Thursday, October 4, 2018

அந்தமான் அழகுகள்......தொடர்கிறது!

பகுதி இரண்டு!


பயணம் தொடர்வதற்குள் விமானம் தரை இறங்குமுன் எடுத்த மேலும் சில புகைப்படங்கள்! இது பெரிய காமிராவில் எடுத்தது!
















                 "நீங்கள் அதிர்ஷ்டசாலி மாமா! கடந்த இரண்டு நாட்களாக விடாது மழை பெய்து கொண்டிருந்தது" என்று சொன்ன செள்ம்யாவின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் சூரியன் தகித்துக்கொண்டிருந்தான்.  மழை பெய்திருந்ததிற்கான அடையாளமே தெரியவில்லை, எங்கும் தெரிந்த பசுமையைத்தவிர!  குளிரும் என்று புறப்படும்போதே பயமுறுத்தப்பட்டதால், பெட்டியில் தடியான ஸ்வெட்டர் வேறு!

                        "நீங்க வேற மாமா! சும்மா போர்த்திக்கொள்ளவே முடியாது! என்ற மருமகளின் சொல்படி, வியர்த்து வழிந்துகொண்டிருந்தது! ட்ரேவல் ஏஜண்டின் காரில் உள்ளே அமர்ந்திருக்க இயலவில்லை! அதற்குள் மனைவி, " நான் சென்று இந்த விமானத்தில் வருபவர்களை அழைத்து வருகிறேன் " என்று சொல்லி வருகைப்பகுதிக்குச் சென்றுவிட்டார். நான் மட்டும் காரில் கதவைத்திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பொழுதுதான் மேலே பதிவிட்ட செல்பி படங்கள் எல்லாம்!

                 அதற்குள் விமானம் வந்து விட, டாக்சி டிரைவர் வண்டியை எடுத்துக்கொண்டு எல்லாருடைய சாமான்களையும் ஏற்றுவதற்காக அந்தப்பக்கமாக சென்று விட, திரும்பி வந்த மனைவி இவர்களுடன் வராமல் இருக்க, நான் சற்று டென்ஷன் ஆகி விட்டேன்.  மனைவியின் கைப்பை,போன் எல்லாம் என்னிடமே இருந்தன! வேறு ஒரு வேனில் எல்லோரையும் ஏறச்சொல்லிக்கொண்டிருந்தார்கள்! நான் பின்னே சென்று தேட, மனைவி கார் முன்பு நின்று கொண்டிருந்த இடத்தில், 'காரையும் காணோம், ஆளையும் காணோம்"என்று தவித்துக் கொண்டிருப்பதைக்கண்டு, நிம்மதி அடைந்து, அருகில் சென்று அழைத்து வந்தேன்! அவள் முகத்தில் கலவரம் சற்று  இருந்தபோதும், 'நான் ஒன்றும் பயப்படவில்லை" என்ற சமாளிப்பு வேறு! வேனில் அனைவரும் ஏறிக்கொள்ள, (மொத்தம் 32 பேர்) (கார் ஒன்று தனியாக ஆறு பேருக்கு, இட நெருக்கடியை சமாளிக்க) தங்கும் விடுதியை நோக்கி வேன் சென்றது! ( விரைந்தது என்று சொல்ல முடியாது, ஏனென்றால், சாலைகள் அவ்வாறு இருந்தன)! ஏற்றங்களும் இறக்கங்களுமாக சாலைகள் நாம் ஒரு கேரளா நகரத்தில் பயணிப்பது போலவே உணர்வை ஏற்படுத்தின!

              விடுதியில் எங்களை வரவேற்ற அந்தமானின் ஏஜெண்ட், திரு கலைச்செல்வன் எங்களை வரவேற்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு ஃப்ரூட்டி பாக்கட் கொடுக்கப்பட்டது. இருவருக்கு ஒரு அறை என்ற வகையில் எங்களுக்கு முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டது! சிறிய அறைதான்! ஆனால் வசதியாக இருந்தது! குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டிருந்தது! தொலைபேசியில் ஏதோ ஒரு புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தார்கள்!


