Monday, December 18, 2023

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். ஐம்பத்து நான்காவது ஸர்கம்.

 

                           ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

                           சுந்தர காண்டம்.

                 ஐம்பத்து நான்காவது ஸர்கம்.




 

 வானரரான அனுமன், தான் மனதில் எண்ணி வந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறியதால், மிகுந்த உற்சாகம் மேலிட, இலங்கையைப் பார்த்துக்கொண்டே, அடுத்துத் தான் செய்ய வேண்டிய செயலைப் பற்றி சிந்திக்கலானார்.

 “எனக்கு இப்பொழுது செய்து முடிக்க வேண்டிய காரியம் இன்னும் என்ன மீதமுள்ளது? இந்த அரக்கர்களுக்கு மேலும் துன்பம் தரத் தக்க செயல் என்னவாக இருக்கும்?”

 “அசோக வனம் நாசம் செய்யப்பட்டு விட்டது. சிறந்த அரக்க வீரர் பலர் கொல்லப்பட்டு விட்டனர். சேனையின் ஒரு பகுதியும் அழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது இந்தக் கோட்டையை அழிக்கும் வேலை மீதம் உள்ளது.”

 “இந்தக் கோட்டை அழிக்கப்பட்டால், கடலைத் தாண்டி இங்கு வந்த எனது முயற்சி, பயனுள்ளதாக ஆகும். சிறிய முயற்சியிலேயே, இந்தச் செயலைச் செய்வது பட்ட இன்னல்களுக்குப் பலனுள்ளதாக ஆகும்.”

 “எனது வாலில் எரிந்து கொண்டிருக்கும் இந்த அக்னிதேவனுக்கு, இந்தப் பெரிய மாளிகைகளை எரிப்பதற்காக அளித்தால், அது அக்னிதேவனைத் திருப்தி செய்த செயலாக இருக்கும்.”

 பிறகு அவர், மின்னலோடு கூடிய மேகம் போல, எரிந்து கொண்டிருக்கும் தன் வாலுடன், இலங்கையின் மாளிகைகள் முன்பு சுற்றித் திரிந்தார்.

 அந்த வானர வீரர் சற்றும் பயமின்றி, அரக்கர்களின் ஒவ்வொரு வீட்டையும் பார்த்துக் கொண்டே, அவர்களின் தோட்டங்களிலும் மாளிகைகளிலும் சுற்றித் திரிந்தார்.

 காற்றுக்கு நிகரானவரும், பெரும் வேகத்துடன் செல்லக் கூடியவருமான அனுமன், திரிந்து கொண்டே, பிரஹஸ்தனுடைய மாளிகையை அடைந்து, அதற்கு நெருப்பைப் பற்ற வைத்து விட்டு, அங்கிருந்து பறந்தார். மேலும் மஹாபார்ஷ்வனுடைய மாளிகைக்கும், பிரளய கால நெருப்பின் ஜ்வாலையை ஒத்த நெருப்பைப் பற்ற வைத்தார்.


 

 வானர சேனைத் தலைவரும், பேரொளி மிக்கவருமான அந்த பெரும் வானரர், அவ்வாறே, வஜ்ரதம்ஷ்ட்ரன், சுகன், அறிவாளியான ஸாரணன் மற்றும் இந்த்ரஜித் ஆகியோரின் வீடுகளை அடைந்து நெருப்பைப் பற்ற வைத்தார். மேலும் ஜம்புமாலி மற்றும் ஸுமாலியினுடைய வீடுகளையும் சுட்டெரித்தார்.

 பேராற்றல் கொண்ட அந்த பெரும் வானரர், முறையே, ரஷ்மிகேது, சூர்யசத்ரு, ஹ்ரஸ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமசன் ஆகிய அரக்கர்களின் வீட்டை எரித்தார். அவ்வாறே, யுத்தோத்தமன், மத்தன், த்வஜக்ரீவன், பயங்கரமான வித்யுஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராளன், பிசாசன், சோணிதாக்ஷன், கும்பகர்ணன், மகராக்ஷஸன் ஆகியோர் வீடுகளையும் எரித்தார். அவ்விதமே, யக்ஞசத்ரு, பிரம்மசத்ரு, துராத்மாவான நிகும்பன், நராந்தகன், கும்பன் ஆகியோர் வீடுகளையும் எரித்தார். விபீஷணரது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, மற்ற வீடுகளை வரிசையாக எரித்தார்.

 பெரும் புகழ் கொண்ட வாயுகுமாரர், பல்வேறு மாடமாளிகைகளையும், செல்வச் செருக்குடன் வாழ்ந்த அரக்கர்களின் செல்வங்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்.

 ஒளி பொருந்திய அனுமன், எல்லோருடைய மாளிகைகளையும் அழித்த பின்னர், அரக்க வேந்தனாகிய இராவணனின் வீட்டை அடைந்தார்.

 வீர அனுமன், மேரு மந்தர மலைகளைப் போன்று உயரமானதும், எல்லாச் செல்வங்களும் குறைவற்று விளங்கியதும், பலவித ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மிக முக்கியமானதுமான அந்த வீட்டில், தன் வாலின் நுனியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பற்ற வைத்து விட்டு, ப்ரளய கால மேகம் போல கர்ஜனை செய்தார்.

