Wednesday, October 10, 2018

அந்தமான் அழகுகள் தொடர்ச்சி......1

பகுதி மூன்று......

நாள்:27/09/2018

சற்றே {!!!!!) நீ.......ளமான பதிவு! காலை மூன்று மணிக்கே பயணம் துவங்கிவிட்டதாலும், அதிகமான நிகழ்வுகளாலும் இது நேர்ந்துவிட்டது. வாசகர்கள் பொறுத்தருளவும்.




                    செல்போன் சிணுங்கும் முன்பே விழிப்புத்தட்டி விட்டது. மூன்று மணி இன்னும் ஆகவில்லை!  எழுந்து விடலாம், நம்மால் தாமதம் ஆகக்கூடாது என்ற எண்ணத்தால் இருவரும் எழுந்து தயாராக ஆரம்பித்துவிட்டோம்.  அலாரம் அடித்த செல்போனை அணைத்துவிட்டு பக்கத்து ரூமில் இருந்த நண்பரை எழுப்ப ( எழுப்பச்சொல்லி இருந்தார்) அவர் கதவைத்தட்டினேன். எழுபத்தாறு வயது இளைஞர் அவர். தன் மனைவியுடன் வந்திருந்தார். கதவைத்திறந்து வந்த அவர், " நான் ஒரு மணிக்கே எழுந்துவிட்டேன்"  என்று சிரித்துக்கொண்டே சொன்னார். எல்லாம் வயதுக்கோளாறு தான் என்று நானும் என் அறைக்குத்திரும்பினேன்,

                     இன்று செல்ல வேண்டிய இடம் ஹேவ்லாக் தீவு.  கடலில் குளிக்கும் வாய்ப்பும் இருந்ததால், மாற்றுத்துணிகளுடன் தயாராகி ஹோட்டலில் மெயின் ஹாலுக்கு வந்தால், நிறையப்பேர் ஏற்கனவே ஆஜராகியிருந்தனர்.தயாராக குடைகளும் எடுத்துக்கொண்டோம்.  எல்லோரும் கீழிறங்கி வந்து மெயின் ரோட்டை அடைந்தோம்.  காலை ஆறு மணிக்கு தீவுக்குச்செல்ல வேண்டிய கப்பல் புறப்படும் என்பதால் நான்கு மணி சுமாருக்கே நாங்கள் தயாராக இருந்தும், எங்களை அழைத்துச்செல்லும் வேன் இன்னும் வரவில்லை. இந்நேரத்திற்கே கீழ்வானம் வெளுத்திருந்தது!



                    வேனும் காரும் வர அனைவரும் ஏறிக்கொண்டு கப்பல் புறப்படும் இடத்திற்குச்சென்றோம்! அந்த நேரத்திலேயே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரும் தங்கள் அடையாள அட்டையைக்கையில் வைத்திருக்க்ச்சொல்லி, வரிசையில் நிற்க வைத்தார்கள்.  ஒரு வாரத்திற்கு முன்பே டிக்கட் வாங்கியிருக்க வேண்டுமாம். ஒவ்வொருவராக உள்ளே செல்ல, எங்கள் பெயரே அந்த லிஸ்டில் இல்லை! திரு பழனியப்பன் அவர்களும் டென்ஷன் ஆகி, ஏஜண்ட் செல்வத்திடம் கேட்க, அவர் யார் யாரிடமோ பேசி விட்டு, எங்களைத் தனியாக வரச்சொல்லிவிட்டு, அவர்களியெல்லாம் அனுப்பிவிட்டார்.  கேன்சல் ஆன் டிக்கட்டில் வந்திருப்பதால், இரண்டு டிக்கட் ப்ளாக் ஆகிவிட்டதாயும், அடுத்த கப்பலில் செல்லலாம் என்றும் சொல்லி எங்களை ஓரமாக நிற்கவைத்து விட்டார்.