             சீக்கிரம் ரெஃப்ரெஷ் செய்துகொண்டு வந்தால், சாப்பிட்டு விட்டு, நிகழ்ச்சிகள் தொடங்கிவிடலாம் என்றதால், அனைவரும் அவரவர் அறைக்குச்சென்று தயாராக ஆரம்பித்து விட்டனர். 

             இங்கே சிறிய சிக்கல்!  செக் இன் பெட்டியை டேக் போட்டு கட்டி விட்டதால் திறக்க இயலவில்லை!  கத்தியும் அதனுள் தான் இருந்தது! மனைவி பெட்டியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்!



                   ஒருவழியாய்க் கடித்துக் குதறி, இழுத்து, சூட்கேஸ் திறக்கப்பட்டது! பிறகு கத்தியை எடுத்து அடுத்த சூட்கேஸ் வெற்றிகரமாகத்திறக்கப்பட்டது!
உடைகள் மாற்றி எல்லோரும் தயாரானதும், நேரே ஹோட்டலுக்குச் சென்றோம்! ஹோட்டல் கற்பகம்! அசைவப்பிரியர்கள் செட்டில் ஆனதும் நாங்கள் இடம் பிடித்து அமர்ந்தோம்! உணவும் பரவாயில்லை! (அந்தமான் விட்டு வரும் வரை இந்த ஹோட்டல் தான் என்று இரண்டு நாட்களுக்குப்பிறகே தெரியவந்தது! ) ( உணவு அளித்தவர்கள் ஃபேஸ்புக் ஐடி கேட்கும் அளவிற்கு (சும்மா......) நெருக்கமாகி விட்டார்கள்!)



               முதல் நாள் 26/09/2018           

   உணவிற்குப் பிறகு அனைவரும் கிளம்பி கடற்கரைக்குச் சென்றோம்! சிறிய கடற்கரை! கோவாவை நினைவூட்டியது! மாலை நான்கு நாலரைக்கெல்லாம் இருட்டத்தொடங்கிவிடுகிறது! இந்த கடற்கரையிலிருந்து படகில் ஒரு ரவுண்ட் அடித்து பக்கத்தில் இருந்த snake islandஐ (தூர இருந்தே) பார்த்துவர ( தலைக்கு ரூ.400) ஏற்பாடு செய்யப்பட்டது! ( பாவி மக்களாகிய எங்களுக்கு, இனி வரும் எல்லா நாட்களுமே தண்ணில தான் கண்டம் என்று தெரியாமல்,) ஆளாளுக்கு நான் நான் என்று போட்டி போட்டிக்கொண்டு லைஃப் ஜாக்கட் மாட்டிக்கொண்டு படகில் ஏறினோம்! Floating Jettyல்( தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் தரை! இதில் சென்று தான் படகில் ஏற வேண்டும்) நடக்கும் போதே தள்ளாடி தள்ளாடித்தான் நடக்க வேண்டி இருந்தது! நடுவில் கைப்பிடி இருந்ததால் பிடித்துக்கொண்டு நடக்க முடிந்தது! படகில் பயணித்து  ஸ்னேக் தீவு வரை சென்று மீண்டும் கரை திரும்பினோம்! நான் என் தொப்பியைத்தொலைத்தது தான் மிச்சம்! ( இது ரொம்ப நேரம் கழித்தே தெரியவந்தது, அங்கு விற்றுக்கொண்டிருந்த தொப்பிகளைப் பார்த்தபின்பே)

இனி புகைப்படங்களின் தொகுப்பு!






