 ப்ரளய கால நெருப்புப் போல ஜ்வலித்த அந்த நெருப்பு, காற்றின் துணையுடன் மிகவும் கடுமையாகவும், வலிமையாகவும் பற்றி எரிந்தது. காற்றானது எல்லா வீடுகளுக்கும் நெருப்பைப் பரவச் செய்தது. பொன்னால் செய்யப்பட்ட சாளரங்களும், முத்து, மணி, இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளும் எரிந்து சாம்பலாயின. எரிந்து, இடிந்து விழுந்த மாளிகைகளின் கோபுரங்களைப் பார்க்கும் போது, சிறப்பழிந்த சித்தர்களின் வீடுகள் ஆகாயத்திலிருந்து பூமியின் மீது வந்து விழுவது போல இருந்தது.

 தங்கள் தங்கள் வீடுகளைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடிய அரக்கர்கள், தங்கள் தைரியத்தையும், உடமைகளையும் இழந்து, “ஐயோ! இந்த அக்னிதான் குரங்கின் உருவம் கொண்டு வந்து விட்டார்” என்று கூக்குரல் இட்டனர்.

 பல அரக்கியர், கைகளில் குழந்தைகளுடன் கதறிக்கொண்டு, தலைவிரி கோலமாய், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த மேல் மாடிகளிலிருந்து திடீரெனக் கீழே விழுந்தார்கள். மேகங்களில் தோன்றும் மின்னல்கள் போல, மேலிருந்து விழுபவர்கள் காட்சியளித்தார்கள்.

 வைரம், பவழம், வைடூரியம், முத்து மற்றும் வெள்ளி முதலானவற்றால் கட்டப்பட்ட அதிசயமான வீடுகள், பற்றி எரிந்ததில், அவைகள் எல்லாம் உருகிய உலோகத் தாதுக்களுடன் கலந்து தரையில் விழுவதை அனுமன் கண்டார்.

 புற்களையும் காய்ந்த குச்சிகளையும் எரிக்கும் நெருப்பிற்கு, அதனால் திருப்தி ஏற்படுவதில்லை. அது போல, நெருப்பினால் அழிந்து போன பெரும் ராக்ஷஸ வீரர்களால், அனுமனுக்கும் திருப்தி ஏற்படவில்லை. அனுமனால் கொல்லப்பட்ட அரக்கர்களின் உடலைத் தாங்கிய பூமிக்கும் திருப்தி ஏற்படவில்லை.

 நெருப்பின் தீ நாக்குகள், சில இடங்களில், பலாசப்பூ போலவும், சில இடங்களில் இலவம் பூ போலவும், சில இடங்களில் குங்குமம் போலவும் விளங்கின. (கீதா பிரஸ் பதிப்பில் இந்த ஸ்லோகம் இல்லை).

 ருத்ரனால் முப்புரம் எவ்விதம் எரிக்கப்பட்டதோ, அது போல, எண்ணியதை முடிக்கும் ஆற்றல் கொண்ட வானரரான அனுமனால் இலங்கை நகரம் எரிக்கப்பட்டது.

 பேராற்றல் கொண்ட அனுமனால் வைக்கப்பட்ட நெருப்பானது, பெரிதும் வலுப்பெற்று, கொழுந்து விட்டு எரிந்து, தன் நாக்குகளை எல்லா இடங்களிலும் பரவச் செய்தது. அதனால் இலங்கையின் மலையின் உச்சியிலேயே நெருப்புப் பற்றி எரிந்தது.


 காற்றின் வேகத்தில் வீடுகளில் பற்றியெரிந்த நெருப்பு, சிறிதும் புகையை உண்டாக்கவில்லை. அரக்கர்களின் உடல்களே, நெய் போலாகி அத் தீயை வளர்க்க, அதன் ஜ்வாலையானது, பிரளய கால நெருப்புப் போல வானளாவி உயரக் கிளம்பியது.

 இலங்கை நகர் முழுவதும் பற்றியெரிந்த நெருப்பு, கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொடுத்தது. வீடுகள், மலைகள் பற்றியெரியும்போது உண்டான ஓசை, இடியோசைபோலப் பெருஞ்சத்தத்தைக் கிளப்பி, அண்டத்தையே பிளந்து விடுவது போல இருந்தது.

 ஆகாயம் வரை உயர்ந்து எரிந்த நெருப்பு, கடுமையான ஒளியுடன், பலாசப்பூ போலக் கொழுந்து விட்டெரிந்தது. எரிந்து முடிந்த நெருப்பினால் உண்டான புகை வானத்தில் பரவி, நீலோத்பலம் போன்ற நிறத்துடன் விளங்கியது.

 எண்ணற்ற அரக்கர்கள் பலரும் அங்கு கூடினர். ஒரே சமயத்தில் அந்த நகரமே, வாழும் உயிர்களோடும், வீடுகளோடும், மரங்களோடும் பற்றியெரிவதைப் பார்த்து, பின் வருமாறு பேசிக் கொண்டார்கள்.

 “வஜ்ராயுதம் தாங்கிய தேவேந்திரனோ? இல்லை, அந்த எம தர்மனோ? வருணனோ இல்லை, வாயுதேவனோ? ருத்ரமூர்த்தியோ இல்லை, சூரியனோ? குபேரனோ? இல்லை, சந்திரனோ? இல்லை இது நேரிடையாக வந்திருக்கும் எமனேதான்! வானரம் அல்ல!”