                     எல்லோரும் காரிலும் வேனிலும் வந்திறங்கி கூட்டம் கூட்டமாக உள்ளே செல்ல, திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம்.  செல்வமும் யாரிடமோ பேசிக்கொண்டே இருந்தார். இந்த நேரத்திலும் கலங்காமல் என் மனைவி செய்த ஃபோட்டோ ஷூட் இது!


                 எங்கள் நிலை கண்டு செல்வம் அருகில் இருந்த காரில் சென்று அமரச்சொன்னார்.
                    "எப்படியும் அடுத்த கப்பலில் உங்களை அனுப்பிவிடுவேன், கவலைப்படாதீர்கள்!" என்று நம்பிக்கையூட்டினார். யார் யாரிடமோ போன் பேசிக்கொண்டிருந்தார்,  என் கண்கள் அவரையே பின் தொடர்ந்து கொண்டிருந்தன. என் மனைவி தன் ஃபோனுடன் செட்டில் ஆகிவிட, பல வித குழப்ப எண்ணங்களுடன் என்னால் காரில் அமர்ந்திருக்க முடியவில்லை! காரை விட்டிறங்கி ஃபோனின் காமிராவில் சில படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்.







                           எங்கள் குழுவினர் ஏறிய கப்பல் சென்றுவிட்டிருந்தது. அவர்களை எப்படிச்சந்திப்பது, நாம் எப்பொழுது செல்வோம் என்ற குழப்பங்கள் உள்ளுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்க, ஒரு வழியாக எங்கள் டிரைவர் எங்கள் ஆதார் அட்டைகளை வாங்கிச்சென்றார்.

                           பிறகு பதினைந்து இருபது நிமிடன்களுக்குப்பிறகு எங்களை வரச்சொல்லிக்கூப்பிட்டார்கள்,  யார் மூலமோ ஏற்பாடு செய்து இரண்டு டிக்கட்டுகள் கிடைத்தன.  6.45 க்கு கப்பல் (Ferry)  கிளம்பும் எனச் சொன்ன செல்வம், அங்கு எங்களை வரவேற்க ஆட்கள் இருப்பார்கள் என்றும், எங்கள் குழுவினர்க்கு முன்னதாகவே நாங்கள் சென்று விடுவோம் என்றும், தானும் பின்னால் வருவதாகவும் மேலும் தகவல்கள் சொன்னார்.

                            ஆனால் இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் சீட் உள்ளது என்றும், பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிவிட்டார். இடம் கிடைத்தால் போதும் என்றிருந்த எங்களுக்கு இது ஒரு விஷயமாகத் தெரியவில்லை. செக்கிங் முடித்துக்கொண்டு, எங்கள் கப்பலில் ஏறச் சென்றோம். படகில் ஏறுமுன் க்ளிக்கிய சில காட்சிகள்.  எந்த டென்ஷனிலும்  ஃபோட்டோ எடுக்க மட்டும் தவறுவதில்லை!






  
                      படகில் ஏறியதும் மீண்டும் டிக்கட்டைப்பார்த்து எங்களை ஓரம் கட்டி விட்டார்கள்.  இருவருக்கும் வேறு வேறு வகுப்புகளில் இருக்கை என்பதால் சற்று தாமதம் ஆனது!  மனைவிக்கு R வகுப்பு, எனக்கு E வகுப்பு! முதலாவது AC செய்யப்பட்டிருந்தது. எனக்கு  Economy class.   அங்கு இருந்த நபர் R வகுப்பில் இடமிருந்தால் பிறகு மாற்றித்தருவதாகவும், இப்போது அவரவர் இடத்தில் அமரும்படியும் சொன்னார்.  நான் மனைவியை அங்கு விட்டு விட்டு, கீழ் தளத்தில் இருந்த என்னுடைய வகுப்பில் சென்றமர்ந்தேன். 

