ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - சுந்தரகாண்டம்.
பதினைந்தாவது
ஸர்கம்.
அந்த அசோக மரத்தின் மீதமர்ந்து கொண்டிருந்த ஸ்ரீஅனுமன், அந்த வனம் முழுவதையும்
தன் பார்வையால் துழாவி, சீதை இருக்குமிடத்தைக் காண, அந்தப் பகுதியை, கவனமாக முழுமையாகப்
பார்த்தார்.
அந்தப் பகுதி
முழுவதும் கல்ப மரங்களாலும் கொடிகளாலும் நிரம்பி, அழகுபடுத்தப்பட்டு, சுகமான நறுமணத்தையும்,
சுவையான உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
பலவிதமான விலங்குகளும்,
பறவைகளும் நிரம்பி, இந்திரனின் (நந்தன வனம்) வனம் போல விரிந்திருந்தது. மாளிகைகளும் மண்டபங்களும் நிறைந்திருந்தன. அங்கு குயில்களின் ஓசை கேட்ட வண்ணம் இருந்தது.
பொன்னிறமான அல்லிமலர்களும்,
தாமரை மலர்களும் நிரம்பிய குளங்கள் இருந்தன.
அவற்றைச் சுற்றி அமர்வதற்கான இருக்கைகளும், விரிப்புகளும் இருந்தன. பல தங்கும் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.
அனைத்துப் பருவங்களிலும்
பூத்து, கனிகளைத் தரும் மரங்கள் அங்கு நிரம்பியிருந்தன. அசோக மரத்தின் மலர்ந்த மலர்கள், காலை நேர சூரிய
உதயத்தைப் போல, அந்த இடத்தை ஒளிரச் செய்து கொண்டிருந்தன.
அசோகமரத்தின்
மீதிருந்து, ஒளிர்ந்துகொண்டிருக்கும் அந்த வனத்தை ஸ்ரீஅனுமன் பார்த்துக்கொண்டிருந்தார். பறவைகள் இங்கும் அங்கும் பறந்ததால், அங்கிருந்த
மரங்களின் கிளைகளும், இலைகளும் முறிந்து கீழே விழுந்துகொண்டிருந்தன.
மரங்களில் மலர்ந்திருந்த
பலவகையான பூச்செண்டுகளாலும், நுனிமுதல் வேர் வரை பூக்களால் நிரம்பி, துன்பத்தைப்போக்கிக்கொண்டிருந்த
அசோக மரங்களாலும், மலர்களின் கனம் தாங்காமல் வளைந்து, தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும்
செண்பகமரங்களாலும், அழகிய மலர்களைக்கொண்டிருக்கும் பலாச மரங்களாலும், அந்தப் பகுதியே
ஒளி மிகுந்து அழகாக இருந்தது.
பூநாக மரங்களும்,
வெண்ணிற சண்பக மலர்கள் பூக்கும் மரங்களும், இது போல் பலவிதமான நிறங்களில் பூத்திருக்கும்
மலர்களைக் கொண்டிருந்த மரங்களும், அகன்ற கெட்டியான வேர்ப்பகுதிகளைக் கொண்டிருந்தன.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான
அசோக மரங்களில், சில பொன்னிறமாக ஒளிவீசிக்கொண்டும், சில நெருப்புப் போல ஜ்வலித்துக்கொண்டும்
இருந்தன. சில மரங்கள் நீல நிறத்திலும், சில
மரங்கள் கரிய நிறத்திலும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.
நந்தனனுடைய தேவலோகத்துத்
தோட்டத்தைப் போன்று மகிழ்ச்சி தரக் கூடியதாகவும், குபேரனுடைய சைத்ரரதம் என்னும் தோட்டத்தைப்
போல அதிசயம் மிக்கதாகவும், இவ்விரண்டையும் விட கற்பனைக்கெட்ட முடியாத அழகு பெற்று அந்த
அசோகவனம் விளங்கியது.
அந்த வனத்தில்
நிரம்பியிருந்த பூக்கள் வண்ணமயமான நட்சத்திரங்கள் போல ஒளிர, அது இரண்டாவது ஆகாயமோ என்று
நினைக்கும் வண்ணம் இருந்தது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான
மலர்கள், அந்த வனமானது, விலையுயர்ந்த கற்கள் மின்னும் ஐந்தாவது கடலோ என்ற எண்ணத்தையும்
ஏற்படுத்தியது. எல்லாப் பருவங்களிலும் கனிகளைத்
தரும் நறுமணம் மிக்க மரங்களால் நிறைந்த அந்த வனமானது, பலவிதமான விலங்குகள், பறவைகளைத்
தன்னகத்தே கொண்டு, அழகுற விளங்கியது. அவைகளின்
ஒலியானது மிகவும் இன்பம் பயப்பதாக இருந்தது.