 “எல்லாவற்றையும் படைக்கும் நான்முகனான, அனைவருக்கும் பாட்டனான, பிரம்ம தேவரின் கோபம், அரக்கர்களை உண்டில்லாமல் ஆக்குவதற்காக வானர வேடம் பூண்டு வந்ததோ? அல்லது எல்லையற்றதும், புலனுக்கு எட்டாததும், அறிவிற்கப்பாற்பட்டதும், இணையற்றதும், எல்லாவற்றிலும் மேலானதுமான விஷ்ணு என்னும் பெரும் சக்தியே, ராக்ஷஸர்களின் அழிவிற்காக, தனது மாய சக்தியினால் குரங்கிங்கின் வடிவம் கொண்டு இங்கு வந்ததா என்ன?”

 ஒரே நேரத்தில், அரக்கர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் அனைத்தும் பற்றி எரிந்ததால், அந்த நேரத்தில் தீனமான பெருங்குரலில் அதிகக் கலவரத்தோடு அந்த இலங்கை நகரமே புலம்பியது.

 “ஐயோ அப்பா! ஐயோ மகனே! ஐயோ நாதனே! ஐயோ நண்பனே! செழித்திருந்த வாழ்க்கை இவ்வாறு அழிந்துவிட்டதே!” என்று பலவாறாக அரற்றிக் கொண்டிருந்த அரக்கர்களால் பேரிரைச்சல் உண்டானது.

 அனுமனின் கோபத்தின் வீர்யத்தினால், அந்த இலங்கை நகரம், நெருப்பு நாக்குகளால் தீண்டப்பட்டு, இறந்து கிடந்த வீரர்களையும், சிதறியோடிய வீரர்களையும் கொண்டு, கடும் சாபத்தால் அழிக்கப்பட்டது போலானது.

 உயர்வு மிக்க அனுமன், பரபரப்பும் பயமும் கொண்ட அரக்கர்களைக் கொண்ட, பெரும் ஆரவாரத்துடன் எரியும் நெருப்பினால் சூழப்பட்ட இலங்கையைப் பார்க்கும் போது, பிரம்மனின் கோபத்தால் அழிந்த பூவுலகைப் போல இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

 மிகச் சிறந்த மரங்களைக் கொண்டிருந்த வனத்தை அழித்து, போரில் மிகப் பெரிய அரக்கர்களைக் கொன்று, மலைகளுக்கு நிகரான மாளிகைகளைக் கொண்டிருந்த அந்த நகரத்தை எரித்து விட்டு, அனுமன் எனப்படும் அந்த வானரர், நினைத்த காரியத்தை முடித்தவராய் சுற்றித் திரிந்தார்.

 உயர்வு மிக்க அனுமன், பலவிதமான மரங்களைக் கொண்ட வனத்தை அழித்துவிட்டு, மிகவும் பெரிய அரக்கர்களையும் மாய்த்து விட்டு, அரக்கர்களின் மாளிகைகளில் நெருப்பையும் பற்ற வைத்து விட்ட அந்தக் கணத்தில், மனதில், ஸ்ரீராமனை நினைக்கலானார்.

 அதே நேரத்தில் பெரும் வலிமை மிக்கவரும், காற்றுக்கிணையான வேகம் கொண்டவரும், அறிவிற் சிறந்தவரும், வானர வீரர்களின் சிறந்த தலைவராக விளங்குபவருமான அந்த வாயுகுமாரை, அனைத்து தேவர்களும் வணங்கினார்கள்.

 அனைத்துத் தேவர்களும், முனிவர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும், நாகர்களும், யக்ஷர்களும், பெரும் பூத கணங்களும் அங்கு நடந்ததைப் பார்த்து ஈடில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 அந்த வானரர், வனத்தை அழித்து, அரக்கர்களைப் போரினில் மாய்த்து, அழகிய இலங்கையை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு, மிகவும் ஒளிமயமாக விளங்கினார்.




 உயர்ந்த மாளிகையின் உச்சியில், தன் வாலினில் எரியும் நெருப்பிலிருந்து எழும் ஒளியின் இடையில் நின்று கொண்டிருந்த அனுமன், ஒளிரும் கிரணங்களைக் கொண்ட சூரியன் போல விளங்கினார்.

 இவ்விதம் இலங்கை நகரை எரித்துப், பெரும் இன்னலை உண்டாக்கிய, சிறந்த வானரரான அனுமன், வாலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கடல் நீரால் அப்பொழுது அணைத்தார்.




 எரிந்து சாம்பலான இலங்கை நகரைப் பார்த்த தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டார்கள்.

 அனைத்து வகையான உயிரினங்களும், அந்தப் பெரிய வானரரும், வானரர்களில் சிறந்தவருமான அனுமனைக் கண்டு, இவர் பிரளய கால நெருப்போ என்று அஞ்சி நடுங்கின.

 

 

 ஐம்பத்து நான்காவது ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். ஐம்பத்து மூன்றாவது ஸர்கம்.

 

 ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

 சுந்தர காண்டம்.

 ஐம்பத்து மூன்றாவது ஸர்கம்.




 அறவழிக்கும் நடைமுறைக்கும் உகந்த வார்த்தைகளை வீபீஷணன் சொன்னதைக் கேட்ட தசமுக இராவணன், பெருமை மிகுந்த தன் தம்பியிடம் இவ்விதம் உரைத்தான்.