            அடுத்த நிகழ்ச்சிக்கு நேரம் இருந்ததால், கடற்கரையிலேயே நேரம் கழிக்க வேண்டியிருந்தது! அனைவரும் பிரிந்து அங்கு இங்கு என உலவ ஆரம்பித்தோம், சிலர் அங்கு இருந்த கடைகளில் மேய ஆரம்பித்திருந்தனர். ஒரு கடையில் நல்ல டீ கிடைக்க, அருந்தி விட்டு நாங்களும் மணலில் சென்று உட்கார்ந்தோம்! BSNL மற்றும்  AIRTELL  தவிர்த்த மற்ற நெட்வொர்க் இல்லாததால், GIOவிற்கு அனைவரும் வேண்டா வெறுப்பாக மூடுவிழா செய்யவேண்டி வந்தது! மணலில் இருந்த நாற்காலியில் அமர ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாயாம்!  நான் அமர்ந்திருந்தவரை யாரும் காசு கேட்கவில்லை! ஆறு மணிக்கே இருட்டி விட்டதால், இருட்டில் பிடித்த சில காட்சிகள்!









                         இந்த நண்டு, காமிராவின் மேக்ரோ செட்டப்பில் எடுத்தது! இதைப்பார்த்த குழுவில் கூட வந்த ஒரு இளம்பெண்,  "  ஆஹா!  எவ்வளவு ஜூஸியாக உள்ளது, சாப்பிட்டால் எப்படி இருக்கும் ? என்று சப்புக்கொட்டியதும் " அட தேவுடா! என்றாகிவிட்டது எனக்கு!

                       போன் இல்லை, நெட் வொர்க் இல்லை, இன்டெர்னெட் இல்லை! சுகமோ சுகம்! (இதுதான் பத்து ரூபாய் பென்ச்சு)




                  பீச்சை விட்டு வெளியே வந்து அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது! அதுவும் நன்மைக்கே என்பது போல் குழுவினர் ஒவ்வொருவரும் அறிமுகமாகி, அளவளாவ நேரம் கிடைத்தது! காத்திருந்து,,,,காத்திருந்து.... ஒரு வழியாக, வேன் வரவும், அடுத்து சென்றது, செல்லுலார் சிறை! இரவில் ஒலி, ஒளிக்காட்சி பிரபலம் என்பதால், அங்கு சென்றோம்! டிக்கட் வாங்கி உள்ளே சென்று  நாற்காலியில்( பெரிய காலரி மாதிரி அமைத்து, நிறைய நாற்காலிகள் போட்டுள்ளார்கள்) அமர காட்சி ஆரம்பித்தது! தேசிய கீதத்துடன துவங்கிய நிகழ்ச்சி, நூற்றாண்டுகளாக அங்கு சாட்சியாக நிற்கும் ஒரு மரம் கதை சொல்வது போல் அமைக்கப்பட்டிருந்தது! ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து இருந்ததால், பலரால் அதை ரசிக்க முடியவில்லை! முன் தினம் இரவு வேன் பயணத்தாலும், தூக்கம் தூக்கிச் சென்றது! வீர சாவர்க்கர் சிறை இருந்த அறை தனி சிவப்பு விளக்கால் காட்டப்பட்டது! விடுதலைப்போராட்ட வீரர்கள் சிறையில் பட்ட துன்பங்கள் நெஞ்சைப்பிழியும் வண்ணம் சொல்லப்பட்டது! இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம், ஒன்றும் சும்மா வரவில்லை என்பது நிதர்சனமாக உணர முடிந்தது! இன்று நம் தமிழ் நாட்டில் தேசிய கீதத்தையும் தேசியக் கொடியையும் அவமதிக்கும் அளவிற்கு இந்த சுதந்திரம் நம்மை இட்டுச்சென்றுள்ளது வேதனையான விஷயம் தான்! இனி இருளில் எடுத்த சில காட்சிகள்!