அங்கு விளங்கிய நறுமணம், தூய்மையானதாகவும், மனதிற்கினியதாகவும் இருந்தது. கந்தமாதன மலையைப் போல எங்கும் நறுமணம் வீசியபடி
இருந்தது.
அந்த அசோகவனத்தில்
சிறிது தூரத்தில், ஸ்ரீஅனுமன், சைத்யப்ராசாதம் என்னும் ஒரு உயர்ந்த கோயிலைப் பார்த்தார். அது ஆயிரக்கணக்கான தூண்களைக் கொண்டிருந்தது. கைலாய மலையைப் போல வெண்மையாக இருந்தது. வைரங்களால் இழைக்கப்பட்ட படிகளையும் தங்கத்தால்
வேயப்பட்ட தளங்களையும் கொண்டிருந்தது. மிகவும்
ஒளி வீசிக் கொண்டு விண்ணை முட்டும் உயரத்துடன் இருந்தது.
அந்தக் கோயிலைப்
பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஅனுமன் கண்களில் ஒரு பெண் தென்பட்டாள். அவள் கிழிந்த துணிகளுடன், அரக்கியர்களால் சூழப்பட்டு
இருந்தாள். உணவு உட்கொள்ளாததால், உடல் மெலிந்தும்,
அடிக்கடி விம்மியபடியும் இருந்தாள். அதே சமயம், அந்தப் பெண், சுக்லபட்சத்துப் பிறைச்சந்திரன்
போல களங்கமின்றிக் காணப்பட்டாள்.
புகை நடுவே தோன்றும்
ஒளிமயமான தீநாக்குகள் போல, அந்த உருவம் மெதுவாகக் கண்களுக்குப் புலப்பட்டது.
சுருக்கம் நிறைந்த
ஒரு மஞ்சள் நிறப் பட்டாடையுடுத்தியிருந்த அந்தப் பெண், எந்தவித அலங்காரமுமின்றி, இளைத்துக்
காணப்பட்டதால், தாமரை மலர்கள் அற்ற, சேறு நிறைந்த தடாகம் போல களையிழந்து காணப்பட்டாள்.
தபஸ்வினி போன்று
தோற்றமளித்த அந்தப் பெண், துயரம் மிகுந்து, களையிழந்து, செவ்வாய் கிரகத்தால் அழுத்தப்பட்ட
ரோகிணி நட்சத்திரம் போல மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்.
உண்ணாநோன்பினால் உடல் மெலிந்திருந்த அந்தப் பெண்ணின்
முகத்தில் கண்ணீர் பெருக்கெடுத்த வண்ணம் இருந்தது. துயரத்தாலும், கவலையாலும் பரிதாபமாகக் காட்சியளித்த
அந்தப் பெண் இடைவிடாத துயரத்தில் மூழ்கியிருந்தாள்.
அன்பு காட்டுபவர்
யாரும் அவளைச் சுற்றி இல்லாமல், அரக்கியரே அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர். தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்த பெண் மான் ஒன்று
ஓநாய்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டது போல அவளது நிலை இருந்தது.
கருநாகம் போலப்
பின்புறம் நிலம் வரை நீண்டிருந்த ஒற்றைப் பின்னலைக் கொண்டிருந்த அந்தப் பெண், மழைக்காலத்தின்
வனப்பகுதி இருண்டு கிடப்பது போல விளங்கினாள்.
சுகமான வாழ்க்கைக்குப்
பழக்கப்பட்டிருந்த அந்தப் பெண், இது போன்ற இன்னல்களுக்குப் பழகியவள் போலத் தோன்றவில்லை. அகன்ற விழிகளைக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மெலிந்த,
துயரமான நிலையைக் கண்ட ஸ்ரீஅனுமன், இந்தப் பெண் சீதையாகத்தான் இருக்க முடியும் என்ற
முடிவுக்கு வந்தார்.
இந்தப் பெண்ணானவள்,
விருப்பப்படி உருவம் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்த அரக்கனால் கவரப்பட்ட பொழுது, எவ்விதம்
காணப்பட்டாளோ, அவ்விதமே காணப்படுகிறாள்.