 “தூதுவனைக் கொல்வது குற்றம் என்று உன்னால் சொல்லப்பட்ட வார்த்தை சரியானதுதான். இருப்பினும் இதற்கு மரண தண்டனை தவிர வேறு ஏதாவது தண்டனை நிச்சயம் அளிக்கப்பட வேண்டும்.”

 “குரங்குகளுக்கு அவற்றின் வால் தான் மிகவும் பிடித்தமான அணிகலன். இதனுடைய வால் விரைவில் தீக்கிரையாக்கப்படட்டும். எரிந்து போன வாலுடன் அது திரும்பிச் செல்லட்டும்!”

 “தனது உடலின் ஒரு பகுதி நாசமானதால் இவன் படும் துயரத்தையும், இவனது மோசமான நிலையையும், அங்கே இவனது நண்பர்களும், உறவினர்களும், குடும்பத்தாரும் காணட்டும்.”

 “நகரத்தின் எல்லா வீதிகளிலும் நன்றாக கொளுந்து விட்டு எரியும் வாலுடன், இவனை (அனுமனை) அரக்கர்கள் இழுத்துக் கொண்டு செல்லட்டும்.” என்று அந்த அரக்கர்களின் அரசன் ஆணையிட்டான்.

 அரசனின் உத்தரவைக் கேட்டதும், கோபத்தின் உச்சத்தில் இருந்த அரக்கர்கள், அனுமனின் வாலின் மீது பழைய கிழிந்த பருத்தித் துணிகளைக் கொண்டு சுற்றினார்கள்.

 வாலின் மீது துணி சுற்றும்போது, உலர்ந்த விறகினைப் பற்றிக்கொண்டு காட்டுத்தீ எவ்விதம் உயரக் கிளம்புமோ, அது போல, அனுமன், ஓங்கி வளர்ந்தார். அவர்கள் எண்ணெயால் அந்தத் துணிகளை நன்றாக நனைத்து, அதில் தீ மூட்டினார்கள். அனுமனின் கொளுந்து விட்டு எரியும் வாலினைக் காணும் ஆவலில், பெண்கள், குழந்தைகள், வயதான அரக்கர்கள் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

 இளஞ்சூரியனைப் போல ஒளிரும் முகம் கொண்ட அனுமன், பெரும் சினம் கொண்டு, தன் எரிந்து கொண்டிருந்த வாலினால், அரக்கர்களை அடித்துத் துரத்தினார். பெரும் அரக்கர் கூட்டத்தால் சூழப்பட்ட வானரோத்தமரும், வீரருமான அனுமன், மீண்டும் கட்டுப்பட்டவராய், இனி செய்ய வேண்டிய செயல் பற்றி சிந்திக்கலானார்.

 “நான் இந்தக் கயிறுகளை அறுத்தெறிந்துவிட்டு மீண்டும் உயரக் கிளம்பி, இவர்களைத் தாக்கிக் கொல்லலாம். ஏனெனில், நான் கட்டுண்டு இருந்தாலும், இந்த அரக்கர்கள் எனக்கு ஈடாக மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை.”

 “பகவான் ஸ்ரீராமனுக்காக இயங்கும் என்னை, இந்த மோசமான அரக்கர்கள் தங்கள் அரசனின் ஆணைப்படி கட்டியுள்ளார்கள். ஆனாலும், இதுவரை நான் செய்ததற்குப் பழிவாங்கும் அளவிற்கு இந்தச் செயல் இல்லை”.

 “போரில், இந்த அரக்கர்கள் அனைவருக்குமே நான் ஒருவனே ஈடுகொடுக்க வல்லவன். ஆனாலும், ஸ்ரீராமனின் திருவுளப்படி நடக்க வேண்டிய கடமையால் , நான் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்வேன்.”

 “இரவு நேரத்தில் என்னால் இலங்கையை நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆகவே, பகல் பொழுதில் நகரத்தைப் பார்க்க நேர்வதால், இலங்கையின் கோட்டை அமைப்புக்களை நன்றாக அறிந்து கொள்ள முடியும். எனவே, இன்னுமொரு முறை சுற்றிப் பார்ப்பதற்காகவே இது அமையட்டும்.”

 “இந்த அரக்கர்கள் என் வாலுக்குத் தீ மூட்டியும், தங்கள் விருப்பப்படி கட்டப்பட்டுள்ள என்னைத் துன்புறுத்தியும் எனக்கு இன்னல்கள் உண்டாக்கட்டும். (இதனால்) எனது மனம் சிறிதும் சோர்வடையாது.”

 தன் மனதில் உள்ளதை வெளிக்காட்டாமல் இருக்கும் வானரோத்தமராகிய பெரும் வானரத்தை, அந்த அரக்கர்கள் சுற்றி வளைத்து அதனால் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். கொடிய அரக்கர்கள், உரக்க ஒலி எழுப்பிக் கொண்டே, சங்கம் , பேரிகை போன்றவற்றை முழங்கிக் கொண்டு, பெரும் இரைச்சலுடன் அந்த நகரில் அவரை இழுத்துக் கொண்டு திரிந்தார்கள்.


 

 பகைவர்களை வெல்லத் தகுந்த அனுமன், அரக்கர்கள் பின்னால் வர, தன் விருப்பத்துடனேயே எல்லா இடங்களுக்கும் சென்றார். அரக்கர்களின் அந்தப் பெரும் நகரத்தின் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார்.