               இந்த நிகழ்ச்சி முடிந்ததும், மீண்டும் கற்பகம்( கடைசி வரை இதுதான்) சென்று இரவு உணவு முடித்து ( இட்லி, தோசை தான் எப்பவும் போல நமக்கு) அறைக்குத்திரும்பினோம், காலையில் நான்கு மணிக்குக் கிளம்பத்தயாராக இருக்க வேண்டும் என்ற திடுக் செய்தியுடன்! நாளை HAVELOCK  தீவிற்குப் பயணம்! மூன்று மணிக்கு அலாரம் வைத்துக்கொண்டு குட்நைட்! ஆண்டவன் அருளால் எப்பொழுதும் துணை வரும் வலிகள் அதிகம் இல்லை!  நாளை சந்திப்போம்!

Wednesday, October 3, 2018

அந்தமான் அழகுகள்!

               எப்பொழுதும் போல் பென்சிலை வைத்துக்கிறுக்கிக்கொண்டிருந்த பொழுது மனைவியிடமிருந்து கைப்பேசியில் அழைப்பு வர, பள்ளி சென்றுவிட்டேன் என்ற செய்தி கிடைத்தது, போனஸாக, இன்னொரு செய்தியுடன்! 'நாம் அந்தமான் செல்லலாமா? இரண்டு இடங்கள் கேன்சல் ஆகிவிட்டனவாம்! யோசித்துச்சொல்லுங்கள்! என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது!

              ஏற்கனவே இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் பேசப்பட்ட சுற்றுலா நிகழ்ச்சிதான்! மனைவியின் உடன் பணிசெய்யும் இன்னொரு ஆசிரியை திருமதி மங்கை அவர்களின் கணவர் திரு பழனியப்பன் அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி! எங்களால் திட்டமிடப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சியும் வில்லங்கத்திலேயே முடிவதால், நாங்கள் விரும்பவில்லை! செப்டம்பரில் நிகழ்ச்சி! நாங்கள் உறவினர் தவிர்த்த எந்தக்குழுவுடனும் இதுவரை சுற்றுலா வேறு சென்றதில்லை! எனவே விருப்பம் காட்டவில்லை!

                மனைவியின் குரலில் இருந்த ஆர்வம் கண்டு  மீண்டும் மனைவியை அழைத்தேன்! அதே ஆர்வத்துடன், இரண்டு பேர் வர முடியாமல் போனதால், நம்மைக்கேட்கிறார்கள்! சென்றுவரலாம் என்று நினைக்கிறேன்!' என்றதும் நானும் சரி என்று விட்டேன்!

               உடனே ஆதார் கார்ட் ஸ்கேன் செய்து அனுப்ப, சென்னையிலிருந்து அந்தமான் போர்ட்ப்லேயர் போகவர டிக்கட் ஏற்பாடு செய்யப்பட்டது! ஆனால் எல்லோரும் போகும் விமானத்தில் இடம் கிடைக்காததால், சற்று முந்தைய விமானத்தில் இருவருக்கும் இடம் கிடைத்தது!

                இது நடந்தது செப்டம்பர் 22 ம் தேதி! கிளம்ப வேண்டிய நாள் செப்டம்பர் 25ம் தேதி! அன்று அம்மாவின் திதி நெரூரில் செய்யவேண்டியிருந்தது! அன்று இரவுதான் பயணம் என்பதால் சரியென்று தயாராக ஆகிவிட்டோம்! ஆனால் யாருக்கும் சொல்லவில்லை! டிக்கட் எல்லாம் உறுதியான பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டோம்! இரு மகன்களுக்கு மட்டும் தெரியும்! அவர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் விறுவிறுப்பு கூடியது!
இருந்தாலும் இருவருக்கும் சற்று கலக்கமாகவே இருந்தது!