சீதையின் முகமானது
முழுநிலவினைப் போல இருந்தது. அழகிய புருவங்களையும்,
உருண்டு திரண்ட மார்பகங்களையும் கொண்டிருந்தாள்.
அவளது உடலின் ஒளியால், எல்லாத் திசைகளின் இருளும் விரட்டப்பட்டன.
அவளது முடி மிகவும்
கருமையாக இருந்தது. உதடுகள் கோவைப்பழம் போலச்
சிவந்திருந்தன. அவளது இடையானது சிறுத்து அழகுடன்
விளங்கியது.
அவளது தாமரை
மலர்களையொத்த கண்களைப் பார்க்கும்போது, அவள், மன்மதனின் காதலியான ரதிதேவியை ஒத்திருந்தாள். பூமி முழுவதற்கும் ஏற்ற முழுநிலவின் ஒளியழகுடன்
அவள் இருந்தாள்.
தன் நியமங்களைப்
பேணும் பெண் முனிவரைப் போல அவள் தரையில் வீற்றிருந்தாள். அவள் இயல்பாகவே அச்சத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்ததைப்
பார்க்கும் போது, பெண் நாகம் போலத் தோற்றமளித்தாள்.
அதிக துயரத்தில்
இருந்ததால், அந்தப் பெண் குன்றிய ஒளியுடன், புகை நடுவே தோன்றும் நெருப்புக் கீற்றுப்
போல மங்கலான தோற்றத்தைக் கொடுத்தாள்.
அவளது நிலையானது,
நிச்சயமற்ற நினைவுகள் போலவும், கை நழுவிய செல்வம் போலவும், உடைந்துபோன நம்பிக்கை போலவும்,
நிறைவேறாத எதிர்ப்பார்ப்புகள் போலவும், பாழ்பட்ட வெற்றி போலவும், தூய்மையிழந்த எண்ணங்கள்
போலவும், பொய்யான புகழ் போலவும் இருந்தது.
பொறியில் சிக்கிக்கொண்ட இளம் மானின் துயரம் மிகுந்த
கண்களைப் போல, கலக்கம் கொண்ட கண்களையுடைய அவள், தவிப்புடன் இங்குமங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கறுத்தும், வளைந்தும்
காணப்பட்ட புருவங்களையுடைய அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்ததால், அவளது
முகமானது களையிழந்து காணப்பட்டது. அடிக்கடி பெருமூச்சு விட்ட வண்ணம் இருந்தாள் அந்தப்
பெண்.
அவளது உடலெங்கும்
புழுதி படிந்து, களையற்றிருந்தாள். உயரிய ஒப்பனைகளுக்கு
உரிமையுள்ள பெண்ணாக அவள் இருந்தபோதிலும், இப்போது எந்தவித ஒப்பனையுமின்றி இருந்ததைப்
பார்க்கையில், கரிய மேகங்களால் சூழப்பட்ட நிலவு ஒளியற்று காணப்படுவதைப் போல இருந்தாள்.
முறையாகப் பயிற்சி
செய்யப்படாத கல்வியானது, தெளிவான பொருளை உணர்த்தாதது போல, ஸ்ரீஅனுமனுக்கு அவளது தெளிவற்ற
நிலையால் சந்தேகம் ஏற்பட்டது.
நல்ல ஆடையுடுத்தி,
ஒப்பனையேதுமில்லாமல், களையற்ற உடலுடன் சீதையிருந்ததைப் பார்த்த ஸ்ரீஅனுமனுக்கு, அவள்,
இலக்கணத்தையும், தன் பொருளையும் மறந்த சொல் போல அடையாளம் காணப்பட முடியாதவளாக இருந்தாள். அவர் மிகவும் சிரமத்துடனே சீதையை அடையாளம் கண்டு
கொண்டார்.
அகன்ற விழிகளையுடைய
அரச குமாரியான சீதையை அடையாளம் காண்பதற்கு, ஸ்ரீஅனுமன் பலவேறு காரணங்களை அனுமானித்தார்.
சீதை அபகரிக்கப்பட்ட
பொழுது அவள் அணிந்திருந்ததாக ஸ்ரீராமன் விவரித்தபடியே, இந்தப் பெண்ணின் ஆபரணங்கள் உள்ளன. காதுகளில் குண்டலங்களும், ஸ்வதம்ஷ்ட்ரம் (நாயின்
பற்கள் போன்ற வடிவம்) என்னும் ஆபரணங்களும் இருந்தன. கைகளில் முத்து, பவழங்கள் பதிக்கப்பட்ட கங்கணங்கள்
இருந்தன.