 அங்கு விசித்திரமான விமானங்களையும், சுவரெழுப்பி மறைக்கப்பட்ட ரகசிய இடங்களையும், நன்றாகக் கட்டமைக்கப்பட்டிருந்த நாற்சந்திகளையும் அனுமன் கண்டார்.




 

 வாயுகுமாரனாகிய அனுமன், வீடுகள் நிறைந்த வீதிகளையும், நான்கு புறமும் வழிகளைக் கொண்ட இடங்களையும் பெரிய மற்றும் சிறிய வீதிகளையும், கரடு முரடான சந்துகளையும் பற்றி அறிந்து கொண்டார்.

 நாற்சந்திகளிலும், நான்கு கால் மண்டபங்களிலும், ராஜ வீதியிலும், அரக்கர்கள் அனைவரும் அவரை ‘ஒற்றன்’ எனக் கேலி பேசிக் கூக்குரலிட்டார்கள்.

 வாலிலே தீப்பற்றி எரிந்தபடி வரும் அனுமனை வினோதமாக எண்ணி, வாலிபர்கள், பெண்கள், முதியவர்கள் அவரைக் காண ஆங்காங்கே ஆவலுடன் திரண்டார்கள்.

 அனுமனின் வாலின் நுனியில் தீப்பற்றி எரிந்ததும், விகாரமான கண்களைக் கொண்ட அரக்கியர், சீதையை நெருங்கித், துன்பம் தரத் தக்க செய்தியைச் சொன்னார்கள்.


 “ஓ! சீதையே! சிவந்த முகத்துடன் எந்தக் குரங்கு உன்னுடன் பேசிக் கொண்டிருந்ததோ, அந்தக் குரங்கு, அதனுடைய வாலில் தீ வைக்கப்பட்டு, கண்டபடி இழுத்துச் செல்லப்படுகின்றது!”

 உயிரைப் பறிப்பது போன்ற கொடுமையான அந்த வார்த்தைகளைக் கேட்ட வைதேஹி, வருத்தம் மேலிட , அக்னி பகவானை மனதினுள் நினைத்தாள்.

 அகன்ற விழிகளைக் கொண்ட சீதை, அப்பொழுது அந்த வானரத்திற்கு (அனுமனுக்கு) அருள்புரிய வேண்டி, மனதில் தூய்மையுடன் அக்னி தேவனைப் பணிவுடன் வணங்கி வேண்டிக் கொண்டாள்.


 “நான், (என்) கணவனுக்கான பணிகளைச் செவ்வனே செய்பவள் என்றால், எல்லாத் தவங்களையும் முறைப்படி செய்பவள் என்றால், கொண்ட கணவனே கதி என்று இருப்பது உண்மையென்றால், அனுமனுக்குக் குளிர்ச்சியை உண்டாக்குவாயாக!”

 “அறிவிற்சிறந்த ஸ்ரீராமனுக்கு என்னிடத்தில் சிறிதளவேனும் அன்பு இருப்பது உண்மையென்றாலோ, எனக்கு நற்பேறு (அதிர்ஷ்டம்) சிறிதளவேனும் இருக்கின்றது என்றாலோ, அனுமனுக்குக் குளிர்ச்சியைத் தந்து அருள வேண்டும்.”

 “அவரை (ஸ்ரீராமனை) அடைவது ஒன்றையே நோக்கமாய், நன்னெறி தவறாது நான் வேண்டிக் கொண்டிருப்பதை, அறநெறியை முற்றிலும் அறிந்தவரான அவர் அறிவாரேயானால், அனுமனுக்கு (நெருப்பிலிருந்து) குளிர்ச்சியை உண்டாக்குவாயாக!”

  “பெருந் தோள்களை உடையவரும், உண்மையையே பேசுபவரும், போற்றத்தக்கவருமான சுக்ரீவர், என்னை இந்தத் துன்பக் கடலிலிருந்து மீட்பார் என்பது உண்மையானால், நீ, (அக்னி பகவான்) அனுமனுக்குக் குளிர்ச்சியை உண்டாக்குவாயாக!”

  கொடிய தீக்கங்குகளையுடைய அக்னி தேவன், மான் குட்டியின் கண்களையொத்த கண்களைக் கொண்ட சீதைக்கு, வானரர் துன்பமற்றிருப்பதை உணர்த்துவது போல, அமைதியாக வலம் வந்து எரிந்தார்.

 அனுமனின் தந்தையான வாயுதேவனும், சீதை திருப்தியுறும் வண்ணம், அனுமன் தன் வாலில் பற்றியெரியும் நெருப்புடன் இருப்பினும், (அவருக்கு உதவும் நோக்கில்) குளிர்ந்த பனிக் காற்றாய் வீசினார்.

 பற்றியெரியும் வாலுடன் இருந்த அனுமன், நன்கு எரியும் இந்த அக்னிதேவன் தன்னை ஏன் எரிக்க வில்லை என்று யோசிக்கலானார்.

 “பெரிதாக எரியும் இந்தத் தீயானது எனக்குக் கஷ்டத்தைக் கொடுக்கவில்லை. என் வாலின் நுனியில் ஏதோ குளிர்ந்த பொருளைத் தடவியது போல இருக்கின்றது”

 “அன்று கடலைத் தாண்டும் போது, ஸ்ரீராமனின் மகிமையால், கடலின் நடுவில் ஆச்சர்யமான முறையில் மலை ஒன்று தோன்றியது போல, இதுவும் ஆச்சர்யப் படத்தக்கதே!”