ஆடைகள், சுட்கேசுகள் என்று கார்டு ஸ்வைப் ஆகிக்கொண்டிருந்தது! மழை இருக்கும் என்று சொல்லப்பட்டதால், ஆறு நாட்களுக்கும் ஆறு செட் துணிகள் தேவையாயிருந்தது! 23ம் தேதி மீண்டும் ஆசிரியை வீட்டிற்கு சென்று மற்ற விபரங்கள் அறிந்துகொண்டு வந்த பின்னர் தான் மறுநாள்தான் உள்ளூரில் இருக்கும் மனைவியின் அம்மாவீட்டிற்கு செய்தி சொல்லப்பட்டது! திதிக்காக கரூர் வரும் தமக்கைகளிடம் நேரில் சொல்லிக்கொள்ளலாம் என்பதால் போன் செய்யவில்லை!

                   மனைவியின் அண்ணன் மகனின் மனைவியின் தங்கை அந்தமானில் இருப்பதால் அவர்கள் வீட்டுக்கும் சென்றுவர இது ஒரு வாய்ப்பாக இருந்தது! ஆனால் அவளுக்கும் புறப்படும் அன்றுதான் தகவல் சொன்னோம்!

சுற்றுலா திட்டம்:


                      அம்மாவின் திதி முடிந்தவுடன் தமக்கைகள் நெரூரிலிருந்தே விடை பெற்றுக்கொண்டுவிட, இல்லம் திரும்பி சற்று ஓய்வெடுத்து பேக்கிங்க் வேலை ஆரம்பித்தோம். முதலுதவி மருந்துகளூம், ரெகுலர் மருந்துகளும் முன்னிடம் பெற்றன. பதினைந்து கிலோவும் ஏழு கிலோவுமே அனுமதி என்பதால் பார்த்துப்பார்த்து செய்யவேண்டியிருந்தது.( பத்து நாட்களுக்கு முன் இளைய மகன் கோவையிலிருந்து மும்பை சென்றபோது சுமார் 7500 ரூபாய் மொய் வைத்த பயத்திலேயே சற்று ஜாக்கிரதையாக இருக்க நேர்ந்தது).

                  ஒன்பது மணிக்கு பழனியப்பன் சார் வீட்டு அருகிலே வேன் நிற்கும் என்பதால், கணேசன் ஆட்டோவில் எட்டரை மணிக்கே கிளம்பிவிட்டோம்.  நாங்கள் செல்லும் பொழுது வேன் இன்னும் வந்திருக்கவில்லை! எனவே மிஸ்வீட்டிற்கு சென்று எங்கள் டிக்கட்டைப்பெற்றுக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, வேன் வரவும், பயணம் ஆரம்பித்தது. பெட்டிகள் மேலே ஏற்றப்பட, சென்னை நோக்கிப்ப்யணம் தொடங்கியது. முதல் இருக்கையில் அமர்ந்திருக்க, ஏசியின் குளிரால் சரியாகத்தூங்கமுடியாமல் நடுங்கியபடியே (ஷால் எல்லாம் மேலே பெட்டியில் மாட்டிக்கொண்டுவிட்டது) தூங்கி, தூங்காமல், சென்னை காலை சென்றடைந்தாம்.

                பல்லாவரத்தில் ஏதோ ஒரு ஹோட்டலில் ரூம்கள் போட்டு குளித்து உடை மாற்றிக்கொண்டு காலை 7.30 மணிக்கு கிளம்ப உத்தேசம். நான்கு பேருக்கு ஒரு அறையாக எடுத்துக்கொண்டு அனைவரும் தயாராகக் கிளம்பினோம். மாநிலத்தலை நகரில் அந்த ஹோட்டல் முன் இருந்த குப்பைக்கூளங்கள், அடடா, கால் வைக்க இடம் இல்லை! தூய்மை இந்தியா திட்டத்தில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை போலும்! இங்கும் அங்கும் கால் வைத்து பெரும்பாடு பட வேண்டியிருந்தது!

                வழியில் ஒரு ஹோட்டலில் காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கெல்லாம் விமானநிலையம் வந்தடைந்தோம். எங்கள் விமானம் 10.55 க்கு என்பதால் நானும் என் மனைவியும் முதலில் உள்ளே சென்றுவிட்டோம்.