நெடு நாட்கள்
அணிந்திருந்ததால், சில நகைகள் கறுத்திருந்தன.
அவை அவளின் உடலில் வடுக்களை ஏற்படுத்தியிருந்தன. ஸ்ரீராமன் சொன்னபடியே நகைகள் உள்ளதாலும், சீதையால்
கீழே தவறவிடப்பட்ட நகைகளை அவள் அணிந்திருக்கவில்லையாதலாலும் இவள் சீதையென்பதில் சந்தேகம்
ஏதுமில்லை என்று அவர் எண்ணினார்.
“மலை மீது வீசப்பட்ட
தங்க நிற மஞ்சள் பட்டாடையை வானரர்கள் பார்த்தனர்.
தரையில் வீசியெறியப்பட்ட, ஒலியுண்டாக்கக்கூடிய, மிக விலையுயர்ந்த, நகைகளையும்
அவர்கள் பார்த்தனர். அவைகள் யாவும் இவரால்
வீசப்பட்டவையாகவே இருக்க முடியும்.”
“நெடுநாட்கள்
அணிந்திருந்ததால் அவரது ஆடை பழையதாகிவிட்டிருந்தாலும், அதனுடைய மஞ்சள் நிறம் மங்கிவிடவில்லை. இந்த ஆடையின் ஒளியானது வீசியெறியப்பட்ட துணியைப்
போலவே ஒளிர்கிறது.”
“ஸ்ரீராமனின்
மனங்கவர்ந்த, பொன்னிற மேனியையுடைய பேரரசியான சீதை, அவரின் கண்களை விட்டு நீங்கினாலும்,
மனதை விட்டு நீங்காமல் இருக்கிறார்.”
“ஸ்ரீராமன்,
கருணை, இரக்கம், துயரம், அன்பு ஆகிய நான்கு வகையான உணர்வுகளால் பரிதவிக்கக் காரணமான
சீதை, இந்தப் பெண்ணாகத்தான் இருக்க முடியும்.”
“ஒரு பெண் அபகரிக்கப்பட்டுக்
காணாமல் போனதால் கருணையும், அவள் தம்மிடம் அடைக்கலமாக இருந்த பெண் என்பதால் இரக்கமும்,
அவள் தன் மனைவியே என்பதால் துயரமும், அந்த அன்பு மனைவி பிரிந்ததால், காதல் விரகமும்
ஸ்ரீராமனுக்கு ஏற்பட்டன.”
“ஸ்ரீராமனின்
சீர்மிகுந்த உடலமைப்பைப் போலவே இந்தப் பெண்ணின் உடலமைப்பும் உள்ளது. ஆகவே, கரிய நிற விழிகளைக் கொண்டிருக்கும் இந்தப்
பெண் தான் ஸ்ரீராமனின் மனைவியான சீதையாக இருக்க முடியும்.”
“இந்தத் தேவியின்
நினைவெல்லாம் ஸ்ரீராமனிடமும், ஸ்ரீராமனின் நினைவெல்லாம் இந்தத் தேவியிடமும் நிலைகொண்டிருப்பதால்தான்
இருவரும் உயிர் தரித்துள்ளனர். அவர்கள் கண
நேரமே உயிர் தரித்திருந்தாலும், அதற்கு, இதுவே காரணமாகும்.”
“மனைவியைப் பிரிந்த
பின்னும் ஸ்ரீராமன், துயரத்தால் தன்னை இழந்துவிடாமல், தன் உயிரைத் தரித்திருப்பது மிகவும்
அரிய செயலாகும்.”
இவ்விதம் அங்கு
சீதையைக் கண்டதும் ஸ்ரீஅனுமன் பலவாறாக எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டார். மனமெங்கும் ஸ்ரீராமனை நினைந்து, சீதை போன்ற சிறந்த
பெண்மணியை மனைவியாக அவர் பெற்றதற்கு அவரைப் போற்றத் தொடங்கினார்.
பதினைந்தாவது
ஸர்கம் நிறைவு.


2 comments:
மலர்கள், மரங்கள் பற்றிய வர்ணனை அற்புதம்...
சீதா தேவின் தோற்றம் கவலைக்குரியது..
அற்புதமான மொழிபெயர்ப்பு..
ஜெய் ஸ்ரீராம்..!!!🙏
ஜெய் ஸ்ரீஹரியின்..!!!🙏
மிக்க நன்றி அரவிந்த்!
Post a Comment