரகர்களிடையே
நல்வார்த்தைகளைக் கேட்கும் குணமில்லை. எதுவும் கொடுத்தும் அவர்கள் மனதை மாற்ற முடியாது.
அவர்களிடையே பிரிவனை செய்வதும் இயலாது. போரில் அவர்களை வெல்வதும் கடினமான செயலாகும்.”
“மேலும், வாலியின்
மகனான அங்கதன், நீலன், அறிவாற்றல் மிக்க அரசனான சுக்ரீவர் மற்றும் நான் ஆகிய நான்கு
வானரர்களால் மட்டுமே இங்கு வர இயலும்.”
“ஜனகரின் மகளாகிய
சீதை உயிருடன் இருப்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அவரை நான் கண்டபிறகே, மேலும்
இதைப்பற்றி நினைக்க வேண்டும்”.
ஸ்ரீராமனுக்குகந்த
செயலாற்ற வந்துள்ள, யானைக்கு நிகரான வலிமைகொண்ட, ஸ்ரீஅனுமன், அந்த மலைச்சிகரத்தின்
மீது நின்றுகொண்டு, ஒருகணம் இவ்விதம் யோசித்தார்.
“கொடூரமானவர்களும்,
வலிமைமிக்கவர்களுமான அரக்கர்களால் காவல் காக்கப்படும் இந்த நகரத்தினுள், என்னால், என்னுடைய
இந்த உருவத்துடன நுழைவது இயலாத செயலாகும்.”
“பேராண்மையும்,
பெருவலிமையும் கொண்ட அரக்கர்களை எவ்வாறேனும் ஏமாற்றிவிட்டுத்தான் சீதையைத் தேடும் செயலை
நான் மேற்கொள்ள இயலும்.”
“இந்த அருஞ்செயலை
செய்துமுடிக்க, நான் யார் கண்ணுக்கும் புலப்படாவண்ணம், மிகவும் சிறிய வடிவம் கொண்டு,
இரவு நேரத்தில் நுழைவதே சரியானதாக இருக்கும்.”
“அந்த இலங்கை
நகரம், தேவர்களாலும், அசுரர்களாலும் நுழைய முடியாதவண்ணம் இருப்பதை அறிந்துகொண்ட ஸ்ரீஅனுமன்
மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்ட வண்ணம் யோசிக்கத் தொடங்கினார்.”
“கெட்ட ஆன்மாவான
இராவணனை எந்த வகையில் ஏமாற்றி, நான் ஜனகனின் மகளாகிய சீதையைத் தேடுவேன்?”
“வாக்கு கொடுத்துவிட்டு
வந்திருக்கும், ஸ்ரீராமனுக்கான இந்த செயல் தடைப்படா வண்ணம், நான் தனிமையில் சீதையை
எவ்விதம் காண்பேன்?”
“சரியாக நிறைவேறும்
நிலையில் உள்ள செயல்கள் கூட, இடம், பொருள்,ஏவல் போன்றவற்றைச் சரியாகத் திட்டமிடாத,
நிலையற்ற தன்மை கொண்ட தூதுவர்களால், சூரியனைக்
கண்ட இருள் அழிவதைப் போல் அழிந்துவிடுகின்றன.”
“இது சரி, இது
தவறு என்று பகுத்தாராயப்பட்டு செய்ய முனையும் செயல்கள் கூட வெற்றி பெறாமல் போகின்றன.
ஏனென்றால் தன்னைத் தானே மிகவும் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணிக்கொள்ளும் தூதுவர்களின்
செயலால் அவை தோல்வியுற்றுவிடுகின்றன.”
“எந்த வகையில்
செயலாற்றினால் தடை ஏற்படாது? செய்யும் செயல் தோல்வியுறாவண்ணம் எவ்விதம் செயலாற்றுவது? கடலைக்
கடந்து வந்திருக்கும் இந்த முயற்சி வீணாகாவண்ணம் எவ்விதம் செயலாற்றுவது?”
“என்னை அரக்கர்கள்
பார்க்க நேர்ந்துவிட்டால், இராவணனைக் கொன்றழிக்கும் ஸ்ரீராமனது செயலானது பலன் கொள்ளாது
போய்விடும்.”
“நான் அரக்க வடிவம்
கொண்டால் கூட இந்த அரக்கர்களால் எப்பொழுதுமே காணப்படாமல் இருப்பது என்பது முடியாத செயலாகும். இவ்வாறிருக்க, வேறு எந்த வடிவம் கொண்டால் கேட்கவும்
வேண்டுமோ?”
“இந்த அரக்கர்கள்
அறியாமல் காற்று கூட இந்த நகத்தில் புக முடியாது என்பதை நான் அறிவேன். வலிமை மிக்க
அரக்கர்கள் அறியாதது எதுவும் இல்லை.”