                   ஏற்கனவே அக்கா பையன் திருமணத்திற்காக கல்கத்தா வரை விமானத்தில் சென்று வந்ததால் அவ்வளவு ஆர்வம் இல்லை! செக்இன் வேலைகள் சுலபமாக முடிய, என்ட்ரி கேட் அருகே சென்று அமர்ந்தோம்.
இருக்கையில் அமரும் போதுதான் பின் இருக்கையில் திரு கதிரி கோபால்நாத் அவர்கள் அமர்ந்த்திருப்பதைப் பார்த்தோம். அவரிடம் சூப்பர் சிங்கர் செந்திலும் ராஜலக்ஷ்மியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவர்கள் விலக, அவர்கள் இருவருக்கும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தோம்!

              பின்னர் திரு கோபால்நாத் அவர்களிடம் சென்று வணங்கி அமர்ந்து பேசினோம்.  காலை விமானம் கேன்சல் ஆனதால், மனிதர் தனியாக அமர்ந்து செல்போனுடன் ஐக்கியமாகி இருந்தார்.  நான் அவரை வரைந்திருந்த கேரிகேச்சர் படத்தை அவருக்கு காட்டினேன்.  மிகவும் மகிழ்ந்தார். அதை அவருக்கு அனுப்பச்சொல்லி வாட்சாப் நம்பர் கொடுத்தார். நானும் மனைவியும் அவருடன் அமர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டோம். பின் அவரை விட்டு விலகி தனியே அமர்ந்து கொண்டோம். அந்த சில தருணங்கள்!







                அதற்குள், அந்தமானில் இருக்கும் செளம்யா
 அழைத்து தான் விமான நிலயத்தில் காத்திருப்பதாகக் கூறினாள்!  பின் 200 ரூபாய்க்கு இரண்டு காபி ( நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும்) சாப்பிட்டு முடிக்க, கதவு திறந்து விமானம் ஏற அழைப்பு வந்தது! உடனே முண்டியடித்துக்கொண்டு மக்கள் வரிசையில் நெருக்க, ( எல்லோருக்கும் சீட் நம்பர் கொடுக்கப்பட்டும், சினிமா டிக்கட் கவுண்டர் போல் ஏன் அவசரப்படுகிறார்கள் என்பது புதிர் தான்!) அமைதியாக வரிசையில் நின்று, குகைப்பாதையில் சென்று, விமானப்பணிப்பெண்ணின் வணக்கத்தை ஏற்று, உள் நுழைய, ஒரே புகை மண்டலம்! (தேவலோக செட்டிங் மாதிரி)! இருக்கை கண்டு பிடித்து அமர, அம்மணிக்கு ஜன்னல் சீட்டும், ஐயனுக்கு நடுசீட்டும் ( பஸ்ஸில் சென்றாலும் இதே கதை தான்! நமது உருவத்திற்கு, மூன்றாவது நபர் சற்று இளைத்திருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான்! இல்லையென்றால் சட்னி தான்) கிடைத்தது! ஜன்னலுக்கு நேரே விமானத்தின் இறக்கை இருந்ததால், வேடிக்கை பார்ப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது!



வழக்கம் போல் சைகை அறிவுறுத்தலுகுப்பிறகு, (எப்பொழுதும் போல் ஒன்றும் புரியவில்லை! புரிந்தது, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பது போல், ஆக்ஸிஜன் மாக்ஸை முதலில் தான் ஒழுங்காக அணிந்து கொண்டு பிறகு பிறர்க்கு உதவச்சொன்னது)! விமானம் வேகம் எடுத்து...இன்னும்...இன்னும்.. விடு ஜூட்.....சட்டென்று மேலே கிளம்பியே விட்டது! (முன் ஜாக்கிரதையாக கொண்டு சென்ற பஞ்சை ஏற்கனவே காதில் வைத்துக்கொண்டாயிற்று)! சில காட்சிகள்:





விமானம் கிளம்பி சிறிது நேரத்திலேயே தள்ளு வண்டியில் சிற்றுண்டி கொடுக்க ஆரம்பித்தார்கள்! பசி இல்லையென்றாலும் சும்மா கொடுப்பதை ஏன் வேண்டம் என்று சொல்லவேண்டும் என்பதால் வாங்கிக்கொண்டோம்! ஒரு கேக், ஒரு பன், ஒரு சிறிய பட்டர் பாக்கட், புலாவ் மாதிரி ஏதோ ஒன்று, தொட்டுக்கொள்ள கிரேவியுடன்! ஒரு கத்தி, ஒரு ஸ்பூன் மற்றும் டிஸ்யு பேப்பர்! சாப்பிட்டு முடிக்க, காபி வந்தது! டிகாக்ஷன் தனியாக டம்ளரில், பால் பவுடரும் சர்க்கரையும் தனி! காபி குடித்து வாயைக்கெடுத்துக்கொண்ட நேரத்தில் விமானம் பாதி தூரத்திற்கு மேல் கடந்திருந்தது! சரி கிண்டிலில் படிப்போம் என்று அதை ஆன் செய்ய இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க விடாமல் கண்ணைச்சுழற்றியது தூக்கம்! சற்றே கண் அயர்வதற்குள் டொய்ங்க் என மணி அடித்து விமானம் தரை இறங்கப்போவதாக அறிவித்தார்கள்! உடனே காமிராவைத்தயாராக வைத்துக்கொண்டு தரை இறங்கும் சமயத்தில் எடுத்த சில காட்சிகள்!









விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸிற்காக நிற்கும் போது கிளிக்கியது!





         விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்தால் 5000 ருபாய் அபராதம் என்ற பலகையைப்பார்த்ததும் சத்தமில்லாமல் மொபைல் போனை பைக்குள் வைத்து விட்டு பேருந்தை நோக்கி நடையைக் கட்டினோம்!

              மிகச்சிறிய விமான நிலையம்! செக் இன் பெட்டிகள் வருவதற்கும் செளம்யாவிடமிருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது! வெளியே கடுமையான வெய்யில்! இதில் குழந்தை அப்ரமேயனையும் தூக்கிக்கொண்டு வந்திருந்தாள்! நாங்கள் சாப்பிட சமைத்தும் எடுத்து வந்திருந்தாள்! குழந்தைக்கு உடல்நிலை சரியாக இல்லாததால் ஒரு அரைமணி நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டாள்.  அதற்குள் எங்களை அழைத்துச்செல்ல வந்த நபரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டோம். அடுத்த விமானத்தில் வரும் குழுவின் மற்ற நபர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம்! செளம்யாவுடனான சந்திப்பில் சில காட்சிகள்!







                      மற்ற நண்பர்கள் வந்ததும் தொடர்வோம்.............

Wednesday, March 16, 2016

Sridhar Comravalli , connected to Karur through his mothers side, is a great cartoonist and is also a retired Banker. Through Sudha Venkatesh, I got his friendship. This work is a small return gesture for his cari of me. Thank you sir and hope you like this.

Tuesday, March 15, 2016

Jeeva sir drew me in no minutes in the last week's workshop at covai! Also he did not hesitate to pose to my attempt which was my first ever live drawing! It was a great moment for me that I was completely out of my nerves and drew some lines in vain to bring Jeeva sir on the board! But the encouragement was overwhelming and the support from the audience that I could never forget! Thanks to Rajamaran Kandamaran ,K r K.r. Ramakrishnan, Siva Kirubanandan, Devanathan Srinivasan and the most to Jeeva Nanthan! Thanks to all the audience!



  10 அக்டோபர் 2026: கோவையில் டாடாபேடில் ஹரியின் வீட்டில் தங்கியிருக்கும் போது, ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதியினைத் தமிழ்க் கவிதை வடிவில் எழுதலாம் என்...