                    AC வகுப்பு, ஒரு வரிசையில் வலது புறம் மூவரும் இடது புறம் மூவரும் அமர வசதியும், Economyல் நான்கு நபர்கள் அதேபோல் அமரவும் வசதி செய்யப்பட்டிருந்தது. மனைவிக்கு ஜன்னல் சீட். எனக்கு ஜன்னலுக்குப்பக்கத்து சீட். கப்பலும் 6.45 க்குப்புறப்பட, கீழே வேறொரு குழுவாக வந்தவர்கள் ஒரே ஆட்டம் பாட்டம் தான்.  சிப்பந்திகளும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. நான் மனைவியை அழைத்து, ( Airtell அதிசயமாக வேலை செய்தது) நலம் விசாரித்தேன்.  பத்து நிமிடங்கள் கழித்து மனைவியை மீண்டும் அழைக்க, அவரே என்னைத்தேடி கீழே வந்துவிட்டார்.  மேலே இடம் காலியாக இருப்பதாகவும், என்னையும் அங்கேயே வரச்சொல்லி அழைத்துச்சென்றுவிட்டார்.  அங்கு அமர்ந்திருந்த நபர்களை எழுப்பிவிட்டு நாங்கள் அமர்ந்துகொண்டோம்.  யாரும் எதுவும் சொல்லவில்லை! பிறகு நடுத்தளத்தில் இருந்த கேண்டீனுக்குச் சென்று பப்ஸும் காப்பியும் வாங்கி வந்து சாப்பிட்டோம். கீழே நடமாடிய பெண்கள் மேல் தளத்திலும் வந்து ஆடிக்கொண்டிருந்தனர்.  அவர்களுக்கு ஏற்றார்ப்போல், அங்கிருந்த டிவியுலும் தமிழ் டப்பாங்குத்துப்பாடல்கள் ஒளிபரப்பாயின.  

            பயணத்தின் சில காட்சிகள்:
















              















                                 இந்த ஆட்டம் பாட்டத்தில் அருகில் இருந்த வெளிநாட்டு யுவதி தலையில் அடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். குத்தாட்டத்தில் தமிழ் நாட்டுப்பெண்கள் தூள் பரத்திக்கொண்டிருந்தார்கள்.  பின் ஒருவாரு ஓய்ந்து போய் கலைந்து சென்றார்கள். இரண்டு மணி நேரப்பயணம் நிறைவுறும் நேரம் வந்தது! மற்றவர்களை எவ்வாறு கண்டு பிடிப்பது என்ற கவலை மீண்டும் தலை தூக்கியது. செல்வம் அந்தப்பகுதியின் ஏஜண்ட் அவர்களின் ஃபோன் நம்பர் கொடுத்திருந்தார்.  அனைவரும் தமிழ் பேசியதால், நம் ஊரில் இருந்த உணர்வே மேலோங்கி இருந்தது.  

                              வெளியே வந்ததும் வல்து பக்கம் திரும்பி இரண்டாவது கட்டிடத்தில் எல்லோரும் இருப்பார்கள், அவர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்,  நானும் வ்ந்துவிடுவேன் என்று செல்வம் சொல்லி இருந்தார்.  எனவே கீழே இறங்கியதும், அந்த சூழலை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்.  சில காட்சிகள்!






















                                  ஹேவ்லாக் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற கதவைத்தாண்டி சென்றால் . விமான நிலைய வருகைப்பகுதியில் இருப்பது போல் பலர் தங்கள் கையில் பயணிகளின் பெயரைத்தாங்கிய அட்டைகளுடன் நின்றிருந்தார்கள்.  நாங்கள் பார்க்க வேண்டிய நபர் பெயர் ரஹம்த்துல்லா! அங்கு இருக்கும் வேஷ்டி கட்டிய கைட் என்று ஏற்கனவே செல்வம் சொல்லியிருந்ததால், ஒருவரை நெருங்கி விசாரிக்கவும், அவர் என் பெயர் தாங்கி நின்று கொண்டிருக்கும் நபரிடம் அழைத்துச்சென்றுவிட்டார். அதற்குள் ரஹமத்துல்லாவே அங்கு வந்துவிட்டார்.  எங்களை வரவேற்ற அவர், இன்னும் உங்கள் நண்பர்கள் வரவில்லை, நீங்கள் காலை உணவு அருந்திகிறீர்களா? அல்லது அவர்களுக்கக காத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். எங்களுக்கு ஆச்சரியம்.