 சமுத்திர ராஜனும், புத்திமானாகிய மைனாக மலையும், ஸ்ரீராமன் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தி உதவியது போல, அக்னிதேவன் மட்டும் இப்பொழுது ஏன் உதவி செய்யாமல் இருக்கப் போகிறார்?”

 “நிச்சயமாக, சீதாதேவியின் கருணையாலும், இராகவனுடைய மகிமையாலும், எனது தந்தையிடம் கொண்ட நட்பினாலும் அக்னிதேவன் என்னை எரிக்கவில்லை.”

 இவ்வாறு யோசித்தபடி, மேற்கொண்டு செய்யப்போவது பற்றி ஒரு முகூர்த்த காலம் தன் சிந்தனையைச் செலுத்தினார். “என்னைப் போன்ற வீரர்கள் இந்தக் கீழான அரக்கர்களால் கட்டுண்டிருப்பது சரியான செயலாகுமா? ஆற்றலுடன் இதற்கான எதிர்வினை ஆற்றவேண்டும்” என்று முடிவெடுத்தார். உடனே, அவர் தன் தளைகளிலிருந்து விடுபட்டு, வேகமாக உயர எழும்பி, பெரும் கர்ஜனை செய்தார்.

 பெரும் புகழ் கொண்ட வாயுகுமாரர், அதன் பிறகு, அரக்கர்கள் கூட்டம் இல்லாத, மலைச் சிகரம் போல உயர்ந்த ஒரு கோபுரத்தின் மீது ஏறினார்.

 அறிவிற்சிறந்த அவர், மலை போல உயர்ந்து, மறுபடியும் திடீரென சிறிய உருவம் எடுத்துக் கொண்டு, தன் மீதிருந்த கட்டுக்களை அவிழச் செய்தார்.

 புகழ்வாய்ந்த அவர், தன் கட்டுக்களிலிருந்து வெளி வந்ததும், மீண்டும் மலை போலப் பருத்து விளங்கினார். தோரண வாயிலிலிருந்த உலக்கையை மீண்டும் அவர் கண்டார்.

 கரிய இரும்பினால் செய்யப்பட்டிருந்த அந்த உலக்கையைக் கொண்டு, தோள் வலிமை மிக்க அந்த வானரர், மீண்டும் அந்த அரக்கர்களைக் கொன்றழித்தார்.

 போரில் எல்லையற்ற ஆற்றல் கொண்ட அவர், அவர்களைக் கொன்று விட்டு, இன்னும் இலங்கை நகரத்தைச் சுற்றிப் பார்த்தார். வாலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீ ஜ்வாலைகள் அவரைச் சுற்றி மாலை போலத் தெரிய, ஒளிக்கிரணங்கள் வீசும் சூரியனைப் போல பிராகசமாய் விளங்கினார்.

 


  

            ஐம்பத்து மூன்றாம் ஸர்கம் நிறைவு.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம். சுந்தர காண்டம். ஐம்பத்திரண்டாவது ஸர்கம்.

 

ஸ்ரீ வால்மீகி ராமாயணம்.

 சுந்தர காண்டம்.

  ஐம்பத்திரண்டாவது ஸர்கம்.




 

 கோபத்தில் தன்னிலை மறந்த இராவணன், அரக்கர்களிடம் அந்த வானரரைக் கொன்றுவிடும்படி பணித்தான்.

 தூதனாக வந்து, சொல்லப் பணிக்கப்பட்ட வார்த்தைகளைச் சொல்ல வந்த அவருக்கு (அனுமனுக்கு), நல்லிதயமற்ற இராவணனால் விதிக்கப்பட்ட மரணதண்டனை சரியல்ல என்று விபீஷணன் (இராவணனின் தம்பி) எண்ணினார்.

 ஒருவன் செய்யத்தக்க செயல்முறைகளின் நெறிமுறைகளை நன்கு உணர்ந்திருந்த அவர் (விபீஷணன்), அரக்க அரசனான இராவணன், மிகுந்த கோபத்தில் இருப்பதையும், தூதுவனைக் கொல்லும் செயலில் விரைவாக முனைந்திருப்பதையும் கண்டு, செய்ய வேண்டிய செயல் பற்றி சிந்திக்கலானார்.

 பகைவர்களை வெல்லும் வல்லமை கொண்டவரும், நல்ல பேச்சாற்றல் மிக்கவரும், அடுத்து செய்ய வேண்டிய செயலை முடிவு செய்து கொண்டவருமான விபீஷணன், தன் அண்ணனுக்கு மிகவும் பணிவுடன் மரியாதைகள் செய்து, பிரியமான வார்த்தைகளைச் சொல்லலானார்.



 

 “ராக்ஷஸேந்திரரே! சினத்தை விட்டுவிட்டுத், தெளிந்த மனதுடன் பொறுத்தருளுங்கள்! நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். எல்லா நெறிமுறைகளையும் நன்கு அறிந்த புவிச்சக்ரவர்த்திகள் எவரும் தூதுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில்லை!”

 “வீரரே! இந்தக் குரங்கிற்கு மரண தண்டனை விதிப்பது, அரச நெறிமுறைகளுக்கு எதிரானது. உலக நடைமுறைக்கு உகந்ததாகவும் இல்லை. இது தங்களுக்கு ஏற்புடைய செயலுமல்ல!”