“நான் என்னுடைய
இயல்பான வடிவத்தில் இருந்தால், அதனால் தீங்கு விளைந்து, ஸ்ரீராமனுக்கான செயலில் கெடுதலும்
நேர்ந்துவிடலாம்.”
“ஆகவே நான் என்னுடைய
இயல்பான உருவத்திலேயே மிகவும் சிறியதான வடிவம் கொண்டவனாய், ஸ்ரீராமனுக்கான செயல் நிறைவேற
வேண்டி, இரவு நேரத்தில் இலங்கை நகரினுள் புகுவேன்.”
“யாராலும் புகவரிய
இந்த இலங்கை நகருக்குள் இரவு நேரத்தில் நுழைந்து, ஜனகனின் மகளான சீதையைக் காணும்பொருட்டு,
எல்லா மாளிகைகளிலும் நுணுக்கமாகத் தேடுவேன்.”
வானர வீரரான
ஸ்ரீஅனுமன் இவ்வாறாக சிந்தனை செய்தவராய் ஒரு முடிவு எடுத்து, சீதையைக் காணும் ஆவலில்,
சூரியனின் மறைவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
சூரியன் மறைந்து
இரவு வர இருக்கும் நேரத்தில், ஸ்ரீஅனுமன் தன்னுடைய தோற்றத்தை ஒரு சிறிய பூனையளவு அழகாகச்
சுருக்கிக்கொண்டவாராகக் காட்சியளித்தார்.
ஆற்றல் மிக்க
ஸ்ரீஅனுமன், இரவின் முதல் ஜாமத்தில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாலைகளைக் கொண்ட
அந்த நகத்தினுள் வேகமாகப் பாய்ந்து நுழைந்தார்.
அந்த நகரம் வரிசையாக
இருந்த மாளிகைகளையும், தங்கம் மற்றும் வெள்ளியிலான தூண்களையும், தங்கத்தால் வேயப்பட்ட
சாளரங்களையும், ஏழு, எட்டு அடுக்குக் கொண்ட மாளிகைகளையும், தங்கத்தோடு இழைக்கப்பட்ட
ஸ்படிகக் கற்களால் ஆன தளங்களையும் கொண்டு, ஒரு கந்தர்வ நகரம் போலிருந்ததை ஸ்ரீஅனுமன்
கண்டார்.
அங்கிருந்த அரக்கர்களின்
மாளிகைகள் வைர வைடூரியங்களால் சிறப்புற இழைக்கப்பட்டும், மாளிகைகளின் தளங்கள் முத்துக்களால்
கோர்க்கப்பட்ட தோரணங்களும் கொண்டு விளங்கின.
நன்முறையில்
அலங்கரிக்கப்பட்டிருந்த இலங்கை நகரம், அரக்கர்களின் பொன்னாலான தோரணவாயில்களால் மேலும்
பொலிவுற்றிருந்தது.
வெள்ளியைப்போன்ற
வெண்ணிறத்தில் உயரமான மாளிகைகளையும், உயர்ந்த பொன்னாலான சாளர வரிசைகளையும் கொண்டு,
வலிமைமிக்க அரக்கர்களால் சூழப்பட்டும், இராவணின் தோள்வலிமையால் பாதுகாக்கப்பட்டும்,
புகழ்மிகுந்தும், இன்னதுதான் என்று பிரித்துக் கூற இயலாத தன்மையைக்கொண்டும், வியப்பளிக்கும்
அழகையும் கொண்டிருந்த அந்த நகரத்தைப் பார்த்து மகிழ்வுற்றபோதிலும், ஸ்ரீஅனுமன் வைதேஹியைக்
காணவேண்டும் என்ற ஏக்கம் கொண்டவராய் இருந்தார்.
அப்பொழுது, பல
நட்சத்திரங்களுக்கு நடுவே, ஆயிரக்கணக்கான ஒளிக்கிரணங்களோடு உதயமான நிலவு, ஸ்ரீஅனுமனுக்கு
உதவும் செயல்போல் அந்த இடமெங்கும் தன் ஒளியைப் பாய்ச்சியது.
பால் மற்றும்
தாமரை இதழின் நிறத்தில், வெண்சங்கு போல் ஒளிவீசிக்கொண்டு,உயரக்கிளம்பிய நிலவினைப் பார்த்த
ஸ்ரீஅனுமனுக்கு அது, தாமரைகள் பூத்திருக்கும்
நீரோடையில் நீந்தி வரும் அன்னப்பறவை போலத் தோன்றியது.
இரண்டாவது ஸர்கம் நிறைவு.

2 comments:
மிகவும் அற்புதமாக உள்ளது..
வாயு புத்தியுடன் பயணிக்கின்ற அனுபவம்..
ஜெய் ஸ்ரீராம்...!!!🙏
சிறப்பான மொழிபெயர்ப்பு!
Post a Comment