Thursday, August 8, 2019

ஆடிக் காற்று!
வழக்கத்தை விட இந்த மாதம் ஆடிக்காற்று இங்கு பிய்த்து உதறுகிறது! பக்கத்து பிள்ளையார் கோயில் அரச மரமும் அதனுடன் பின்னிய வேம்பும் இந்தக் காற்றில் சலசலத்துத்தான் விட்டன! வகுப்பில் டீச்சர் சைலன்ஸ் என்றதும் அடங்கி மீண்டும் எழும் சலசலப்பாய் விட்டு விட்டு ரீங்காரமாய், இல்லை இல்லை, ஹூங்காரமாய் சத்தமிட்டு அவை பேயாட்டம் ஆடுகின்றன! எல்லா இலைகளும் ஆடி ஆடி, ஒருவித களைப்புடனேயே இருக்கின்றன! சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சமுத்திரத்தின் அலைகளாய் இந்த ஆடிக்காற்று அடித்துக்கொண்டே இருக்கிறது! உரைக்காத வெயிலும், அவ்வப்பொழுது விழும் சாரலும் ஆடிக்காற்றின் இலவச இணைப்புகள்! இந்த ஆடிக்காற்றை இதை விட அனுபவித்த சுகமும் உண்டு! நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் , எங்கள் ஊரின் (பரமத்தி வேலூர்) காவிரி, ஆடியில் தரும் இன்பமே அலாதி தான்! காவிரி்ப் பாலத்தின் இருபுறமும் சரிந்து இறங்கும் கருங்கல் படிக்கட்டுக்களில் இறங்கும்போதே , இதோ உன்னைத் தூக்கிச்சென்று விடுவேன் என அடிக்கும் காற்று! மீறி இறங்கி, அந்த உடைந்த பிள்ளையார் கோயிலின் சிதறிக்கிடக்கும் துண்டங்களில் அமர்ந்துவிட வேண்டும்! தன்னைத் தடுக்கும் பாலத்தின் மீது பெருங்கோபமாய் அந்தக் காற்றின் சப்தம் அந்தப்பிரதேசத்தையே அதிர வைக்கும்! இறுக்கிப்பிடித்து அமர்ந்திருக்கையில், படி தொட்டு ஓடும் ஆற்றின் நீர் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, உடைந்து கிடக்கும் படித்துறையில் மோதி மேலே பன்னீராய்த் தூவ, நனைந்த உடையும் மனமும் குளிருக்கு உத்திரவாதம்! விட்டுச்செல்ல மனமின்றி, இருள் வருமுன் வீட்டிற்குத்திரும்புவோம்! காவிரியின் வறட்சியும் சாலைகளின் விரிவாக்கமும் அந்த சூழலையே மாற்றிவிட்டன! இன்று அந்த இளமையும் தொலைந்து, காவிரியும் தொலைந்து , வேற்றூரில் பக்கத்து கோயில் அரச மரமும், காற்றும் , சலசலப்பும் மட்டுமே மிச்சம்! எங்கோ பெய்யும் கனமழையின் அறிவிப்பை மட்டுமே செய்கிறது இன்று இங்கே இந்த ஆடிக்காற்று! யாரோ பாடியது போல, வெறுங் காத்துதான் வருது, சத்தத்துடன்!

No comments:

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...