 “தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவர் தாங்கள்தான். நீங்கள் கருணை மிக்கவர். அரசியல் தந்திரமும், அரச நீதியையும் அறிந்தவர். உலக நியதிகளை நன்கு அறிந்தவர். அனைத்துவித ஞானங்களையும் பெற்றவர்.”

 “உம்மைப் போன்ற பேரறிஞர்கள் கூட , சினத்தில் திளைப்பதால், இவ்வளவு அறிவினால் கிடைக்கும் பலன்கள் வீணானதாக ஆகிவிடும்.”

 “எவரும் எதிர்க்க முடியாதவரும், பகைவர்களை கொன்றழிக்க வல்லவருமான ராக்ஷஸ மன்னரே! ஆகவே தாங்கள் அமைதி அடையுங்கள். எது சரியென நிச்சயித்து, தூதுவனுக்கு உரிய தண்டனை வழங்கப்படட்டும்.”

 ராக்ஷஸர்களின் அரசனான இராவணன், விபீஷணனின் வார்த்தைகளைக் கேட்டு பெருங்கோபம் கொண்டு இவ்விதம் சொல்லலானான்.

 “எதிரிகளை வெல்பவனே! கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை விதிப்பது பாவச் செயலாகாது. ஆகவே, கொடுஞ்செயல்களைச் செய்யக் கூடிய இந்த வானரத்தைக் கொல்லப் போகின்றேன்.”

 அறமற்றதும், குறைகள் நிரம்பியதும், பண்பில்லாதவர்களுக்குமானதுமான வார்த்தைகளைக் கேட்ட, பண்பில் உயர்ந்த விபீஷணன், சிறந்த கடமைகளுக்கான அறவழிகளைப் பற்றிச் சொல்லலானார்.

 “இலங்கைக்கு அதிபதியே! அரக்கர்குலத் தலைவரே! சினத்தைத் தவிருங்கள்! அறவழியில் சொல்லப்பட்டுள்ள நல்ல வார்த்தைகளைக் கேளுங்கள். அரசே! தூதர்கள் கொல்லத் தக்கவர்கள் அல்ல என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.”

 “இவன் (அனுமன்) பெரும் கொடுமை வாய்ந்த எதிரி என்பதில் ஐயம் எதுவுமில்லை. இவனால் அளப்பரிய இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. தூதனுக்கான பலவித தண்டனைகளை அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். ஆனாலும், தூதனைக் கொல்லலாம் என்று எங்கும் சொல்லப்படவில்லை.”

 “உருவத்தைச் சேதப்படுத்துதல் கசையால் அடித்தல், மொட்டையடித்தல், அங்கங்களில் பச்சை முதலிய குறிகள் இட்டு சுட்டுவிடுதல் போன்றவையே தூதனுக்கான தண்டனை என்று விதிக்கப்பட்டுள்ளது. தூதனுக்கு மரணதண்டனை என்பது கேள்விப்படாத ஒன்றாகும்.”

 “அறவழிகளில் தெளிந்த அறிவுடன், நடைமுறைக்கு ஏற்றவற்றையும் நன்கறிந்த தங்களைப் போன்றவர்கள் சினம் கொள்ளக் கூடாது. நீதி வழுவாதவர்கள் சினத்தை அடக்குகிறார்கள் அல்லவா?”

 “வீரரே! அனைத்து தேவ, அசுர குலத்தில் உமக்கு இணையாக அறத்தைப் போதிப்பவர் இல்லை. நடைமுறை வாழ்க்கைத் தத்துவங்களை அறிந்தவரும் இல்லை. நீதி நூட்களைக் கண்டு தெளிந்து உணர்ந்தோரும் இல்லை. நீர் ஒருவரே அனைவரிலும் மேலானவர்.”

 “ஆற்றலும் உற்சாகமும் மிக்க தேவ, அசுரர்களால் உங்களை வெல்ல முடியாது. தாங்கள் அளப்பரிய ஆற்றல் மிக்கவர். பல போர்களில் தேவர்களின் தலைவனையும், பல மன்னர்களையும் தோற்கடித்துள்ளீர்கள்”. *

 “தேவர்கள் முதலானோரிடம் பகைமை கொண்டவரும், யாராலும் வெல்லமுடியாதவருமான உங்களை வெல்ல வேண்டுமென்று மனதால் கூட யாராலும் நினைக்க முடியாது. (உங்களுக்கு எதிரே) யாராவது தலையை உயர்த்தினாலும் அவர்களுக்கு உடனே மரணம் நிச்சயம்!” *

 *மேலிரண்டும் கீதா பிரஸ் பதிப்பில் உள்ள ஸ்லோகங்கள்.

 “இந்த வானரத்திற்கு மரண தண்டனை விதிப்பதில் எந்த வித சிறப்பையும் நான் காணவில்லை. இந்த வானரத்தை அனுப்பியவர்களே அந்தத் தண்டனைக்கு ஏற்றவர்கள்.”

 “இவன் நல்லவனோ இல்லை கெட்டவனோ? ஆனால் பிறரால் கட்டளையிடப்பட்டு, இங்கு சொல்லும்படி சொல்லப்பட்ட செய்திகளைச் சொன்னவன் ஆவான். ஆகவே, இவன் கொலைத் தண்டனைக்கு ஏற்றவன் இல்லை!”

