Friday, March 5, 2010



அப்பாவின் இந்த படத்தை நம்முடைய குடும்ப வலைதளத்தில் upload செய்ததற்கு ராமாவின் கமெண்ட் மீண்டும் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. கோமள விலாசில் ஒரு வரலக்ஷ்மி விரதத்தின் போது அப்பா தான் உயிரான இந்த தம்பூராவை வைத்துக்கொண்டு பாடிய போது வேலூர் சக்தி ஸ்டூடியோ மூலம் எடுக்கப்பட்ட போட்டோ,. இந்த கருப்பு வெள்ளை படம் சொல்லும் கதைகள் எத்தனையோ.. அப்பாவின் முகத்தில் அந்த பரவசம்.. பின்னணியில் அலங்கரிக்கப்பட்ட மண்டபம். சுவற்றில் அப்பா தெய்வமாக மதித்து வந்த வேங்கடசுப்பையர் மாமா மற்றும் மாமியின் போட்டோ. திருக்கோவிலூரில் இவர்கள் வீட்டில் தங்கி இருந்து தான் அப்பா சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். அப்பாவின் வளர்ச்சிக்கு விதை இங்குதான் ஊற்றப்பட்டது. நான் கூட இவர்கள் வீட்டிற்கு சென்றது புகையாக நினைவில் உள்ளது.

வரலக்ஷ்மி பூஜை ஒரு கோலாகலமாகவே நம் வீட்டில் கொண்டாடப்பட்டது. வாழை மரம் வருவிப்பதிலிருந்து (பந்தல் போடும் கணபதி மூலமாக பெரும்பாலும் கிடைக்கும்), மண்டபம் அலங்கரிப்பது வரை ... இதில் நிறைய நிகழ்வுகள் அடங்கி உள்ளன. சுவற்றில் அப்பாவின் skethcukku என்னுடைய சிறிய painting திறமை(?) யால் கலர் கொடுப்பது தவறாமல் நடக்கும். தேங்காயில் முகம் வரைவதிலிரிந்து (பழைய சைக்கிள் போக்ஸ் கம்பியை தேடுவது ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும்) நகைகள் மாட்டி அலங்கரிப்பது வரை அம்மாவின் வேலை. இதில் வேலூர் ராமண்ணாவின் பங்கு மிக அதிகம். அண்ணாவின் அனுபவத்தை இந்த மாதிரி விஷயங்களில் யாராலும் வெற்றி கொள்ள முடியாது. பூஜை முடிந்து அப்பா தவறாமல் தம்பூராவை வைத்துக்கொண்டு மனமுருகி பாடுவதும் நிச்சயம் நடக்கும். இன்று அந்த தம்பூரா

உறையில் உறங்கிக்கொண்டுள்ளது.

ரமா சொன்னது போல் நாம் ஏன் வளர்ந்தோம்? அதனால்தானே அப்பாவையும் அம்மாவையும் இழந்து நிற்கின்றோம்? மீழுமா அந்த இளமைக்காலங்கள்?

2 comments:

RAMA RAMANAN said...

நான் ஒவ்வொரு முறையும் துவங்கி வைக்கிறேன். நீ மறக்காமல் இருக்கும் விஷயங்களை மறக்கமுடியாதபடி எழுதி விடுகிறாய். நமக்கு தாத்தா பாட்டி என்று கொஞ்சிக்கொள்ள ஆள் இல்லாததாலோ என்னவோ அப்பா அம்மாவுடன் இப்படி ஒரு நெருக்கம். இன்னும் அப்பாவின் இழப்பையே ஜீரணிக்க முடியவில்லை.
வலி என்று கூட சொல்ல முடியாது. எதோ ஒரு தாங்க முடியாத பாரம் போல் நெஞ்சை அழுத்துகிறது. இப்படி நாம் அப்பாவையும் அம்மாவையும் miss பண்ணுவோம் என்று அவர்கள் நினைத்திருப்பார்களா? நமக்குக்கிடைத்த பெற்றோர்கள் போல் எல்லாருக்கும் கிடைப்பார்களா என்று தெரியவில்லை. 'தவமாய்த்தவமிருந்து' படத்தைப்பார்த்த போது நம் வாழ்க்கையையே பார்ப்பது போல் இருந்தது.
இனி நினைவில் தான்.

geethasrinivasan said...

ரமா நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.அம்மா அப்பா நமக்கு கிடைத்தது போல் எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது நிதரிசனமான உண்மை.அப்பாவின் இந்த கோமளவிலாஸ் போட்டோ எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது.அது வரை வீட்டில் இடம் இல்லாமல் அண்ணா வீட்டில் அல்லது கோபிநாதராவ் வீட்டில் செய்து வந்த பூஜை விமரிசையாக நடந்தது.காவேரி பாட்டி தலைமை தாங்கி ஒரு பெரிய திருவிழாவாக நடந்த பூஜை.என் திருமணம் ஆன பிறகு என் வீட்டில் நானே என் தலைமையில் பூஜை பண்ணும் போது எப்படியாவது அந்த கால நினைவுகளை செயலில் கொண்டு வர முயற்சித்தேன்.செயல் படுத்தவும் செய்தேன்.என் வீட்டில் நான் தான் பூசாரி.எனவே அப்பாவின் ஸ்தானம் நானே எடுத்துக் கொண்டு பூஜை நடத்துவேன். அப்பா என்னுடைய ரோல் மாடல்.இன்றும் கிருஷ்ணா ஜெயந்தி பூஜையின் போது நான் ஸ்லோகம் படிக்க என் கணவர் பூஜை செய்வார்.

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...