                      " எங்களுக்கு முன்பே கிளம்பியவர்கள் இன்னும் வரவில்லையா?" என்று கேட்க , நீங்கள் வந்தது தனியார் கப்பல், எனவே வேகமாக வந்துவிட்டது, அவர்களுக்கு நான்கு மணி நேரப்பயணம் என்றார். எங்களை அருகில் இருந்த ஒரு கட்டிடத்தில் அமரச்சொன்னார்.  அதற்குள் செல்வமும் வந்துவிட, எங்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு, மற்றவர்கள் வந்ததும் அழைப்பதாகச் சொல்லிச்சென்றுவிட்டார்.

                           அந்தத்தீவில் ஸ்கூபா டைவிங்க் பிரசித்தம் போல.  ஒரு நபருக்கு 3500 ரூபாய்.  நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமோகமாக விற்பனை நடந்துகொண்டிருந்தது. அந்த இடத்தில் எடுத்த சில காட்சிகள்.

பின்னிருப்பது வெறும் போஸ்டர்தான்!




              பத்தரை மணி சுமாருக்கு செல்வம் வந்து அவர்கள் அனைவரும் வந்து விட்டனர், உணவகத்தில் உள்ளார்கள், நீங்களும் செல்லுங்கள் என்று அழைத்தார்.  ஏற்கனவே சொல்லியிருந்த அந்த ஹோட்டலை நோக்கிச்சென்றோம்.  எல்லோரும் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்.  எங்களைக்கண்டதும் அவர்கள் , :நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?" எனக்கேட்க, நாங்கள் எங்கள் பிராதங்களை அவிழ்த்து விட, அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்/.  \

                              ஏனென்றால், அவர்கள் பயண நேரம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம்.  கப்பலில் காற்றே இல்லாமல் ஒரே புழுக்கமாம். ரொம்பவும் நொந்து போய் வந்திருந்தார்கள்.  ஹோட்டலிலும், பூரியும், சோளாபூரியும் மட்டுமே இருந்தது. எல்லோருமே ஏக கடுப்பில் இருந்தார்கள்.  இரண்டே ஊழியர்கள் தான் இருந்தார்கள்.  பூரியும் சோளாபூரியும் மாறி மாறி ஆர்டர் கொடுத்து ஒருவழியாய் சாப்பிட்டு முடித்தோம்.

                  ஹோட்டலில் சில காட்சிகள்!





                                           அடுத்த இடம் ராதாநகர் கடற்கரை.  அங்குதான் குளியல்.. யாரும் ஸ்கூபா டைவிங்கிற்கு இல்லாததால் அனைவரும் ஒரு பஸ்ஸில் ஏறி ராதாநகர் நோக்கிச்சென்றோம்.  நல்ல வெயில்.  ஏசி இருந்தாலும் அது வேலை செய்யவில்லை. சித்தைரை மாதம் போல் நல்ல புழுக்கம்.  வண்டி ஓட ஆரம்பித்ததும் சற்றூ காற்று வந்தது.முப்பது நமிடன்களுக்கு மேல் நீடித்த பயணம், நிறைவடைந்த போது கடற்கரையை அடைந்திருந்தோம்.








                                        பெரிய கடற்கறை ஒன்றுமில்லை, சிறிய அலைகளுடன் கடல் அழைத்துக்கொண்டிருந்தது, சுமாரான கூட்டம்.  எங்கள் குழுவில் குளிக்க வராதவர் வசம் உடைமைகளை ஒப்படைத்துவிட்டு கடலில் இறங்கினோம். அவ்வப்பொழுது பெரிய அலை வந்தபோது சற்று பயமாய் இருந்தது.  அலை வரும்பொழுது சற்றே எகிறிக்குத்து சமாளித்தோம்.  இந்த அலைக்கே இவ்வளவு அடிபட்டால், சுனாமி அலைகளில் மாட்டியவர்களின் நிலையை நினைக்கும்போதே பகீர் என்றது. பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சமாளிக்க இயலவில்லை.  