 “அரசே! இவன் (அனுமன்) கொல்லப்பட்டு விட்டால், (நமது பகைவர்களின் இடத்திலிருந்து) வானத்தில் பறந்து, கடலைக் கடந்து மீண்டும் இங்கு வரத்தக்க வேறு எவரையும் நான் காணவில்லை. பகைவரின் கோட்டைகளை நாசம் செய்ய வல்லவரே! ஆகவே இந்தத் தூதனைக் கொல்வதில் தாங்கள் ஈடுபட வேண்டாம். இந்திரன் முதலான தேவர்களே உங்கள் எதிர்ப்புக்கு ஏற்றவர்கள்.”

 “போர் புரிவதில் உற்சாகம் மிக்கவரே! இவன் (அனுமன்) இறந்து விட்டால், உங்களுக்கு எதிராக வெகு தொலைவில் இருக்கும் அந்த மானிட மன்னரின் புதல்வர்களை, (இங்கு) போருக்கு வரத் தூண்டக்கூடிய (திறமை மிக்க) தூதுவன் வேறு எவரையும் நான் காணவில்லை!”

 “சிறந்த வானர வீரனான இவன் கொல்லப்பட்டால், பெரியோர்களின் பழிச்சொல்லே மிஞ்சும். இந்தச் செயலில் ஒரு சிறப்பையோ, புகழையோ நான் காணவில்லை. எல்லோரும் இகழும் பழிச்சொல் மட்டுமே கிடைக்கும்.”

 “அரக்கர்களின் வேந்தே! இந்த வானரத்தை அனுப்பிய, அகம்பாவத்துடன் புத்தியிழந்து, கொடிய வழியில் செல்லும் அந்த மனிதர்களின் அழிவிற்கு வேண்டிய செயலை விரைவில் செய்வீராக!”

 “தேவேந்திரனின் எதிரியே! இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களிடத்திலும், தானவர்கள் உள்ளிட்ட அனைத்து தைத்யர்களிடத்திலும், அறவழிப்படி அனுசரித்து, இதற்கான முயற்சியைத் தொடங்குவீராக!”

 “அரக்கர்களின் வேந்தே! என்னுடைய வார்த்தைகளை நன்றாக ஆராய்ந்து , விரைவாகவும் சரியாகவும் உறுதியான முடிவை எடுத்து, அந்த அரசகுமாரர்கள் இருவரையும் அழித்து, பெரும் வெற்றியை அடைவீராக!”

 “அரக்கர்களின் மனங்களுக்கு உற்சாகம் அளிப்பவரே! தேவர்களாலும், மற்ற அசுரர்களாலும், பேராற்றலும் உற்சாகமும் மிக்க வேறு எவராலும் வெல்ல முடியாதவரான நீங்கள், ஒரு போர் நடக்க இருப்பதைத் தடுத்து விடுவது சரியல்ல!”

 “உமது அரசவையில், உங்கள் நலம் விரும்புவர்களும், சூரர்களும், நன்மை செய்பவர்களும், சிறந்த குலங்களில் தோன்றியவர்களும், உற்சாகம் மிக்கவர்களும், ஆயுதங்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றவர்களும், சிறந்த போர் வீரர்களுமாகக் கோடிக்கணக்கில் உள்ளார்கள். ஆகவே, அந்த இரு அரச குமாரர்களைப் போரினில் அழித்து, பகைவர்களிடம் உமது பெருமையை நிலைநாட்ட, உமது ஆணையை முடிக்கக்கூடியவர்களாய் உள்ள சேனையின் ஒரு பகுதி இப்பொழுதே புறப்பட்டுச் செல்லட்டும்!”

 பெரும் வீரனும், அரக்கர்களின் தலைவனும், தேவர்களின் எதிரியுமான அரக்க வேந்தன், தன் தம்பியான விபீஷணனின் சிறந்த பேச்சினால் மனம் கவரப்பட்டான்.

 “இது எனது அழிவிற்காக, வானர வடிவம் கொண்ட விஷ்ணுவின் சக்தியேதான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் குரங்கானது, அனைத்திலும் சிறந்த, தாங்க முடியாத, அனைத்து உலகங்களுக்கும் மூல விதையாக உள்ள, தேவாதிதேவரான விஷ்ணுவின் சக்தி கொண்ட அந்த பரஞ்சோதிதானோ? பரப்பிரம்மம் தானோ? “என்று பலவாறாகச் சிந்தித்த அரக்க வேந்தன், இது பற்றி நினைத்து நினைத்து,மிகுந்த சினத்தில் இருந்தான்.

 பேராற்றல் கொண்ட அரக்க வேந்தன், தனக்கு உண்டான கோபத்தை மனதினுள் அடக்கிக் கொண்டவனாய், சிறந்த ஆயுதம் தரித்தவரான விபீஷணனையும், அவரால் சொல்லப்பட்ட வார்த்தைகளையும் மதித்து இவ்விதம் பேசலானான்.

 

 ஐம்பத்திரண்டாவது ஸர்கம் நிறைவு.

  10 அக்டோபர் 2026: கோவையில் டாடாபேடில் ஹரியின் வீட்டில் தங்கியிருக்கும் போது, ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதியினைத் தமிழ்க் கவிதை வடிவில் எழுதலாம் என்...