                                    நல்ல நீரில் குளித்து உடை மாற்ற தனி இடம் இருந்தது.  தலைக்கு பத்து ரூபாய்.  கழிப்பறையும் குளியலறையும் இணைந்திருந்தது. உடை மாற்றி முடிக்க, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.  நாங்கள் முன்னே சென்று மற்றவருக்காக காத்திருந்தோம். அப்போது கடற்கரையில் எடுத்த சில காட்சிகள்.


























                       பின்  பேருந்தில் ஏற வரும் வழியில், அந்தமான் இளநீர் குடித்துப்பார்க்க எண்ணி, இளநீர் குடிக்க, ஒரே உப்பு. கஷ்டத்துடன் காசைக்கொடுத்துவிட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.  நாளை எந்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என ஒருவர் கேட்க, செல்வம் (கைட்) இரண்டு மணிக்கு என்று சொல்ல மனம் கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற மன தைரியமும் இருந்தது. இந்தபொழுதை அனுபவித்துக்கொலள்ளலாம்,  நாளைப்பொழுதை பிறகு பார்த்துகொள்ளலாம் என தைரியம் வந்துவிட்டது.  முன்னமே பஸ் தயார் நிலையில் இருந்ததால் உள்ளே குளுமையாக இருந்தது. வழியெங்கும் பசுமை தான்.  மொபைலில் பிடித்த சில காட்சிகள்.



















மூன்று மணிக்கு திரும்ப வேண்டிய கப்பல் புறப்பட்டுவிடும் என்பதால், நேராக ஹோட்டலுக்கு(அதே ஹோட்டல் தான்) உணவருந்தச் சென்றோம்.  காலையிலேயே மதியத்துக்கான உணவை சொல்லியிருந்ததால் அவ்வளவு குழப்பம் இல்லை.  நாங்கள் சைவம் தனியாக அமர்ந்து கொண்டுவிட்டோம். காலை மடக்கி உட்கார்ந்துகொண்டு உணவருந்த வேண்டும். சிறிய மேசை.

                        ஒரு வழியாய் காலை மடக்கி, குறுக்கி அமர்ந்தாகி விட்டது. சைவத்தட்டு ( அதாங்க,  veg thaali) கிடைக்கப்பெற, நாங்கள் சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொண்டு (அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாததால்) உணவை முடித்துக்கொண்டோம்.



                   மூன்று மணிக்குத்திரும்பிச் செல்லும் கப்பல் (கப்பல் மாதிரி) புறப்படும் என்பதால் எல்லோரும் அவசரமாக கப்பலில் ஏறினோம்.  மழை வேறு தூற ஆரம்பித்திருந்தது. படியிறங்கி உள்ளே சென்றால், அது கிடங்கு மாதிரி இருந்தது.  ஒரே புழுக்கம்.  ஆளுக்கு கிடைத்த நாற்காலியில் அமர்ந்துகொண்டோம்.  நான்கு ஐந்து பழைய திருவள்ளுவர் டிரான்ஸ்போர்ட் பஸ்களை இணைத்த மாதிரி இருந்தது.  சில இடங்களில் உயரமான பெடஸ்டல் ஃபேன்கள் வைக்கப்பட்டிருந்தன. காற்றாடிக்கு நேரே எல்லோரும் இடம் பிடிக்க முயன்றனர்.  சில இடங்களில் ஜன்னல் திறக்கப்பட்டிருந்ததால், அதற்கு நேராக முகம் வைத்து, சிலர் காற்று வாங்கினர். நானும் அங்கும் இங்கும் அலைந்து ஜன்னலுக்கு நேராக ஒரு இடம் பிடித்தேன்.  மனைவி ஒரு காத்தாடிக்கு அருகில் இடம் பிடித்தார்.

                    டாய்லட் மகா கேவலமாக இருந்தது.  நம்மூர் பாஸஞ்சர் ரயிலின் டாய்லட்டை விட மகா மோசம்.  சற்று நேரத்தில் கீழ் தளமே காலியாக அனைவரும் மேல் தளத்திற்குச் சென்றுவிட்டிருந்தனர்.  எனக்கு நான் இருந்த இடமே பிடித்திருக்க, மனைவி மட்டும் மேலே சென்றார்.  சிறிது நேரத்தில் கீழே வந்து என்னையும் அழைக்க, நடு தளம் தாண்டி, மேலே செல்ல, (டைட்டானிக் கப்பலில் இருந்தது போன்ற படிகள், கதவுகள்) ஆஹா,  மேலே திறந்தவெளியில், கப்பலின் அத்தனை பேரும் அங்கேதான் இருந்தனர்.  நடுவில்  ஒரு இடத்தில் மட்டும் பந்தல் போல், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அங்கும் இங்குமாய் ஓட்டைகளுடன் இருக்க, நின்றவாரும், அமர்ந்தவாரும், படுத்தவாரும், கடலை ரசித்தவாரும், அங்கும் இங்கும் நடந்தவாரும் , எல்லோரும் செட்டில் ஆகி விட, நாங்களும் இடம் பிடித்து தரையில் அமர்ந்துவிட்டோம். "நிலா அது வானத்து மேலே" பாடலை கற்பனையில் பார்த்த கப்பலின் மேல் தளத்தில் அழகான பயணம்.  கிட்டத்தட்ட நான்கு மணி நேரப்பயணம். பலர் படுத்து உறங்கத்தொடங்கிவிட்டனர். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.  காமிராவில் பதிவு செய்த சில காட்சிகள்.







மிதந்து வரும் வேறொரு கப்பல்

மேல்தளத்தின் முனையில்.......












வைரத்தை வாரி இறைக்கும் சூரியன்

தூரத்தே தெரிந்த கப்பல்



குழு நண்பர்கள்





கடலில் பயணித்த போது, ஒரு சூரிய அஸ்தமனம்.














                                  கேண்டீனில்  (நடு தளத்தில்) அமோக விற்பனை.  நாங்கள் காபி மட்டும் அருந்தினோம்.  ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி விட்டதால், விளக்குகள் பளீரென எரிந்தன.  நேரம் கடத்த, குழுவின் பெண்கள் பாட்டுப்பாடி பொழுதைக்கழித்தனர்.  ஒரு வழியாய், ஏழு மணி சுமாருக்கு போர்ட்ப்ளேயர் சென்றடைந்தோம்.  மீண்டும் வேன் ஏறி , மீண்டும் கற்பகம் ஹோட்டல் சென்று, கிடைத்தை உண்டு, தங்கும் விடுதி திரும்பினோம். 

                                 காலையில் இரண்டு மணிக்கு எழ வேண்டும்.  தங்கும் விடுதியும் நாளை முதல் வேறிடம் என்பதால், எல்லாவற்றையும் பேக் செய்து விட்டுப்படுக்க வேண்டியிருந்தது.  ஃபோனில் இரண்டு மணிக்கு அலாரம் செட் செய்ய, இன்னும் நான்கு மணி நேர உறக்கம் உள்ளது என அது சொன்னது. நம் மேல் ஃபோனுக்கு இருக்கும் அக்கறை வியப்பேற்படுத்தியது. வாழ்க ஆண்ட்ராய்ட்!  அறை முழுவதும்கடலில் நனைந்த துணிகளையும் இங்கும் அங்குமாய் தொங்க விட்டு காய வைக்க வேண்டியிருந்தது.  

                               நீண்ட பதிவிற்கு மீண்டும் மன்னிப்புக்கோரி, இன்றைய நிகழ்ச்சிகளுடன் விடைபெறுகிறேன்.  நாளக்காலை இரண்டு மணிக்குச் சந்திப்போம். குட் நைட்!



2 comments:

Unknown said...

You have enjoyed the trip step by step and also made ur friends and relatives to enjoy. ..Yes Sridharan.. I enjoyed for second time.. We had visited just before Tsunami visited .. .

Sridharan Balaraman said...

Thanks a lot Sir!

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...